“இலங்கையில் பொருளாதார நெருக்கடி : இந்தியாவில் தஞ்சமடையும் மக்கள்”!!

இந்தியாவில் தஞ்சமடையும் மக்கள்..

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்து வருவதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு சென்ற 6 பேர் ராமேஸ்வரத்திற்கு அருகில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அத்தியவசிய பொருட்களை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ்கோடிக்கு அருகில் மூன்றாம் தடை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட ஆறு பேர் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து பலர் இந்தியாவுக்குள் வரலாம் என்ற தகவலை அடுத்து இந்திய கடலோர காவற்படையினர் தீவிர ரோந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையில் வந்த தியூரி என்ற பெண், “இலங்கையில் விலைவாசிகள் அதிகம். கணவன்மார் இருப்பவர்களே கஷ்டப்படுகின்றனர்.

எனக்கு கணவன் இல்லை, இரண்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படுகிறேன். வேலைகளுக்கு சென்று பிள்ளைகளை வளர்க்க நினைத்தாலும் முடியவில்லை. எனது பெற்றோர் அங்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா கனகராயன்குளத்தில் கார் – துவிச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (22.03.2022) காலை கார் – துவிச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் மற்றும் துவிச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் துவிச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு அகதிகளாக சென்று அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள்!!

அகதிகளாக..

இலங்கையிலிருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு,

அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆணும், 2 பெண்களும், 3 குழந்தைகளுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இந்தியக் கடலோர காவல் படையினர் மீட்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சூப்பர் மார்க்கெட் அருகே கிடைத்த காதலன் : இளம்பெண்ணின் நெகிழவைக்கும் காதல் கதை!!

காதல் கதை..

பெண் ஒருவர் தன்னுடைய காதல் கதை குறித்து, சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஜாஸ்மின் கிரோகன் என்ற பெண் ஒருவர், சூப்பர் மார்கெட்டிற்கு சென்ற போது, ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல், தன்னுடைய காதலனுடன் தற்போது இணைந்து வாழ்ந்து வரும் அவர், இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். காதல் வயப்படுவதில் புதிதாக என்ன இருக்கிறது என தோன்றலாம். ஆனால், ஜாஸ்மின் காதலித்த நபர் யார் என்பது தான் பலரையும் நெகிழ செய்துள்ளது.

இதுகுறித்து, ஜாஸ்மின் பேசியுள்ள வீடியோவின் படி, ஒரு நாள் ஷாப்பிங் செய்ய வேண்டி, சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றுள்ளார் அவர். அந்த சமயத்தில், சூப்பர் மார்க்கெட் அருகே வீடில்லாமல் வசிக்கும் வாலிபர் ஒருவரை கண்டுள்ளார். இதனை அறிந்து, அந்த நபருக்கு பண உதவி செய்ய முடிவு செய்துள்ளார் ஜாஸ்மின். ஆனால், பணம் வேண்டாம் என சொல்லி மறுத்து விட்டார் அந்த இளைஞர்.

தொடர்ந்து, உள்ளே சென்று ஷாப்பிங் செய்த ஜாஸ்மினுக்கு அந்த நபரின் முகம் தான் மனதில் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த ஜாஸ்மினனுக்கு, வெளியே இருந்த அந்த நபர், உதவிகளை செய்ய முன் வந்துள்ளார்.

அதன்படி, ஜாஸ்மின் கையில் இருந்த பைகளை எடுத்து டாக்சியில் வைத்தார். பிறகு, அவருக்கு உணவு வழங்கிக் கொடுக்க ஜாஸ்மின் முடிவு செய்யவே, அவரும் ஒத்துக் கொண்டார். இருவரும் ஹோட்டல் சென்று உணவருந்திய நிலையில், மொபைல் போன் ஒன்றையும் அந்த நபருக்கு பரிசளித்துள்ளார் ஜாஸ்மின். அந்த இளைஞரின் பெயர், மெக்காலே முர்ச்சி ஆகும்.

