இலங்கையில் 10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த காதலன் : இருட்டிலிருந்து காப்பாற்றிய இளைஞன்!!

கண்டி..

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட்களாக இருந்த மனநலம் பாதிக்கட்ட நபரின் வாழ்க்கையை மாற்றிய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பெண் ஒருவர் காதலித்து விட்டு ஏமாற்றிச் சென்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த குறித்த இளைஞன் தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

பேராதனை பல்கலைகழக மாணவனான குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். என்றாவது ஒரு நாள் தனது காதலி கிடைப்பார் என்ற நம்பிக்கையிலேயே நீண்ட காலமாக பல்கலைக்கழக வாசலில் காத்திருந்துள்ளார். இதனை அவதானித்த இலங்கையில் பிரபலமடைந்த யூடிப்பர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு கொடுக்க தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பில் இருந்து பேராதனை சென்ற இளைஞன், மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் உரையாடியுள்ளார். அவரை அழைத்து சென்று தலை முடியை வெட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தன்னால் முடிந்த உதவிகளை செய்த யூடியுப் பிரபலம் மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோரை தேடி அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கமைய, பெற்றோர் அவரை மீண்டும் தங்களுடன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று அவரை குணப்படுத்துவதற்கும் யூடியுப் பிரபலம் உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!

புலமைப்பரிசில் பரீட்சை..

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியானது.

இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி!!

மாபெரும் பேரணி..

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திக்கு எதிராகவும், சமஸ்டி தீர்வினை வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக இன்று (13.03) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த பேரணியானது, ஏ9 வீதியூடாக சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தினை அடைந்து பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் ‘ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ம் திருத்த சட்டத்தினை நீக்கி சமஸ்டி தீர்வினை நடைமுறைப்படுத்து, சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்,

இந்த மண் எங்களில் சொந்த மண், இராணுவமே வெளியேறு, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணி முடிவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை நீக்கக் கோரி கடந்த ஜனவரி 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கிட்டு பூங்கா பிரகடனத்தினை வலியுறுத்தி ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்ததுடன் தமிழர் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சி உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

வவுனியா வர்த்தக சங்கம்..

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை மீண்டும் இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டம் தற்போது சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக செயற்பட்டு வருவதுடன் வவுனியா வர்த்தக சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்று (13.03.2022) புதிய நிர்வாகம் தெரிவும் இடம்பெற்றிருந்தது.

இதன்படி சங்கத்தினுடைய புதிய நிர்வாகத்தின் தலைவராக சுஜன் சண்முகராஜா, செயலாளராக ஆறுமுகம் அம்பிகைபாலன், பொருளாளராக என்.செல்வரட்ணம் ஆகியோர் மீண்டும் இந் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த காலத்தில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள், சேவைகள் என்பவற்றினை நடைமுறைப்படுத்தியிருந்தமையுடன் கோவிட்-19 தொற்று காலப்பகுதியில் மாவட்டத்தின் பல மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்கியிருந்தனர்.

அதே நிர்வாகம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமையினையடுத்து வர்த்தகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திருமணமான 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

சென்னையில்..

தமிழ்நாட்டில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையில் தான் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த சந்தியா மற்றும் ராஜா ஆகியோருக்கு கடந்த 4 நாட்கள் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த திருமணத்தில் சந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சந்தியா திருமணமான 4வது நாளில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான நான்கு நாளில் புதுமணப்பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அவரின் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அதிக பணவீக்கம் கொண்ட நாடாக மாறியது இலங்கை!!

தற்போது நாட்டில் பணவீக்கம் 16.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஆசியாவிலேயே அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.

பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு என வரையறுக்கப்படுகிறது.

இது ஒரு நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதற்கான ஒரு குறிகாட்டியாகவும் உள்ளது. 2021 முதல் 2022 வரை இலங்கையில் பணவீக்கம் அதிகரித்திருந்தது.

அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது.

2021 ஜனவரியில் 3.0 சதவீதமாக இருந்த இலங்கையின் பணவீக்கம் 2021 டிசம்பரில் 12.1 சதவீதமாக இருந்தது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இலங்கையில் பணவீக்கம் 14.2 சதவீதமாக கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளது. இலங்கை உணவுத் துறையில் வருடாந்த பணவீக்கம் 2021 டிசம்பரில் 22.1 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான காலகட்டத்தில் உணவு அல்லாத வகையின் ஆண்டு பணவீக்கம் 7.5 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் படி, 2022 மார்ச் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்கம் 16.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆசிய நாடுகளில், இலங்கையின் பணவீக்கம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சிங்கப்பூர், சீனா மற்றும் பிற நாடுகளை விட அதிகமாக இருந்தது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம்!!

எரிவாயுவின் விலை..

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை குறைந்து 750 ரூபாயால் அதிகரிக்க நேரிடும் என எரிவாயு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமை, கப்பல் கட்டணம், காப்புறுதி கட்டணம், அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு என்ப காரணமாக உள்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க வேண்டும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

தற்போது ஒரு மெற்றி தொன் எரிவாயுவின் விலை தொள்ளாயிரம் டொலர்களாக அதிகரித்துள்ளது. கப்பல் கட்டணங்கள் 31 வீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமை காரணமாக சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரித்தாக வேண்டும் என எரிவாயு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதனடிப்படையில் தற்போது 2 ஆயிரத்து 750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 3 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்க நேரிடும் எனவும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிப்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அது சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் மற்றொரு கட்டணமும் அதிகரிக்கிறது : இலங்கையர்கள் மீது அடுத்த சுமை!!

