வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் : 98.5 வீத சித்தி!!

புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில்..

புலமைப்பரிசில் பரிட்சை பெறுகள் நேற்று மாலை வெளியாகிய நிலையில் வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதோடு பாடசாலை 98.5 வீகித சித்தியை பெற்றுள்ளது.

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில் 2021ம் ஆண்டு புலமைப்பரிசையில் 50 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் ஒர் மாணவி 185 புள்ளிகளை பெற்றதுடன் 16 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 30 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.

மேலும் 3 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் ஒர் மாணவன் 61 புள்ளிகளையும் பெற்று பாடசாலை 98.5 வீத சித்தியினை பெற்றுள்ளது. இந்த பெறுபேற்றினை பெறுவதற்கு உதவிய வகுப்பாசிரியர்களான அமிர்திகா மற்றும் குவேனி அவர்களை பாடசாலை சமூகம் பாராட்டி நிற்கின்றது.

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்தவர்கள் வீரர்கள் மீது தாக்குதல் : இருவர் வைத்தியசாலையில்!!

பட்டானிச்சூர்..

வவுனியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி பட்டானிச்சூர் அஸ்ரப் விளையாட்டு மைதானத்திற்குள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினமும் (13.03.2022) மதியம் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தினுள் புகுந்த பட்டானிச்சூர் மற்றொரு கழகத்தினை சேர்ந்தவர்கள் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு இடையூறு விளைவித்திருந்ததுடன் இரு வீரர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ் தாக்குதலில் காயமடைந்த இரு வீரர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அசமந்த போக்காக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட வீரர்ரகள் தெரிவித்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் மாணவன்!!

தமிழ்ச்செல்வன் கஜலக்சன்..

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு வெளியாகிய 2021 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அந்நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் சூம் வகுப்பினூடாக எனது படிப்பினை மேற்கொண்டேன். எனது அம்மா ஆசிரியர், அப்பா வியாபாரம் செய்கிறார்.

எனது அம்மா மற்றும் அப்பா ஊக்கமளித்ததன் காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியைப் பெற முடிந்தது.

அத்தோடு எதிர்காலத்தில் நான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்’ என்று அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி : மாணவன் உயிருடன் இல்லை : யாழில் துயரம்!!

வ.அஜய்..

யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது.

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் உயிரிழந்தார். டெங்கு நோய் தொற்று காரணமாக குறித்த மாணவன் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானது. இதில் குறித்த 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். யாழ். மாவட்ட வெட்டப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்த தினத்தன்று அவர் பரீட்சையில் சித்தியடைவார் என அவரது ஆசிரியர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!!

போராட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தினரினால் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (14.03.2022) மதியம் 12.30 மணி தொடக்கம் 12.50 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியா மாவட்ட செயலக பிரிவில் பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டதாரிகளுக்கு உடன் பதவி உயர்வை வழங்கு , நீக்கப்பட்ட விசேட அலுவலக செயற்றிறன் முறையை திருப்பக் கொடு , பயணச் செலவு கொடுப்பனவு உட்பட அனைத்து கொடுப்பணவுகளையும் உயர்த்துங்கள்,

1999,2005,2008 பட்டதாரிகளுக்கு உடன் பதவி உயர்வுகளை வழங்கு , 2016 ஆம் ஆண்டு இழந்து போன முழு ஒய்வூதியக் காப்புரிமையை திரும்பக்கொடு போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவில் 47 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த பாடசாலை!!

தவசீலன் புவணாயினி..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் 2021 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையில் தவசீலன் புவணாயினி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாங்குளம் – பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையில் 1975 ஆண்டு மாணவி ஒருவர் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருந்தார். அதன் பின்னர் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் கடந்த 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும்,

சமூகத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி. த.புவணாயினிக்கு பாடசாலை சமூகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பர்தா போடனும்… அசைவம் சமைக்கனும்… விவாகரத்து கேட்ட இளம்பெண்ணுக்கு 23 இடங்களில் கத்திக்குத்து!!

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26).

இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ ஓட்டுநர் முகமது அசாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்து குடும்பத்தில் ஒரே மகளாக பிறந்த அபூர்வாவை காதலன் முகமது அசாஸுக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

திருமணத்தின் போதே அபூர்வாவின் பெயர் அர்ஃபா பானு எனவும் மாற்றப்பட்டுள்ளது இந்த நிலையில், திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, அபூர்வா மற்றும் அசாஸ் இடையே பிரச்சினை வெடிக்க தொடங்கியது.

பிராமண பெண்ணான அபூர்வாவை அசைவ உணவுகளை சமைக்கவும், பர்தா அணியவும், மற்ற இஸ்லாமிய முறைகளை பின்பற்றவும் கணவர் அசாஸ் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு அபூர்வா மறுத்துவிட்டார். மேலும், அசாஸுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் விஷயமும் அபூர்வாவுக்கு தெரிய வரவே பேரதிர்ச்சியில் அவர் உடைந்து போனார்.

அதே சமயம் அசாஸின் டார்ச்சரும் மோசமடைந்ததால், அபூர்வா அசாஸைப் பிரிந்து வாழ முடிவெடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இறுதியாக, அசாஸை விவாகரத்து செய்ய முடிவு செய்து தாய் வீட்டில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விரும்பாத முகமது அசாஸ் அபூர்வாவுடன் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று அபூர்வா தனது தாய் வீட்டருகே ஸ்கூட்டி ஓட்ட பழகி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அசாஸ் அபூர்வாவிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு இளம்பெண் மறுக்கவே தான் கொண்டு வந்த கத்தியால் அபூர்வாவின் தலை, தோள் பட்டை, மார்பு மற்றும் முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளார்.

மொத்தம் 23 இடங்களில் கத்தி குத்துப்பட்டு ஆபத்தான நிலையில் ஜிம்ஸ் மாவட்ட மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அசாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாந்தி வருவதாக பள்ளிக்கூட வகுப்பறையில் வெளியேறி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி!!

தமிழகத்தில்

தமிழகத்தில் பள்ளி கூடத்துக்கு உள்ளேயே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழில் செய்து வரும் சங்கர் – சந்தனமாரி தம்பதியின் இரண்டாவது மகளான அர்ச்சனா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்த மாணவி, பிற்பகலில் திடீரென வாந்தி வருவதாக கூறிவிட்டு, வகுப்பறையை விட்டு வெளியேறியிருக்கிறார். வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, இரண்டாவது தளத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கீழே மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த சாய்தளத்தின் கைப்பிடி கம்பியில் விழுந்த மாணவி, பலத்த காயமடைந்தார். ஆசிரியர்கள் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகளை இழந்த துயரம் தாங்காமல் அவரது தாய் கதறி துடித்த காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது. பள்ளியில் ஆசிரியர்கள் யாரேனும் திட்டினார்களா?, குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா என மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 வருட பழக்கத்திற்குப் பின்னர் கசந்த சாதி… இப்போ நான் எங்க போவேன்… பெண்ணின் கண்ணீர் போராட்டம்!!

திருப்பத்தூர்..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடும்பம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் வளர்மதி (35). இருவரும் 2007ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் டிடிஎட் படிக்கும்போது காதலித்துள்ளனர்.

அதே ஆண்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் திருப்பதிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் ஆசிரியர் பயிற்சியை கைவிட்டு திருப்பதி மருத்துவம் படிக்க சென்றுள்ளார். அச்சமயத்திலும் 2017 ஆம் ஆண்டு வரை சுமார் பத்து வருடங்களாக காதலை தொடர்ந்துள்ளனர்.

பின்பு வளர்மதியின் வற்புறுத்தலின் பெயரில் பெற்றோர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது வரை சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவம் முடித்து மருத்துவராகவும், கொடுமாம் பள்ளி பகுதி அதிமுக சார்பாக ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உயர்ந்த திருப்பதி, திடீரென வளர்மதியின் சாதி அடையாளத்தை முன்னிறுத்தி எப்படியாகிலும் வளர்மதியை கைவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னுடைய நண்பனை விட்டு பாலியல் சீண்டல் செய்வது மட்டும் அல்லாமல் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக திருப்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்த பின்பு அதையே காரணம் காட்டி திருப்பதி வளர்மதியுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி அவரை வீட்டை விட்டு துரத்தி உள்ளார்.

