போலிஸாரிடம் வினோத புகார் அளித்த இளைஞர் : நடந்தது என்ன?

கர்நாடகா..

கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். வாலிபரான இவர் கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள் என நினைத்துள்ளார். மேலும் ஜோதிடர் ஒருவரையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஹிரேமட், எனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள். அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரிடம் மன நல மருத்துவரைச் சென்று பாருங்கள் என அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இரவில் தூக்கம் வரவில்லை என கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி : அதிர்ச்சியில் கணவன்!!

கேரளா..

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிஜி (38), சிவதாசன் தம்பதி. கடந்த பிப்ரவரி 22ம் தேதி மனைவி ஷிஜியை காணவில்லை என சிவதாசன் காவல்துறையிடம் புகாரளித்திருக்கிறார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷிஜியை தேடி வந்த போலிஸாருக்கு கொயிலண்டி ரயில் நிலையம் அருகே பெண், ஆண் இருவரது சடலம் கிடப்பதாக தகவல் வந்திருக்கிறது.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்ததில் உயிரிழந்தது காணாமல் போனதாக அறியப்பட்ட சிவதாசனின் மனைவி ஷிஜி என தெரிய வந்தது.

மேலும் ஷிஜியுடன் கூட இருந்த நபர் முச்சுக்குன்னுவைச் சேர்ந்த ரனிஷ் (34) என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஷிஜிக்கும் ரனிஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததும்,

இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எண்ணி வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவி போர்வையில் தனியாக குடும்பமே நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், தங்களது வீட்டுக்கு தெரிந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பக்குதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவரை காணவில்லை!!

மூவரை காணவில்லை..

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் மூவர் காணமால் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த மூவரும் இன்றையதினம், 7 பேர் கொண்ட குழுவினருடன் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.

அதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்களில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவதாகவும் அவர்களை தேடும் பணி முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குழந்தைகள் கண்முன்னே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

கேரளா..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அக்குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் அனாதையாகியுள்ளனர்.

கேரளாவின் கொச்சியை சேர்ந்த கிரிஜா (62) அவர் மகள் ரஜிதா (38) மற்றும் ரஜிதாவின் கணவர் பிரசாந்த் (43) ஆகிய மூவரே உயிரை மாய்த்து கொண்டனர்.

பிரசாந்த் – ரஜிதா தம்பதிக்கு 12 வயதில் மகளும் 7 வயதில் மகனும் உள்ள நிலையில் மகள் தான் இந்த தற்கொலை குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் சடலத்தை மீட்டதோடு பிரசாந்த் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள். அதில், ரூ 1 கோடிக்கு மேல் கடன் உள்ள காணதால் இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டோம் என எழுதப்பட்டுள்ளது.

அதன்படி ரஜிதா விஷம் குடித்தும், பிரசாந்த் மற்றும் கிரிஜா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கண்களும் பீதியில் இருந்ததை காணமுடிந்தது.

ஏனெனில் அவர்களை தற்கொலை செய்ய பெற்றோர் வற்புறுத்திய நிலையில் இருவரும் மறுத்துள்ளனர். இதையடுத்து குழந்தைகள் கண்முன்னே அவர்கள் உயிரை மாய்த்து கொண்டனர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சனை தான் காரணம் எனவும், வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து உயர்வடைந்து செல்லும் டொலரின் பெறுமதி!!

டொலரின் பெறுமதி..

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 329 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 431 ரூபா 27 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 05 சதம் விற்பனை பெறுமதி 361 ரூபா 83 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343 ரூபா 01 சதம். விற்பனை பெறுமதி 356 ரூபா 88 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 17 சதம் விற்பனை பெறுமதி 262 ரூபா 77 சதமாகவும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 246 ரூபா 86 சதமாகவும், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 65 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடு நீக்கம்!!

கடன் அட்டைகளுக்கு..

கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்கை வட்டி வீதத்தை 700 புள்ளிகளால் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, கொள்கை மாற்றங்களை திறம்பட பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக, கடன் அட்டைகள், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக வங்கி ஓவர் டிராஃப்ட் மற்றும் அடமானங்கள் மீதான அதிகபட்ச வட்டி விகித வரம்புகளை நீக்குவதற்கு நாணய வாரியம் முடிவு செய்துள்ளது.

