இனி ஆடைகளும் கொள்வனவு செய்ய முடியாது : இலங்கை மக்களை திண்டாட வைக்கும் விலை!!

விலை உயர்வு..

இலங்கையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றது.

அந்த வகையில், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31% வரை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களுக்கான 40 அடி கொள்கலனுக்கு கப்பல் நிறுவனங்கள் இதுவரை 200,000 ரூபாவை அறவிடுகின்றன. ஆனால் தற்போது அது ஒரு மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு பொருளாக இறக்குமதி செய்யும் போது சதுர அடிக்கு அறவிடப்படும் தொகை 6,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக உள்ளூர் ஆடைத் தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு : தொடரும் எரிவாயு பிரச்னை பிரச்னை!!

எரிவாயு..

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக செயல்முறை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. உற்பத்தியை தொடங்குவதற்கு எரிவாயு சரக்குகளை பெறாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில், வீடுகளில் சமையலுக்காக எரிவாயுவினை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் எரிவாயு விநியோக மையங்களுக்கு வெளியே வரிசையில் காத்திருப்பதை பரவலாக காண முடிகிறது.

இந் நிலையில் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையினை தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இதுவரை சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதுடன், அரசாங்கத்திற்கு எதிராக தமது அதிருப்தியினையும் வெளியிட்டு வருகின்றனர். இந் நிலையில் லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களின் இவ் அறிவிப்பினால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

தயது செய்து இதனை செய்யாதீர்கள் : இலங்கை மக்களிடம் அரசு வலியுறுத்தல்!!

மின்சார நெருக்கடி..

நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை நிலையான வளசக்தி அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மின்சார பயன்பாடு அதிகமாக உள்ள மாலை 6.30 – 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்சார உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சலவை இயந்திரங்கள், நீர் மோட்டர் போன்ற அத்தியாவசியமற்ற இயந்திரங்களை இந்த காலப்பகுதியில் பயன்படுத்த வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம்.

மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் உபகரணங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய குடும்பத்திற்கு ஒரு கதவு கொண்ட குளிர்சாதணை பொட்டி ஒன்று போதுமானதாகும். இதனால் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் பொருட்களை முடிந்த அளவு கொள்வனவு செய்யுமாறு பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியா ஓமந்தை இராணுவச் சாவடியில் 8 கிலோ 75 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது!!

கஞ்சா..

வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலாே 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று (16.03.2022) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமந்தை இராணுவ சாவடியில் சந்தேகத்திடமான முறையில் பயணித்த அட்டோ ரக வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில் வாகனத்தின் பிற்பகுதியில் கேரள கஞ்சாவினை கைப்பற்றினர்.

அதன் பின்னர் தொடர்ச்சியான சோதனையின் போது வாகனத்தின் ஆசனங்களின் கீழ்பகுதி போன்றவற்றிலிருந்து நான்கு கேரள கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டன.

இதனையடுத்து வாகனத்தில் பயணித்த மாகாநுவர , மேல்சிறிபுர , கசலக பகுதியினை சேர்ந்த பெண் உட்பட மூவரை இராணுவத்தினர் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் , கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா , சந்தேக நபர்கள் ஆகியோரை ஓமந்தை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளமையுடன்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்!!

பணம்..

இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியிடம் நேற்றுமுன்தினம் திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை ஆயிரத்து 543.97 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தொகை கடந்த 11ஆம் திகதி ஆயிரத்து 521.69 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை நேற்றுமுன்தினம் 22.27 பில்லியன் ரூபாவால் அதாவது 2,227 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி 22.27 பில்லியன் ரூபா அல்லது 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது. மத்திய வங்கி புதிய நாணயத்தை வெளியிடுவதற்கு “பணம் அச்சிடுதல்” என்ற பொதுவான சொல்லையும் பயன்படுத்துகிறது. அவ்வாறாயின் நேற்றுமுன்தினம் மாத்திரம் 2 ஆயிரத்து 227 கோடி ரூபாவை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒன்றரை வயது குழந்தை : கவலையில் பெற்றோர்!!

ஐரின்..

அனுராதபுரம் – அழகப்பெருமாகம பகுதியில் ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆ ண்டு மே 8 ஆம் திகதி பிறந்த ஐரின் என்ற குழந்தை 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஆசிய சாதனை புத்தகத் திலும் இந்த குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழந்தை பூக்கள், விலங்குகள், வாகனங்களை வடிவமைப்பது போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களை குறுகிய நேரத்துக்குள் அடையாளம் காண்பதுடன், 25க்கும் மேற்பட்ட இலங்கைத் தலைவர்களை அடையாளம் கண்டும் உலக சாதனை படைத்துள்ளது.

