வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (28.04) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா காமினி மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியானது அங்கிருந்து மன்னார் வீதி வழியாக கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பசார் வீதிக்கு சென்று அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக சென்று கண்டி வீதியில் முடிவடைந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கோட்டா – மஹிந்த அரசே பதவி விலகு, எரிபொருள் விலையை குறை, பொருட்களின் விலையை ஏற்றாதே, அரசாங்கமே வீட்டுக்கு போ’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரிய சங்கத்தினர், அகில இலங்கை தபால் தந்தி தொடர்புகள் சேவையாளர் சங்கம், வெகுஜன அமைப்புக்கள், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், மின்சார சபை ஊழியர் சங்கம், நீர்பாசன திணைக்கள ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்து கொண்டன.
சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக மன்னார் வீதி மற்றும் கண்டி வீதியிவ் போக்குவரத்து நெரிசல் சில மணிநேரம் ஏற்பட்டிருந்தது.
அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (28.04) காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து, மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனின் அலுவலகத்திற்கு முன்னால் சென்று போராட்டத்தை மேற்கொண்ட ஒன்றினைந்த தொழிற் சங்கத்தினர்,
ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மகிந்த உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், திலீபன் எம்.பியே அரசுக்கு ஆதரவு வழங்காதே, திலீபன் எம்.பியே அரசுக்கு ஆதரவு வழங்கினால் ஊருக்கு வராதே எனவும் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரார்கள் அலுவலகப் பகுதியில் கறுப்பு கொடியை பறக்க விட்டதுடன், அலுவலக மதிலில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காதே என தமிழிலும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் ஊருக்கு வராதே என சிங்களத்திலும் பெரிதாக பொறித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
குறித்த போராட்டடத்தில் இலங்கை வங்கி ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், தபால் நிலைய ஊழியர்கள், ஆசிரிய சங்க ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச் சோடிக் காணாப்படுகின்ளறன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளாவிய ரீதியில் 1000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (28.04) தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன.
இருப்பினும் சில பாடசாலைகளில் இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மணவர்கள் சென்றமையையும், ஒரு சில ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில்,
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்று 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாவின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.
நேற்று மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லாட்டரியில் முதல் பரிசாக 80 லட்சம் ரூபாய் விழுந்துள்ளதை அறிந்து கூலித் தொழிலாளியின் குடும்பம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும், கேரளாவில் இன்றும் அரசே லாட்டரி சீட்டு விற்பனையை செய்து வருகிறது. இதன் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
அத்துடன் அரசுக்கும் வருவாய் கிடைப்பதுடன், லட்சாதிபதிகள் ஆகும் வாய்ப்பு ஏழைகளுக்கும் அவ்வபோது கிடைத்து வருகிறது. இப்படியொரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு அண்மையில் அங்கு நிகழ்ந்துள்ளது.
காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (51) என்ற கூலித் தொழிலாளிக்கு முதல் பரிசு விழுந்தது. அவருக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
ஒரு அறை மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகளுடன் வசித்துவரும் சண்முகம், தமக்கு லாட்டரியில் 80 லட்சம் ரூபாய் விழுந்திருப்பதை அறி்ந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள லாட்டரி பரிசுத் தொகையை கொண்டு புதிய வீடு கட்டவுள்ளதாக அவர் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்
இருசக்கர வாகனத்தில், மகனின் உடலை தந்தை எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், இறந்த மகனின் உடலை எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிக கட்டணம் கேட்டதால், இருசக்கர வாகனத்தில், மகனின் உடலை தந்தை எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள, அன்னமையா மாவட்டத்தில் உள்ள சிட்வேல் என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜெசேவா என்ற சிறுவன், சீறுநீரகக் கோளாறு காரணமாக, திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை, அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து, மகனின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல, அவரது தந்தை முடிவு செய்தார். இவரது சொந்த கிராமம், மருத்துவமனையில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிக கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் அவர் செய்வதறியாது திகைத்து போய் நின்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிட்வேல் கிராமத்தைச் சேர்ந்த, ஸ்ரீகாந்த் யாதவ் என்பவர், உயிரிழந்த சிறுவன் உடலை மற்றொரு ஆம்புலன்சில் இலவசமாக எடுத்து வர ஏற்பாடு செய்தார். ஆனால் சிண்டிகேட் பிரச்னை காரணமாக, அந்த ஆம்புலன்சை மருத்துவமனைக்குள் நுழைய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அனுமதி மறுத்தனர்.
“மருத்துவமனையில் இருந்து உடல் வெளியேற வேண்டும் என்றால், அது தங்களுடைய ஆம்புலன்ஸ் மூலம் தான் செல்ல வேண்டும்” என்றும் அவர்கள் கறார் காட்டி உள்ளனர்.