முச்சக்கர வண்டி..

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நகர பகுதிகளில் முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 70 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து ஒரு கிலோ மீற்றருக்கு 55 ரூபாவும் அறவிடப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

அனைத்து விலைகளும் அதிகரித்துள்ளது. இதனால், பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நாங்கள் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

தூர பிரதேசங்களில் முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து 60 ரூபாவும் அறவிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கிலோ மீற்றருக்கு 5 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு பயணத்திற்கு பொது மக்களுக்கு 10 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கும். எரிபொருள் விலைகள் 50 முதல் 70 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் நாங்கள் மக்களுக்காக சிறிய தொகையையே அதிகரித்துள்ளோம் எனவும் ஜயருக் குறிப்பிட்டுள்ளார்.

என்றுமில்லாதவாறு எரிபொருள் விலையை அதிகரித்த பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!!

எரிபொருள் விலை..

சிபேட்கோ நிறுவனம் தமது எரிபொருள் விலையை நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 77 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 76 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 176 ரூபாவாகும். ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையிலேயே, சிபேட்கோ நிறுவனமும் நேற்று முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

நாட்டில் வார இறுதி நாட்களில் இடம்பெறவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாட்டில் நாளைய தினமும்(12), நாளை மறுதினமும்(13) சுழற்சிமுறையில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலய பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலய பகுதிகளில், காலை10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், நாளை மறுதினம்(13) P,Q,R,S,T,U,V,W ஆகிய வலய பகுதிகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலய பகுதிகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதுமண தம்பதிக்கு காத்திருந்த பெரும் ஆபத்து : கணவன் பலி, உயிருக்கு போராடும் மனைவி!!

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்பதி இலக்கான நிலையில், கணவன் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார்.

அம்பன்பொல வந்துருஸ்ஸ பிரதேசத்தில் விவசாய காணியை பாதுகாப்பதற்காக காவலுக்கு சென்ற தம்பதியை காட்டு யானை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளது.

திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில், இளம் தம்பதியினர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேனை சாகுபடியை விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக இரவில் காவலுக்கு செல்வதனை இந்த தம்பதி வழக்கமாக மேற்கொண்டு வந்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி காவலுக்கு சென்றிருந்த நிலையில், யானை ஒன்று துரத்திச் சென்று வெறுப்புணர்வைத் தணிக்கும் வகையில் தம்பதியினரைத் தாக்கியுள்ளது. அத்துடன் இளைஞனை தூக்கி காட்டு பகுதியில் வீசியுள்ளது.

பெண்ணின் முதுகு பகுதியில் காலினால் யானை மிதித்துள்ளதுடன், இரவு உணவிற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

யானையினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய கணவன் – மனைவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இயந்திரத்தின் உதவியுடனேயே சுவாசிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 22 வயதுடைய ஷெஹதன் தெனெத் குமாரசிங்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் 20 வயதுடைய மதுஷானி ரத்நாயக்க என்ற பெண் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் முதியவர் மரணம் : விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோட்டம்!!

விபத்து..

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் இன்று (11.03) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டர் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுதிட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த முதியவர் ஒருவரின் மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, குறித்த விபத்துக்குள்ளான முதியவர் மீது வீதியால் வந்த பிறிதொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதிச் சென்றமையால் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார்.

குறித்த விபத்ததுடன் சம்மந்தப்பட்ட வாகனம் குறித்த பகுதியில் இருந்து சென்றுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும்,

நெளுக்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தடவியல் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், எதிர் திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் சாரதியான பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது மரணித்த முதியவரின் பின்னால் இராணுவத்தினரது வாகனம் ஒன்று வந்ததாகவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டதாகவும்,

இராணுவத்தினரது வாகனம் நிறுத்தி விட்டு, பின்னர் உடனடியாக அங்கிருந்து குறித்த வாகனம் சென்று விட்டதாகவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பு செட்டித்தெருவில் தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி,

தங்கத்தின் விலை இன்று எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.141,000 ஆக காணப்படுகிறது.

22 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. தங்க விற்பனை வரலாற்றில் பதிவான அதிகபட்ச விலையென்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி : பாண் மற்றும் உணவுப் பொதியின் விலை பாரியளவு அதிகரிப்பு!!

பாண் மற்றும் உணவுப் பொதி..

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி உணவுப் பொதியொன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 450g பாண் ஒன்றின் விலை 20 தொடக்கம் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதுடன், பணிஸ் ஒன்றின் விலையானது பத்து ரூபாவல் அதிகரிக்கப்படுகிறது.

மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பேக்கரிகளின் உரிமையாளர்கள் கடும் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு!!

கோதுமை மா..

அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்திருந்தது.

திடீரென இவ்வாறு எரிபொருள் விலையானது அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் அதிலிருந்து மீள்வதற்குள் தற்போது திடீரென கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது இலங்கையில் மக்களுக்கு மற்றுமொரு அடியாகவே இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றன.

மேலும், இலங்கையில் டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு நிலையை அடுத்து பொருட்களின் விலை குறைப்பு பதிவாகாத நிலை காணப்படும் அதேவேளை தொடர்ச்சியாக பொருட்களின் விலைகள் அதிகரித்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொலிசாரால் இளைஞன் ஒருவர் கைது!!

இளைஞன் கைது..

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று (10.03) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள நகை விற்பனையகம் ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி சங்கிலி ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.