குழந்தைக்கு ஒரு வயதாகும் போது பெற்றோர் விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களை குழந்தைக்கு காண்பித்து அவற்றை அடையாளம் காணும் வகையில் பயிற்சிகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை எனது குழந்தையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்ட வரவில்லையெனவும், அங்கீகாரமும் வழங்கவில்லை எனவும் குழந்தையின் பெற்றோர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

அவசர அறிவுறுத்தல்..

இலங்கையில் டீசல் பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது அதன்படி தொடர்ந்து தேவையில்லாமல் டீசலை சேமிக்கும் பட்சத்தில் டீசல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களின் இந்த செயற்பாடு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வழிவகுக்கும். தேவையில்லாமல் டீசலை பதுக்கி வைப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.

எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் உள்ள போதிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை காரணமாக டீசல் இறக்குமதியில் பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய வாயிலுக்கு முன்பாகவிருந்த மரத்தில் தீப்பரவல்!!

மரத்தில் தீ..

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் வாயிலுக்கு முன்பாகவிருந்த மரத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தீப்பரவல் இடம்பெற்றதுடன் பல மணிநேர போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

பாடசாலை வாயிலுக்கு முன்பாகவிருந்த மரத்தில் இரவு 9 மணியளவில் தீடிரேன தீப்பற்றியேறிந்துள்ளது.

இதனை அவதானித்த ஆசிரியர்கள் மற்றும் அயலவர்கள் உடனடியாக இராணுவம், பொலிஸார், தீயணைப்பு பிரிவினர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர்

எனினும் வவுனியா நகரிலிருந்து தீயணைப்பு வாகனம் வருகை தருவதற்கு முன்னரே அங்கிருந்தவர்களின் முயற்சியினால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .

மரத்தில் தீப்பரவல் தொடர்ந்து நீடித்திருந்தால் மரம் முறிந்து பாடசாலையின் ஆய்வு கூட கட்டிடத்தின் மீது வீழ்ந்து பாரிய சேதங்களை உருவாகியிருக்கும்

எனினும் மரத்தின் மீதான தீப்பரவலுக்கான காரணம் கண்டறிப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாளைய தினம் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : அமுலாகும் நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் சுழற்சி முறையில் மின் வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 3 மணி நேரமும் மாலை 5.30 முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி தரம் -5 புலமைப் பரிசில் பெறுபேறுகளில் முன்னிலை!

அண்மையில் வெளியாகிய  தரம் ஐந்து(2021) புலமைப்பரிசில் பரீட்சை  முடிவுகளின்  அடிப்படையில்  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலயம் மாவட்ட மட்டத்தில் முன்னிலையில் உள்ளது.மேற்படி பாடசாலையின்   மாணவன் செல்வன் அ.அபிரான் 192 புள்ளிகளைப் பெற்று  வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேற்படி பரீட்சைக்கு 178 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 98 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் மூன்று  மாணவர்கள் மட்டுமே 70க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.

பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றியோரில் 98.3% ஆனோர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களுக்கும் அவர்களை   வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும்  பாடசாலை நிர்வாகம் தனது  வாழ்த்துக்களையும்  பாராட்டுகளையும்  தெரிவித்து கொள்வதுடன்  வவுனியா நெற் இணையமும்   இவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொள்கின்றது.

வவுனியாவில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு : பெண் மீதும் தாக்குதல்!!

வீடு புகுந்து திருட்டு..

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் நின்ற பெண் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் வேலைக்காக வெளியில் சென்றிருந்ததுடன், ஒரு பிள்ளை பாடசாலைக்கும், மற்றைய பிள்ளை உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண் பிள்ளை பகல் 11 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து அறை ஒன்றுக்குள் சென்று சிறிது நேரத்தில் வீடு புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த அலுமாரி, சாமி அறை மற்றும் ஏனைய பகுதிகளில் சோதனை செய்ததுடன்,

குறித்த பெண் பிள்ளை அறையில் இருந்து வெளியில் வந்த போது அந்த பெண் மீது கதவுச் சட்டத்தினால் தாக்கிவிட்டு அப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றையும் அறுத்துச் சென்றுள்ளனர். இதன்போது 2 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண் பிள்ளை அயலவர்களை அழைத்ததுடன், தமது பெற்றோருக்கும் தெரியப்படுததியிருந்தார். இது தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா உக்குளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் 192 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற அரவிந்தன் அபிரான்!!

