அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. போதிய எரிபொருள் மற்றும் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால்,
தற்போது ஆறரை மணிநேரமாக நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு அடுத்த வாரத்திற்குள் 10 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொருத்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (25.03.2022) பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற மூன்று நபர்கள் இணைந்து பாடசாலை வளாகத்தில் நின்ற,
ஆங்கில பாட ஆசிரியரான சாந்தகுமார் (வயது- 45) என்பவர் மீது கட்டையினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மற்றைய ஆசிரியர் இதனை கண்னுற்றதும் அவர்கள் அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.
தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட ஆசிரியர் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பாடசாலையில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதற்ற நிலமை நிலவி வந்ததுடன் பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (25) மின்வெட்டினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் தலா 3 மணிநேரமும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் தலா ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாளைய தினம் P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரை ஒரு மணிநேரமும் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி பாவனைக்கு வந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகள் மீண்டும் சந்தை ஊடாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கோரிக்கை ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய குறித்த இரண்டு பொருட்களும் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சிம்னி விளக்குகள் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விளக்குகளின் போத்தல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சமகால அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக இலங்கை 50 வருடங்கள் பின்நகர்த்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒருவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்நிய செலாவணி வீதங்கள் கட்டுப்பாடு இன்றி நீடித்தால், மே, ஜூன் மாதளவில் அமெரிக்க டொலர் ஒன்றில் விலை 400 ரூபாயை தாண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டொலர் கட்டுப்பாட்டை கைவிட்டதன் பின்னர் அதன் பெறுமதி 300 ரூபாய் என்ற மட்டத்திற்கு வந்துள்ளது. இந்த நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் மக்களால் தாங்க முடியாத அளவுக்கு வாழ்க்கை செலவு கட்டாயம் அதிகரிக்கும்.
மே, ஜூன் மாதங்களில் டொலரின் பெறுமதியானது 400 ரூபாய் என்ற மட்டத்திற்கு வந்து விடும் என்பது தனது மதிப்பீடு எனவும் ரத்னசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 289.99 ரூபாயாக அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்து, ரூபாயின் பெறுமதி குறைந்துள்ள நிலையில், அத்தியவசிய மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
கனடாவில் காணாமல்போன 16 வயதான பாடசாலை மாணவி குறித்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கனடாவில் – சமந்தா வால்டிஸ் ஆல்வரிஸ் என்ற 16 வயது சிறுமியொருவர் காணாமல்போயுள்ளார்.
குறித்த சிறுமியின் கடைசியாக பள்ளி சீருடையுடன் கடந்த 15ஆம் திகதி காலை 8.30 மணியளவில் காணப்பட்டுள்ளார். இவர் 110 முதல் 155 பவுண்டுகள் வரை உடல் எடை கொண்டவராகவும், மெல்லிய உடலமைப்பு கொண்டவர் அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழுப்பு நிற கண்கள் மற்றும் நீண்ட, கறுப்பு முடியுடன், ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் கொண்டவர் சமந்தா என பொலிஸார் கூறியுள்ளனர். சிறுமி குறித்து யாருக்கேனும் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் கூறலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் பண்டைய முறையிலான திருமணமொன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
நெற்கற்றைகளினால் வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும்,மணமகளும் ஆலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் பாரம்பரியங்களை பேணியதாக நடைபெற்றுள்ளது.
தற்போதைய காலத்தில் தமிழர்களின் பண்டைய பாரம்பரியங்கள் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அவற்றினை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த திருமணத்தை நடாத்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண்ணுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவ தினமும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மனமுடைந்த குறித்த பெண் கணவர் வெளியே சென்ற நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறுித்து கன்னியாகுமரி பொலிஸார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றமான நிலையானது, தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றத்தினை காண வழிவகுக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையானது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக நடுத்தர காலத்தில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.902 டாலராக காணப்படுகின்றது.
தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பணவீக்கமானது மீண்டும் உச்சம் தொடலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் அதிகரித்தாலும், அது பெரியளவிலான விலை ஏற்றத்தினை தடுத்துள்ளது. இருப்பினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
லிட்ரோ நிறுவனம் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, தற்போது கெரவலப்பிட்டிய முனையத்தில் போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு குறுகிய காலத்தில் களையப்படும் எனவும் குறித்த நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் இல்லாதளவு ஒரே நாளில் ஒரு கிலோ மர முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு மர முந்திரிக்கு (கஜூ) சிறந்த சந்தை வாப்பை ஏற்படுத்தும் நோக்கில், முந்திரி (கஜூ) இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், அண்மையில் ஒரு கிலோ கிராம் மர முந்திரி (கஜூ) 250 ரூபா முதல் 350 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ முந்திரியின் (கஜூ) விலை 800 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் மர முந்திரி (கஜூ) கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாரங்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மர முந்திரி கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கிராம் முந்திரிப் பருப்பு ரூ.3500 முதல் 5000 வரையிலான விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் மாத இறுதியில் இருந்து முந்திரி (கஜூ) அறுவடை செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு சுமார் 12,000 மெட்ரிக் டொன் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வருடங்களில் காச நோயினால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15பேர் மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் இன்று (23.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
உலக காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. இம்முறை “காசநோயை இல்லொதொழிப்பதற்கு முதலிடுவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவோம்”. எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
மேலும் மார்ச் 24ம் திகதி வவுனியா மாவட்ட காச நோய் தடுப்பு பிரிவில் விழிப்புணர்வு செயலமர்வும், அதனை தொடர்ந்து பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நடைபவனியும் இடம்பெறும். உலக சுகாதார ஸ்தாபனமானது ஒருலட்சம் மக்களில் 64 பேரிற்கு காசநோய் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.
வவுனியா மாவட்டத்தை பொறுத்த வரை ஒரு வருடத்தில் 80 தொடக்கம் 90 பேர் வரை இணங்காணப்பட வேண்டும். ஆனால் வவுனியா மாவட்டத்தில் 2021ம் ஆண்டு 52 பேரும் 2020ம் ஆண்டு 47 பேரும் இனங்காணப்பட்டுள்ளதுடன், 2021ம் ஆண்டு இந்நோயினால் 08 பேரும், 2020ம் ஆண்டு 07பேரும் மரணமாகியுள்ளனர்.
இவ்விறப்புக்களிற்கு காலம் தாழ்த்தி சிகிச்சை பெற்றுக்கொண்டமை முக்கிய காரணமாகும். இந்நோயினை பொறுத்த வரை ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுமிடத்து இவ்வாறான இறப்புக்களை தடுக்க முடியும்.
காசநோயை பொறுத்த வரை இலங்கையில் 2021ம் ஆண்டு 6771 பேர் இணங்கானப்பட்டுள்ளதுடன், 2020ம் ஆண்டு 500 பேர் வரை காச நோயினால் மரணமடைந்துள்ளனர்.
எங்களது முக்கிய நோக்காக 2035ம் ஆண்டு இலங்கையில் இருந்து காசநோயினை முற்றாக இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்ற வகையில் எங்களது செயற்பாட்டினை முன்னெடுக்கின்றோம் என தெரிவித்திருந்தார்.
நாளை தினமும் (24) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் தலா 3 மணிநேரமும் 20 நிமிடங்களும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் தலா ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாளைய தினம் P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரை ஒரு மணிநேரமும் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தென்னிலங்கையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணியான மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பாலாக்காய்,
ஒன்றை பறிந்த இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனது உறவினர் ஒருவரின் வளவிலுள்ள தோட்டத்தில் பலாக்காய் பறிந்தமையினால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வடக்கு எல்பிட்டிய, எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரான உயிரிழந்தவரின் மாமா ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 285 ரூபா முதல் 290 ரூபா வரை அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்கிகள் அற்ற ஏனைய நாணய மாற்று நிலையங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 309 ரூபா வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதன் காரணமாக பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – களனி ஆற்றில் 22 வயதுடைய யுவதியொருவரை கொலை செய்துவிட்டு களனி ஆற்றில் சடலத்தை வீசிய சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் உயிரிழந்த பெண்ணின் காதலன் எனவும், அவர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்கு யாரும் இல்லாத சமயம் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது , வெல்லம்பிட்டிய சேதவத்தையில் பிரதேசத்தை 22 வயதுடைய யுவதியே இவ்வாறு கடந்த 16 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி காணாமல்போயுள்ளதாக யுவதியின் பெற்றோர் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன்,
இதன்போது சந்தேகநபரும் தனது காதலியின் பெற்றோருடன் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளார். இதன்போது சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கொஹிலவத்தை பிரதேசத்தில் வைத்து யுவதி சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக யுவதியின் சடலம் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.