வவுனியா சமனங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியில் விவசாய காணியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
விவசாய காணியில் யானையினை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியமையினையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் நிலமையினை பார்வையிட்டதுடன்,
யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதினையும் அவதானித்துடன் நேற்று (27.03.2022) வடமாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் கிரிதரன் அவ்விடத்திற்கு வருகை தந்து யானையினை பார்வையிட்டதுடன்,
யானை வெங்காய வெடியை உண்டதால் வெடி வெடித்து யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதனால் உணவு உட்கொள்ள முடியாமல் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று காலை குறித்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் அதனை சுகாதார முறையில் அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிலையத்தின் ஊழியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு நேற்று (27.03.2022) காலை 6600 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 13200 லீட்டர் டீசல் தாங்கிய பவுசர் ஒன்று வருகை தந்திருந்தது.
வாகனங்களுக்கு டீசல் முழுமையாக நிரப்படுவதுடன் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் களன்களில் மண்ணெண்ணெய் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த சமயத்தில் இடையில் வந்தவர்களுக்கு எரிபொருள் நிலைய ஊழியர் மண்ணெண்ணெய் வழங்கியதாக தெரிவித்து வரிசையில் நின்ற மக்கள் எரிபொருள் நிலைய ஊழியருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் நீடித்தது.
இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் இடையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை வெளியேற்றியமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனது மகன் கடத்தப்பட்டுள்ளார். ஆதாரங்கள் இருந்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கடந்த ஜனவரி 27 ஆம் திகதி காணாமல் போன பாலகிருஸ்ணன் நிரேஸ் என்ற வவுனியா இளைஞனின் தாயார் திருமதி கணேஸ் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (27.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மகன் பாலகிருஸ்ணன் நிரேஸ் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். அவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு குருமன்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்னால் தனது மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு அவ் வர்த்தக நிலையத்திற்கு காணாமல் போன தினம் பிற்பகல் 5.02 இற்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு அவன் தனது மோட்டர் சைக்கிளை எடுப்பதற்கு வெளியில் வரவில்லை. அவரது மோட்டர் சைக்கிளை 6.47 நிமிடத்திற்கு வேறு ஒருவர் வந்து எடுத்துச் செல்வதை சிசீரீவி வீடியோவில் காண முடிகிறது. இதனை நான் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளேன். இது தொடர்பில் நான் ஜனவரி 29 ஆம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தேன்.
எனது மகனை காணவில்லை என நான் முறைப்பாடு செய்தேன். ஆனால் எனது மகன் இரண்டு நாளாக வீட்டிற்கு வரவில்லை என தான் முறைப்பாட்டு கொப்பியில் எழுதப்பட்டுள்ளது.
நான் கொழும்பிலும் இது தொடர்பில் அண்மையில் முறைப்பாடு செய்துள்ளேன். பொலிசார் தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்களே தவிர, இரண்டு மாதங்களுக்குள் எந்தவித காத்திரமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.
செட்டிகுளத்தில் இருந்து நபர் ஒருவர் என்னிடம் 15 இலட்சம் கப்பம் கோரினார். மூன்றரை இலட்சம் உடனடியாக தந்தால் மகனை விடுவதாக கூறியிருந்தார். அவர் பொலிஸ் முறைப்பாட்டு துண்டின் பிரதி, மகனின் போட்டோ, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களின் கடிதம் என்பவற்றை தருமாறு கோரினார்.
நாம் குறித்த நபரின் குரல் பதிவை பதிவு செய்து பொலிசாரிடம் கொடுத்தோம். அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். போதியளவிலான ஆதாரம் இல்லை என அவரை விடுவித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த நபரை விசாரித்தால் எனது மகனை கண்டு பிடிக்க முடியும்.
எனது மகன் குருமன்காடு பகுதியில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் தனது இரண்டரை வருட உழைப்பு பணத்தை வழங்கியுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தின் முகாமையாளிடம் 85, 90 இலட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.
தனது 30 ஆவது வயதில் மகன் புதிய தொழில் செய்ய திட்டமிட்டு இருந்தார். அந்தப் பணத்தைக் கேட்டு சென்ற போது தான் அவர் கடத்தப்பட்டுள்ளார். இதுவரை அவரை விடவில்லை. இரண்டு மாதம் கடந்து விட்டது. நான் ஒவ்வொரு இடமாக தேடி வருகின்றேன். ஊடகங்கள் மூலமாவது நீதி கிடைக்குமா என நம்பித் தான் இங்கு வந்துள்ளேன்.