இத்தகைய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் விரைவான பரிமாற்றத்துடன், நிதிச் செலவு அதிகரிக்கும், அதன் மூலம் பணவியல் மற்றும் கடன் விரிவாக்கம் குறையும்.

அதிகப்படியான பணத்தை வங்கி அமைப்புக்குள் தள்ளும், வட்டி விகித முரண்பாடுகளை நீக்கி, மாற்று விகிதங்கள் மீதான அழுத்தத்தைத் தளர்த்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

அமெரிக்க டொலர்..

இலங்கையின் கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலருக்கு செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாகவும் விற்பனை விலை 327.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சந்தை ஆதாரங்களுக்கமைய, கறுப்பு சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டொலருக்கு 350-360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டுள்ளது.

கறுப்பு சந்தையில் கடந்த சில நாட்களாக டொலர் ஒன்றுக்கு 400 – 420 ரூபாய் வரையில் வழங்கப்பட்ட நிலையில் நேற்று 350 – 360 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளாலும், பணம் அனுப்பும் தொகை அதிகரித்ததாலும் கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்ல தீர்மானித்துள்ளமையினால் ரூபாய் வலுவடைய ஆரம்பித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரசபையின் அனுமதியின்றி இரவில் கட்டப்படும் இஸ்லாமிய கலாசார மண்டப மதில்கள் : இளைஞர்கள் விசனம்!!

ஹொரவப்பொத்தானை வீதியில்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய காலசார மண்டபத்தின் சுற்று மதில் நகரசபையின் அனுமதியின்றி இரவிரவாக அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட ஹொரவப்பொத்தானை வீதியில் இஸ்லாமிய கலாசார மண்டபம் அமைந்துள்ளது. அது அருகில் இருக்கும் வவுனியா குளத்தின் நீரேந்துப் பகுதிக்கு செல்லும் வாய்காலை அண்மித்ததாக அமைந்துள்ளது. குறித்த கலலாசார மண்டப்திற்கான சுற்று மதில்களை அப் பகுதியில் கழிவு நீர் வடிந்து செல்லும் வாய்கால் ஊடாக அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மதில் கட்டுமாண நடவடிக்கைக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்காத நிலையில், புனித நோன்புக் காலத்தில் இரவிரவாக குறித்த கட்டுமாணப் பணிகள் இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களும் ஒற்றுமையாக காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் முறையான அனுமதியின்றி,

இரவிரவாக ஏனைய சமூக இளைஞர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் வகையில் நோன்புக் காலத்தில் இஸ்லாமிய கலாசார நிலைய நிர்வாகத்தினர் இவ்வாறு கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டு நடந்து கொள்ளும் முறை குறித்து இளைஞர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன்,

இதற்கு எதிராக நகரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து : மயிரிழையில் தப்பிய பயணிகள்!!

விபத்துக்குள்ளான பேரூந்து..

கண்டியில் இருந்து மன்னார் நோக்கு சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று செட்டிகுளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இன்று (11.04) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் மழைக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பேரூந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

எனினும், குறித்த பேரூந்தில் 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த போதும் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் தமிழகம் சென்றவர் வேதனையுடன் சொன்ன வார்த்தை!!

வவுனியாவில் இருந்து..

இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்கள் அங்கு நிலவும் சூழல் குறித்து வேதனையுடன் பேசியுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன.

கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்றும் இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்தனர். முல்லைத்தீவில் இருந்து வந்த சுசீலா அழுதபடி கூறுகையில், எனது கணவர் இரும்பு பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்து பொருட்கள் கூட கிடைக்காமல் கடுமையாக கஷ்டப்பட்டோம். குழந்தைகளை காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே படகோட்டிகளுக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்து இங்கு வந்துள்ளோம்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ஆகியோரின் குடும்ப அரசியலே முக்கிய காரணம் என கூறினார்.

