ரூபாவின் பெறுமதி உயர்ந்தது : மத்திய வங்கி அறிவிப்பு!!

ரூபாவின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 12.51 ரூபாய் குறைவாகும் என்பதுடன் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 377.49 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, அரச அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் ஒரு டொலர் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்திந்திருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் ரூபாவின் பெறுமதியில் இன்று வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு!!

ஊரடங்கு..

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை (14.05) மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15.05) காலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஊரடங்கு தளர்வு நேரத்தில் அதிகரித்த மக்கள் நடமாட்டம்!!

ஊரடங்கு தளர்வு நேரத்தில்..

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் இன்று (13.05) காலை நீக்கப்பட்டமையினையடுத்து வவுனியா நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் அதிகளவிலான மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளதுடன்,

வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வீட்டிற்கு செல்லும் பாதையின் இரு பகுதிகளிலும் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திடமாக செல்பவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.

வவுனியா ஓமந்தையில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்!!

கல்வீச்சு தாக்குதல்..

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேரூந்து மீது பறண்நட்டகல் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் தாக்குதலில் சேதமடைந்த பேரூந்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் பேரூந்தின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுப்பு : ஹெரோயினுடன் சிக்கிய இளைஞர்கள்!!

இரு இளைஞர்களை கைது..

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் அதிரடியாக செயற்பட்டு ஹெரோயினுடன் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன் அறுக்கப்பட்ட சங்கிலிகளையும் மீட்டுள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து இன்று (12.05) கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அண்மையில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னர் சில நாட்களில் திருநாவற்குளம், வைரவபுளியங்குளம், யாழ் வீதி, பூந்தோட்டம் சந்தி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வீதியால் சென்ற மற்றும் தனிமையில் நின்ற பெண்களைப் பின் தொடர்ந்தும் அவர்களிடம் முகவரி விசாரிப்பது போன்று விசாரித்து அவர்கள் அணிந்திருந்த சங்கிலிகள் அறுத்துச் செல்லப்பட்டதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் தனித் தனி முறைப்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்குள் கிடைக்கப்பெற்றிருந்தது.

6 இடங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மகறம்பைக்குளம் பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன்,

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மோட்டர் சைக்கிள் திருட்டு மற்றும் 5 இடங்களில் இடம்பெற்ற சங்கிலி அறுப்பு சம்பவங்கள் உள்ளிட்ட 6 திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின், அறுக்கப்பட்ட 5 சங்கிலிகள், திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் பூந்தோட்டம் மற்றும் மதீனா நகர் பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மீண்டும் ஏற்பட்ட அதிகரிப்பு!!

அமெரிக்க டொலர்..

இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 380 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 363 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 443.88 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் கொள்வனவு விலை 466.64 ரூபாயாக பதிவாகியுள்ளது.

பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது : கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!!

பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து பேராயர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்துச் செய்ய வேண்டும் “ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே மற்றும் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறவில்லை. இந்த நியமனம் சட்டபூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் தோற்கடிக்கப்பட்ட மற்றும் மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை அல்ல, மரியாதைக்குரிய நேர்மையான நபரையே மக்கள் விரும்புகிறார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒரு நபரை மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை : “மகாநாயக்க தேரர் கட்சி சார்பற்ற நபரை பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரை என்ன ஆனது என்பது அனைவரின் யூகமாக உள்ளது.

தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடக்க முடியாது,” எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கச்சார்பற்ற நபரால் மட்டுமே இது நிகழ முடியும் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13.05.2022) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (14.05.2022) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை 6வது முறையாக ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி கோட்டபாயவால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்!! (புகைப்படங்கள்)

ரணில் விக்ரமசிங்க..

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம்!!

இரு நாட்களில்..

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாட்டில் கடந்த இரு தினங்களில் ஏற்பட்ட வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அரச வாகனங்கள் உட்பட 41 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. 60 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 219 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சொத்து இழப்புகளின் பெறுமதி தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவைப்படும் போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி : வெளியானது விசேட அறிவித்தல்!!

துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி..

தேவையான போது துப்பாக்கிச் சூடு உட்பட சட்ட பலத்தை பயன்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் குழுக்களால் உயிர் இழப்பு அல்லது கொள்ளைச் சம்பவங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வாகன நிறுத்துமிட சோதனைகளைத் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அரச அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை அல்லது உயிர் இழப்பு அல்லது பாரிய காயங்களைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்!!

ஊரடங்கு..

நாட்டில் நடைமுறையிலுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

இன்று ஒரு பிரச்சினையும் பதிவாகாத பட்சத்தில் நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக கடந்த 9ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவரின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு!!

இராணுவ பாதுகாப்பு..

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோரது வீடுகளுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் நேற்றைய தினம் (09.05) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது கொழும்பில் மேற்கொண்ட தாக்குதலையடுத்து நாடு பூராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும், அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் வன்முறைகள் ஏற்பட்டதுடன், பலரது வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் இரவிரவாக தீயிட்டு எரிக்கப்பட்டன.

இதனையடுத்து வவுனியாவில் வசித்து வரும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிராமிய அபிவிருத்தி மற்றும் பயிர்செய்கை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் ஈபிடிபியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன்,

ஆகிய இருவரதும் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் என்பவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மேலதிகமாக, இரவிரவாக இராணுவவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 561 ஆவது படைப் பிரிவினர் குறித்த இருவரதும் வீடுகள் மற்றும் அலுவலங்களுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

ஊடரங்குச் சட்டம் மேலும் நீடிப்பு!!

ஊடரங்குச் சட்டம்..

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை (12.05) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (11.05) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா IDM Nations Campus இன் சட்டச்சிகரம் சஞ்சிகை வெளியீட்டு விழாவும், கலாச்சார நிகழ்வுகளும்

IDM Nations Campus இன்….

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் IDM Nations Campus இன் Department of Legal Studies சட்டமானி கற்கைநெறி மாணவர்களால் மிகவும் பிரமாண்டமான முறையில் வருடாந்த சஞ்சிகை வெளியிடும் கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய IDM Nations Campus இன் சட்டமானி கற்கைநெறியினை தொடர்கின்ற மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு IDM Nations Campus வட பிராந்திய இயக்குனர் கலாநிதி. அன்று அனஸ்லி அவர்களின் தலைமையில் இடம் பெற்று இருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உதவி மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் அவர்களும் கௌரவ விருந்தினராக IDM Nations Campus International இனுடைய நிர்வாக இயக்குனர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபை தலைவர் கௌதமன், வவுனியா கல்வியியல் கல்லூரி கல்லூரியின் தலைவர் கமலகுமார், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் ஆகியோரும் சமய மதகுருக்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். மேலும் பல அதிதிகளும், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

IDM Nations Campus 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறையில் சிறந்து விளங்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும். அதிலும் குறிப்பாக சர்வதேச பல்கலைக்கழகங்களுடனான (Buckinghamshire New University – United Kingdom) பட்டப்படிப்பு கற்கைநெறிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த வகையில் வட மாகாணத்தில் எமது மாணவர்கள் இலகுவாக சட்டமானி கற்கைநெறியினை கற்பதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் Vavuniya IDM Nations Campus வழங்கி வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும்.

அதன் விளைவாக இவ்வருடம் சட்டமானி கற்கைநெறி மாணவர்களின் முயற்சியில், அவர்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகளை இந்நிகழ்வில் வெளிப்படுத்தியிருந்தனர்.