தொடரும் நெருக்கடி : நாட்டை முழுமையாக மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!!

தொடரும் நெருக்கடி..

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டை மூடுமாறு அரசாங்கத்திடம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளாக கூறப்படுகின்றது. அத்துடன் தொடர் மின் வெட்டு காரணமாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும்,

இதன் காரணமாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிடடுள்ளது. எவ்வாறாயினும், இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனத்தில் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் மனைவியை உயிருடன் மண்ணில் புதைத்தது ஏன் : கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

வேலூரில்..

தமிழகத்தின் வேலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூரின் கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் என்கிற விநாயகம் (வயது 24), கூலித்தொழிலாளி.

இவருக்கு குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சுப்ரஜா(வயது 24) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இதுகுறித்து இருவரின் வீட்டாருக்கும் தெரியவர, வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த சுப்ரஜா, காதல் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்ரஜா மாயமாகி விட்டதாக விநாயகம், அவர்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்தவர்கள் கேவி குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசாரின் விசாரணையில் விநாயகம், அவரது தம்பி விஜய், 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்ரஜாவை உயிருடன் புதைத்து கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், விநாயகம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, நானும், சுப்ரஜாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம், இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது தகாத உறவாக மாற சுப்ரஜா என்னை கண்டித்தார், இதனால் கோபமடைந்த நான் அவளை அடித்தேன். இதில் சுப்ரஜாவின் உடல்நிலை பாதிப்படைந்தது, அவள் இல்லாமல் இருந்தால் தான் நான் சந்தோஷமாக வாழ முடியும் என நினைத்தேன்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தம்பி விஜய் மற்றும் உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சவக்குழி தோண்டினோம். அதற்கு மறுநாள் எனக்கும் சுப்ரஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கைகளால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறினேன். அதை நம்பி அவரும் என்னுடன் வந்தார். அவரை சர்க்கார் தோப்பு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி விஜய் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் தயாராக இருந்தனர். 3 பேரும் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கினோம் அவர் மயங்கி விழுந்தார்.

ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவரை உயிருடன் புதைத்துக் கொன்றோம். பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

25 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயதான விவசாயி தற்கொலை!!

சங்கரப்பா..

இந்தியாவில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரபலமான 45 வயதான விவசாயி தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் துமகூரின் அக்கிமரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (45). இவருக்கும், மோகனா (25) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 19ல் திருமணம் நடந்தது.

அந்த சமயத்தில் இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால், சங்கரப்பா மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து, திருமணம் முடிந்த பின்பும் சங்கரப்பா தனது மனைவியுடன் டூயட் பாடி, ஆடுவதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

20 வயது வித்தியாசத்தில் உள்ள இளம்பெண்ணை திருமணம் செய்து ஆட்டம், பாட்டம், காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த சங்கரப்பாவின் வாழ்வை பார்த்து யார் கண்பட்டார்களோ, என்னவோ.. கடந்த சில நாட்களாக அவரது குடும்ப வாழ்க்கை தலைவலியாகவே இருந்துள்ளது.

மனைவிக்கும், தாயுக்கும் இடையேயான சண்டையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அவரது தோட்டத்தில் துாக்கிட்ட நிலையில் சங்கரப்பா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

சங்கரப்பா தற்கொலை குறித்து அவரது மனைவி மோகனா கூறும்போது, நானும், என் கணவரும் நன்றாக இருந்தோம். ஆனால் என் மாமியார் 15 நாளுக்கு ஒரு முறை என்னிடம் சண்டை போட்டு வந்தார்.

அடிக்கடி என்னை வெளியில் போவதாக குற்றம் சாட்டினார். என் தாய், தந்தையுடன் கூட அவர் பேச விடவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் எங்களால் குடும்பம் நடத்த முடியாது என கணவர் கூறினார். அதற்கு மாமியார், ‘செத்து போ’ என என் கணவரை திட்டினார்.

இதனால் கோபத்தில் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. காலையில் தான் விஷயம் தெரிய வந்தது. நான் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளேன் என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் தகாத தொழில் ஈடுபடுத்தப்படும் இலங்கைப் பெண்கள்!!

வெளிநாடுகளில்..

இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைகளுக்கு அனுப்புவது என்ற போர்வையில் தகாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வலையமைப்பு தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று டுபாய் சென்றுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் பிரிவினரால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தரகர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பெண்களை டுபாய், ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பியுள்ளதுடன் பல பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

சுற்றுலா விசாவில் டுபாய் மற்றும் ஓமன் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பெண்கள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதுடன், மசாஜ் நிலையங்கள், ஆட்கடத்தல், கடத்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தும் தரகர்கள் லட்சக்கணக்கான சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் புதிய உச்சம் தொட்ட தங்க விலை : தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு!!

தங்கத்தின் விலை..

வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை இலங்கையில் இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் (30.03) குறித்த விலை பதிவாகியுள்ளதாக தங்க வியாபாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதேவேளை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் காரணமாகவே இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கையில் தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு தேவையாயின் அவர்கள் வழங்கும் தங்கத்தைக் கொண்டு மாத்திரம் தங்க நகைகளை தயாரிக்க முடியும் எனவும் தங்க வர்த்த நிலையத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று 13 மணிநேரம் மின் தடை : தொடர்ச்சியாக இருளில் மூழ்கப்போகும் நாடு!!