இதனால் கடும் வேதனை அடைந்த சிறுவனின் தந்தை, தனது உறவினரின் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, மகனின் உடலை தோளில் சுமந்தபடி சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த திருப்பதி எம்பி மட்டிலா குருமூர்த்தி, இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக, 6 தனியார் ஆம்புலன்ஸ் ஆப்பரேட்டர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தங்களது இடமாறுதலை எதிர்த்து மாணவிகளை கடத்திப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர் இரு ஆசிரியைகள். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் தங்களது இடமாறுதலை ரத்து செய்யக் கோரி 24 மாணவிகளை கடத்தி பள்ளிக்கூடத்திலேயே பிணைக் கைதிகளாக வைத்த 2 டீச்சர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
பேஜாம் என்ற இடத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிக்கூடத்தில்தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அந்த மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரு ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து லக்கிம்பூர் கேரி மாவட்ட கல்வி அதிகாரி லட்சுமிகாந்த் பாண்டே கூறுகையில், தங்களை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்ததை அடுத்து அந்த இரு டீச்சர்களும் கோபமடைந்துள்ளனர். அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து இடமாறுதலை ரத்து செய்ய வைப்பதற்காக இந்த மோசமான வேலையில் இறங்கினர்.
எனக்கும், மாவட்ட மகளிர் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரேணு ஸ்ரீவத்சவாவுக்கும், பள்ளிக்கூட விடுதி வார்டன் லலித் குமாரி தகவல் கொடுத்ததும் நாங்கள் விரைந்து சென்றோம். போலீஸ் உதவியுடன் மாணவிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தோம் என்றார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களது பெயர்கள் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்தி கத்தியார் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது விசாரணை நடத்த கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தேர் பவனியின்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று (ஏப்.27) தேர் பவனி நடைபெற்றது. அப்போது தேர் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து, பலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
விபத்து குறித்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி, மாவட்ட எஸ்.பி, ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து, நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்’ அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.
வழக்கம் போல இந்தாண்டும் 94வது அப்பர் சதய விழா செவ்வாயன்று தொடங்கியது. 3 நாள் விழாவின் முக்கிய பகுதியாக’ செவ்வாய் இரவில் தேர் பவனி தொடங்கியது. களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது.
தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே இருந்த உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததில், தேரை இழுத்து வந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.
தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.
இதற்கிடையே, தேரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்கிறார்.
டிஜிபி அலுவலகத்தில் டிவி நடிகை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி, கடந்த மார்ச் 25 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கணவர் இல்லாமல் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். வேலையில்லாமல் இருந்த போது, வேலூரை சேர்ந்த ராஜாதேசிங்கு (எ)சுப்பிரமணி தயாரிப்பாளர் என்று அறிமுகமானார்.
நான் சின்னத்திரையில் சிறிய வேடங்களில் நடித்து வந்தேன். அப்போது, நடிகைகள் இயக்குநர்களுடன் அட்ஜஸ்ட் செய் வேண்டும். அதனால், நான் உன்னை தயாரிப்பாளர் ஆக்குகிறேன். அப்போது, நீ யாரிடமும் வேலை கேட்க வேண்டியதில்லை என்றார்.
நான் அதை நம்பி அவருன் வெளியே கூப்பிடும் இடங்களுக்கு சென்றேன். ஒருமுறை, திருமணஞ்சேரி கோயிலுக்கு சென்ற போது, கண்ணை மூடி சுவாமி கும்பிட்ட போது, கையில் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டினார். நான் அ திர்ச்சி அடைந்தேன்.
எனது விருப்பமின்றி, மிரட்டி மிரட்டி பல முறை உறவில் ஈடுபட்டார். என்னை, பாலியல் தொழில் செய்யுமாறு மிரட்டினார். அவர் சொல்வது போல் நடந்து கொள்ளவில்லை என்றால் என்னையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்.
என்னை போல பல பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளார். அது போல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அவர் ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதானவர். எனவே, என்னையும் பெண் குழந்தையும் காப்பாற்றுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புகாரளித்து ஒரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று மாலை டிஜிபி அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பைரவி, தலையில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய நேரத்தில் பைரவி மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதுகுறித்து மெரினா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக இலங்கை மின் சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா கூறியுள்ளார்.
இந்த திட்டம் இலங்கையின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிகப் பெரிய நீண்டகால முயற்சியாக கருதப்படுகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பரவலாக மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதன் மூலம் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கும் இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் இலஙகைக்கும் இடையிலான மின் விநியோக கட்டமைப்பை இணைப்பது தொடர்பான உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்தியா ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டதுடன் ஆயிரம் மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் கடல் மட்டத்தில் இருந்து 25 மீற்றர் ஆழத்தில் 500 மீற்றர் இடைவெளியில் கேபிள் இணைப்புகள் அமைக்கும் சாத்தியங்கள் தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இலங்கை – இந்தியா இடையிலான இந்த மின் இணைப்பு கட்டமைப்பானது 360 கிலோ மீற்றர் தொலைவை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்த மின் இணைப்பானது தமிழகத்தின் மதுரையில் இருந்து இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரத்திற்கும் செல்லும் வகையில் அமைக்கப்படலாம் என அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இந்த திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வவுனியாவில் இயங்கி வருகின்ற வெதுப்பகங்கள் சில எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளதுடன் இதனால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வவுனியா நகரின் குட்செட் வீதி மற்றும் பட்டானிச்சூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்ற இரண்டு வெதுப்பகங்கள் இன்று (27.04) முதல் மூடப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் உட்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற போதும் எரிவாயு விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது . இதனால் மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
வெதுப்பகங்களில் எரிவாயு தட்டுப்பாட்டினால் வெதுப்பகங்களை மூடவேண்டிய நிலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேரளாவில் வீட்டு கிரக பிரவேசம் முடிந்த 3வது நாளில் தீவிபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மகள் உயிருக்கு போராடி வருகிறார். கேரளாவின் இடுக்கியை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (54) மற்றும் இஷா (45).