வவுனியாவில் இருந்து 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் வந்த கோடீஸ்வரன் என்பவர் கூறுகையில், இலங்கையில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். விவசாயம் செய்வதற்கு விதைகள், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்காததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

எனது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சூழ்நிலையில் மிகுந்த கவனத்தோடு அவரை கவனிக்க வேண்டும். இதனால் மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்து அந்த பணத்தின் மூலம் படகில் ஏறி இங்கு வந்து சேர்ந்துள்ளோம் என கூறியுள்ளார்.

மூன்றாவது இரவிலும் கொட்டும் மழையில் தொடரும் மக்கள் போராட்டம்!!

மூன்றாவது இரவிலும்..

காலிமுகத்திடலில் மூன்றாவது நாள் இரவுப்பொழுதிலும் கொட்டும் மழையில் “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் மக்களின் மாபெரும் போராட்டம் தொடர்கின்றது.

ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கோட்டாபய வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடி பானங்களை வழங்கி வருகின்றனர்.

அரசின் ஒவ்வொரு நகர்வையும் அவதானித்தபடியும் ஏற்படப்போகும் மாற்றங்களை எதிர்பார்த்தபடியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த பிக்குவை மழையில் நனையவிடாமல் தடுத்த முஸ்லிம் மாணவி : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம்..

இலங்கை முழுவதும் மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலை யில் இணையத்தில் புகைப்படம் ஒன்ற பிரபல்யமடைந்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது தேரர் ஒருவரை மழையில் நனையவிடாமல் முஸ்லிம் மாணவி ஒருவர் புத்தகத்தினால் அவரை மறைத்துக் கொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இன மத பேதமின்றி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதனை இந்த புகைப்படம் உணர்த்துவதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தால் குறித்த முஸ்லிம் மாணவி மீது மரியாதை ஏற்பட்டுள்ளதாக பலரும் இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர். “நீங்கள் உங்கள் மதம் அல்லது இனத்தை முன்வைக்கவில்லை.

இந்த நாட்டின் கௌரவமான குடிமகன் என்ற உங்கள் மதிப்பை இது காட் டுகிறது. இதுதான் நம் நாட்டுக்கு தேவை. உங்களுக்கு வாழ்த்துக்கள்” என இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

திருமணமான உடனேயே கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கிய புதுமணத் தம்பதி!!

புதுமணத் தம்பதி..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான பொதுமக்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை வழியிலான போராட்டம் இந்த நிமிடம் வரை அதே உத்வேகத்துடன் தொடர்ந்து வருகின்றது.

கோட்டாபய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பும் வரை எமது போராட்டம் தொடரும் என கோஷம் எழுப்பி ஒன்று கூடியவர்கள், மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாது தற்சமயம் வரை துணிந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இன்றைய போராட்டக் களத்தில், புதுமண தம்பதியினர் இருவர் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். திருமணம் முடிந்தவுடன் நேரடியாக போராட்டக் களத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் குறித்த தம்பதியினர்.

காதலனால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட யுவதி!!

அம்பகஸ்வெவ பகுதியில்..

மெதிரிகிரிய – அம்பகஸ்வெவ பகுதியில் தனது காதலனால் கூரிய ஆயதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த பெண் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள 22 வயதுடைய பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று அம்பகஸ்வெவ பிரதேசத்தில் தலை மறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்தது : கடும் வீழ்ச்சியில் ரூபா!!

டொலரின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 330 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் டொலர் ஒன்றின் பெறுமதி இவ்வாறு பதிவாகியுள்ளது, இலங்கை வங்கி – ரூ. 330.00, மக்கள் வங்கி – ரூ. 329.99, சம்பத் வங்கி – ரூ. 330.00, HNB – ரூ. 330.00, NDB – ரூ. 320.00, DFCC – ரூ. 320.00, அமானா வங்கி – ரூ.330.00.

யாழில் தாயின் கண்முன்னே பிரிந்த 7 வயது மகனின் உயிர் : லொறி மீது தாக்குதல் நடத்திய மக்கள்!!

யாழில்..

யாழ்ப்பாணம், சத்திர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

விபத்து நேர்ந்த போது மோட்டார்சைக்கிளில் தாயும், மகனும் பயணித்துள்ளனர். இதன்போது லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறிய நிலையில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த அஜித்தன் அபிநயன் (வயது 10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.