வவுனியா மன்னார் வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா மன்னார் வீதியில் பட்டானிச்சூர் பகுதியில் கயர்ஸ் ரக வாகனம் – மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதி ஓரத்தில் நின்ற கயர்ஸ் ரக வாகனம் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் கயர்ஸ் ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு நிகழ்வு -2022🎬📸

வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் கடந்த 26.03.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

முன்பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலனின் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் திரு.ராஜேஸ்வரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர் முன்பள்ளி-வலயக்கல்வி அலுவலகம் வவுனியா வடக்கு)அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் திரு.கந்தவேள் (அதிபர் ஆசிக்குளம் அ.த.க.பாடசாலை) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் முன்பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்புடன் அதிதிகள் அழைத்துவரப்பட்டு விளையாட்டு விழா ஆரம்பமானது.

மேற்படி நிகழ்வில் ஆர்வத்துடன் போட்டிகளில் சிறார்கள் கலந்துகொண்டதுடன் போட்டியின் நிறைவில் விருந்தினர்களால் சிறுவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம் : சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு!!

ஊரடங்குச் சட்டம்..

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆளும் கட்சிக் குழுவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக முழு நாட்டிலும் வார இறுதி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கருதுகிறது.

எனினும், அந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை. இந்தநிலையிலேயே சற்றுமுன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் விபத்து : கனடா பிரஜை உட்பட இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே இன்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் வான் – முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கயர்ஸ் ரக வாகனம் ஏ9 வீதி கொக்குவெளி இரானுவ முகாம் அருகே ஓர் வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் வவுனியா நகரிலிருந்து நொச்சிமோட்டை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதுண்டு இரு வாகனங்களும் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சகக்கரவண்டி சாரதியான 43 வயதுடைய குடும்பஸ்தர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கனடா நாட்டு பிரஜையான 55 வயதுடைய நபர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக முச்சக்கரவண்டி சாரதி திடீர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கயர்ஸ் ரக வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் இளைஞர் குழு வீடு புகுந்து தாக்குதல் : ஒருவர் படுகாயம்!!

செட்டிகுளத்தில்..

செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (31.03) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளைஞர் ஒருவர் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பிய நேரத்தில் அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று குறித்த இளைஞர் மீது தாக்குதலை மேற் கொண்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

காயமடைநட்த இளைஞர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு உறவினர்களால் அனுப்பி வைக்கப்பட்டதுடன், செட்டிகுளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி இல்லம் மக்களால் முற்றுகை : இராணுவ பேரூந்திற்கு தீ வைப்பு : தொடரும் பதற்ற நிலை!!

ஜனாதிபதி இல்லம்..

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையாக செயற்பட்டு இராணுவ பேருந்து மற்றும் மேலும் ஒரு வாகனத்திற்கு தீயிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் இருந்தவாறு வன்முறையாக நடந்துக்கொண்டதாகவும் இதனையடுத்து இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் அந்த பிரதேசத்தின் பாதுகாப்பாக அழைக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசியல் கட்சி சாராத மக்கள் இன்று மாலை ஒன்றுக் கூடி ஜனாதிபதி இல்லத்திற்கு எதிரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது ஏற்பட்ட சம்பவங்களில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!

ஊரடங்கு உத்தரவு..

கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதியதின் இல்லம் முற்றுகையிடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம் – வீரபுரத்தில் மயானத்திற்கு சென்றபோது குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்பு!!

வீரபுரத்தில்..

செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் பாதிப்படைந்துள்ளனர். இன்று (31.03) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், வீரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றின்போது சடலத்தை தகனம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்ற போது,

மரம் ஒன்றில் இருந்து கலைந்து வந்த குளவிகள் அங்கு வந்தவர்கள் மீது கொட்டியதில் 15 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனையடுத்து குளவிகள் அங்கிருந்து சென்ற பின்னரே சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு : ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!!

தவசிகுளம் பகுதியில்..

வவுனியா தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிசாரால் இன்று (31.03) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியும் அவருக்கு துணையாக பிள்ளையும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் குடும்ப தலைவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

மனைவியும் பிள்ளையும் வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற போது குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக மனைவியால் கிராம அலுவலருக்கு வழக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம அலுவலர் மற்றும் பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மருதலிங்கம் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இதேவேளை வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் இருந்தும் 35 ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரிய வெங்காயத்தின் விலை இரட்டிப்பாக அதிகரித்தது!!

