என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க : பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல்!!

தீக்சித்..

சென்னையில் பள்ளி வளாகத்திலேயே வாகனம் மோதி 7 வயது சிறுவன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள்.

இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளான். வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் சென்றவன், தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாப்பாட்டுப் பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி வந்துள்ளான்.

அப்போது ஓட்டுநர் பூங்காவனம், வேனை பார்க்கிங் செய்வதற்காக பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது, மாணவன் மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியுள்ளது. இதில், வேனின்பின் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தான்.

வேன் ஓட்டுநர் பூங்காவனம், வாகனப் பெண் பாதுகாவலர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், 64 வயதான ஓட்டுநர் பூங்காவனத்திற்கு ஒரு பக்க காது கேட்காது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மாநகராட்சி வாகன ஓட்டுநராக இருந்துவிட்டு ஓய்வுக்குப் பின்னர் இந்தப் பள்ளியில் ஓட்டுநராகச் சேர்ந்து கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், பள்ளி வாகனங்களுக்கு தனியாக பொறுப்பாளர் நியமிக்கப்படாதது ஏன்? 64 வயதானவரை வாகன ஓட்டுநராக நியமித்தது ஏன்? என்றும், வேன் மோதி சிறுவன் உயிரிழந்த நிலையில், பிற்பகல் வரை தாளாளர் பள்ளிக்கு வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி வளாகத்திற்குள் உள்ள பேருந்து வழித்தடத்தில் வேகத்தடைகளை அமைக்காதது ஏன்? என்றும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை கவனிக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை,

மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றடைந்தனரா என்பதை பள்ளி முதல்வர் கவனிக்க தவறியது ஏன்? உள்ளிட்ட 6 கேள்விகளுக்கும் பள்ளி நிர்வாகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் மகனை பார்த்ததும் கதறிய ஜெனிபர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் என்னுடைய ஒரே மகனை இழந்து தவிக்கிறேன், அவனுக்கு 7 வயது தான் ஆகிறது.

பள்ளிக்கு அனுப்பிவிட்ட 10 நிமிடத்தில் விபத்து நடந்துவிட்டதாக போன் செய்தார்கள், நாங்கள் செல்வதற்குள் என் மகன் இறந்துவிட்டான். அவன் வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது, என்ன நடந்தது என முழுமையாக தெரியவில்லை, அவனது வயிற்றில் வேன் ஏறி இறங்கியுள்ளது.

பள்ளி தாளாளரை கைது செய்தால் மட்டுமே உண்மை என்ன? என்பது தெரியவரும், அம்மான்னு கூப்பிட என் குழந்தை இல்லையே என கதறியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

இலங்கையின் விற்பனை சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து்ளளது.

இன்றைய தினம் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருவது மற்றும் தங்கத்தை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை என்பன இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வவுனியாவில் கடை ஒன்றில் மீட்கப்பட்ட முல்லைத்தீவில் வீட்டைவிட்டு காணாமல்போன சிறுவன்!!

கே.சானுயன்..

முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் மாலைநேர வகுப்பிற்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த சிறுவன் வவுனியாவில் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ. சாதாரணதரத்தில் கல்விகற்று வரும் உண்ணாப்பிலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் என்ற சிறுவன் கடந்த 17ஆம் திகதி மாலைநேர வகுப்பிற்காக மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பாதநிலையில், தனது மகனை காணவில்லையெனவும், தனது மகனை கண்டுபிடித்து தருமாறும் பெற்றோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் சிறுவனை காணவில்லை என வெளியான தகவலை தொடர்ந்து வவுனியாவில் கடை ஒன்றில் வேலைசெய்து கொண்டிருந்த சிறுவன் தொடர்பில் அவனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று சிறுவனை அழைத்துவந்த உறவினர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தி முறைப்பாட்டினை நீக்கம் செய்துள்ளனர்.

வேலை செய்யும் வீட்டில் கல்லூரி மாணவி செய்துவந்த மோசமான செயல்!!

சென்னை..

அரும்பாக்கம் பகுதியில் வீட்டு வேலை பார்க்கும் பணியாளரின் மகள் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து 11.90 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (58)இவர் சாலிகிராமம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் ஏதும் கிடையாது.