கடந்த ஆறு மாத காலமாக தன்னுடைய அம்மா வீட்டில் இருந்த வளர்மதி இன்று திருப்பத்தூர் அருகே மடப்பள்ளியில் உள்ள திருப்பதிக்கு சொந்தமான சந்திரலிங்கம் மருத்துவமனை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து உயிரிழந்த தந்தை, மகள் : கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!!

திருவண்ணாமலை..

திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சோந்தவர் சிவபாலன் (வயது 49). இவரது மனைவி ரம்பா (வயது 43). இந்த தம்பதிக்கு 11-ம் வகுப்பு படிக்கும் தேவிப்பிரியா என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் சரண்செல்வா என்ற மகனும் உள்ளனர்.

சிவபாலன் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு, மகள் தேவிப்பிரியா வீட்டில் வாயில் நுறைதள்ளியபடி சோபாவில் மயங்கி கிடந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ரம்பா உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தேவிபிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து தேவிப்பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். மகள் இறந்த வீடே அதிர்ச்சியில் இருந்த நிலையில், தந்தை சிவபாலன் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று மதியம் மணலூர்பேட்டை சாலை, கண்ணமடை அருகே உள்ள காப்புக்காட்டில் தந்தை சிவபாலன் இரண்டு கை மணிக்கட்டு மற்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி ரம்பா, காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் சிவபாலன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் மற்றும் தந்தை மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் கணவருக்காக உயிரைவிட்ட இளம்பெண் : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!

கோவை..

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்த முருகேசனின் மகள் மாலதி , காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும் பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர் பார்த்திபனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்ட நிலையில் பார்த்திபனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இதனால் மனவருத்தத்தில் இருந்த மாலதி காளியண்ணபுதூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மாலதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு யாரும் காரணம் இல்லை என்றும், இது எனக்கு நானே செய்த பரிகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை நான் எடுத்த அனைத்து முடிவுகளுமே சரியாக தான் இருந்தது. ஆனால் நான் என் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு கல்யாணம் தான். எனது கணவருக்கு தோ‌ஷம் இருப்பதாகவும், அதனால் அவரை திருமணம் செய்யாதே என பலரும் கூறினர். ஆனால் நான் அது எதையும் கண்டு கொள்ளாமல், போராடி காதலரை கரம் பிடித்தேன்.

ஆனால் அந்த தோ‌ஷத்தால் எனது கணவர் தினம், தினம் படும் கஷ்டங்களை என்னால் பார்க்க முடியவில்லை. எனது கணவர் உயிரைக் காப்பாத்துறதுக்காக என் உயிரை விடவும் தயாராக இருக்கேன். இது நானே நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். இதுக்கு யாரும் காரணம் இல்லை என மாலதி குறிப்பிட்டுள்ளார்.

வாழும் போது தான் யாருக்கும் உதவியா இருக்கவில்லை. சாகும்போதாவது யாருக்காச்சும் உதவியா இருக்க விரும்புறேன். அதனால என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமா கொடுத்து விடுங்கள்.

நான் எடுத்த இந்த முடிவுக்காக யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என மாலதி அந்த கடித்தத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவை பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயை இழந்த 6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவரும் மருத்துவரின் மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!

வேலூர்..

வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், பிரசவித்த சில மணி நேரத்திலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தாய்ப்பால் இல்லாமல் குழந்தை பரிதவித்து வந்தது. இதனிடையே தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் வேலூரில் உள்ள அரசு பன்முக கால்நடை மருத்துவமனைக்கு தங்கள் வீட்டில் உள்ள கால்நடைகளை மருத்துவ பரிசோதனைக்காக அந்த விவசாயி அழைத்து வந்துள்ளார்.

