வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரத்துடன் மோதி பலியான இளைஞன் யார்? வெளியான தகவல்!!

ஓமந்தை பகுதியில்..

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, ஒமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (18.04) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமானது ஓமந்தை, அரச வீட்டு திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் பயணித்த போது தண்டவாளப் பகுதியில் பயணித்த இளைஞன் ஒருவருடன் புகையிரதம் மோதியதில் குறித்த இளைஞன் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புகையிரத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டம் 6 ஆம் ஓழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய சுந்தரமூர்த்தி சுதன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உடல் சிதறி பலி!!

ஓமந்தை பகுதியில்..

வவுனியா ஒமந்தை புகையிரத நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (18.04.2022) காலை 11.00 மணியளவில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளார்.

ஒமந்தை பகுதியில் புகையிரத தண்டவாளத்தினை அவர் கடக்க முற்பட்ட சமயத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு உடலின் சில பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலியே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புகையிரத்தில் எடுத்துச்செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து சம்பவம் தற்கொலையா? அல்லது விபத்தா? என கோணத்தில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலைகள்!!

அதிகரிக்கும் எரிபொருள் விலை..

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெட்ரோல் 92 – 338 ரூபாவாகும், பெட்ரோல் 95 – 367 ரூபாவாகும்,பெட்ரோல் யூரோ 3 – 347 ரூபாவாகும்,ஓட்டோ டீசல்- 289 ரூபாவாகும், சூப்பர் டீசல் – 327 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

தனியார் பேருந்து வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : நால்வர் படுகாயம்!!

விபத்து..

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் ஆரையம்பதி பாலமுனை சந்தி வீதி வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வாகனங்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்ற ஹயஸ் வாகனம் : 4 பேர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (17.04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் வீதி ஊடாக ஏ9 வீதியில் வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர்களை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றதுடன்,

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக நகரில் இருந்து யாழ் வீதி நோக்கிச் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளையும் மோதித்தள்ளியது.

தொடர்ச்சியாக நிறுத்தாமல் சென்ற குறித்த ஹயஸ் ரக வாகனம் இலுப்பையடிப் பகுதியில் மேலும் ஒரு முச்சக்கர வண்டியினை மோதித்தள்ளியதுடன், அங்கிருந்தும் ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்று வான் ஒன்றையும் மோதித் தள்ளியதுடன் குறித்த ஹயஸ் வாகனம் தொடர்ந்தும் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் குறித்த வாகனத்தினை விரட்டிச் சென்றனர். பொலிசாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் குறித்த வாகனத்தினை விரட்டிச் சென்றனர்.

அதிவேகமாக சென்ற வாகனம் அனுராதபுரம் மாவட்டத்தின் ஹொரவப்பொத்தானை பகுதியில் வைத்து பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தால் வவுனியா நகரப்பகுதியில் 46 வயதுடைய ஆசிகுளம், 29 வயதுடைய மடுகந்தை, 46 வயதுடைய திருநாவற்குளம், 40 வயதுடைய உக்குளாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அசம்பாவிதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

குறித்த வானின் சாரதி மது போதையில் இருந்தாரா அல்லது போதைப்பொருட்கள் எதனையும் கடத்திச் சென்றாரா என்ற கோணத்தில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா மகிழங்குளம் மக்களுக்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதி!!

அத்தியாவசியப் பொருட்கள்..

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓமந்தை – மகிழங்குளம் கிராம மக்களுக்கு அத்தியாவசியக் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

மலேசியாவில் உள்ள டெக் அவுட்ரீச் நிறுவனத்தின் அணுசரனையில் மலரும் பூமி பெண்கள் விவசாய அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் இவ் அத்தியாவயசிப் பொருட்கள் அடங்கி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக புத்தாண்டு தினத்திலும் பொருட்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்காக குறித்த அத்தியாவசிப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அரிசி, மா, சீனி, பருப்பு, உருளை கிழக்கு, வெங்காயம், நெத்தலி, முட்டை, தேங்காய் எண்ணெய், தேயிலை, உப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா- புதிய சாளம்பைக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு!!

இப்தார் நிகழ்வு..

வவுனியா, புதிய சாளம்பைக்குளம், மஸ்ஜிதுல் அக் ஷா ஜீம்மா பள்ளியில் இப்தார் நிகழ்வு இசிறப்பாக இடம்பெற்றது.

பள்ளி தலைவர் அல்ஹஜ் கே.எம்.ஏ.றகீம் (ஹசன்) தலைமையில் வவுனியா மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேக் என்.பி.ஜீனைட் மதனி அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நோன்பு இருந்த அக் கிராம மக்கள் இன்று (14.04) மாலை 6.25 இற்கு மஸ்ஜிதுல் அக் ஷா ஜீம்மா பள்ளியிக்கு வருகை தந்து இப்தார் நிகழ்வில் பங்குபற்றியதுடன், தொழுகையிலும் ஈடுபட்டனர். இதில் புதிய சாளம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவிலிருந்து சென்று இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல் போயிருந்த மூவரின் சடலங்களும் மீட்பு!!