இவரது வீட்டில் வளர்மதி என்கிற 45 வயது பெண்மணி கடந்த 15 ஆண்டு காலமாக வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடன் இவருடைய மகள் சுமித்ரா (19) சிறுவயதிலிருந்தே இதே வீட்டில் அவரும் பணியாற்றி அகஸ்டின் தம்பதியருக்கு மகள் போலவே வளர்ந்து வந்துள்ளார்.

அகஸ்டின் அரும்பாக்கம் பகுதியிலேயே காலியான இடம் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்துள்ளார். அதனை கட்டுவதற்காக ஓய்வுபெற்ற போது வந்த 20 லட்சம் ரூபாயை சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி தனது வீட்டை கட்டுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று பணம் இருப்பை பரிசோதித்து உள்ளார் அப்பொழுது வங்கியில் வெரும் 8 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக வங்கி மேலாளரை அணுகி தான் விருப்ப ஓய்வு பெற்று வந்த 20லட்சம் ரூபாய் பணத்தை உங்கள் வங்கியில் தானே டெபாசிட் செய்திருந்தேன். என் பணம் எங்கே என அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

அதன்பிறகு வங்கி பரிவர்த்தனைகளை மேலாளர் ஆய்வு செய்திருக்கிறார். அப்பொழுது அகஸ்டின் மொபைலில் கூகுள் பே மூலமாக இரண்டு வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதை வங்கி அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

கூகுள் பே எப்படி உபயோகிப்பது என்பது கூட தெரியாது என அகஸ்டின் வங்கியிலேயே கதறி உள்ளார் உடனடியாக அங்கிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு வங்கி அதிகாரிகள் அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் அகஸ்டின் புகார் மனுவை அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

விசாரணையில் வீட்டில் வேலை பார்த்து வந்த வளர்மதியின் மகள் சுமித்ரா என்பவர்தான் அகஸ்டின் மொபைலிலிருந்து பிளே ஸ்டோர் மூலமாக கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து தனது காதலன் சதீஷ் குமார் என்பவருக்கு உள்ள இரண்டு வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனையை சிறுகச்சிறுக மாற்றி உள்ளது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் அகஸ்டின் புகார் கொடுத்தவுடன் சுமித்ரா மற்றும் காதலன் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் தலைமறைவாகி உள்ளனர். இதுதொடர்பாக அண்ணா நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை சைபர் கிரைம் போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வந்தார்கள்.

விசாரணையில் சுமித்ரா தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தன்னுடைய காதலனுடைய இரண்டு வங்கிக் கணக்கிற்கும் பணப் பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காவல்துறையினர் தங்களை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பெங்களூர், கேரளா, மும்பை என பல்வேறு மாநிலத்தில் உல்லாசமாக சுற்றி திரிந்து வந்துள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆகியும் தங்களை பிடிக்க முடியாத காரணத்தினால் சரி தாயைப் பார்த்து விட்டு செல்லலாம் என சுமித்ரா சென்னை கோயம்பேடு அருகே வந்துள்ளார் அப்பொழுது சைபர் கிரைம் போலீசார் சுமித்ரா மற்றும் அவருடைய காதலன் சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள்.

அதன் பிறகு அவர்களிடமிருந்து நான்கு புதிய செல்போன்கள் 79 ஆயிரம் ரொக்கப்பணம் 2.5 சவரன் தங்கச் செயின் மற்றும் புதிய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் இவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக அகஸ்டின் உறவினர் தீபா என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தனது சித்தப்பாவிற்கு அண்ட்ராய்டு தொலைபேசி உபயோகித்த கூட தெரியாது எனவும் அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் சுமித்ராவை தனது மகளை போலவே வளர்த்து வந்துள்ளார்.

குறிப்பாக இரண்டு வருடங்களாக இந்தியன் வங்கியில் வந்து எந்த ஒரு குறுஞ்செய்திய தொலைபேசிக்கு வருவதில்லை எனவும் வங்கியின் மீது குற்றம் சாட்டி இருந்தார். வரும் காலங்களில் யாரை நம்புவது கூட என்பது தெரியவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

மூன்று மத முறைப்படி மூன்று முறை திருமணம் செய்த இளைஞரின் செயலுக்கு குவியும் பாராட்டு!!

மயிலாடுதுறை..