பெரிய வெங்காயத்தின் விலை..

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

110 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை நேற்று 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த திடீர் விலை அதிகரிப்பு நியாயமற்றது என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதிவான அதிகூடிய தங்க விலை!!

தங்கம்..

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவைத் தாண்டியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள,

தங்க நகைக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 90,000 ரூபாவைத் தாண்டியுள்ளது.

செட்டியார் தெருவில் உள்ள தங்க நகைக் கடைகளுடன் தொடர்புடைய தங்கத்திற்கும் தட்டுப்பாடு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நான்கு மணிநேரம் மட்டுமே மின்வெட்டு : எப்போதில் இருந்து நடைமுறைக்கு வருகிறது?

மின்வெட்டு..

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.

எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்குச் சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும். எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!!

தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம்..

வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (31.03.2022) காலை 9 மணியளவில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 124 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் தந்தை செல்வநாயகத்தின் பெருமைகள் மற்றும் அவர் முன்னெடுத்த சேவைகள் தொடர்பில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா உரை நிகழ்த்தியதுடன் நிகழ்வு நிறைவடைந்ததது.

வவுனியாவில் ”கோத்தா மகிந்த அரசே எம்மை கொல்லாதே” என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

கோத்தா – மகிந்தவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக என தெரிவித்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (31.03.2022) காலை 10.00 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

கோத்தா மகிந்த அரசே எம்மை கொல்லாதே, விலை உயர்த்தி சாவடிக்காதே, நாட்டு மக்களை ஏமாற்றி பிழைக்காதே, சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை விற்காதே, மீண்டும் மீண்டும் கடன் வாங்கி எங்களை அடைவு வைக்காதே, தள்ளாதே தள்ளாதே பட்டினி சாவில் தள்ளாதே போன்ற பல கோசகங்களை எழுப்பியவாறும்,

விலை உயர்வினை தடுத்து நிறுத்து, கட்டுப்பாட்டு விலையினை கொண்டு வா, உழைக்கும் மக்களை பட்டினிச்சாவுக்குள் தள்ளாதே , தாராள மயம் தனியார் மயம் தந்த பரிசுகளே இன்றைய அவலநிலை, என்ன வளம் இல்லை இந்த நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் அந்நிய நாட்டில்,

அரசியலமைப்பை மாற்ற வேண்டும் தேசிய பொருளாதாரம் உருவாக வேண்டும் , நேற்று அங்கர் 980ரூபா இன்று 1900ரூபாவிற்கும் இல்லை, கோதுமை மா நேற்று 85ரூபா இன்று 190ரூபாவிற்கும் இல்லை, கடனுக்குள் தள்ளியோர் உல்லாசவாழ்வு, நாட்டு மக்கள் பட்டினி சாவு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிவாறு சிலிண்டர், மின்சாரம் , அடுப்பு , மண்ணெண்ணெய், போன்றவைக்கு தற்போதும் வரிசையில் ஆனால் அவைகள் இல்லை என்பதை சித்தரிக்கும் வகையில் குறித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.

இவ் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா சிவபுரம் பகுதியில் ஆலயத்தினுள் சடலம் மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

சிவபுரம் பகுதியில்…

வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31.03.2022) அதிகாலை 35வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன் குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

இளம் பெண்..

பாணந்துறை பின்வத்த பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் மலசலகூட குழியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்டப்பட்மை தொடர்பில் முக்கிய தடயங்கள் பல கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த பெண், கடவத்தையிலுள்ள இரவு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கணேமுல்லையில் வசிக்கும் 26 வயதுடையவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 28ஆம் திகதி இரவு இலத்திரனியல் ஊடகங்களில் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பான செய்தி வெளியானதை பார்த்த பெண்ணின் நண்பர் ஒருவர் பொலிஸாருக்கு வந்து அவர் குறித்த முக்கிய தடயங்களை வழங்கியதாக அதிகாரி தெரிவித்தார்.

பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஹோட்டலில் தான் தங்கியிருந்த டிக்-டாக் காணொளியை அந்த பெண் தனக்கு அனுப்பியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

குறித்த பெண் கடந்த 26ஆம் திகதி சுற்றுலா விடுதியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தெரிவித்த போதிலும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து அவ்வாறான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுக்கு சொந்தமாக கைப்பை சுற்றுலா விடுதிக்கு இருகில் உள்ள கடற்கரையில் எரிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவரது வழக்கமான தகவல்களை வெளியிடுவதில் பெரும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.