விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

கேரளா..

காட்டாக்கடை பகுதியை அடுத்த வீரனகாவு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி தேவி (வயது 25). இவர் ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்து போன நிலையில், இது தொடர்பாக பிரவீன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, இளம்பெண்ணை கொலை செய்ததற்கான காரணம் குறித்து, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் பகுதியை அடுத்த பரவூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்.

இவர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில், காயத்ரியும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் முதலில் நட்பாக பழகி வந்துள்ள நிலையில், நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

ஆனால், பிரவீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளது. தொடர்ந்து, கணவரின் நடத்தை பற்றி, அவரின் மனைவிக்கும் தெரிய வந்துள்ளது.

உடனடியாக, கணவர் வேலை செய்யும் நகைக்கடைக்கு புகார் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது. காயத்ரியின் வீட்டிலும் இது பற்றி தகவலை தெரிவித்துள்ளார் பிரவீனின் மனைவி. இதனால், அந்த கடையில் இருந்து காயத்ரியை விலக்கியதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு, காயத்ரி வேறு வேலை தேடி வந்துள்ளார். அதே போல, பிரவீனும் தமிழ்நாட்டில் உள்ள ஷோரூம் ஒன்றிற்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார் பிரவீன்.

இதன் பின்னர், சுமார் 12 மணியளவில் காயத்ரியும் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில மணி நேரத்தில், அங்கிருந்து பிரவீன் கிளம்பி வெளியே சென்றுள்ளார். பிறகு, இரவு சுமார் 12 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு போன் செய்த பிரவீன், அறையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், பிரவீன் தங்கியிருந்த அறையை சென்று பார்த்த போது, வெளியே பூட்டி இருந்ததாகவும், இதனால் சந்தேகத்தின் பெயரில் போலீசாரை விடுதிக்கு அழைக்கவும் செய்துள்ளனர். அப்போது, போலீசார் அங்கு வந்து கதவைத் திறந்து பார்த்த போது, இளம்பெண் காயத்ரி இறந்து கிடந்துள்ளார்.

அவரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேண்டி, அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, காயத்ரியுடன் தங்கியருந்த பிரவீனை பிடிக்க காவல்துறையின் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், பரவூர் காவல் நிலையத்தில் பிரவீன் சரண் அடைந்தார்.

விடுதியில் வைத்து, காயத்ரியுடன் பேசிக் கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கோபம் தலைக்கேறி காயத்ரியை தீர்த்துக் கட்டியதாகவும் பிரவீன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரவீன் மற்றும் காயத்ரி ஆகியோர், தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டதாகவும், சில புகைப்படங்கள் வெளியாகி, இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும், போலீசார் பிரவீனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

27 வயதான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பரிதவிக்கும் குழந்தை!!

ரேவதி..

தமிழகத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31) ராணுவ வீரர்.

இவரும் குடியாத்தத்தை அடுத்த வெங்கட்டூர் கிராமம் பகுதியை சேர்ந்த ரேவதி (27) என்பவரும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாசிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

ஜெகன் கடந்த 13-ந் திகதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரேவதி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரேவதியின் தந்தை வெங்கடேசன் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘டீச்சர் அடிக்கிறாங்க’.. 3ம் வகுப்பு மாணவனின் புகார் மீது போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

தெலங்கானா..

தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திற்குட்பட்ட பையாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அனில் என்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், மாணவன் அனில் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு முகக்கவசம் அணிந்தவாறு தனியாக வந்துள்ளார். அப்போது காவல்நிலையத்திலிருந்த போலிஸார் மாணவனை அழைத்து இங்கு வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர்.

இதற்கு அனில், “எனது பள்ளியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்னை அடிக்கடி அடிப்பதாக” கூறியுள்ளார். இதைக்கேட்ட ஆச்சரியடைந்த போலிஸார், துணிச்சலுடன் காவல்நிலையம் வந்த மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றனர்.

அங்கு மாணவன் அனில், தன்னை அடித்த ஆசிரியர்கள் சன்னி, வெங்கட் ஆகிய இரண்டு பேரையும் போலிஸாரிடம் அடையாளம் காட்டினார். இதையடுத்து போலிஸார் ஆசிரியர்களிடம் மாணவர்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாது என அறிவுரை வழங்கினர்.

