நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் நேரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாளைய தினம் (10.03.2022) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் தடையை நடைமுறைப்படுத்த உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

என் குடும்பத்தை காப்பாத்துங்க : உயிருக்கு போராடிய நிலையிலும் கதறிய நபர்!!

கேரளா..

கேரளாவில் தீ விபத்தில் சிக்கிய நபர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றுமாறு மீட்புப்படையினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து வந்துள்ளனர். எனினும் 8 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிகில் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விபத்து குறித்து மீட்புப்படையினர் கூறுகையில், நாங்கள் வந்த போது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

எங்களை பார்த்ததும் குடும்பத்தினரை உடனடியாக காப்பாற்றுமாறு நிகில் கூறினார், அப்படியே மயங்கிவிட்டார். கீழ் தளத்தில் பிரபாதன்- ஷெர்லி இருந்தனர், முதல் தளத்தில் அபிராமியும், குழந்தையும் இறந்து கிடந்தனர்.

வீடு முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டிருந்ததால், புகை வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி அனைவரும் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், அவர்களது வீட்டுக்கு வெளியே வாகனம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்ததும் நிகிலை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் முதல்முறை அழைப்பு எடுத்ததும் விவரத்தை கூறியதாக தெரிவித்துள்ளார், மற்றொரு முறை முயற்சித்து பார்த்தும் போனை எடுக்கவில்லையாம். நிகில் கீழே இறங்கி வந்த போது பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மீட்புப்படையினர் விரைந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களது குடும்பத்தில் சமீபத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 பொருட்களுக்கு இறக்குமதி தடை!!

இறக்குமதி தடை..

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பட்டர் ஜோக்கட், அன்னாசி, மங்குஸ்தான் மற்றும் பழங்கள், ஒரஞ், அவகாடோ, மீன் பாஸ்தா, நூடுல்ஸ், இறைச்சிகள், முட்டை, அப்பிள், திராட்சை,

பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

முதலாவது நடைமுறைக்கமைய, சில தெரிவு செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு வரி அறவிடப்படும். இரண்டாவது நடைமுறைக்கமைய, தெரிவு செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களை இறக்கமதி செய்ய அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நடைமுறைக்கமைய சில தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கவும் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் இறக்குமதி கட்டுப்பாடு : பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள்.
வாசனைத் திரவங்கள், சவரத்திற்கு முன்னரும் பின்னரும் பயன்படுத்தும் பொருட்கள், சோப்கள், மெழுகுவர்த்திகள், டயர்கள், அழிப்பான்கள், பயண பெட்டிகள், தோல் பொருட்கள், கார்பட்டுகள், ஆடைகளுக்கான டைகள் மற்றும் ‘போ’க்கள்.
திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள், விளையாட்டு காலணிகள், தொப்பி வகைகள், தலை பட்டிகள், குடைகள், கூந்தல், போலி சிகைகள், செரமிக் பாத்திரங்கள், கண்ணாடி பாத்திரங்கள், குக்கர்கள், அடுப்புகள், மேசைகள், சிங் மற்றும் கைகழுவும் பேசின்கள், கரண்டிகள், மணிகள், மின் விசிறிகள், வாயுச் சீராக்கிகள்.
குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், வக்கும் க்ளீனர்கள், கிறைண்டர்கள், சவர சாதனங்கள், மின்சார மேசை விளக்குகள், நீர் சேமிப்பு சூடாக்கிகள், நிலையான தொலைபேசிகள், வானொலி ஒலிபரப்பு சாதனங்கள், கணனி திரைகள், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி வகைகள்.
கைக்கடிகாரங்கள்,
சுவர் கடிகாரங்கள், இசைக் கருவிகள், வாகன இருக்கைகள், மின் விளக்கு தொகுதிகள், (முச்சக்கர வண்டி உள்ளிட்ட சக்கரங்கள் கொண்ட) விளையாட்டு வாகனங்கள, பொம்மைகள், வீடியோ கேம்கள், சீப்புகள் மற்றும் கூந்தலுக்கான கிளிப்புகள் உள்ளிட்டவை போன்ற பொருட்கள் இதில் அடங்குகின்றன.
இன்று நள்ளிரவு (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 270 முதல் 370 வரை இலக்கமிடப்பட்டுள்ள குறித்த பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் உரிய அனுமதியின்றி எந்தவொரு நபரினாலும் ஏதேனுமொரு நாட்டிலிருந்து இலங்கைக்குள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் கையாள்வதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு இறக்குமதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் பரிந்துரைகளின்படி மூன்று கட்டங்களின் கீழ் இவ்வாறு இறக்குமதி கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதல் கட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில், சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயமாகும்.
மூன்றாவது கட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி மற்றும் அனுமதிப்பத்திர முறை விதிக்கப்படும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2017 நவம்பர் 09ஆம் திகதி 2044/40 அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுடன் இணைந்தவாறு மேலும் 100 பொருட்களை (இலக்கம் 270 -370) இறக்குமதி செய்வது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் வெளியான தகவல்!!

