என் சகோதரரின் உயிரை பறித்தது ராஜபக்ஷ சகோதர்கள் தான் : உயிரிழந்தவரின் தம்பி ஆதங்கம்!!

கண்டி..

கண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்யை பெறுவதற்காக காத்திருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு எவ்வித உடல் நிலை பாதிப்புகளும் காணப்படவில்லை என உயிரிழந்தவரின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

“என் அண்ணனுக்கு எந்த நோயும் இல்லை. இந்த அரசாங்கத்தின் தவறினால் எனது சகோதரர் இறந்தார் என்று கூற நான் அஞ்சவில்லை. ஏனென்றால் எங்கள் ஊரில் மண்ணெண்ணெய், எரிவாயு பெற்றுக் கொள்வதற்கு இடமில்லை. இன்று எங்காவது மண்ணெண்ணெய் கிடைத்துவிடும் என கூறியே அண்ணன் காலையில் சென்றார்.

கடைசியில் எங்களுக்கு மண்ணெண்ணெய் இல்லை அண்ணனின் உடல்தான் கிடைத்தது. அவர் யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்த நல்ல மனிதர்.

அவரது மனைவி சமைப்பதற்கு சிரமப்பட்டு வந்ததை பார்த்து தம்பி கடந்த நாட்களாக கவலையாகவே இருந்தார். இறுதியாக நாங்கள் எங்கள் சகோதரனை இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மொஹமட் இல்லியாஸ் என்பவரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, ​​பெருநாடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 19ஆம் திகதி பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் மழையில் நனைந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த போது, மயங்கிய நிலையில் கீழே விழுந்தார் என பொலிஸ் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த மொஹமட் இல்லியாஸ் என்பவர் சுமார் 30 வருடங்கள் அரச சேவையில் கடமையாற்றியவர் எனவும், இலங்கை பொலிஸ்துறையில் அரச உத்தியோகத்தராக இருந்தவர் எனவும் அவரது சகோதரர் மொஹமட் நிசாம் தெரிவித்துள்ளார்.

உடத்தலவின்ன பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அடுப்பு பற்றவைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கண்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, காலை 11.30 மணியளவில் இளைய சகோதரர் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.

மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்றிருந்த போது மயங்கி விழுந்த சகோதரரை வைத்தியசாலையில் அனுமதிக்க நீண்ட நேரமாகிவிட்டதாகவும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்த போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் நிசாம் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

புதுக்குடியிருப்பில் ஒரு வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

புதுக்குடியிருப்பு..

புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று முன்தினம் (19.03) மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைவேலிப்பகுதியனை சேர்ந்த சியோன்ஷன் என்ற 1 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசல கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த வெட்டிய தண்ணீர் கேனில் விழுந்து உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குழந்தையின் உடல் மரணவிசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்து விபத்து : 22 பேர் படுகாயம்!!

பேருந்து விபத்து..

யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

அரச பேருந்தொன்றினை தனியார் பேருந்தொன்று முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது.

குறித்த பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்களை மக்கள் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் பேஸ்புக் காதலால் காணாமல்போன இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கதி!!

பேஸ்புக் காதலால்..

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் காணாமல்போன இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சிறுமிகளில் ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி நட்பாகியுள்ளார்.

இந்நிலையில், செங்கலடி இளைஞர் ஒருவர் சிறுமியினை அங்கு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் பேருந்தில் ஏறி செங்கலடிக்கு சென்றுள்ளார்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிசென்று தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றி சென்றுள்ளார்.

இதன்போது இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ். நகரப்பகுதியில் சுற்றி திரிந்த வேளையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் பொருட்களை வாங்கிய வேளை நள்ளிரவாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டு சிறுமிகளுக்கும் உதவி செய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு சென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்.

நேற்று புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,

இருவரிடத்திலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிகரிக்கும் காதல் வன்முறை சம்பவங்கள் : இரு சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்..

இலங்கையில் தற்போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் , பாலியல் துஷ்பிரயோகங்களும் பல இடம்பெற்று வருகின்றன. அத்துடன் சிறுவயது காதல் பிரச்சினையினாலும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் இரு மாணவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு ஆசிரியர் ஒருவர் ஓரின பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை புரிந்து வந்த நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறை சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.