மயிலாடுதுறை மாவட்டம் ரஸ்தா மணவளித் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பொறியியல் பட்டதாரியான இவர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

சிறுவயதிலேயே அனைத்து மத நண்பர்களிடமும் புருஷோத்தமன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது திருமணத்தை மூன்று மதங்களின் முறைப்படியும் நடத்தவேண்டும் எனத் தீர்மானித்துள்ளார். அவரது ஆசைக்கு அவரது பெற்றோரும், மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த புவனேஸ்வரியை மூன்று மதங்களின் சடங்குகளின்படி திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். இந்த திருமணத்திற்காக மூன்று மதங்களின் முறைப்படி மூன்று விதமாக பத்திரிகை அச்சிட்டு நண்பர்களுக்கு வழங்கியுள்ளார்.

முதல் நாளில் கிறிஸ்துவ மத முறைப்படியும், இரண்டாவது நாள் முஸ்லிம் மதத்தின் படியும், மூன்றாவது நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துள்ளார். புருஷோத்தமனின் இத்தகைய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து புருஷோத்தமன் கூறுகையில், சமய நல்லிணக்கத்திற்கும், அனைத்து மதத்தினருக்கும் உறவினர்களே என்பதனை உணர்த்த இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் மதத்தால் வேறுப்பட்டிருந்தாலும், மனதால் ஒற்றுமையுடன்தான் பழகி வருகிறோம். அதனால், இந்த நல்ல முயற்சியை செய்து காட்டியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தூத்துக்குடி..

தூத்துக்குடி வண்ணார் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலெட்சுமி. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மாடசாமியை விட்டு பிரிந்து முனியலட்சுமி தனியாக தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

முனியலெட்சுமியின் மூத்த மகளான ஈஸ்வரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது இவருக்கு அந்த பகுதியில் உள்ள பல்வேறு வாலிபர்களுடன் பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக தாய் மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஈஸ்வரி தனது ஆண் நண்பர்களான சங்கர், தங்கம், கோடாரி உள்ளிட்டோருடன் இணைந்து தனது தாய் முனியலெட்சுமியை கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து வந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.‌

விசாரணையில் தாயை கொலை செய்தது ஈஸ்வரிதான் என தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தகாத பழக்கத்தை கண்டித்ததால் பெற்ற தாயை மகள் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே ஆறாவது இடம்பிடித்த இலங்கை : ஆசியாவில் முதலிடம்!!

பணவீக்கம்..

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பணவீக்கம் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிரபங்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் இலங்கையின் பணவீக்கம் 55 சதவீதமாக உயர்ந்தது. இந்தத் தரவு 24/03/2022 திகதிய கணக்கிடப்பட்டது.

உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக வெனிசுலா அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

சக மாணவர் நீரில் மூழ்கி உயிரிழக்க காரணம் என்ற சந்தேகத்தில் 3 மாணவர்கள் கைது!!

16 வயதான மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழக்க காரணம் என்ற சந்தேகத்தின் பேரில் 3 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெல்மடுல்ல – கிரிந்திஎல்ல அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு சென்று திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாணவரின் சடலம் நேற்றைய தினம் கிரிந்திஎல்ல அணைக்கட்டு பகுதியில்லிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சில மாணவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாணவர் நீரில் மூழ்கும் போது உடன் இருந்த ஏனைய மாணவர்கள் இந்த சம்பவம் பற்றி எவருக்கும் அறிவிக்காது வீடுகளுக்கு சென்றுவிட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று மாணவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் பல லட்சம் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் மீட்பு : ஒருவர் கைது!!

முதிரை மரக்குற்றிகள் மீட்பு..

வவுனியா பண்டாரிக்குளம் காவல் அரண் பிரிவுக்குட்பட்ட கூமாங்குளம் பகுதியில் நேற்றையதினம் (28.03.2022) மாலை 18 முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஓர் பராமரிப்பற்ற காணியில் முதிரைக்குற்றிகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்டாரிக்குளம் காவல் அரண் பொறுப்பதிகாரி திலகரத்ன தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் அதனை மீட்டுள்ளதுடன் கூமாங்குளம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் சந்தைப்பெறுமதி 10 லட்சம் ரூபாவிற்கு மேல் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்றுபொருட்கள் மற்றும் சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தாண்டுக்கு அரசு வழங்கும் 5000 ரூபா கொடுப்பனவு!!

5000 ரூபா கொடுப்பனவு..

