டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை!!

இலங்கை ரூபாவின் பெறுமதி..

வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 321 ரூபா 49 சதம் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது. மேலும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபா 08 சதமாகவும், விற்பனை பெறுமதி 421 ரூபா 89 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 352 ரூபா 42 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 346 ரூபா 20 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 257 ரூபா 29 சதமாகவும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 59 சதம். விற்பனை பெறுமதி 242 ரூபா 38 சதமாகவும், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 61 சதமாகவும் பதிவாகியுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : 3 நாட்களுக்கு மின்தடை இல்லை!!

மின்தடை இல்லை..

எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க இதனை அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏப்ரல் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் 4 மணித்தியாலங்கள் மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 16ஆம் திகதியும் 17ம் திகதியும் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியாவில் எமது உற்பத்திகள் – எமது வரப்பிரசாதம் எனும் தொனிப் பொருளில் கண்காட்சியும் சந்தையும்!!

விற்பனை கண்காட்சியும் சந்தையும்..

புதுவருட தினத்தை முன்னிட்டு ‘எமது உற்பத்திகள் – எமது வரப்பிரசாதம்’ என்னும் தொனிப் பொருளில் விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது.

சமுர்த்தி அபிமானி திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (07.04) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

இதில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களான புடவைகள், மரக்கறி வகைகள், அலங்காரப் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், எண்ணெய் வகைகள், பொம்மைகள் என்பன விற்பனை செய்யப்பட்டன.

சமுர்த்தி திட்டத்தின் கீழ் பயன்பெற்று உற்பத்தியை மேற்கொள்பவர்கள், பெண் முயற்சியாளர்கள், பிரதேச சிறு முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.

நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிறைசூடி,

உதவி பிரதேச செயலாளர் சஜீவன் பிரியதர்சினி, பிரதேச செயலக தலைமை சமுர்த்தி முகாமையாளர் திருமதி சந்திரகுமார், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் டினேஸ், அரச அதிகாரிகள், சமுர்த்திப் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உதவுவதற்காக பணம் சேகரிக்கும் இந்திய யாசகர்!!

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் யாசகர் ஒருவர் 20000 இந்திய ரூபாயை திரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் இந்த தொகையின் பெறுமதி 83 ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தூத்துக்குடியை சேர்ந்த பூல்பாண்டி என்ற யாசகர் பணத்தை வசூலித்து சென்னை மாவட்ட செயலகத்திடம் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த யாசகர் கொரோனா காலத்தில் உணவு வாங்க முடியாத மக்களுக்காக யாசகம் பெற்று பணத்தை வழங்கியவர் என குறிப்பிடப்படுகின்றது.

அவர் 2020 ஆம் ஆண்டு ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “என்னைப் போல யாரும் யாசகம் பெறும் நடவடிக்கைக்கு செல்ல கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

நான் ஏழைகளுக்காக யாசகம் பெற்று உதவ முடியும். நான் பணத்தை விரும்பாத மனிதன். அதனால்தான் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரு தினங்கள் இலங்கை முழுவதும் மின்வெட்டு இல்லை!!

மின்வெட்டு..

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிக்கையொன்றில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த நாட்களில் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த நேரம் ஏழு மணித்தியாலங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான எதிர்வரும் 13 மற்றும் 14 திகதிகளில் மின்வெட்டு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு பௌத்த குருமாரும் ஆசிரியர்களும் போராட்டம்!!

போராட்டம்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரார்கள் ‘கோட்டபாய வீட்டுக்கு செல்லுங்கள், அரசாங்கமே உடனடியாக பதவி விலகு, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கொடு’ என பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடைந்ததுடன்,

பழைய பேரூந்து நிலையம் முன்பாக ஏ9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் ஏ9 வீதியூடனான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மதகுருமார், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்!!

கூமாங்குளம் பகுதியில்..

வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (07.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில் வெங்காயத்திற்கு ஒருவர் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது, மற்றொருவர் மின்சார வயரின் உதவியுடன் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, மின்சார வயரில் இருந்து மின் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடார். எனினும் அவர் மின்சாரம் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

22 வயதுடைய செல்வராசா கேதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் சமையல் எரிவாயு வழங்குவதில் குழப்ப நிலமை : ஏ9 வீதியினை மறித்து மக்கள் போராட்டம்!!

ஏ9 வீதியினை மறித்து மக்கள் போராட்டம்..

வவுனியா, பூனாவ பகுதியில் அமைந்துள்ள எரிவயு விநியோகத்தர் வளாகத்தில் சமையல் எரிவாயு வழங்குவதில் குழப்பநிலையடுத்து மக்கள் ஏ9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலிருந்து எரிவாயு சிலிண்டர்கள் மாவட்டம் முழுவதும் விநியோகிப்படுவதுடன் தற்போது எரிவாயு தட்டுப்பாட்டையடுத்து குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த விநியோக இடத்தில் இன்று (08.04) காலை வரிசையில் மக்கள் காத்திருந்த போதிலும் 9.30 மணியளவில் எரிவாயு நிறைவடைந்துள்ளமையினால் இன்று (08.04) விநியோகிக்கப்படமாட்டது என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்ததுடன் குறித்த இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடி மக்களை வெளியேற்றினர்.