ரயில் கடவையில் ரயில் மோதி இளைஞன் பலி!!

இளைஞன் பலி..

கட்டுநாயக்க விமானப் படை முகாமுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கவனமின்றி சென்ற மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதியதில் அதில் பயணம் செய்த இளைஞன் படுகாயமடைந்தது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் கடவையில் பாதுகாப்பு நுழைவு வாயில் அமைக்கப்படவில்லை என்பதுடன் ரயில் வருவதை காட்டும் மின்சார சமிக்ஞை கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

எனினும் அது செயற்படுவதில்லை. அதனை திருத்தம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீர்கொழும்பு ரயில்வே சமிக்ஞை பரிசோதனை அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விமானப் படை முகாம் வீதி குரன கட்டுநாயக்க என்ற பகுதியில் வசித்து வந்த 27 வயதான திலான் ரெவோன் விஜேந்திர பெர்னாண்டோ என்ற இளைஞனே இன்று நடந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, தலுபொத்த ரயில் கடமையில், புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி ரயில் மோதியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் ஜீப் குடைசாய்ந்து விபத்து!!

விபத்து..

நுவரெலியா – டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் நேற்று மாலை விபத்துக்கு இலக்காகியுள்ளது. விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டயகம பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் வீதியிலிருந்து 15 அடி‌ உயரத்திலிருந்து கீழே பாய்ந்து குடைசாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

டயகம நகரத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த பொலிஸ் வாகனத்தில் சாரதியும் பொலிஸ் நிலைய அதிகாரியும் சென்றுள்ளனர்.

எனினும் இதுவரை விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை டயகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பால் மாவின் விலை வரலாற்றில் இல்லாத அளவு உயர்வு!!

பால் மா..

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கடந்த 7ம் திகதி வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் ஒரு கிலோ பால் மாவின் விலை 600 ரூபாவினாலும் 400 கிராம் பொதியின் விலை 260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்களில் இருந்து 5.30 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 202 ரூபாவில் இருந்து 280 ரூபாவாக அதிகரித்தமையே விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நடந்த துயரச் சம்பவம் : பிள்ளைகளை அழைக்க பாடசாலை சென்ற தாய் பரிதாபமாக மரணம்!!

மீசாலை..

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீசாலை வடக்கை சேர்ந்த 52 வயதான சிறீதரன் செல்வராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

படுகாயம் அடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலையிலுள்ள பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான சென்று மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்று முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த முச்சக்கரவண்டி தொடர்பான தகவல் தெரித்தால் தமக்கு வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு பேருந்துகள் மோதி விபத்து : அறுவர் படுகாயம்!!

விபத்து..

நமுனுகுல – பசறை பிரதான வீதியின் பத்தாம் கட்டைப் பகுதியில் இரு பேருந்துகள் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. விபத்தில் பேருந்து சாரதி உட்பட அறுவர் காயங்களுடன் பசறை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளையிலிருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்தும்,

பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பாடசாலை சேவை பேருந்தும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம் : பொலிஸார் விசாரணை!!

கைதி தப்பியோட்டம்..

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவர் இன்று அதிகாலை நேரத்தில் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து சென்றுள்ளதுடன் தப்பிச் சென்ற இக் கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதியால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாவிட்டால் நாட்டை கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு செல்லுங்கள் : வவுனியாவில் மகிந்த ஜெயசிங்க!!

ஜனாதிபதி தற்போதைய பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாவிட்டால் இந்த நாட்டை கொடுத்து விட்டு உங்கள் வாழ்விடமான அமெரிக்காவுக்கு செல்லுங்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

வவுனியா, முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (17.03) இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் வடமாகாணத்தில் வந்து நிற்கின்றேன். இங்கும் ஆசிரியர்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. அது தொடர்பில் பல அதிபர், ஆசிரியர்கள் வந்து கலந்துரையாடினார்கள். அவர்களது பிரச்சனைகளுக்காக எமது தொழிற்சங்கம் குரல் கொடுக்கும்.