அப்போது தன் மனைவி இறந்துவிட்டதையும், குழந்தை தாய்ப்பால் கிடைக்கமால் வளர்வதையும் எண்ணி வேதனையடைந்து, மருத்துவர் ரவிசங்கரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து விவசாயி கூறியவற்றை மருத்துவர் ரவிசங்கர் தனது மனைவி சந்தியாவிடம் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்டதும் மணம் வருந்திய சந்தியா, அந்தக் குழந்தையை நேரில் பார்க்க தனது கணவருடன் சென்றுள்ளார், விவசாயி வீட்டிற்குச் சென்று குழந்தையை பார்த்தபோது, தாய்ப்பால் கிடைக்காததால் குழந்தையின் உடல் எடை மிகவும் குறைவாக இருந்துள்ளது.

இதனால் மேலும் கவலையுற்ற சந்தியா, அந்தக் குழந்தைக்கு தான் தாய்ப்பால் புகட்ட விரும்புவதாக தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார். அவரது கணவரும் அதனை வரவேற்று ஊக்குவித்துள்ளார்.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக வாரம் ஒருமுறை தங்கள் வீடு அமைந்திருக்கும் காட்பாடியிலிந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கீழ் அரசம்பட்டு கிராமத்திற்கு பயணம் செய்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வருகிறார்.

குழந்தைகளைப் பெற்ற பெண்கள் தாய்ப்பால் கொடுக்க முனவரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தியா தானாக முன்வந்து தாய்ப்பால் தானம் செய்திருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்கு பரிசு வழங்க இளைஞரொருவர் செய்த மோசமான செயல்!!

ஹொரணை பகுதியில்..

கொழும்பு – ஹொரணை பகுதியில் காதலிக்கு தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பகுதியில் உள்ள நகை கடையொன்றிற்கு 23 வயதுடைய இளைஞரொருவர் நேற்று தனது காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை கொள்வனவு செய்வதற்காக கடையொன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞரிடம் 20 ஜோடி தங்கக் காதணிகள் அடங்கிய நகைப்பெட்டியை கடையின் உரிமையாளர் காட்டிய போது திடீரென அதனை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். குறித்த இளைஞரை அவதானித்த மற்றுமொரு இளைஞர் குழு அவரை துரத்திச்சென்று பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் எடுத்துச்சென்ற நகைப் பெட்டியில் 500,000 ரூபா பெறுமதியான 20 ஜோடி காதணிகள் இருந்துள்ளதுடன்,அவற்றில் ​​இரண்டு ஜோடி காதணிகள் காணாமல்போயுள்ளதாகவும், சந்தேகநபர் ஓடும் போது காதணிகள் விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, ​​ராஜகிரியவில் உள்ள தனது காதலிக்கு பரிசாக காதணி ஒன்றை கொள்வனவு செய்ய கடைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இன்று மின்வெட்டு அமுலாகும் நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாட்டில் நாளைய தினமும் மின்துண்டிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிணற்றிலிருந்து காயங்களுடன் பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்பு!!

ஹட்டன்..

ஹட்டன் – பொகவந்தலாவ, செவ்வகத்தை பகுதியில் தோட்ட கிணறு ஒன்றிலிருந்து உயர்தர பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13.03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியினை பார்த்து விட்டு வீடு திரும்பிய நிலையில் நீண்ட நேரமாகியும் காணவில்லை என உறவினர்கள தேடிய போது மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது மாணவன் மீட்கப்பட்டு பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் உதட்டுபகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள டீசல் விலை!!

டீசல்..

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய் என்ற போதிலும் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நட்டத்தை மட்டுமே ஈடுசெய்யும். டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120 ரூபாவினால் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

40,000 மெட்ரிக் தொன் டீசலை இறக்குமதி செய்வதற்கு முன்னர் 32 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. எனினும் உலக எரிபொருள் விலையேற்றம் காரணமாக 51 மில்லியன் டொலர்களாக அது அதிகரித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்திருந்தால் இந்த மாதம் 26 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கும் என விஜேசிங்க தெரிவித்தார்.

-தமிழ்வின்-