மின் தடை..

இன்று (31.03.2022) 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று (31.03) மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணை இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குழுக்கள் A,B,C,D,E,F : அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை – 3 மணி நேரம், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை – 4 மணி நேரம், மாலை 6 மணி முதல் 12 மணி வரை – 6 மணி நேரம்.

குழுக்கள் G,H,I,J,K,L : காலை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை – 3 மணி நேரம், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை – 4 மணி நேரம், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை- 6 மணி நேரம்.

குழுக்கள் P,Q,R,S : அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை – 3 மணி நேரம், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை- 4 மணி நேரம், மாலை 6 மணி முதல் 12 மணி வரை – 6 மணி நேரம்.

குழுக்கள் T,U,V,W : காலை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை – 3 மணி நேரம், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை – 4 மணி நேரம், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை – 6 மணி நேரம்.

குழுக்கள் M,N,O,X,Y,Z : காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை – 3 மணி 30 நிமிடங்கள், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை- 2 மணி நேரம்.

நாட்டில் நாளாந்த மின்தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படலாம்!!

மின்தடை..

நாளாந்த மின்தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும்.

சிலநேரம் எதிர்காலத்தில் மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும்.

தற்போது வரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1,200 மெகாவொட் மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றபோதிலும், நீர் இன்மையால், மதிய நேரத்தில் 300 மெகாவொட் மின்சாரத்தையும், இரவு நேரத்தில் 700 மெகாவொட் மின்சாரத்தையும் மாத்திரமே வழங்க முடியும்.

அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், 1,700 மெகாட் அளவில் கொள்ளளவு இருக்கின்ற போதிலும் எரிபொருள் இன்மையால் 1,000 மெகாவொட் மின்சாரத்தை மாத்திரமே வழங்க முடியும். ஆனால், இரவு நேரத்தில் மாத்திரம் 1,800 மெகாவொட் மின்சாரத்துக்கான கேள்வி உள்ளது. எனவே, விநியோகத்தில் நிச்சயமாக வீழ்ச்சி உள்ளது.

தற்போது வரையில், பாஜ் மின்னுற்பத்தி நிலையத்திற்கும், களனிதிஸ்ஸ கூட்டு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், 1,500 மெட்ரிக் டன் எரிபொருள் மாத்திரமே கிடைத்துள்ளது.

எரிபொருளில் இயங்கும் வேறு எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், எரிபொருள் கிடைக்கவில்லை. இன்றையதினம் 10 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்த நிலையில், வரும் நாட்களில், 12 மணித்தியாலங்களாகவும், 15 மணித்தியாலங்களாகவும் அதிகரிக்க வேண்டி ஏற்படக்கூடும். எனவே, மின்சாரம் விநியோகிக்கப்படும் நேரத்தைக் கூறுவது சிறந்ததாகும்.

விரைவாக எரிபொருளைப் பெற்றுக்கொடுத்தால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இயன்றளவு குறைக்க முடியும் என அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு எரிவாயு விநியோகம்!!

எரிவாயு விநியோகம்..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று (30.03) பாடசாலையில் ஆசிரியர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

எரிவாயு தேவையானவ ஆசிரியர்களின் விபரங்கள் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்டு, லிட்ரோ நிறுவனத்திடம் விடப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையிலேயே எரிவாயு விநியோகிக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் பட்டப்பகலில் 5 வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டியவர் கைது!!

திருட்டு..

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று (30.03) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்த வகையில் வவுனியாவின் பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவபுளியங்குளம், குமன்காடு, தோணிக்கல் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலில் பூட்டப்பட்டிருந்த 5 வீடுகளுக்குள் சென்ற திருடர்கள்,

சமைலறை புகைக்கூடு வழியாக உள் நுழைந்து நகைகள், பணம், தொலைபேசி, கமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான,

திசாநாயக்கா (37348), விக்கிரம£ரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கற்குழி பகுதியைச் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து திருடப்பட்ட தொலைபேசி, கைகடிகாரம், கமரா, உருக்கப்பட்ட நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த நபர் போதைப் பொருள் விற்பனை செய்தமை மற்றும் 5 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!!

பணிப்புறக்கணிப்பு..

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை அலுவலகர்கள், சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்டவர்கள் சம்பள உயர்வு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (29.03) அதிகாலை 5.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது கைவிடப்பட்டது.

அடிப்படை சம்பளத்தில் 10,000 ரூபா அதிகரிப்பு, வாழ்க்கைப்படியினை 7,500 ரூபாவாக உயர்த்துதல், இடைக்கால கொடுப்பனவான 5000 ரூபா நிரந்தமாக்குதல், அதிகாரிகளுக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும், வருடாந்த வேதன உயர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபை தலைமைப் பீடத்தின் உறுதிமொழியையடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பானது மாலை 5.30 மணியளவில் கைவிடப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 31 ஆ ம் திகதிக்குள் முன்வைத்த கோரிக்கைக்களுக்கு தீர்வு பெற்று தருவதாக தலைமைப்பீடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டதுடன், கடமையில் ஈடுபடவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்த சிறுவன்!!

