பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார் : ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு!!

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசுக்கெதிரான மக்களின் போராட்டங்கள் விஷ்வரூபம் எடுத்துள்ளன.

இந்தநிலையில், நிலைமை கைமீறிச் சென்றதால் நேற்று நள்ளிரவு அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன் இன்று புதிதாக நான்கு அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எனினும், அரசுக்கெதிரான மக்களது போராட்டங்கள் இன்றும் நாடளாவிய ரீதியில் பேரெழுச்சி கொண்டன.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளுக்கும் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலர் அந்த அழைப்பை நிராகரித்திருந்தனர்.

இதேவேளை, இன்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே இன்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சியின் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்ய முடியும் : விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

சமூக ஊடகங்கள்..

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தமது நெறிமுறைகளை மீறும் வகையில் செயற்படும் போது சமூக ஊடகங்களின் பாவனையை நாட்டில் முற்றாகத் தடை செய்ய முடியும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளை வளர்ப்பது போன்ற இலக்குகளின் அடிப்படையில் சமூக ஊடகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், சமூக ஊடகங்களை வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஏனெனில் அது ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அதன் கோட்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பேஸ்புக் போன்ற சமூக ஊடக அமைப்புகளால் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது நிறுவனங்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தால், நாட்டில் சமூக ஊடகப் பாவனையை முற்றாக நிறுத்த முடியும் எனவும், சம்பந்தப்பட்ட சமூக ஊடக அமைப்புகள் மூலம் தொழில்நுட்ப அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் சமூக ஊடகங்களின் பாவனை தொடர்பில் Meta போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்ப அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வீதிக்கு வந்தது புதிதாக பிறந்த சிசு : வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம்..

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவ்வளவு நாட்கள் பொறுமை காத்து வந்த இலங்கை மக்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

தற்போதைய வரையில் கிடைத்துள்ள தகவல்களின் படி அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வீதிக்கு தயக்கமின்றி இறங்கி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புகைப்படமொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி புதிதாக பிறந்துள்ள சிசுவுடன் பெற்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விடயம் இலங்கையின் நிலை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை காட்டுகிறது என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் ‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என ஏ9 வீதியை மறித்து இளைஞர்கள் போராட்டம்!!

போராட்டம்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (04.04) காலை 9.30 மணியளவில் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டம் இடம்பெற்றதுடன், போராட்டகாரர் ஏ9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் ஏ9 வீதியை மறித்து போராடிய அவர்கள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தாது பின்னர் பிரதான வீதியில் இருந்து விலகிச் சென்று வீதியோரத்தில் நின்று கோட்டா வீட்டுக்கு செல்லுங்கள் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அப் பகுதியில் நின்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் போராட்டக்காரர் மீது அருகில் இருந்த வெற்றிலைக் கடையில் இருந்து பெட்டி ஒன்றை தூக்கி வீசியிருந்தார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அவருடன் முரண்பட்ட போது குறித்த ஊழியர் அங்கிருந்து தப்பி ஒடியிருந்தார். பின்னர் குறித்த நபர் மீள அங்கு வந்த போது அவரை முற்றுகையிட்ட போராட்டகாரர் அவரை கடுமையாக எச்சரித்தும் இருந்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றதுடன், அரசுக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன. இவ் ஆர்ப்பாட்டத்தில் வவுனியா பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவர்களும், சிங்கள இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசியலில் நள்ளிரவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

இலங்கை அரசியலில்..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும்,ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் விசேட அமைச்சரவை கூட்டமொன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அமைச்சரவை கூட்டமானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ச பதவி விலகினார்!!

நாமல் ராஜபக்ச..

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்ச சற்று முன்னர் தனது, பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயே, நாமல் ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் – மகன் மர்மமாக கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

திண்டுக்கல்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.

இவருக்கு சுபஹரினி என்ற மனைவியும், தன்வந்த் என்ற 4 வயது மகனும் உள்ளனர் இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் காவலுக்காக தனது தாய் சௌந்தரம்மாளுடன் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு அந்த பகுதிக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தாய் – மகன் இருவரையும் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் செல்வராஜின் மனைவி சுபஹரியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது அவரிடம் போலீசார் தங்களது பானியில் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

செல்வராஜும் அவரது உறவினரான ஒத்தபட்டியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கோபிகிருஷ்ணன் சுபஹரணியுடன் நட்புடன் பழகியுள்ளார்.

தம்பி முறை உறவினரான கோபி கிருஷ்ணனுக்கும் சுபஹரிணிக்கும் நட்பு கள்ளக் காதலாக மாறியது. இதனை அறிந்த செல்வராஜ் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த கோபிகிருஷ்ணன் தனது நண்பர்களான ஆனந்த் மற்றும் வடமதுரை அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுடன் சேர்ந்து செல்வராஜ் மற்றும் அவரது தாய் சௌந்தரம்மாளை வெட்டி கொலை செய்ய திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் போலீஸ் தன்னை கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் கோபிகிருஷ்ணன், போலீஸ் விசாரணை நடத்தும்போது கூட்டத்தில் நின்று போலீசாரை நோட்டமிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கோபிகிருஷ்ணன், சுபஹரினி ஆகிய இருவரையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்ட 3 பேரையும் 5 தனி படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் மூவரையும் பழனியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இரண்டு மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் மற்ற மூவரை கிளை சிறையிலும் அடைத்தனர்.