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இரண்டு மாத்ஙகளுக்கு வழங்க நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக விளிம்பு நிலையில் வாழும் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மேலும் அத்தியவசிய பொருட்களான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

இ.போ.ச ஊழியர்கள்..

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை அலுவலகர்கள், சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்டவர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29.03.2022) அதிகாலை 5.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிப்படை சம்பளத்தில் 10,000 ரூபா அதிகரிப்பு, வாழ்க்கைப்படியினை 7500 ரூபாவாக உயர்த்துதல், இடைக்கால கொடுப்பனவான 5000 ரூபா நிரந்தமாக்குதல், அதிகாரிகளுக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும், வருடாந்த வேதன உயர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டிருந்ததுடன் முன்அறிவித்தல் இன்றிய பணிப்புறக்கணிப்பு காரணமாக பேரூந்து இன்றி நீண்ட நேரம் மக்கள் காத்திருந்தமையும் காணக்கூடியதாகவிருந்தது.

தொழிற்சங்க அதிகாரி ஒருவர் சம்பள உயர்வு தொடர்பில் ஊழியர்களிடம் கலந்துரையாடுவதற்காக நேற்றையதினம் இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற சமயத்தில் சாலை முகாமையாளரினால் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த தொழிற்சங்க அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

தொழிற்சங்க அதிகாரி ஒருவர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சாலை முகாமையாளர் புஞ்சி பண்டாகே மோகன் பிரசாந்த உலுக்குலம அவர்களிடம் வினாவிய போது , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என அவ்விடத்திலிருந்து சென்றார்.

சம்பள உயர்வுக்கான இவ் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அனைத்து சாலையினதும் ஒத்துழைப்பினையும் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா சாலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வவுனியாவில் ஆசிரியரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!

மூவர் கைது..

வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரொருவரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்திற்குள் சென்ற மூவர் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஆசிரியர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிரியரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, சந்தையில் தங்கத்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு..

நாட்டிற்கு ஒரு தொகுதி லிட்ரோ எரிவாயுவை விநியோகிப்பது தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.

இந்த நிலையில் நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவினை விரைவில் நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் என்பவை தொடர்பில் ஆராயுமாறு சில சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் ஆதரவுடன் தொடரும் காடழிப்பு : திலீபன் எம்.பி குற்றச்சாட்டு!!

திலீபன் எம்.பி குற்றச்சாட்டு..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பிரதேச செயலாளரின் ஆதரவுடன் தொடர்ந்தும் காடழிப்பு இடம்பெற்று வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (28.03) மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரமனாலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கூழாங்குளம் பகுதியில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட காட்டுப் பகுதி வவுனியா நகரப் பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்துபவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

அங்குள்ள பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் துணையுடன் காட்டுப் பகுதிகளில் வேலைகளையிட்டு, பின்னர் காணிகளை படிப்படியாக துப்பரவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. குறித்த நபர்கள் அங்குள்ள அதிகாரி ஒருவருக்கு மிக நெருக்கமானவர் எனவும் தெரியவருகிறது.

குறிப்பாக யுத்தம் காரணமாக பாதிப்படைந்து மீள்குடியேறியுள்ள கன்னாட்டி, கூழாங்குளம், கணேசபுரம், நீலியாமோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் தமது விவசாயம் மற்றும் வாழ்வாதார தேவைக்காக போதியளவிலான நிலமின்றி அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் பெரிய பண முதலைகள் வேறு பகுதியில் இருந்து சென்று அப் பகுதியில் அரச அதிகாரிகளின் துணையுடன் காடழித்து நிலங்களை அபகரித்து வருகின்றனர்.

இது தொடர்பில் மக்களால் அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் காடழிப்பு நடவடிக்கைகளும் அங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்படவில்லை.

இது தொடர்பில் எனக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன், வனவளத் துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி காடழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், மாவட்ட அரச அதிபரின் கவனத்திற்கும் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் செட்டிகுளம், சின்னசிப்பிக்குளம் பகுதியில் இவ்வாறு 100 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தியிருந்தேன்.

இவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரச அதிகாரிகள் தொடர்ச்சியான காடழிப்பு நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாளை முதல் மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டது : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

மின் வெட்டு..

இலங்கையில் நாளை (29.03) முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L -பிரதேசங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V, W – பிரதேசங்களில் காலை 08.30 முதல் மாலை 05.30 வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 5.30 முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.