இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல் : விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

தங்கம்..

கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகங்களின் தகவல்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் பாரியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி, 24 கரட் தூய தங்க பவுன் ஒன்றின் விலையானது 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 22 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 175,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது 2 இலட்சம் ரூபாவை கடந்திருந்ததுடன், தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது செயற்கையான நிகழ்வு. இதனால் தங்க கொள்வனவில் நுகர்வோர் ஆர்வம் காட்டாததன் காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பண்டிகைக்காலம் அண்மிக்கும் நிலையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளமையானது பொது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலாக அமையும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்தது!!

டொலரின் பெறுமதி..

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் டொலரின் கொள்முதல் பெறுமதியானது 298 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளது. இதேவேளை யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 70 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 07 சதமாகவும் காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 15 சதம், விற்பனை பெறுமதி 404 ரூபா 71 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட அரச அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம்!!

சமையல் எரிவாயு..

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவிலும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சமையல் எரிவாயு வரும் போது நீண்ட வரிசையில் காத்திருந்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு போதியளவு கிடைக்காமையால் சில உணவங்கள் மூடப்படும் அபாய நிலையும் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அவர் எரிவாயு விநியோகஸ்தருடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து உணவகங்களுக்கு எரிவாயுவினை சீராக வழங்குவதற்கு எரிவாயு நிறுவனம் இணங்கியுள்ளது. இதனடிப்படையில் இன்று (06.04) ஒரு தொகுதி உணவங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியா மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (05.04) அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (06.04) மதியம் 12 மணிக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதம மின் பொறியிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டமானது அங்கிருந்து பூங்கா வீதியூடாக புகையிரதநிலைய வீதியை அடைந்து, அங்கிருந்து மணிக்கூட்டுகோபுர சந்தியை சென்றடைந்தது.

மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஏ9 வீதியில் தடை ஏற்படுத்தியதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பழைய பேரூந்து நிலையத்தினை சென்றடைந்தமையால் ஏ9 வீதியில் சில மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன், எரிவாயு இன்மை, மின்சாரமின்மை, எரிபொருள் இன்மை, மின்சார வழங்கலை விற்பனை செய்யாதே போன்ற வாசகங்கள் எழுத்தி பதாதைகளை தங்கியிருந்ததுடன் கோசங்கைளயும் எழுப்பியிருந்தனர்.

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முரண்பாடு : ஏ9 வீதி 45 நிமிடங்கள் முற்றாக முடக்கம்!!

முரண்பாடு..

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (06.04) மதியம் 12.00 மணியளவில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேருந்தினை ஏ9 வீதியின் குறுக்கே நிறுத்தி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 45 நிமிடங்கள் வரை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஈரப்பெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசலை பெற்றுப்கொள்வதற்காக வாகனங்கள் காத்திருந்த போது டீசல் நிறைவடைந்துள்ளதாக எரிபொருள் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

டீசல் இருந்த போதிலும் தற்போது டீசல் நிறைவடைந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கூறுவதாக தெரிவித்து சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் குறுக்கே இரு பேரூந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன
சம்பவ இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் உடனடியாக வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த தெரிவித்து 2500 லீட்டர் டீசலை வாகனங்களுக்கு பகிர்ந்தளிக்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் சம்மதித்துடன் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையடுத்து ஏ9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

வீதியில் தொங்கவிடப்பட்ட கோட்டாபயவின் உருவ பொம்மை!!

கோட்டாபயவின் உருவ பொம்மை..

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்காக அதிகரித்துள்ளது. இது மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இலங்கையில் பாடசாலைகளில் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை..

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிப்பதற்கான தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடித்து கற்பித்தலுக்கான காலம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தாலும் பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க முடியாத நிலை ஏற்படுமாயின் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தும் சாத்தியம் காணப்படுவதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நீரில் மூழ்கி பலி!!

நமசிவாயம் டிலக்சன்..