சாரதி அனுமதிப்பத்திரம்..

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது. அனுமதி பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 03 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு ரஷ்ய – உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும். இதன்படி,

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இலங்கையிலும் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 135,000 ஆகும். மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.125,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் தமிழர்களான தாய் மற்றும் மகனுக்கு நேர்ந்த துயரம்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தாயும் அவரது மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 67 வயதான ஹேமலதா சச்சிதானந்தம் மற்றும் அவரது 34 வயது மகன் பிரமுத் ஆகியோரே காணாமற்போயுள்ளதாக கூறப்படுகின்றது. கால்வாயொன்றில் காரொன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டு அதனுள்ளிருந்த தனிப்பட்ட உடைமைகளை கண்டுபிடித்தபோதிலும், காணாமல்போனதாக கூறப்படும் இருவரையும் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் கால்வாயில் இன்று இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவை காணாமல்போன தாய் மற்றும் மகனுடையதாக இருக்கும் என நம்பப்படுகிறபோதும் பொலிஸார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இலங்கை பின்னணிகொண்ட ஹேமலதா சச்சிதானந்தம் வானொலி அறிவிப்பாளராக தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் எனவும், மகன் பிரமுத் விசேட தேவையுடையவர் எனவும் மற்றவர்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள முடியாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறுமி : சந்தேகநபர் சிக்கினார்!!

பதுளை..

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

காதலை நிராகரித்தமையே, இந்த கொலைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை அடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர் கண்ணெதிரே மெல்ல மெல்ல போன மகளின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பத்தூர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அரசு பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஜனனி (16) திருப்பத்தூர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் தனது உறவினரின் ஈமக்காரிய நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த ஜனனி முதலைப்பண்ணை எதிரே உள் காவிரி ஆற்றில் குளித்த போது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டார்.

ஜனனி ஆற்றில் மூழ்கியதை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் காவல்துறையினருக்கும் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஒகேனக்கல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய ஜனனியை தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்பு ஜனனியின் உடலை கைப்பற்றி ஒகேனக்கல் காவல்துறையினர் ஜனனியின் உடலை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 35 நாட்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால், நீரில் மூழ்கி உயிர் இறப்பதை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ரீல்ஸ் சாட்சியாக திருமணம்… இளம்பெண் ஒருவருக்கு இளைஞன் தாலி கட்டும் வீடியோ வைரல்!!

ரீல்ஸ் கல்யாணம்..

தற்போது வைரலாகி வரும் கல்யாண கப்பில் வீடியோவை பார்க்கும்போது ‘என் வாழ்க்க நாடகமா?’ என நடிகர் நெப்போலியன் புரண்டு படுத்துகிட்டே படுவாரே அப்படித்தான் இருக்கிறது பலருக்கும்.

பொதுவாக காதலிக்கும்போது ரீல்ஸ் வீடியோக்களை தெறிக்க விடும் ஜோடிகள் அதன் பின்னர் யூடியூப் பக்கமும் சென்று ஏதாவது ஒரு காதல் பக்கத்தை ஆரம்பித்துவிடுவதே தற்கால பண்பாடாக இருக்கிறது.

அந்த வகையில் அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், இன்ஸ்டாகிராம் ரீலிஸ்-ல் இளம்பெண் ஒருவருக்கு ஒரு இளைஞன் தாலி கட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கியூட் கப்பில்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்திவரும் இந்த ஜோடி அவ்வப்போது வீடியோக்களை போட்டுவருவதுண்டு. இந்நிலையில், ரீலிஸ்-லேயே இவர்கள் கல்யாணம் செய்துகொள்ளும் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்கள் இந்த இணைபிரியா ஜோடி. இது நடந்தது கோவிலிலா? வீட்டிலா? எனத் தெரியவில்லை.

அதேபோல உறவினர் இருப்பதையும் வீடியோவில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அந்த இளைஞர், பெண்ணின் கழுத்தில் எதையோ கட்டுகிறார். அது மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை இதுவரையில் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் கண்ணா என்பவரான இந்த இளைஞர் அந்தப் பெண்ணுடன் இணைந்து ரிங் லைட் சகிதமாக வீடியோ போட்டு வந்தார். இதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில், திடீரென இன்ஸ்டாகிராம் ரீலிஸ்-லேயே இருவரும் திருமணம் செய்துகொள்ளும் வகையில் வீடியோ வெளியிட்டு இருப்பது இன்ஸ்ட்டா ஏரியா மக்களை ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறது.