இறம்பொடை நீர்வீழ்ச்சியில்..

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14.04) மதியம் மீட்கப்பட்டது என கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் நேற்றைய தினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இருவரின் சடலம் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பெய்த மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இன்றைய தினம் (14) மூன்றாவது நாளாகவும் காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மதியம் வேளையில் குறித்த யுவதி மற்றும் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது-18), வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது-21) என தெரியவந்துள்ளது.

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா!!

தேர்த் திருவிழா..

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் திருக்கோவிலின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று (14.04) தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குரு சிவசிறி மயூரக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆதிவிநாயகர் பெருமானுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகங்கள் இடம்பெற்று உள்வீதி வலம் வந்த ஆதிவிநாயகப் பெருமான், வெளி வீதியில் பிரவேசித்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியாவர்களுக்கு அருள்பாலித்துடன்,

பக்த அடியார்கள் சிதறு தேங்காய் அடித்தும், அங்க பிரதிஸ்டை செய்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும், தூக்கு காவடி எடுத்தும் ஆதிவிநாயகப் பெருமானை அரோகரோ கோசத்துடன் வழிபட ஆதிவிநாயகர் பெருமான் தேரில் வலம் வந்து அடியார்களுக்கு புத்தாண்டு தினத்தில் அருள்பாலித்தார்.

புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர், யுவதியினை தேடும் பணி நிறுத்தம்!!

நீர்வீழ்ச்சியில்..

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (13.04.2022) இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போது ஒரு யுவதியின் சடலமே கண்டு பிடிக்கப்பட்டது. எனினும், இளைஞர் ஒருவரினதும், யுவதி ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்படவில்லை.

பெய்து வரும் மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று (13.04.2022) மாலை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை நாளைய (14) தினமும் யுவதியையும், இளைஞரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு களைகட்டிய வியாபாரம்!!

புத்தாண்டை முன்னிட்டு..

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளது.

தமிழ் – சிங்கள புதுவருடம் நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் மழைக்கு மத்தியிலும் புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், பட்டாசுகள் என்பவற்றையும் மரக்கறிகளையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இதனால் வவுனியா நகரம் சனச்செரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல் போனோரின் விபரம் வெளியானது : ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு!!

நீர்வீழ்ச்சியில் காணாமல் போனோரின் விபரம்..

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13.04) காலை மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் சடலம் கற்பாறை ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த மூவர் இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நிலையில் யுவதியின் சடலம் மீட்பு : இருவரை தேடும் பணி தொடர்கிறது!!

இறம்பொடை நீர்வீழ்ச்சியில்..

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13.04) காலை மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியாவுக்கு நேற்று (12.04) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பகுதியான இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பேரூந்தை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு இளைஞர், யுவதிகள் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றுள்ளனர்.

திடீரென நீர்வீழ்ச்சியின் ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கூக்குரல் எழுப்ப, அப்பகுதியில் இருந்து சிலர் வந்துள்ளனர்.

அதற்குள் 4 யுவதிகளை அவர்களுடன் சென்ற இளைஞர் காப்பாற்றி கரைசேர்த்துள்ளார். ஏனைய இரு யுவதிகளையும் காப்பாற்ற முற்பட்டவேளையிலேயே மூவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் : பிரதமருக்கு சுமந்திரன் ஆலோசனை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (12.04) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கொந்தளிப்பான அரசியல் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூடியது. இந்த அரசியல் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் பொருளாதார வீழ்ச்சி.

எப்படியாக இலங்கையினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கான காரணிகள் என்ன? இனி என்ன மாதிரியாக இந்த நிலமை மாறப் போகிறது என்பன குறித்து நீண்ட நேரமாக கருத்து பரிமாற்றம் செய்தோம்.

சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பக்க விளைவுகளை எமது மக்கள் எதிர் நோக்க வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எனன விதமான தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும்.

மக்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் ஆழமாக பேசியிருந்தோம்.

இந்த பொருளாதார நிலை காரணமாக இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதற்கான நிலமை தான் காணப்படுகின்றது. அது எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப் போகிறது. அவர்களது பொருளாதார நிலமையும் பாதிக்கப் போகிறது.

அதற்கு மாற்று வழிகளாக பல யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இது எங்களது மக்களுக்கு புதிதான விடயமல்ல. இருப்பினும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கான வழிகாட்டுதல்களை நாங்கள் கொடுப்போம்.

