வவுனியாவில் ஊரடங்கு சட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிப்பு – வர்த்தக நிலையம் சிலவும் திறப்பு!!

ஊரடங்கு சட்டம்..

நாடு முழுவதும் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியாவிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக அரச ஆதரவாளர்களால் நேற்று (10.05) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.

இதனையடுத்து உடனடியாக அமுலுக்கும வரும் வகையில் நாடு முழுவதும் நாளை (11.05) புதன்கிழமை காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியாவில் வங்கிகள், அரச நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அத்துடன், வவுனியா மொத்த மரக்கறி விற்பனையகம் மற்றும் மொத்த வியாபாரிகள் சிலர் தமது வியாபார நிலையங்களை திறந்து வியாபாரம் செய்வதையும், ஊரடங்கு சட்டத்தையும் மீறி குறித்த வியாபார நிலையங்களுக்கு மக்கள் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

வவுனியாவில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க பொலிசார் விசேட நடவடிக்கை!!

பொலிசார் விசேட நடவடிக்கை..

வவுனியாவில் மக்கள் ஒன்று கூடுவதை தவிப்பதற்காக பொலிசார் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டடம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசர கால சட்டமும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் மக்கள் ஒன்று கூடி போராட்டங்களை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா நகரப் பகுதி மற்றும் பிரதான வீதிகளில் பொலிசாரால் திடீரென வீதியால் செல்பவர்கள் வழிமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் தேவையற்ற விதமாக நடமாடுபவர்கள் எச்சரிக்கப்பட்டு மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வவுனியாவில் மதியத்திற்கு பின்னர் மக்கள் நடமாட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.

ஊடரங்குச் சட்டம் மேலும் நீடிப்பு!!

ஊடரங்குச் சட்டம்..

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படுகிறது!!

ஊரடங்குச் சட்டம்..

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும். இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில் புகையிரத கடவைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்கள் மற்றும் கடலோரங்களில் ஒன்று கூடுவதற்கோ அல்லது உலாவுவதற்கோ முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா- ஹொரவப்பொத்தானை வீதியை மறித்து மக்கள் போராட்டம்!!

போராட்டம்..

வவுனியா- ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மடுகந்தை பகுதியில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த மக்களால் இன்று மாலை (09.05) 5.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவையும் மீறி வவுனியா, மடுகந்தைப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும், கொலைகார அரசே வீட்டுக்கு போ எனத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன்,

திடீரென வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியையும் மறித்தனர். இதன் காரணமாக குறித்தா வீதி ஊடான போக்குவரத்துக்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை பாதிப்படைந்திருந்தது.

வவுனியாவில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்!!

பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதையடுத்து வவுனியாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் வவுனியா இலுப்பையடி சந்தியில் இன்று (09.05) மாலை 6.00 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச ஏற்பாட்டில் பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் தொடரும் பதற்றம் : தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவை நகரில் இன்று இன்று காலை நடந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த சிலர், அவரது வாகனத்திற்கும் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் அவரது சாரதி எனக் கூறப்படும் நபர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறபடுகிறது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை தாக்கி, வாகனத்தை நடு வீதியில் கவிழ்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த ராஜபக்ச!!

மகிந்த ராஜபக்ச..

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது. இதேவேளை, அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, சன்ன ஜயசுமன, ஆகியோரும் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி விஷ்வரூபம் எடுத்து அரசியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் அரசியலுக்குள்ளும், வெளியிலும் வலுப்பெற்று வந்தன.

இந்தநிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கடும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்ட நியைில் தற்போது அவர் பதவி விலகியுள்ளதாக அறிய முடிகின்றது.

அழுத்தங்களுக்கு பயந்து தான் பதவி விலகப் போவதில்லை என இதற்கு முன்னர் மகிந்த அறிவித்திருந்த நிலையில், உட்கட்சி மோதல்கள் அதிகரித்திருந்தன.

இன்றைய தினம் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் மகிந்தவிற்கு ஆதரவானவர்களால் கலவரங்கள் உருவாக்கப்பட்டன. கொழும்பு காலி முகத்திடல் முழுதும் கலவர பூமியாக மாறியதை அடுத்து தற்போது மகிந்தவின் ராஜினாமா செய்தி வெளிவந்துள்ளது.

கொழும்பு கலவரத்தின் எதிரொலி : இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்!!

ஊரடங்குச் சட்டம்..

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையினை அடுத்து அண்மைய நாட்களாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் பிரதமரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து கொழும்பில் கலவரம் வெடித்திருந்தது. இதன் பின்னர், கொழும்பிலும், பின்னர் மேல் மாகாணத்திலும் ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையிலேயே சற்று முன்னர் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடிகளுடன் வீதிக்கு இறங்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர்!!

ஆர்ப்பாட்டப் பேரணி..

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவிவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டம் இன்று (06.05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது யாழ் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி ஊடாக கண்டி வீதியை அடைந்து பழைய பேரூந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வதைக்கும் அரசாங்கமே வீட்டுக்கு போ என பதாதைகளை ஏந்தியவாறும், அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் கறுப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பழைய பேரூந்து நிலையத்தை அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏ9 வீதியை சுமார் அரை மணி நேரம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தினருடன், வவுனியா பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இராணுவ முகாம் அருகே விடுதலைப் புலிகளின் டொலர் எங்கே என கேட்டு சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்…

விடுதலைப் புலிகளின் டொலர் எங்கே எனத் தெரிவித்து வவுனியாவில் இராணுவ முகாம் அருகே சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படை தலைமையகத்தின் அருகில் ஒன்று கூடிய மூன்று முறிப்பு பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களின் ஏற்பாட்டில் ஏ9 வீதியின் ஒரு வழிப்பாதையினை மறித்து குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.

இதன் போது ‘விடுதலைப்புலிகளின் டொலர் எங்கே, எங்கள் பணத்தை எங்களிற்கு தாருங்கள், நாங்கள் கேட்பது சாப்பிடுவதற்கு ஆனால் கிடைப்பது உங்களுக்கு, கோ கோம் கோட்டா’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பல்கலைக் கழகத்தில் மனித சங்கிலிப் போராட்டம்!!

மனித சங்கிலிப் போராட்டம்..

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பல்கலைக் கழகத்தில் மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டம் இன்று (06.05.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இணைந்து பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக வாயில் முன்பாக மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் வளமே எங்கள் வாழ்வு, மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள், மக்களுக்காக கொள்கைகளே தவிர கொள்கைக்காக மக்கள் அல்ல, சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமமானது, எங்கள் எதிர்காலத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

 

வவுனியா இராசேந்திரகுளத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் டயர் எரிப்பு!!

வீதியில் டயர் எரிப்பு..

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் இயங்கிவருகின்ற ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் ரயர் எரித்த சம்பவமொன்று இன்று (06.05.2022) காலை இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் , மொத்த மரக்கறி விற்பனையகம், தபாலகம், வங்கிகள் என்பன மூடப்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலை இன்று இயங்கிய நிலையில் அதனை மூடுமாறு தெரிவித்து ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பாதையில் இவ்வாறு ரயர் எரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுமையான கதவடைப்புப் போராட்டம்!!

கதவடைப்புப் போராட்டம்..

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் இன்று (06.05) பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்கள், மொத்த மரக்கறி விற்பனையகம், தபாலகம், வங்கிகள், அனைத்தும் மூடப்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், தனியார் பேரூந்து சேவை, முச்சக்கர வண்டிகள் என்பனவும் சேவையில் ஈடுபடாமையால் போக்குவரத்து சேவையும் பாதிப்படைந்துள்ளது. இருப்பினும் வீதிகளில் மக்களின் நடமாட்டத்தை குறைந்தளவில் அவதானிக்க முடிகிறது.

வவுனியாவில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு : வெறிச்சோடிய பாடசாலைகள்!!

வவுனியாவில்..

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (06.05) தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

வவுனியாவில் நாளையதினம் முழு கடையடைப்பும் போராட்டமும் நடத்த ஏற்பாடு!!

இலங்கை பூராகவும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம.ஜெகரீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாளைய தினம் நாடுபூராகவும் பூரண கர்த்தாலை அனுஸ்டிப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரச அரச சார்பற்ற தனியார் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யவுள்ளது.

நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்களது வாழ்வை கொண்டு நடத்த கஸ்டப்படும் நிலையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு திர்வை காண்பதை விடுத்து இந்த பிரச்சனையை மேலும்,

விரிவடையச்செய்து மக்களை துன்புறுத்தக்கூடிய நிலையை தோற்றுவித்துள்ளது. எனவே இதனை பொருத்துக்கொள்ள முடியாது எனவும் நாளையதினம் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து பழைய பேரூந்து நிலையம் வரை கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் செய்யவுள்ள திட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது ஏற்பாடு குழு சார்பில் இணைந்த மொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.