இதனையடுத்து, இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பழகி வந்துள்ள போது தான் தங்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் இணைந்து வாழவும் ஆரம்பித்து, தங்களின் இல்லற வாழ்க்கையை மிகவும் சிறப்பாக தங்களின் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மெக்காலே இல்லை என்றால், எனது வாழ்க்கையே இல்லை என காதல் கணவரை நினைத்து உருகுகிறார் ஜாஸ்மின். சூப்பர் மார்க்கெட் வெளியே வீடு இல்லாமல், பொது இடத்தில் தங்கி வந்த நபர் மீது ஏற்பட்ட காதல், இன்று சிறப்பான வாழ்க்கையை ஜாஸ்மினுக்கு அமைத்துக் கொடுத்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் அறிமுக விழா!!

நூல் அறிமுக விழா..

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் ‘கருவி’ மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பும் இணைந்து நடத்திய – ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் அறிமுக விழா யாழ் நாச்சிமார் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வினை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் வீரகேசரி இதழின் பிரதம ஆசிரியருமாகிய எஸ். ஸ்ரீகஜன் தலைமை தாங்கியதுடன் ஊடகவியலாளரும் எழுத்தாளருமாகிய ஷர்மிளா வினோதினி நிகழ்வுகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்பட்டு வருகின்ற கருவி அமைப்பின் தலைவர் க. தர்மசேகரம் வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் தலைவர் ஸ்ரீ கஜன் தலைமை உரையாற்றினார். எங்கட புத்தகங்கள் சஞ்சிகையின் ஆசிரியரும் அந்த நிறுவனத்தின் நிறுவனருமாகிய குலசிங்கம் வசீகரன் வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.

ஊடகவியலாளர் யாழ். தர்மினி பத்மநாதன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றியிருந்தமையுடன் வண்ணை காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தின் உப தலைவர் செல்லத்துரை திருமூர்த்தி நூலின் சிறப்புப் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் உளவியல் மருத்துவ நிபுணர் சு.சிவதாஸ் தனது துறைசார்ந்த நிலையில் மாற்றத்தை நாடும் மாற்றுத்திறானளிகள் நூல் பற்றிய பார்வையைத் தனது உரையில் செலுத்தியிருந்தார்.

யாழ் பல்கைலக்கழக சமூகவியல்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் இரா.இரோஜஸ்கண்ணன் இந்நூலின் சமூகவியல் முக்கியத்துவம் குறித்து கருத்துரையாற்றினார். நூலாசிரியரின் ஏற்புரையைத் தொடர்ந்து சிரேஸ்ட ஊடவியலாளர் கணபதி சர்வானந்தா நன்றியுரையாற்றினார்.

விழா ஏற்பாட்டாளர்களின் சார்பில் கல்வியலாளர்களும் முக்கியஸ்தர்களும், தமிழ் ஊடகவியாலாளர் ஒன்றியத்தின் சார்பில் எஸ். ஸ்ரீ கஜன் மற்றும் யாழ் ஈழுநாடு இதழின் ஆசிரியர் இராசநாயகம் பாரதி ஆகியோரும் நூலாசிரியரையும் அவரது துணைவியாரையும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் உரையாற்றியவர்களுக்கு நூலாசிரியரினால் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழகக் கல்வியலாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த வருடத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினமாகிய டிசம்பர் 3 ஆம் திகதி மன்னார் மாந்தை மேற்கு மாற்றுத்தினாளிகள் அமைப்பினரால் அதன் பணிப்பாளர் வெற்றிச்செல்வி சந்திரகலாவின் தலைமையில் மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் வெளியீடு செய்யப்பட்டது என்பதும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கருவி அமைப்பின் முக்கிய பங்களிப்புடன் அந்நூலின் அறிமுக விழா நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் : இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!!

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு..

இலங்கையில் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு உறுதிப்பத்திர வாடகை வீட்டுத்திட்ட முறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் “உறுதிப்பத்திர வாடகை வீடு” எனும் பெயரில் முன்மொழிவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு, கட்டுமானங்கள் மற்றும் கட்டடப் பொருட்கள் தொழிற்றுறை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் 4 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் 464 வீடுகளுடன் கூடிய 9 வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஆரம்பக் கொடுப்பனவை செலுத்துவதற்கான இயலுமை இன்மையால், மாதாந்தம் 15,000 ரூபா வாடகைப் பணமாக 31 வருடங்களுக்கு அறவிடுவதற்கும், இரண்டாவது அல்லது மூன்றாவது பரம்பரைக்கு வீட்டு உரிமையை ஒப்படைக்கக்கூடிய வகையிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விற்பனை செய்வதற்கு இயலாத வகையிலும் பயனாளிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விபத்தில் இளம் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!!