துணிச்சலுடன் காவல்நிலையம் வந்து ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவனின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

குழந்தைகளை தூக்கில் மாட்டிய தாய்… தானும் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கிருஷ்ணகிரி..

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36). இந்த தம்பதிக்கு கனிஷ்கா(7), சர்வன் (3) என இரு பிள்ளைகள் இருந்தனர்.

வெங்கடேஷ் தொழில் நிமித்தமாக திருப்பதிக்கு சென்றுவிட்ட நிலையில் காயத்ரி தனது இரு குழந்தைகளுடன் நடுப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் காயத்ரி இரு குழந்தைகளையும் தூக்கில் மாட்டிவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அறிந்து வந்த மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து மூன்று பேர் உடலையும் கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6 மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.

தற்போது அதே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் 36 வயதான பெண் தனது மகள் மற்றும் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காயத்ரி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதன் காரணம் குறித்து போலீசாரின் விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.

யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து கீழ்கண்ட தற்கொலை தடுப்பு அமைப்புகளின் ஹெல்ப்லைன் எண்களை தொடர்புகொள்ளலாம்.

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

ஸ்டெர்லிங் பவுண்ட்..

இலங்கை ரூபாவிற்கு நிகரான ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 302.92 ரூபாவை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 294.06 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட மிக அதிகபட்ச கட்டணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்றைய தினம் 225.20 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 229.99 டொலராக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் டொலரின் பெறுமதியை குறிப்பிட்ட பெறுமானத்தில் வைத்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய வங்கி அறிவித்திருந்தது. அதற்கமைய ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை 230 ரூபாவாக பேணுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மேல் அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் நடந்த இரண்டு நாட்களில் 30 டொலர்களாக அதிகரித்துள்ளதால், விலைகள் 2 ஆயிரம் டொலர்களை கடந்துள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரு மாத காலத்திற்குள் 130 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது அண்ணளவாக சுமார் 28.3 கிராமாகும்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட இலங்கைச் சிறுமியின் இன்றைய பரிதாப நிலை!!

இலங்கைச் சிறுமி..

சர்வதேச பெண்கள் தினமான இன்று தென்னிலங்கையில் சுனாமி பேரலையில் சிக்கிய ஐந்து வயது சிறுமி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

தங்காலையில் சுனாமியில் சிக்கிய 5 வயதுடைய சிறுமி 18 வருடங்களின் பின்னர் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வயது, உரிய பெயர், பிறப்பு சான்றிதழ் எதுவும் இல்லாமல் வாழும் இந்த பெண் கடுமையான வறுமையில் சிக்கித் தவிப்பதாக தெரியவந்துள்ளது.

சரியான வயது தெரியாத கே.ஏ.கமலா பெரேரா எனப்படும் அந்த பெண் தற்போது இலக்கம் 191, ஜயகம்புர மஹ அம்பகஸ்வெவ, மெதிரிகிரிய என்ற விலாசத்தில் வாழ்ந்து வருகின்றார்.

ஆரம்ப பாடசாலை மற்றும் இம்முறை புலமை பரிசில் பரீட்சை எழுதும் 2 பிள்ளைகளின் தாயான அவர் கணவனை இழந்துள்ளார். இந்த நிலையில் கூலி வேலை செய்து வாடகை வீடு ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்.

தங்காலை பிரதேசத்தில் பிறந்த அவர் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலையில் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், சகோதரி மற்றும் தானும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முழு குடும்பமும் சுனாமியில் சிக்கி காணாமல் போன நிலையில் அவரை யாரோ ஒருவர் காப்பாற்றியுள்ள போதிலும் இன்று வரையிலும் அது யார் என தெரியாமலேயே போயுள்ளது.

தங்காலை பிரதேச சுனாமி முகாமில் இருந்த அவரை, தங்காலை பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். குறித்த அதிபர் அவருக்கு கமலா என பெயர் வைத்துள்ளார். 12 வயதாகும் போது அதிபர் புற்று நோயினால் உயிரிழந்துள்ளார்.

அதிபரின் சகோதரி கொழும்பில் உள்ள வீட்டிற்கு பணிப்பெண் போன்று பணியாற்ற அவரை அழைத்து சென்றுள்ளார். இரண்டு வருடங்கள் பணியாற்றிய நிலையில் அந்த வீட்டில் நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

14 வயதான சிறுமியாக இருக்கும் போதே குறித்த இளைஞன் அவரை அழைத்து சென்றுள்ளார். இளைஞனை சந்தித்த முதல் நாளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவராகும். அவர் கொழும்பு மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சில காலம் வாழ்ந்த நிலையில் அவருக்கு போலி வயது கூறி அடையாள அட்டை ஒன்றும் தயாரித்துள்ளார்.