இதனையடுத்து 20 நிமிடங்களின் பின்னர் ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் அவ்விடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் கோட்டபாய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம்..

ஜனாதிபதி கோட்டபாய மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (07.04) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் அரணின் ஏற்பாட்டில் வவுனியா, பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து நிலையத்தை அடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கோட்டபாய பதவி விலகு, இந்த அரசாங்கம் வேண்டாம், அமெரிக்காவுக்கு ஓடுங்கள், எங்களை வாழவிடு’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களையும் எழுப்பியதுடன் ஜனாதிபதி கோட்டபாய மற்றும் சகோதரர்களான மஹிந்த, பசில் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.

மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேரூந்து நிலையம் என்பவற்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் அரை மணிநேரம் பிரதான வீதியை மறித்தமையால் ஒரு வழிப் பாதையூடான போக்குவரத்துக்களை பொலிசார் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டிருந்தனர்.

வவுனியாவில் IDM Nations Campus வழங்கும் சஞ்சிகை வெளியிடும் கலாசார நிகழ்வும் : அனைவரும் வாரீர்!!

சஞ்சிகை வெளியிடும் கலாசார நிகழ்வும்

வவுனியாவில் சில தசாப்த காலமாக முன்னனி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் IDM Nations Campus பல மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்கி வருகின்றது என்பதுடன் இக் கல்வி நிறுவனமானது பலதரப்பட்ட கற்கைநெறிகளை தரமான முறையில் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

இத்தகைய எமது கல்வி நிறுவனமானது வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் Department of Legal studies மாணவர்கள் சார்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் சஞ்சிகை வெளியிடும் கலாசார நிகழ்வினையும் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (09.04.2022) காலை 9.30 மணிக்கு IDM Nations Campus இன் வடக்கு பிராந்திய இயக்குனர் அன்ரு அனஸ்லி தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட செயலாளர் சரச்சந்திர அவர்களும் கௌரவ விருந்தினராக IDM Nations Campus இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். எனவே மேற்படி நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக தகவல் மற்றும் விபரங்களுக்கு இல -05 , கோவில் வீதி , குருமன்காடு , வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள IDM Nations Campus நிறுவனத்தினை அல்லது 024 2222313 , 076 0970952 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும்

இது ஓர் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மீண்டும் அதிகரிக்கவுள்ள கோதுமை மாவின் விலை : தயாராகும் நிறுவனங்கள்!!

கோதுமை மா..

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தன. இன்றைய நாட்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

சில பேக்கரி உரிமையாளர்கள் மீன் ரொட்டியை 120 ரூபாய்க்கும், ஒரு சாண்ட்விச் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்வதால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனியின் விலை 250 ஆகவும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூ.1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

யாழில்..

யாழ் – துணைவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்குச் சென்றுவிட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், பின்னால் இருந்த இளைஞன் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அராலி – செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்த புலேசாந் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகிலேயே மிக பலவீனமான நாணயமாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ரூபா!!

இலங்கை ரூபா..

உலகில் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. Financial Times இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கை ரூபாவே மிகவும் வீழ்ச்சியடைந்த நாணயமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டளவில், உலகின் பெறுமதிவாய்ந்த நாணய பாவனையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கானா, எகிப்து, ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவையும் முன்னிலையில் உள்ளன.

-தமிழ்வின்-

டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்தது : கடும் வீழ்ச்சியில் ரூபா!!

டொலரின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி, டொலரின் கொள்முதல் பெறுமதி 309 ரூபா 38 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 319 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 59 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபா 24 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபா 43 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபா 24 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி விற்பனை பெறுமதி 2 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது.

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

ஆதிவிநாயகர்..
வவுனியா, வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முதல் நாளான கொடியேற்றம் இன்று (06.04) ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவசிறி ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் அந்தணச் சிவாச்சாரியாகள் புடை நிற்க விசேட அபிடேக ஆராதனைகள் இடம்பெற்று பக்தர்களின் அரோகரோ கோசத்திற்கு மத்தியில் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.
இதனைத் தொர்ந்து மேள தாள வாத்தியங்கள், தேவார பராயணம் என்பன ஆலயத்தில் ஒலிக்க விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆதிவிநாயகர் பெருமான்; உள் வீதி, வெளி வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலித்ததுடன், அடியார்களுக்கான பசி தீர்க்கும் அன்னதானமும் இடம்பெற்றது.
இதேவேளை, தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் மகோற்சவப் பெரு விழாவில் எதிர்வரும் 13ம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் சித்திரைப் புத்தாண்டு நன்நாளான  14ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 15ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல் : விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

தங்கம்..

கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகங்களின் தகவல்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் பாரியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி, 24 கரட் தூய தங்க பவுன் ஒன்றின் விலையானது 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 22 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 175,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது 2 இலட்சம் ரூபாவை கடந்திருந்ததுடன், தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது செயற்கையான நிகழ்வு. இதனால் தங்க கொள்வனவில் நுகர்வோர் ஆர்வம் காட்டாததன் காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பண்டிகைக்காலம் அண்மிக்கும் நிலையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளமையானது பொது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலாக அமையும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.