காயத்ரி டாலி…

பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி (26) கடந்த 18 ஆம் தேதி ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், கார் விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் ரசிகர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

26 வயதான காயத்ரி டாலி ” மேடம் சார் மேடம் அந்தே” என்ற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர். இவர் ஜல்சா ராயுடு என்ற பிரபல யூடியூப் சேனலிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட வெளியில் சென்றுள்ளார். பின்னர் தனது ஆண் நண்பரான ரத்தோட் என்பவருடன் காரில் கச்சிபோலிக்கு வந்துகொண்டிருந்தார்.

காரை ரத்தோட் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கச்சிபோலி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண் நண்பரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை காப்பாற்றமுடியவில்லை.

மேலும், கார் விபத்தின்போது சாலையை கடந்து செல்ல முயன்ற பெண் பாதசாரியும் படுகாயமைடந்து அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை சாலை விபத்தில் பலியான சம்பவம் ரசிகர்கள், பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்.

எரிபொருள் வரிசையில் கொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்!!

துவான் மில்ஷான் தாஜுடீன்..

நிட்டம்புவ, ஹொரகொல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த துவான் மில்ஷான் தாஜுடீன் என்ற 29 வயதுடைய திருமணமாகாத இளைஞரே உயிரிழந்துள்ளார். கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கர வண்டி சாரதியை நேற்று அதிகாலை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிளில் ஓட்டுநரை முச்சக்கர வண்டி சாரதி முந்தி சென்றமையினால் ஏற்பட்ட வாய்த்தகராறே இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெளியே முச்சக்கர வண்டியில் காத்திருந்த சாரதி எரிபொருள் நிரப்பிய பின்னர் வெளியே வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த கொலையை செய்தவர் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தப்பி செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்ற இருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். எரிபொருள் நிலையங்களில் ஏற்படும் வாய்த்தகராறு மோதல்களாக மாறியுள்ளது. அவ்வாறான மோதலின் முதல் படுகொலை இதுவாகும்.

வவுனியா கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் புத்தரிசி வழங்குவதற்கான விழா!!

புத்தரிசி வழங்குவதற்கான விழா..

55வது தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா இன்று காலை வவுனியா கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஏப்ரல் 03ம் திகதி அக்ர சாஸ்ய ஜெயஸ்ரீ மகா போதியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்காக மாவட்ட ரீதியாக புத்தரிசி வழங்குவதற்கான விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

மாவட்ட செயலாளர் சரத்சந்திர மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் முக்கியஸ்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நான்கு மதகுருமார்களினால் புத்தரிசி வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

133 பயணிகளுடன் எரிந்து விபத்திற்குள்ளாகிய சீன விமானம் : ஏராளமானோர் பலி!!

சீன விமானம்..

China plane crash.

133 பேருடன் பயணித்த சீன விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்றே இவ்வாறு, தென் சீனாவில் உள்ள தெங்சியான் கவுண்டி பகுதியில் மலையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

China plane crash.

விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், ஏராளமானோர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரானன குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.

காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

சேலம்..

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ரவியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த சரண்யாவின் உறவினர்கள் ரவிக்குமாரை தாக்கி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்.

இதனால் அவமானம் அடைந்த ரவிக்குமார் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர் மீது ஏறியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து நான்கு மாதமே ஆன இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தில் உடல் சிதைவுகள் இல்லாமல் தலை வேறு உடல் வேறாக கிடந்த ரவிக்குமாரின் சடலத்தை கனத்த இதயத்துடன் தூக்கிக்கொண்டு வந்த ஊழியர்கள் கண்ணீர் வடித்த காட்சி நெஞ்சை உலுக்கும்படியாக இருந்தது.

காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கர்நாடகா..

கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜாபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27) அதே பகுதியை சேர்ந்தவர் தானிஸ்வரி (23) இருவரும் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.

பொறியியல் படிப்பு முடித்த பின்னர் சிவகுமார் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல தானிஸ்வரி படிப்பு முடிந்து மேல்படிப்புக்காக பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு வந்து தனியாக அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.

இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததால் தொடர்ந்து இவரது காதல் இடைவிடாமல் நடந்து வந்துள்ளது. இருவரும் வார இறுதி நாட்களில் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.

மேலும் செல்போனிலும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே தானிஸ்வரிக்கு அவரது தந்தை அசோக் சர்மா திருமணம் செய்ய முடிவெடுத்து மாப்பிள்ளை பார்த்து உள்ளார். மாப்பிள்ளையை நேரில் பார்ப்பதற்காக தானிஸ்வரிக்கு அவர் அழைப்பு விடுத்து ஊருக்கு வர சொல்லியுள்ளார்.

தானிஸ்வரி தனது ஊருக்குச் சென்று தந்தையிடம் தான் சிவகுமார் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தானிஸ்வரியின் தந்தை அசோக் சர்மா சிவகுமாரை நேரில் அழைத்து வந்து தன்னிடம் சம்மதம் வாங்கிய பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து தானிஸ்வரி, சிவகுமாரை தனது தந்தையிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அவரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சிவகுமார், தான் வேறு ஜாதி என்றும். தானிஈஸ்வரி வேறு சாதி என்றும் இருவரது திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள், அவர்கள் இறந்து விடுவார்கள் எனவே திருமணம் செய்ய தனக்கு சம்மதம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் தானிஸ்வரியும் அவரது பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து தானிஸ்வரி தனது தந்தையிடம் தனது காதலர் சிவகுமாரிடம் பேசி சம்மதம் வாங்கி வருகிறேன் என கூறி மீண்டும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டிக்கு வந்துள்ளார்.

கடந்த 16ஆம் தேதி சிவகுமார் வேலை பார்க்கும் தனியார் கம்பெனிக்கு சென்று அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிவக்குமாரோ அதற்கு மறுப்பு தெரிவித்து விடாப்பிடியாக இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிவகுமார் தானிஸ்வரியை தனியாக அழைத்துச் சென்று அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளதாக கூறப்படுகிறது. உடலில் 80 சதவீத தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த தானிஸ்வரி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த தானிஸ்வரியின் பெற்றோர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு வந்து சம்பவம் குறித்து எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் காதலன் சிவகுமாரை தேடினர்.

ஆனால் அவர் தலைமறைவானார் அதனைத்தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாவுக்கு எதிராக மீண்டும் பாரிய அதிகரிப்பை பதிவு செய்த அமெரிக்க டொலர்!!

அமெரிக்க டொலர்..

இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 280 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 270 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாவாகும் கொள்வனவு விலை 355 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 311 ரூபாகவும் விற்பனை விலை 297 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 302 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224 ரூபாவாகவும் கொள்வனவு விலை 213 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

இலங்கையில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொலைபேசி கட்டணங்களும் உயர்கிறது!!

தொலைபேசி கட்டணங்கள்..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன.

இலங்கையில் தற்போது தினந்தோறும் விலை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தொலைபேசி கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் இவ்வாறு தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை உயர்த்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

வரிசையில் காத்திருந்து உயிரிழந்த கணவனின் இழப்பை ஏற்க மறுக்கும் மனைவி : இலங்கையில் தொடரும் அவலம்!!

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

மாபொல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 70 வயதுடைய நபரே கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இதன்போது உயிரிழந்தவரின் மனைவியை பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த நிலையில், அவர் தனது கணவர் உயிரிழந்துள்ளமையை நம்பாது சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்த தன் கணவர்,

தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும்,”அவருக்கு சர்க்கரை நோய், நெஞ்சுவலி. மருந்து சாப்பிடுகிறார்.ஒன்றுமில்லை என்றும் அங்கிருந்த அனைவரிடமும் கூறியுள்ளார்.

பின்னர் பொலிஸாரின் உதவியுடன் உயிரிழந்த கணவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உயிரிழந்த கணவனை முச்சக்கர வண்டியில் ஏற்றி அவ்வப்போது உடலை அசைத்து சுயநினைவு பெற முயலும் காட்சி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் காண்போரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினமும் (19) கண்டி, யட்டிநுவர வீதியில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்றிருந்த 71 வயதுடைய நபரொருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தமிழ் பெண் பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் எனவும், ‘தற்கொலையுடன் நடைபெற்றுள்ள இரட்டைக்கொலை’ என்ற கோணத்தில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.

கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில் தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.