கியூட் கப்பில்ஸ் 143 என்னும் பெயரில் இன்ஸ்ட்டாவில் வலம்வரும் இந்த ஜோடிக்கு உண்மையாகவே திருமணம் நடைபெற்றதா? அல்லது இதுவும் மற்றவற்றை போல சாதாரண வீடியோவா என்பதை அந்த ஜோடியே தான் விளக்க வேண்டும். ஆனால், மூன்று முடிச்சை மாங்கு மாங்கென்று ஸ்ரீகாந்த் கட்டும்போது இளம்பெண் கையில் காப்பு அணிந்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்த சம்பவத்தினை பொறுமையாக ஒரு நபர் வீடியோவும் எடுத்திருக்கிறார். நேற்று வரைக்கும் காதல் டிக்டாக்குகளை அள்ளி வீசிக்கொண்டு இருந்த இந்த ஜோடி, திருமணம் செய்தது போல வீடியோ வெளியிட்டு இருப்பதுதான் தற்போதைய இன்ஸ்ட்டா ஹாட் டாபிக்.

முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகனம் மோதி விபத்து!!

விபத்து..

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு உணவு ஏற்றி வந்த முச்சக்கர வண்டி ஒன்று கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (08.03) மதியம் பாலமுனை பிரதான வீதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்னால் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது, முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இச் விபத்துச் சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொய்யாப் பழம் பறிக்க முயன்ற பாடசாலை மாணவி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!!

மாங்குளம்..

முல்லைத்தீவு – மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும்,

புதிய கொலணி மாங்குளத்தினை சேர்ந்த 14 வயதுடைய தயாபரன் தர்மினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யா மரத்தில் பழம் பறிக்க மரம் ஏறிய நிலையில்,

மரத்திலிருந்து தவறி கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.சுதர்சன் சென்று பார்வையிட்டுள்ளதுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.

இதன்போது உயிரிழந்த சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவற்கு அமைய பெற்றோரிடம் வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியின் உயிரிழப்பிற்கு பாடசாலை சமூகமும், தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

யாழில் பெற்றோரின் சித்திரவதையினால் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த பாடசாலை மாணவி!!

அச்சுவேலி பகுதியில்..

யாழ். அச்சுவேலி பகுதியில் தாய், தந்தை தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனவும் தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினம் தோறும் சண்டை பிடிப்பதாகவும், இதனால் தன்னுடன் ஒவ்வொரு நாளும் வாக்குவாதத்திலும், சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சிறுமி, இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுக்க முடியாது இன்றையதினம் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும், இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் முறைப்பாட்டின் போது தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 17 வயது யுவதி கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி : சிறிய தந்தை கைது!!

17 வயது யுவதி..

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரின் பெண்ணின் சிறிய தந்தையார் பூவரசன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (08.03) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் குடும்பம் ஒன்றின் கணவன் விட்டு சென்ற நிலையில், பெண் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தார்.

குறித்த பெண் வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுள்ள நிலையில் இரு பிள்ளைகளும் சிறிய தந்தையாருடன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் 17 வயது பெண் உடல் நிலை சுகவீனமுற்ற நிலையில் பூவசரன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த பெண் கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதனைகயடுத்து பூவரசன்குளம் பொலிசார் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தாயின் இரண்டாவது கணவனரான சிறிய தந்தை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா பெண் ஊடகவியலாளர் வனிதாபிமான போட்டியில் அகில இலங்கை ரீதியில் தெரிவு!!

சிவகுமார் திவியா..

சமூக சேவையினை முன்னிலைப்படுத்தி அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 9 பெண்களில் வடமாகாணத்திலிருந்து வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி சிவகுமார் திவியா தெரிவாகிய நிலையில் மகளிர் தினமான இன்று (08.03) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையின் வனிதாபிமான 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில் 10 துறைகளில் 9 மாகாணங்களிலும் பெண்களிடேயே போட்டி இடம்பெற்றது.

இதில் சமூக சேவையில் வட மாகாணத்தில் முதலிடம் பெற்ற ஊடகவியலாளர் திருமதி சிவகுமார் திவியா அவர்கள் ஏனைய மாகாணங்களில் முதலிடம் பெற்றவர்களுடன் இணைத்து கௌரவிக்கப்பட்டார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு வருடா வருடம் குறித்த வனிதாபிமான போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் மின்வெட்டு : நாளைய தினமும் மின்வெட்டுக்கு அனுமதி!!

மின்வெட்டு..

நாளைய தினம் நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர். அனைவரும் வெவ்வேறு அறைகளில் உறங்கிய நிலையில், நிகில் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் 8 மாத குழந்தை உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர், முதற்கட்ட விசாரணையில் புகையை அனைவரும் சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் 2 மாடி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டிருந்தால், புகை வெளியேற வாய்ப்பில்லாமல் விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சி.சி.டி.வி-யை ஆய்வு செய்தபோது இரவு 1.15 மணி அளவில் தீ பிடித்ததாக தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.