எரிபொருள் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரே பேசியிருந்தோம். அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவது தொடர்பில் பல சிரமங்கரைள எதிர்நோக்கியுள்ளனர். இன்று வரை அதற்கான தீர்வு எதுவும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் நகரப் பாடசாலைகளுக்கு மாணளவர்களின் வரவு குறைவாகவுள்ளது. இந்த வருடம் பாடசாலைகளின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ள போதும் பாடசாலைக்கு செல்வதற்கு பிள்ளைகளுக்கு வழியில்லாமால் உள்ளது.

நாட்டில் டொலரை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. வெளிநாட்டில் கடன் பெற்றுள்ளார்கள். பொருட்கள் பெற்றுள்ளார்கள். அதனால் எமது நாட்டில் டொலர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இந்த நாட்டில் தேவையான பல விடயங்களைச் செய்து வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்காது விட்டால் டொலர் பிரச்சனையை தீர்க்க முடியும்.

இந்த அரசாங்கத்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாட்டு பிரச்சனைகளை இந்த அரசாங்கத்தால் தீர்க்க முடியாது உள்ளது. அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியால் நாட்டை காப்பாற்ற முடியவில்லை. கொரோனாவால் தான் இந்த நாட்டில் பிரச்சனை என பொய் கூறுகிறார்கள்.

ஆசிய நாடுகளில் பங்களாதேஸ், இந்தியா போன்ற ஆசியா நாடுகள் எல்லாவற்றிலும் கொரோனா பிரச்சனை இருந்தது. அங்கு டொலரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் இயலாமையால் தான் இந்த நாட்டின் நிலைக்கு கொரானா என சாட்டுகின்றார்.

கொரானாவால் தான் இந்த நிலை என அவர் கூற முடியாது. நேற்று இரவு 11 நிமிடத்தில் அவர் கதைத்த விடயத்தில் இதை தான் சொல்லுகிறார். தற்போதைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண உங்களால் முடியாவிட்டால் இந்த நாட்டை கொடுத்து விட்டு உங்கள் வாழ்விடமான அமெரிக்காவுக்கு செல்லுங்கள. இந்த நாட்டை சிறப்பாக கொண்டு செல்ல ஆட்கள் உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

வித்தியாசமான சீர்வரிசை தட்டை தூக்கிவந்த நண்பர்கள் : நெகிழ்ந்துபோன மாப்பிள்ளை!!

விருதுநகர்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது எதிர்கோட்டை கிராமம். இங்கு வசித்துவரும் சுப்புராஜ் – முத்துலெட்சுமி தம்பதியின் மகனான நவநீதன் என்பவரின் திருமணத்தில் தான் இந்த வினோத சீர்வரிசை வைக்கப்பட்டிருக்கிறது.

தெர்மல் என்ஜீனியரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நவநீதன் என்பவருக்கும் இனாம் மீனாட்சிபுரத்தை சேர்த்த அனிதா என்பவருக்கும் நேற்று எதிர்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது, நவநீதனின் நண்பர்கள் கையில் சீர்வரிசை தட்டுகளுடன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். இதனை அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்க, சீர்வரிசையாக எடுத்துவரப்பட்ட புத்தகங்களை மணமகனுக்கு வழங்கி இருக்கின்றனர் நண்பர்கள்.

நவநீதன் – அனிதா திருமணத்தன்று மணமகனின் நண்பர்கள் சுமார் 25,000 மதிப்புள்ள 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களை பரிசாக வழங்கி இருக்கிறார்கள். இதற்காக சீர்வரிசை தட்டில் புத்தகங்களை ஏந்தியப்படி ஊர்வலமாக நவநீதனின் நண்பர்கள் வந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக, இந்திய மரபுப்படி மணமகள் வீட்டார் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மணமகனுக்கு சீர்வரிசையாக கொடுப்பார்கள். ஆனால், எதிர்கோட்டையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை சீர்வரிசையாக கொடுத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நம்முடைய மனதையும் எண்ணத்தையும் மாற்றியமைக்கக்கூடிய வல்லமை வாய்ந்த புத்தகங்களை பரிசுப் பொருளாக வழங்குவதன் மூலம் கற்ற, மேம்பட்ட சமுதாயத்தினை படைத்திட முடியும் என்கின்றனர் நவநீதன் – அனிதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.