சாதனை படைத்த சிறுவன்..

தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், மீண்டும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணை கடல் வழியை நீந்தி சிறுவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

தமிழகம் தேனி மாவட்டத்தை சேர்ந்த சினேகன் (வயது 14) என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார், பாக்கு நீரிணையை இரு வழியாக நீந்தி கடக்க முயற்சி செய்து 19 மணி நேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை செய்துள்ளார்.

குறித்த சிறுவன் 2019ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதே போல் கர்நாடக மாநிலம் தொன்னுரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனை முதல் இலங்கை தலைமன்னார் வரை நீந்தி கடந்து பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை பாக்கு நீரிணையை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்திய – இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் குறித்த சிறுவன் நேற்று திங்கட்கிழமை (28) மதியம் 2 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து கடலில் நீந்த ஆரம்பித்து இரவு 09.55 மணிக்கு இலங்கை தலை மன்னாரை 7 மணி 55 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

பின்னர் அங்கிருந்து இரவு 10.30க்கு புறப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 9.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைந்தார். 19 மணி நேரம் 45 நிமிடத்தில் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்த் முதல் முறையாக தலைமன்னார் முதல் தனுஷ்கோடி மீண்டும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

அவரை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த ரேஷன் அபே சுந்தர தலைமன்னார் முதல் தனுஷ்கோடி பின்னர் தலைமன்னார் வரை 28 மணி நேரம் 19 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சினேகன் முதன் முறையாக தனுஷ்கோடி முதல் தலைமன்னார் பின்னர் அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடி வரை இரு வழி நீந்தி கடக்க முயற்சி செய்து 19 மணி நேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடலில் நீந்தி வந்த சிறுவன் சினேகனை மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் நாகேந்திரன் வரவேற்றார். இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடல் பகுதியில் மெரைன் பொலிஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பலும் பாதுகாப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மின்சார சபையின் அதிரடி : கட்டணங்கள் செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு மின்தடை!!

மின்சார சபையின் அதிரடி..

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக சில வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை எனவும், அவர்களுக்கு சில காலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், நிலுவைத் தொகையான மின்சார கட்டணத்தை மீளப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முறிகண்டி பகுதியில் விபத்து : புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி, மூவர் படுகாயம்!!

விபத்து..

முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (30.03) காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகித் தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் மணவாளன் – பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.

படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து இடம்பெற்ற நேரத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல நோயாளர் காவு வண்டி வருகை தந்தமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

நாளை 10 மணிநேர மின்வெட்டு : அறிவிப்பு வெளியானது!!

மின்வெட்டு..

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை 10 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 12 வரையான காலப் பகுதிக்குள் இந்த 10 மணிநேர மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலமும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (TrueCeylon)

விபத்துகளை தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட முன்மாதிரியான பொறிமுறை : யாழ் இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

விபத்துகளை தடுப்பதற்காக.

தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளைச் செலுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக முன்மாதிரியான ஒரு பொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.

30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார்.

இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தைப் போட்டாலும் தலைக்கவசத்தின் கொளுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தலைக்கவசத்தின் கொளுக்கிகளைக் கழற்றும் போது மோட்டார் வாகனம் நின்றுவிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பொறிமுறையில் சில பின்னடைவுகள் காணப்பட்டாலும் கூட இவ்வாறான ஒரு முன்மாதிரியான முயற்சியை வரவேற்பது அவசியமாகும்.

அந்த வகையில் இந்த பொறிமுறையை வடிவமைத்த எட்வின் மொரிஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், ”தலைக்கவசம் போடாமல் ஏற்படுகின்ற மோட்டார் வாகன விபத்துகளைத் தவிர்ப்பதற்காகத் தான் இதனை ஐந்து வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்தேன். தற்போது இதனை வெற்றிகரமாகச் செய்ய முடிந்துள்ளது.

அதேவேளை ஏனைய மோட்டார் வாகனங்களுக்கும் இந்த பொறிமுறையை செய்யும் பொழுது ஓரளவிற்கு மோட்டார் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

மருந்தை தவறுதலாக சாப்பிட்டதால் உயிரிழந்த மனைவி : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

கணவன் எடுத்த விபரீத முடிவு..

இந்தியாவில் மனைவி உயிரிழந்த இரண்டு மாதங்கள் கழித்து அவர் இழப்பை தாங்காத கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி காயத்ரி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகேஷின் மனைவி காயத்ரி, பரிந்துரைக்கப்பட்ட இரத்த அழுத்த மருந்துகளுக்கு பதிலாக தவறான மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

மனைவி உயிரிழந்ததில் இருந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் மகேஷ். இதையடுத்து பல முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விஷம் குடித்த மகேஷ் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் தனது சகோதரருக்கு போன் செய்த மககேஷ் தனது இரண்டு குழந்தைகளையும் கவனித்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.