எனது மகனை பிடித்து வைத்திருக்கிறார்கள். அவரை வைத்து என்ன செய்கிறார்களோ தெரியாது? எனது மகனின் மோட்டர் சைக்கிளும் இதுவரை இல்லை. அவரது வங்கி அட்டைகளும் இல்லை. அவரது வங்கி கணக்குகள் பொலிசாரிடம் கொடுத்தோம். அவர்கள் பார்க்கிறோம் என்கிறார்கள்.
ஆனால் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை. அதனால் அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
எனது மகன் தனது நண்பர் ஒருவரின் 5 இலட்சம் பணத்தை வாங்கி குறித்த வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார். எனது மகன் காணாமல் போன பின் மகனின் நண்பர் குறித்த வாத்தக நிலையத்திற்கு சென்று தனது 5 இலட்சம் பணத்தை தருமாறு கோரினார். இதன்போது நிரேஸ் கொடுக்கச் சொன்னது என்று கூறி 5 இலட்சம் பணத்தை கொடுத்துள்ளனர்.
எனது மகன் காணாமல் போன பின் தான் இந்தச் சம்பவம் நடந்தது. மகன் பணத்தை எப்போது கொடுக்கச் சொன்னவர் என்பதை அறிய வேண்டும். எனவே எனது மகன் கடத்தப்பட்டுள்ளார். அவர் கண்டுபிடிக்க பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் 14.4 மில்லியன் மக்கள் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். எனினும், 7.7 மில்லியன் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோய் பிரிவின் பிரதம தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம்,
சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது.
அந்த விருதை முதல்முறையாக இந்த ஆண்டு ஒரு தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். தெற்கு அவுஸ்திரேலியாவின் 2021ஆம் ஆண்டிற்கான ஆளுநர் பல்கலாச்சார விருதை நீலா சிவா என்ற தமிழ் பெண் பெற்றுள்ளார்.
இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 180,000 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் சரிவை சந்தித்துள்ளமையே உள்நாட்டில் தங்கம் விலை உயர்வடைவதற்கு காரணம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யா – உக்ரைன் போர் நெருக்கடி காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
வார இறுதியில் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு இருந்தாலும், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் அதாவது 56 டொலரினால் உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த ஒரு வருடத்தினுள் தங்க விலையின் அதிகாிப்பு 13 சதவீதம் அதாவது 230 டொலராக பதிவாகியுள்ளது.
வவுனியா சமனங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியில் விவசாய காணியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று (26.03.2022) காட்டு யானையொன்று காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியமையினையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் நிலமையினை பார்வையிட்டதுடன் யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதனையும் அவதானித்தனர்.
அதன் பின்னர் இன்று (27.03.2022) காலை 10.00 மணியளவில் வடமாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் கிரிதரன் அவ்விடத்திற்கு வருகை தந்து யானையினை பார்வையிட்டதுடன்,
யானை வெங்காய வெடியை உண்டதால் வெடி வெடித்து யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதனால் உணவு உட்கொள்ள முடியாமல் போனதால் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
யானைக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவியின் பின்னர் யானையினை காட்டுக்குள் அனுப்பி வைப்பதற்குறிய நடவடிக்கையில் வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
லங்கா ஜ.ஓ.சி நிறுவனத்தில் அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையினையடுத்து வவுனியா மாவட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களினை மக்கள் நாடிவருகின்றமை அதிகரித்துள்ளது.
லங்கா ஜ.ஓ.சி நிறுவனத்தில் ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபா என்பதுடன் ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அதிகரித்தது.
எனினும் இதுவரையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
இதனையடுத்து மாவட்டத்தில் பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக, மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக, வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை அருகில், ஹோரவப்பொத்தானை வீதியிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தினை மக்கள் நாடி வருகின்றனர்.