திருமணத்திற்கு புத்தகங்களை பரிசாக அளிக்கும் வழக்கம் சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. இவை பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை என்பதே பலரது கருத்தாகவும் இருக்கிறது.

தாய், மகள்கள், கட்டி வைத்த நாயும் கோர மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கோவை..

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர்.

இவரது கணவர் ஜோதி லிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தியணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அனைத்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் மயங்கி இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கையில், ஹாலில் இருந்த யூபிஎஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அனைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர்.

ஆனால் அதற்குள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என இவ்வாறு கூறினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசிதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்துவருகின்றனர். இந்தவிபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திற்னல் ஏற்பட்டு பலியாகியுள்ளது. தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யூபிஎஸ் உட்பட அனைத்து ஈய-அமில பேட்டரிகளும் சார்ஜ் செய்யப்படும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை உருவாக்கும் என்கின்றனர் அறிவியல் அறிந்தவர்கள். பேட்டரிகள் மிக வேகமாக சார்ஜ் செய்யப்படும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களின் உற்பத்தி விகிதம் அதிகரித்துவிடும்.

அப்போது, ஹைட்ரஜன் வாயுக்களின் செறிவு 4 சதவீதம் வெடிக்கும் வரம்பிற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அருகில் ஏதாவது தீ பற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால் பேட்டரிகள் வெடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும் என்கின்றனர்.

பேட்டரிகள் வெடித்த பின்னர் அதில் இருந்து கசியும் ஹைட்ரஜன் கேஸ் மூச்சு திணறலை ஏற்படுத்தி மரண அபாயமும் உள்ளது. இதனால், பேட்டரிகளை அதி வேகமாகவோ ஹை ஓல்டேஜில் சார்ஜ் செய்வதையோ தவிர்க்கலாம் என்றும் தீ பற்றக்கூடிய இடத்திற்கு அருகாமையில் பேட்டரிகளை வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர்.

எனது மனைவி பெண்ணே அல்ல : நியாயம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடிய கணவர்!!

இந்தியா..

தனது மனைவி பெண்ணே அல்ல என அவரது கணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் சில நாட்கள் கழித்து மாதவிடாய் எனக் கூறி அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால், மனைவியை இவர் நெருக்கும்போது எல்லாம் அவர் தவிர்த்தே வந்துள்ளார். இதனால் அவர் மீது கணவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது, அவருக்கு இம்பர்ஃபோரேட் ஹைமென்’ எனப்படும் மருத்துவ பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது யோனிப் பகுதியில் ஆண்குறி போன்று ஒரு சிறிய கட்டி இருந்துள்ளது.

இதை அறுவை சிகிச்சை செய்து செயற்கை பிறப்புறுப்பை உருவாக்கினாலும், அவர் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை தாய் வீட்டிலேயே ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில்தான், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளாதாக கூறி அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது மனைவிக்கு, நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

இவர் ஏற்கனவே மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்க இலங்கையில் தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி!!

விசேட தொப்பி..

இலங்கையில் கோவிட் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தி வைரஸைக் கொல்லக்கூடிய விசேட தொப்பி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விசேட இரசாயனங்கள் பயன்படுத்தி இந்த தொப்பி தயாரிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இரசாயன எதிர்ப்புத் தொப்பியைப் பயன்படுத்தினால், தலை, கழுத்து மற்றும் நெற்றியில் தொற்று ஏற்படுவது தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் காற்றுப்பாதையில் நுழையும் அபாயத்தை இந்த தொப்பி குறைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியு்ளளார். கோவிட் மாத்திரமின்றி ஆபத்தை ஏற்படும் எந்த வகையான வைரஸாக இருந்தாலும் அதனை இந்த தொப்பி கட்டுப்படுத்திவிடும் என அவர் கூறியுள்ளார்.

இதனை அணிந்து அலுவலகத்திற்கு சென்று மேசை மீது வைத்து விட்டாலும் வைரஸ் நெருங்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இதனை சந்தைக்கு விநியோகிக்க மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே மேலும் தெரிவித்துள்ளார்.