இவர்களின் மகள் ஸ்ரீதன்யா (17) இவர்களின் புது வீட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கிரகபிரவேசம் நடந்தது. இந்நிலையில் வீட்டின் ஒரு அறையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீப்பிடித்த நிலையில் தீயானது மளமளவென மற்ற இடங்களுக்கு பரவியது.
இந்த தீவிபத்தில் சம்பவ இடத்திலேயே ரவீந்திரனும், இஷாவும் உயிரிழந்தனர். ஸ்ரீதன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்த பிறகு தீ அணைக்கப்பட்டது. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஸ்ரீதன்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வேபொட – வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் மனைவியின் சகோதரி மற்றும் நண்பியும் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த நிலையில் அயலவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வேபொட – வடக்கு பிரதேசத்தை சேர்ந்த அப்ஸரா கல்பனி என்ற 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார். கணவர் மாத்தறை, கெகனதுர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் மற்றும் மனைவி பட்டாரிகளாகும்.
அவர்கள் நியூஸிலாந்திற்கு செல்ல தயாராகியிருந்த போது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மாத்திரம் நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழலில் மனைவி நியூஸிலாந்தில் இருந்து நாடு திரும்பியதை அறித்து கொண்ட கணவர் இரகசியமாக நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக கடந்த 22ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதன்படி எரிவாயு விலை அதிகரிக்கப்படாது எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பழைய விலைக்கே 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே குறித்த அறிவிப்பை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து வாழ்வாதாரம் தேடி அங்கிருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் இருந்து நேற்று வந்த 18 அகதிகளில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய ஒருவரும் அகதியாக வந்துள்ளார்.
மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பகுதியில் இருந்து வந்த பிரதீப் (30) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கை காவல் துறையில் பணியில் சேர்ந்ததாகவும், 15 மாதம் களுத்துறையில் காவலர் பயிற்சி முடித்து விட்டு யாழ்ப்பாணம், மன்னார் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. பணிச்சுமை காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பணிக்குச் செல்லவில்லை. தற்போது மனைவி, குழந்தைகளுடன் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதே போல நகுஷன் என்பவர் தனது கர்ப்பிணி மனைவி பியூலாவுடன் தமிழகம் வந்துள்ளார். அவர் கூறுகையில், நான் மன்னாரில் தச்சு வேலை செய்கிறேன், தொடர்ந்து பல மணி நேர மின்வெட்டு காரணமாக தச்சு தொழில் கடுமையாக பாதித்துள்ளது.
மின்சாரத்துக்கு மாற்றாக ஜெனரேட்டர்கள் உதவியுடன் தச்சு தொழில் செய்யலாம் என்றால் டீசல் விலை 400 ரூபாய் தொட்டுவிட்டது. இதனால் எனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விகுரியதாகியுள்ளது என்றார்.
எனக்கு திருமணம் நடந்து 5 மாதமாகிறது என் மனைவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவளுக்கு மருத்துவமனையில் மருந்து வாங்கி கொடுக்க முடியவில்லை.
அரசு மருத்துவமனைகளில் மருந்து இருப்பு இல்லை என்கின்றனர். இதே நிலை நீடித்தால் எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் முன் பட்டினி சாவில் இறந்து விடுவோமோ என்ற அச்சம் மனதில் ஏற்பட்டது.
எனவே எனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு நல்ல முறையில் பாதுகாப்பாக பிரசவம் ஆக வேண்டும் என ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு தமிழகத்துக்கு வந்துள்ளோம் என கூறியுள்ளார்.
பியூலா கூறுகையில், தற்போது உள்ள உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் ஒரு கர்ப்பிணி பெண் சாப்பிடும் ஆரோக்கியமான சாப்பட்டை என்னால் சாப்பிட முடியவில்லை.
விலை ஏற்றத்தால் போதிய சத்து இல்லாத பொருட்களை மட்டும் சமைத்து சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும். இப்படி சத்து இல்லாத சாப்பாடு சாப்பிட்டால் எப்படி குழந்தை சத்துடன் பிறக்கும் என்ற கவலையில் தான் உயிரை பணயம் வைத்து கடல் வழியாக தமிழகம் வந்து விட்டோம்.
எங்களுக்கு பிறந்த நாட்டை விட்டு வருவதற்கு மனமில்லை. இருந்தாலும் வயிற்றில் உள்ள என் குழந்தையின் விதி இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் போல் உள்ளது என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இளம் வீராங்கனையான கௌசல்யா மதுசானி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அகில இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியில் வெற்றியாளராக தடம் பதித்தவர் இவர்
25 வயதான குறித்த பெண் தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.