உரிய கல்வி அறிவு இல்லாம் அன்புக்காக ஏங்கிய நிலையில் சிறு வயதிலேயே இரண்டு பிள்ளைகளின் தாயான அந்த பெண்ணுக்கு கணவனின் மோசமான செயற்பாடு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

அவர் இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து செல்லும் நபர் என தெரியவந்துள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இன்றும் வாழ்வதற்கு இடமின்றி வாடனை வீட்டில் தவித்து வரும் இந்த பெண் யாராவது உதவி செய்வார்களா என காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த முதியவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற இளைஞன்!!

மன்னாரில்..

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அரச பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை நானாட்டான் பேருந்து தரிப்பு நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக நிறுத்திய போது பறித்துச் சென்ற இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

நேற்று(7) இரவு குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா – மெனிக்பாம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் மன்னார் எழுத்தூர் பகுதியில் வசிக்கும் அவருடைய மகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பேருந்து மூலம் வவுனியாவுக்குச் செல்வதற்காக மன்னாரிலிருந்து குறித்த பேருந்தில் பயணித்துள்ளார்.

அதேநேரம் குறித்த பேருந்தில் திருகோணமலையைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் முதியவரின் அருகிலிருந்து பயணித்துள்ளார்.

மன்னாரில் குறித்த பேருந்து நானாட்டான் பிரதேச பேருந்து தரிப்பு நிலையத்தைச் சென்றடைந்து பயணிகளை ஏற்றுவதற்காகப் பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்திய போது குறித்த முதியவர் வைத்திருந்த பணத்தை இளைஞன் பறித்துக் கொண்டு பேருந்திலிருந்து பாய்ந்து ஓடியுள்ளார்.

இந்த நிலையில் முதியவரின் கூச்சலைக் கண்ட அப்பகுதியிலிருந்த இளைஞர்கள் குறித்த திருடனைத் துரத்திச் சென்று பணத்தோடு மடக்கிப்பிடித்தனர்.

உடனடியாக முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முருங்கன் பொலிஸாரிடம் பணத்தைத் திருடிய இளைஞரை இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர்.

உடனடியாக குறித்த இளைஞரையும், முதியவரையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸார் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகை : அமைச்சரவை அனுமதி!!

அமெரிக்க டொலர்..

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு 38 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

புத்தாண்டின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த சலுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அந்நிய செலாவணி வருமானத்தை கொண்டு வருவதற்கான ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் : யார் அவர்? பின்னணி என்ன?

சாய்நிகேஷ் ரவிசந்திரன்..

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உக்கிரமடைந்து வரும் நிலையில் தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை ராணுவ பிரிவில் மாணவர் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

வவுனியா புளியங்குளத்தில் 50 ஏக்கர் காணியினை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!!

புளியங்குளத்தில்..

பொதுமக்களுக்கு சொந்தமான ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணியினை தனியொருவருக்கு வழங்குவதற்காக நில அளவை திணைக்களம் மற்றும் பிரதேச செயலகத்தால் குறித்த காணிகளினை அளவீடு செய்வதற்கான முயற்சியினை புளியங்குளம் பொதுமக்களும், காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து நேற்று (07.03) தடுத்து நிறுத்தினர்.

புளியங்குளம், ராமனூர் மற்றும் நாவற்குளம் குளங்களினுடைய வயற்காணிகள், பழையவாடி- புளியங்குளம் வீதியிலுள்ள பொதுமக்களின் மேட்டுக்காணிகள், வயலுக்கு செல்லும் வீதிகள், பொதுமக்களின் மேய்ச்சல் தரைகள் உள்ளடங்கலான 50 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இச் செயற்பாட்டிற்காக காணிகளை அளவீடு செய்ய முயன்ற போது பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன், குறித்த காணிகள் அமைந்துள்ள லக்சபானா மின்சார இணைப்பின் கீழான பகுதி அளவீடு செய்வதன் மூலமும்,

அதன் கீழ் பயிர்ச்செய்கை செய்வதன மூலமும் ஏற்படும் சூழல் சார் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டி பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பினையடுத்து நில அளவைத்திணைக்களம் மற்றும் பிரதேசசெயலக காணிப்பிரிவினர் குறித்த அளவீட்டு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச்சென்றுள்ளனர்.