மக்களின் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருவதாக கொழும்பு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு செட்டியார்தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை, 22 காரட் தங்கம் இன்றைய தினம் 154,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்த முதல் சந்தர்ப்பம் இதுவென உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மிகவும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலவரப்படி கறுப்பு சந்தையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 350 ரூபாவை அண்மித்துள்ளதுடன், வர்த்தக வங்களில் 290 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட தூரம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பெண்களிடம் அங்க சேட்டையில் ஈடுபடும் நபர் தொடர்பான தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
கொழும்பில் இருந்து மலையகம் மற்றும் அனுராதபுரம் வரை செல்லும் பேருந்துகளில் பெண்களிடம் தவறான நடந்து கொள்ளும் நபர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பேருந்துகளில் அங்க சேட்டையில் ஈடுபடும் போது அங்கிருந்து சிலர் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும் கொலை செய்த நிலையில் குறித்த இளைஞனும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காதலியின் தாய் ராணிவேலுராஜு பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புர, ரணவன வீதியைச் சேர்ந்த முத்துத்தம்பி ஈஸ்வரதேவன் என்ற 70 வயதுடைய நபரும், அவரது மகள் ஈஸ்வரதேவன் சந்தரவாதினி என்ற 30 பெண் மற்றும் அவரது காதலனே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சந்தரவாதினி 12 வருடங்களாக காதலித்த இளைஞனை திருமணம் செய்தக் கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் சில காலத்திற்கு முன்பு சந்திரவாதினி காதலனை விட்டு பிரிந்து சென்றதால் அவர்களுக்குள் அடிக்கடி வாய்தகராறுகள் ஏற்பட்டுள்ளது.
காதலி உறவில் இருந்து விலகியதால் கோபமடைந்த காதலன், காதலியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வாய்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று காலை காதலன் பெட்ரோலுடன் வீட்டிற்கு வந்துள்ளார். காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்ய அனுமதிக்காவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
சந்திரவாதினியின் தந்தை மற்றும் தாயாரும் வாய்த்தகராறில் ஈடுபட்டதால், காதலன் வீட்டின் முன்பக்க கதவை அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ வேகமாக பரவியுள்ளது. உடனடியாக அயலவர்கள் தீயை அணைக்க முயன்றும் பலனில்லை.
தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்த சந்திரவதினியின் தாயாரை அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர். பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த அவர் உடனடியாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்குடும்பத்தின் உயிரிழந்த தந்தை வெற்றிலை, பாக்கு வியாபாரம் செய்துள்ளார்.. சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பரிசோதகர் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பன்னரதன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“காலையில் சண்டை சத்தம் கேட்டது. எனினும் நாங்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் வீட்டில் சண்டைகள் பொதுவாக நடக்கும். வீடுகள் அருகருகே இருப்பதால் சத்தம் கேட்கும். எனினும் இன்று எங்களை காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. எனினும் அங்கு செல்வதற்குள் வீடு முழுமையாக தீப்பற்றி எரிந்து விட்டது” என அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது வாள்களுடன் சென்ற இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (25.03) பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வேப்பங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்ற நிலையில் பெண் மட்டும் வீட்டில் சமைத்துக் கொண்டு நின்றுள்ளார்.
இதன்போது கார் ஒன்றில் வாள்களுடன் சென்ற இளைஞர் குழுவொன்று குறித்த வீட்டின் யன்னல், கதவு, கதிரைகள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பெண்ணையும் தாக்க முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருநற்து தப்பியோடிய பெண் அருகில் இருந்த கடைக்குள் புகுந்துள்ளார் . பின்தொடர்ந்து சென்ற இளைஞர் குழு, கணவன் எங்கே எனநக் கேட்டு அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு செனற வவுனியா, நெளுக்குளம் பொலிசார் தாக்குதல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர் மேற்கொண்ட அட்டகாசத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் இளைஞர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்திருந்த சமயத்தில் அவ்விடத்திற்கு வருகை மேற்கொண்ட மற்றொரு இளைஞர் குழுவினர் அவ் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வர்த்தக நிலையத்தின் தளபாடங்களையும் சேதப்படுத்தி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு தெரிவித்து சென்றனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே கடந்த மூன்று வாரங்களுக்குள் 6க்கு மேற்பட்ட குழு மோதல்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஏ9 வீதியில் இன்று (25.03.2022) பிற்பகல் இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து ஏ9 வீதி யூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் பல மாவட்டங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் மக்கள் நீண்ட மணிநேரமாக வரிசையில் காத்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும் மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
மேலும் எரிவாயு லிட்ரோ சிலிண்டரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு முகவரினால் இன்று 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 10.30 மணியளவில் எரிவாயுவினை பெற்றிருந்தனர்.