நாளை மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்!!

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் 7 மணித்தியால மின்தடை கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

நாட்டில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை நடைமுறைப்படுத்த மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், குறித்த இக்கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இதன்படி, நாளை 5 மணித்தியால மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 – 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 – 2 மணித்தியாலங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

தருமபுரி..

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் – பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் அரசகுமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும் கணவரும் வந்தனர். நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர் வேலை விஷயமாக ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மகேஸ்வரியின் அறை கதவை தட்டி கூப்பிட்டுள்ளார். கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது மகேஸ்வரி துப்பட்டாவால் பேன் கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் தருமபுரி சப் கலெக்டர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரனை நடத்தி வருகிறார்.

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பென் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பிணியான தம்பி மனைவி மற்றும் குழந்தையை கொன்று எரித்த அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தம்பி மனைவி மற்றும் அவரின் குழந்தையை கொன்று எரித்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை.

சிவக்குமாருக்கு அஞ்சலை(21) என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டரை வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சிவகுமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மாலை அஞ்சலை, அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்திருக்கிறார்.

அப்போது அஞ்சலை பயந்து சத்தம் போட்டுள்ளார். இதில் பதட்டம் அடைந்த கருப்பையா, அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்தவிட்டு, அவரின் இரண்டரை வயது பெண் குழந்தையையும் கொலை செய்து தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வவுனியா வீர, வீராங்கனைகள் கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை!!

வவுனியா வீர, வீராங்கனைகள்..

வடக்கு கிழக்கு மாகாண ரீதியாக நடாத்தப்பட்ட கராத்தே போட்டியில் வவுனியா வீர வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்கங்களை தமதாக்கி கொண்டுள்ளனர்.

இலங்கை கராத்தே சம்மேளத்தினால் வடக்கு கிழக்கு இரு மாகாணங்களும் இணைந்து நடாத்திய கராத்தே சுற்றுப்போட்டி நேற்றையதினம் (02.04) திருகோணமலை Makaizer Indoor Stadium இல் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் வவுனியாவை சேர்ந்த 11 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியில் வவுனியா Dinesh Martial Arts School வீர வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்து வவுனியா மண்ணிற்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

இக் கழகத்தின் தலைமை ஆசிரியராக Sensei T.B.Dinesh (5th DAN) அவர்களின் மேற்பிரிவு மாணவர்களும் துணைக் கழகத்தின் பயிற்சி ஆசிரியரான Sensei G.Gnanakeethan (3rd DAN) அவர்களின் மாணவர்களும் பதங்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் மதுபானசாலை முன்பாக வாள்வெட்டு சம்பவம்!!

வாள்வெட்டு..

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில் நேற்று (02.04.2022) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் போது நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிலில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு,

அவ்விடத்திற்கு செல்ல முற்பட்ட போது மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து அவர் மீதும் வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டதுடன் தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்தார்.

அதன் பின்னர் மற்றைய இருவரும் வாள்களுடன் வெளியேறி சென்றதுடன் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா மாவட்டம் ஊரடங்கு சட்டத்தால் முழுமையாக முடங்கியது : பொலிசார் தீவிர கண்காணிப்பு!!

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா நகரம் முழுமையாக முடங்கியுள்ளதுடன், பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பொலிசார், இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியால் செல்லும் வாகனங்கள், மோட்டர் சைக்கிள்களை வழிமறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வதுடன் அனுமதியின்றியும், அத்தியாவசிய தேவையின்றியும் பயணிப்பவர்களை எச்சரித்து பொலிசார் மீள அனுப்பி வருகின்றனர்.

முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் சற்றுமுன்னர் வழமைக்கு திரும்பியது!!

சமூக வலைத்தளங்கள்..

இலங்கையில் சமூக ஊடகங்களின் முடக்கம், இன்று பிற்பகல் 3.30க்கு நீக்கப்படவுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இன்று காலை சமூக ஊடங்களுக்கும் தடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு காரணம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 3.30 மணிமுதல் முடக்கப்பட்ட அனைத்து சமூக ஊடகங்களும் வழமைக்கு திரும்பியுள்ளன .

இன்று மின்தடை நேரத்தில் திடீர் குறைப்பு : ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் மாத்திரமே தடை!!

மின்தடை..

இன்று ஏப்ரல் 03ம் திகதி திட்டமிடப்பட்ட மின்சார தடை ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றய தினம் 6 மணி நேர மின்வெட்டு மேற்;கொள்ளப்படும் என ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக்கொள்ளத் தொடங்கியதால், திட்டமிடப்பட்ட மின்சாரத் தடையின் காலம் குறைக்கப்பட்டதாக ஆணைக்குழு விளக்கமளித்தது.

இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய குழுக்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் மாலை 5.30 க்கும் இரவு 10.30க்கும் இடையில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.

இலங்கை சமூக ஊடகங்கள் முடக்கம் : காரணம் வெளியானது!!

சமூக ஊடகங்கள் முடக்கம்..

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வட்ஸ்அப், டுவிட்டர் போன்றவற்றை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு பூராகவும் இன்று பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் இந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.