அரவிந்தன் அபிரான்..

2021 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. பெறுபேறுகளின் அடிப்படையில்,

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவன் அரவிந்தன் அபிரான் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இவர் வைத்தியர் அரவிந்தன் மற்றும் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆசிரியை ஜனந்தினி ஆகியோரின் புதல்வனாவார். மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற அபிரானுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புதுக்குடியிருப்பில் பாரதிமைந்தனின் சயனம் மறந்த பொழுதுகள் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!!

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா..

பாரதி மைந்ததனின் சயனம் மறந்த பொழுதுகள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டு விழா புதுக்குடிருப்பு பாரதிதாசன் சனசமூக நிலையத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

மலர்ச்செண்டுகள் கொடுக்கப்பட்டு பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டதுடன் இறைவாழ்த்து, மங்களவிளக்கேற்றல், வரவேற்புரை, சிறுமிகள் நடனம், விருந்தினர் உரை, வாழ்த்துரை என்பவற்றுடன் நூல் வெளியிடு இடம்பெற்றது. நூலின் ஆய்வுரையினை லதா கந்தையா வழங்கியிருந்தார்.

பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் தலைவர் க.றாகுலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த் மற்றும் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்,

கிராம அலுவலகர் தி.உமாஜிதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூ.கல்யாணி, திரைப்பட இயக்குனர் சுதர்சன் ரெட்ணம், பூநகரி அபிவிருத்தி உத்தியோகத்தர் நிவேதா நிவேதிகா மற்றும் கௌரவ அதிதியாக வவுனியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன்,

ஆசிரியர் சிவகரன் , அழகுக்கலை கலைஞர் ஜெயவாணி, கவிஞர் ராதை குபேரன், கவிஞர் அபிவர்ணா மற்றும் விருந்தினர்களாக அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாரதி மைந்தன் இன் சயனம் மறந்த பொழுதுகள் கவிதை நூல் வெளியீட்டில் கிழமையில் ஒருநாள் தண்ணீர் ஊற்றி வளர்க்க கூடிய கக்கிரஸ் அழகுத் தாவரம் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

வவுனியா பாவற்குளம் படிவம்-3 கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் வரலாற்று சாதனை!!

புலமைப்பரிசில் பரிட்சை பெறுகள்..

புலமைப்பரிசில் பரிட்சை பெறுகள் நேற்று மாலை வெளியாகிய நிலையில் வவுனியா செட்டிக்குளம் கோட்ட வலயத்தில் இம்முறையும் பாவற்குளம் படிவம்-3 கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2021ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன் 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். செட்டிகுள கோட்டத்தில் கூடிய தொகை வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஜ.சன்சிகன் 166 புள்ளிகளையும் , வ.சபிதா 165 புள்ளிகளையும், ம.ரெஜினோல்ட் 163 புள்ளிகளையும் , ஈ.கொன்ஸ்ரன் 162 புள்ளிகளையும், ர.தரணிகா 161 புள்ளிகளையும், கி.பவிசனா 155 புள்ளிகளையும் , ஜோ.ஜொய்சியா 151 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த வருடமும் வெட்டு புள்ளிகளுக்கு மேல் 05 மாணவர்கள் பெற்று செட்டிகுள கோட்டத்தில் கூடிய தொகை வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலையாக திகழ்ந்திருந்தது.

இலங்கையில் 2017ம் ஆண்டில் 51600 ரூபா : இன்று வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 கரட் தங்கம் 51,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22 கரட் தங்கம் 48,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த ஆண்டு ஜுலை மாதம் இலங்கை சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்திருந்தது. இலங்கையில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைய ஆரம்பித்ததை தொடர்ந்தே தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாடும் கடும் பொருளாதார நெருக்கடியை அடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் அதிகரித்தது அமெரிக்க டொலரின் பெறுமதி!!

டொலரின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் வங்கிகளின் இன்றைய தினம் 265 ரூபாவுக்கு அமெரிக்க டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் 260 ரூபா என்ற நிலையில் இருந்து ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கமைய இன்றையதினம்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 265 ரூபாவும், கொள்வனவு விலை 255 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 347 ரூபாவும் கொள்வனவு விலை 332 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 291 ரூபாவும் கொள்வனவு விலை 277.5 ரூபாவாகும். சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 285.5 ரூபாவும் கொள்வனவு விலை 271 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 209 ரூபாவும் கொள்வனவு விலை 198.6 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன் சர்வதேச நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பமும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.