நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று (04.05) இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்ச்சங்கங்கள், பொது அமைப்புக்கள் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 6 ஆம் திகதி அனைத்து கடைகள் மூடப்படும். பேருந்துகள் சேவையில் ஈடுபடாது இருக்கவும்,
முற்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபடாமலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பல்கலைக்கழகம், ஆசிரியர் சங்கங்கள் தமது கடமையில் இருந்து விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளனர். இதேவேளை 6 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று (30.04) இடம்பெற்றுள்ளது.
குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் மீது சிறுவனின் தந்தை பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வவுனியாவை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது அதிகமான பொதுமக்கள் வரிசையில் நின்றமையால் அந்த நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களால் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்ப்பட்டது.
கருத்து முரண்பாடு முற்றிய நிலையில் தாம் ஊடகவியலாளர்கள் என அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதனை பொருட்படுத்தாத ஊழியர்கள் கடந்த முறையும் எமது நிரப்பு நிலையம் தொடர்பான செய்தியினை நீதானே பிரசுரித்தாய் என கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் ஊழியர்களுடன் இணைந்து நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் தாக்கியிருந்தார்.
அத்துடன் அவர்களது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு அடித்து துரத்தப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த நிரப்பு நிலையத்தின் கண்காணிப்பு கமரா பதிவுகளை வழங்குமாறு ஏனைய ஊடகவியலாளர்களால் அதன் நடத்துனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் மின்சாரம் இல்லை என்பதால் கமரா இயங்கவில்லை என குறித்த நிலைய முகாமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள பிரதான நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பொதுமக்களுக்கும், நிரப்பு நிலையத்தின் ஊழிர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டுவருகின்றமை.
வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூத்த சகோதரர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், இவர் கடற்படையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரது இளைய சகோதரர் கித்சிறி அசேல, 34 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. இதன்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நகர பகுதிகளில் உள்ளமையினால் நகர பகுதிகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை எதிர்வரும் மே மாத இறுதியில் முடிவுக்கு வந்து விடும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருட்கள் சேவைகள் மீதான வற் வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமகால அரசாங்கம் வற் வரியை எட்டு வீதமாக குறைந்தமையினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பெரும் தவறை செய்துள்ளதாக அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். நாளாந்த அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் 4 பில்லியன் டொலர்கள் தேவை.
வரியை உயர்த்த வேண்டும். எங்களிடம் உள்ள வருவாய் மற்றும் செலவின இடைவெளியைக் குறைக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். தற்போதைய நிலையில் வற் வரியை 13% அல்லது 14% ஆக உயர்த்தப்பட வேண்டும் என நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கோட்டாபய ராஜபக்ஷ, 15 வீதமாக இருந்த வற் வரியை 8 வீதமாக குறைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் இரண்டாம் திகதி அதாவது மே மாதம் 2ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொழிலாளர்தினமான மே முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
எனவே அடுத்த நாள் திங்கட்கிழமை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்..
வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (28.04.2022) மாலை 5.30 மணியளவில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ரெட்ணனாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
அமையத்தின் செயலாளர் என்.ஜனகதீபன் முதற்சுடரீனை ஏற்றி மலர் வணக்கத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் ஏனைய ஊடகவியாளர்களும் மெழுதிரி ஏற்றி மலர் வணக்கத்தினை செலுத்தியிருந்தனர்.
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை நடந்து பல வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1959 ஆகஸ்ட் 11 மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன. பத்திரிகை எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்ததுடன்,
தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதே தினத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்களாகியும் சிவராமின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் அலுவலகத்திற்குள் இன்று கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தும் அவர்கள் போராட்டக்காரர்களை கண்டு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்குள் சென்று ஒழிந்து நின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரியும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களால் வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வவுனியா – கண்டிவீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் அலுவலகம் நோக்கி ஆர்பாட்டக்காரர்கள் சென்றனர். இதனையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் முகமாக கலகத்தடுப்பு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
எனினும் போராட்டக்காரர்கள் அலுவலகத்திற்கு முன்பாக வருகைதந்த போது கலகத்தடுப்பு பொலிஸார் வெளியில் வராமல் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்குள் சென்று ஒழிந்து நின்றனர். ஆர்ப்பாட்டங்கள் முடிவடைந்த பின்னரே பொலிஸார் வெளியில் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா செட்டிகுளம்- நேரியகுளம் வீதியில் டயர் போட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (28.04) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோட்டபாய – மஹிந்த அரசாங்கத்தை பதவி விலகக் கோரி நாடு பூராகவும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (28.04) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையிலேயே வவுனியா, செட்டிகுளம் – நேரியகுளம் வீதியில் உள்ள வீரபுரம் பகுதியில் வீதியில் டயர் போட்டு எரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பொது வீதிக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக வீரபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களது வாக்கு மூலங்களை பதிவு செய்த பின் எச்சரிக்கப்பட்டு அவர்களை விடுவித்தனர்.
இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் இளைஞர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மூன்று சொகுசு வாகனங்கள் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது நகர்ப்பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி பிரதான வீதியிலிருந்து இடது பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்திற்குள்ளான சொகுசு வாகனத்தில் அமெரிக்க தூதரக முக்கியஸ்தர்கள் பயணம் செய்ததாக தெரிய வருகிறது.
குறித்த விபத்தில் திவாகர் எனும் கூமாங்குளத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல மாவட்டங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் மக்கள் நீண்ட மணிநேரமாக வரிசையில் காத்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும் மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 500 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேலும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு முகவரினால் இன்று 70 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 11.00 மணியளவில் எரிவாயுவினை பெற்றிருந்தனர்.
அத்துடன் கடும் வெயிலுக்கு மத்தியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் வங்கியினால் இலவசமாக தண்ணீர் போத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்துள்ளது.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொண்ட மக்கள் சீனா மொழியையும் தாங்கி பதாதைகளுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.
இன்று நாடாளாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் போராட்டம் வவுனியாவிலும் முழு அளவில் இடம்பெற்று வருவதுடன் ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் இன்றைய போராட்டம் மற்றும் பேரணிகளையும் முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரியும் நாடாளாவிய ரீதியில் 1000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (28.04) முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.
வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையங்கள் , நகையகங்கள், புடவையகங்கள், மொத்த மரக்கறி விற்பனை நிலையங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் , அரச திணைக்களங்கள் என்பன முழுமையாக பூட்டப்பட்டு அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வர்த்தகர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானை பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவுனியா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04) மதியம் வவுனியா கண்டி வீதியில் அமைந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார மற்றும் பயிற்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
‘ஜனாதிபதி கோட்டபாயவை வீட்டுக்கு செல்லுமாறும் , பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறும் கோரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மஸ்தான் எம்.பியை இராஜாங்க அமைச்சில் இருந்து உடனடியான இராஜினாமா செய், அரசாங்கத்தை ஆதரித்து விட்டு ஊருக்கு வராதே, மக்களின் கருத்துக்கு மதிப்பளி என கோசங்களை எழுப்பியதுடன்,
அவரது அலுவலக வேலிப் பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான சுலோக அட்டைகளையும் காட்சிப்படுத்தியதுடன் அலுவலக வாயில் மற்றும் அவரது பாரிய பதாதை என்பவற்றிலும் கோட்டாவை வீட்டுக்கு செல்லுமாறும் அரசுக்கு ஆதரவளித்து விட்டு ஊருக்கு வராதே எனவும் வர்ணப் பூச்சினால் பொறித்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது அப் பகுதியில் அதிகளவிலான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.