குறித்த விடயத்தினை நிறுத்துமாறு பொதுமக்களால் கையொப்பமிடப்பட்டு வவுனியா வடக்குப்பிரதேச செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் சட்ட ஆலோகர் சு.காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் புதிதாக புத்தர் சிலை!!

புத்தர் சிலை..

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு (சிங்கள பிரதேச செயலக) வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து நேற்று (07.03) குறித்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தனர்.

வவுனியா தெற்கு பிரதேச செயலகமானது (சிங்கள பிரதேச செயலகம்) வவுனியா, மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள புகையிரத கடவை அருகில் அமைந்துள்ளது.

குறித்த பகுதியானது தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியாக உள்ளதுடன், குறித்த பிரதேச செயலகத்திலும் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட அதிகளவிலான உத்தியேதகத்தர்கள் தமிழ், முஸ்லிம் மக்களாகவே உள்ள நிலையில் குறித்த பிரதேச செயலக வளாகத்தில் பிரமாண்டமாக பீடம் ஒன்று அமைக்கப்பட்டு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்று வரும் அரசின் பௌத்தமயமாக்கல் திட்டங்களுக்கு பிரதேச செயலங்களும் உடந்தையாக செயற்படுகின்றனவா என பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியாவில் நடந்த அதிசயம் : பார்வையிட திரளும் மக்கள்!!

அதிசயம்..

வவுனியால் இயற்கைக்கு மாறாக பசு மாடு ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் முதன்முறையான இவ்வாறான அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக பசு மாடொன்று ஒரு குட்டியை ஈனுவது இயற்கை. சில சந்தர்ப்பங்களில் இரண்டு குட்டிகளையும் ஈன்றுள்ளன.

இந்நிலையில் மூன்று குட்டிகளை ஒரே நேரத்தில் ஈன்றுள்ளமையானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய சம்பவத்தை காண பெருமளவு மக்கள் பசு மாட்டின் உரிமையாளரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர்.

வவுனியாவில் அநாதரவாக நின்ற முதியவர் : அடைக்கலம் வழங்கிய ஊடகவியலாளர்கள், கிராம சேவையாளர்!!

அநாதரவாக நின்ற முதியவர்..

வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் சுகயீனமுற்ற நிலையில் அநாதரவாக நின்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவரை ஊடகவியலாளர்களுடன் கிராம சேவையாளர் இணைந்து காப்பாற்றி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சற்று மனநலம் பாதிப்படைந்த முதியவர் வீதியில் செல்லும் வாகனங்களில் விபத்துக்குள்ளாகும் வகையில் வீதியில் நடமாடிக்கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த கிராம சேவையாளர் ப.பிரதீப் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கியிருந்தார். அதன் பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த ஊடகவியலாளர்களான வசந்தன், கதீஷன் ஆகியோர் முதியவரின் கதைத்த போது அவர் ஊர்களின் பெயரையே தனது பெயராக தெரிவித்துடன் சுகயீனமுற்ற நிலையிலும் காணப்பட்டார்.

எனினும் முதியவரை இவ்விடத்தில் விட்டு சென்றால் வீதி விபத்துக்குள்ளாகுவார் என்ற அச்சத்திலும் அவரின் உடல்நிலமையினை கருத்தில் கொண்டு 1990 அவசர அன்புலன்ஸ் சேவையினை வரவழைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் குறித்த முதியவர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரியாத நிலையில் அவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டாயமாக்கப்படும் கோவிட் தடுப்பூசி அட்டை : நடைமுறைக்கு வரும் காலம் தொடர்பில் வெளியான தகவல்!!

தடுப்பூசி அட்டை..

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கோவிட்-19 செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, கோவிட் – 19 மரணங்களுக்கு அரசாங்கத்தினூடாக வழங்கப்பட்ட போக்குவரத்து செயற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்!!

தங்கத்தின் விலை..

ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை 2,000.69 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன்,

அது மீண்டும் 1998.38 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தது. அத்துடன், யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தால் மசகு எண்ணெய்யின் விலையும் 130 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.