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்கள் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05.04.2022)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின், காதலியார் சம்மணங்குளம் கிராம அலுவலர் பிரிவின், ஏம்பகுளம் குளத்தில் நில அளவை திணைக்களத்தினர் நில அளவை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அளவை பணியில் வித்தியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நமசிவாயம் டிலக்சன் உள்ளிட்ட நான்கு பேர் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

நில அளவை பணிக்காக குளத்தில் இறங்கிய போது 25 அகவையுடைய இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சேற்றில் புதையுண்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

கிராம மக்கள் மற்றும் இராணுவத்தினரால் மீட்கபட்ட சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரகசிய தகவலையடுத்து இளைஞர்கள் இருவர் கைது!!

இளைஞர்கள் இருவர் கைது..

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (05.04.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, குருமன்காடு பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மணிபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயது மற்றும் 21 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவசரகால சட்டம் நீக்கம் : விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

விசேட வர்த்தமானி..

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நேற்று (05.04.2022) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் நேற்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் புரட்சி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிலரால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிலரால் கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஹொவரப்பொத்தனை வீதியில் நேற்று (05.04) மாலை முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டமானது பசார் வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ‘ அணுகுண்டு இல்லாமல் நாட்டை அழித்த கோத்தாவே வெளியேறு’ என கோசத்தை எழுப்பியிருந்தனர்.

வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் சிகிச்சை பலனின்றி மரணம்!!

வைத்தியர் லவன்..

வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (05.04) இரவு மரணமடைந்துள்ளார்.

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் தொற்று நோயிலாளராகவும், மாவட்ட கோவிட் கட்டுப்பாட்டு செயலணி உறுப்பினருமாகவும் செயற்பட்டு வந்த வைத்தியர் லவன் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் போது, தலையில் பலத்த காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (05.04) இரவு சிகிச்சை பலனின்றி தனது 58 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக 300 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை!!

டொலரின் விலை..

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது.

இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு அமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 303.49 ரூபாயாக அதிகரித்திருந்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 293 ரூபாயாக இருந்தது.

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் கோட்டபாயவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி போராட்டம்!!

போராட்டம்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (05.04) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது கண்டி வீதியை அடைந்து, ஹொரவப்பொத்தானை வீதியூடாக பசார் வீதி சென்று பழைய பேரூந்து நிலையத்தை அடைந்தது.

இதன்போது மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேருந்து நிலையம் என்பவற்றுக்கு முன்னால் வீதியை மறித்தும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கோட்டா நாட்டை விட்டு வெளியேறு, கோட்டா வீட்டுக்கு செல்லுங்ள்- நாட்டை சீரழிக்காதே, பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்காதே, அணுகுண்டு இல்லாமல் நாட்டை அழிக்காதே, கோட்டா வீட்டுக்கும்- நாட்டுக்கும் கேடு, சத்தம் போடாமல் அமெரிக்காவுக்கு ஓடு’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

பொலிசார் பாதுகாப்பு மற்றும் கண்ணகாணிப்பு நடைவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதியான முறையில் சுமார் 3 மணித்தியாலயம் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்ததுடன் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம்!!

போராட்டம்..

காலிமுகத்திடலுக்கு முன்னால் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் இணைந்து தற்போது போராட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான முன்னெடுத்துள்ளனர்.

இந் நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் இணைந்து பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார் : ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு!!

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசுக்கெதிரான மக்களின் போராட்டங்கள் விஷ்வரூபம் எடுத்துள்ளன.

இந்தநிலையில், நிலைமை கைமீறிச் சென்றதால் நேற்று நள்ளிரவு அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன் இன்று புதிதாக நான்கு அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எனினும், அரசுக்கெதிரான மக்களது போராட்டங்கள் இன்றும் நாடளாவிய ரீதியில் பேரெழுச்சி கொண்டன.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளுக்கும் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலர் அந்த அழைப்பை நிராகரித்திருந்தனர்.

இதேவேளை, இன்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே இன்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சியின் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.