எங்கள் பொருளாதார நிபுணர்கள் ஊடாக அது தொடர்பில் கலந்துரையாடுவதுடன், எமது அடுத்த மட்ட பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அதில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலமை காணப்படுகின்றது. அமைச்சரவை என நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உடனடியாக இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் இல்லாத நாடு என நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது அவர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தார்.
அப்போது நீங்கள் தானா தற்போது நிதி அமைச்சர் என அவரிடம் நான் கேள்வி கேட்டேன். ராஜினாமா செய்து விட்டு, தான் நிதி அமைச்சர் என அவர் சொன்னார். அவ்வாறு அவர் சொன்ன போது அவருடன் கூட இருந்தவர்கள் எல்லாம் வியப்பாக அவரை திரும்பி பார்த்தார்கள். ஏன்எனில் இப்பொழுது அவர் தான் நிதி அமைச்சர் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படியாக நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக சென்று பேச வேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புக்களுடன் பேச வேண்டும். அமைச்சரா, இல்லையா என்று புரியாத நிலையில் உள்ளவர் தான் போய் பேச போகிறார்.
சர்வதேச நாணய நிதியமும், மற்றைய நாடுகள், அமைப்புக்களும் உதவிக்கு முன் வருவதாக இருந்தால் கூட நாட்டில் ஒரு அரசியல் ஸ்திர தன்மை இல்லாமல் அவர்கள் அந்த செயற்பாட்டுக்குள் வர மாட்டடார்கள். ஆகவே அரசியல் ஸ்திரதன்மையை உருவாக்குவது அத்தியாவசியமான செயற்பாடு. அதற்கு உகந்த வகையில் ஜனாதிபதியோ, பிரதமரோ செயற்படுவதாக தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக நான் கொழும்பில் இருந்த காரணத்தினால் பல்வேறு தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் பிரதான எதிர்கட்சி சில முன்னெடுப்புக்களை செய்ய உள்ளார்கள்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிபக்கு எதிரான குற்றப் பத்திரிகை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டப் பிரேரணை உட்பட பல விடயங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பில் ஆராய்ந்தோம்.
நாட்டில் இளைஞர்களாக சேர்ந்து தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இல்லாமலேயே நடத்தப்படுகின்றது. எமது பகுதிகளிலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த மூன்று பிரேரணைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். அந்த தீர்மானம் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி உத்தியோக பூர்வமான தீர்மானமாக எடுப்போம்.
எமது மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று எமது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை எமது கட்சி தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்துவார்.
தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம்.
மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காக கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது.
இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாக செய்யற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது. அவ்வாறு எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான ஆதரவை இடைக்கால அரசாங்கதற்கு கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம். ஆனால், அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நான் சந்திக்கவில்லை. அவர் என்னை சந்திக்க கேட்டிருந்தார். அதனடிப்படையில் இரவு அவரை தனியாக சந்தித்து பேசியிருந்தேன். அரசியலமைப்பு தொடர்பாக பல பிரச்சனைகள் எழுத்துள்ளன.
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என பல விடயங்கள் பேசப்படுகின்றன. பல கட்சித் தலைவர்கள் என்னுடன் பேசுகிறார்கள். இலவசமாக சட்ட ஆலோசனை பெறுகிறார்கள் என நான் யோசிகின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தொலைபேசியில் என்னுடன் பேசினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தொலைபேசியில் காலையில பேசியிருந்தார். வேறு தலைவர்கள் பலர் பேசுகிறார்கள். சட்ட நிலைப்பாடு தொடர்பாகவும் அறிகிறார்கள்.
அரசியல் நிலையை ஸத்திரதன்மைக்கு கொண்டு வருதல் தொடர்பாக நடைபெறும் பேச்சுக்களிலும் நான் கலந்து கொண்டு வருகின்றேன். பிரதமர் மஹிந்த அவர்களுக்கு நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை அரசாங்கமே கொண்டு வந்தால் சில விடயங்களில் முன்னேற முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அவசர கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்..

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக ஆராய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் இன்று (12.04) கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் காலை 11 மணிக்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய அரசியல் குழு சந்திப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்திருந்தது.

குறித்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், துரைராஜசிங்கம் உட்பட அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள், பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!!

ஈராக்..

ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 103 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகள் மூலம் 15 குழந்தைகள் மற்றும் நூறுக்கும் அதிகமான பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் உள்ளனர்.

இந்த நிலையில் 37 வயதான பெண்ணை சமீபத்தில் Hajji மூன்றாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் மகன் அப்துல் சல்மான் கூறுகையில், எங்கள் தாயார் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து எங்கள் தந்தை Hajjiக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர் திரும்ப வருவாரா என சில மாதங்கள் Hajji காத்திருந்த நிலையில் அவர் வராததால் 37 வயதான பெண்ணை மூன்றாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எங்களிடம் மூன்றாம் திருமணம் செய்து கொண்டு மேலும் பல குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அவர் கூறியதையடுத்தே பெண் பார்த்தோம் என கூறியுள்ளார்.

Hajji மற்றும் அவர் குடும்பத்தார் திருமணம் செய்துகொண்டு அதிக குழந்தைகளைப் பெற பயப்படக்கூடாது என்ற விடயத்தை ஆணித்தரமாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது.