வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்..

ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04.03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வனவளத் திணைக்களத்தின் காணி தொடர்பான பிரச்சனைகள் என்பவற்றுக்கு துரிதமாக தீர்வு காணும் முகமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைவாக வனவள பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் என்பவற்றை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்,

நீண்டகாலமாக வனவளத்தினால் விடுவிக்கப்படாமல் இருந்த மக்களது காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், உடனடியாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சனைகளக்கு தீர்வு காணப்பட்டதுடன்,

ஏனைய வனவள திணைக்களத்துடன் தொடர்புடைய காணிப்பிரச்சனைகளை 2 மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கான படிமுறை ஒன்றும் உருவாக்கப்டபட்டது.

வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன பங்கேற்புடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன்,

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,

வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், இரு மாவட்டங்களின் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

9 வருடத்துக்கு முன் தந்தை மரணம்.. 52 வயதில் மறுமணம் செய்த தாய்.. மகன் போட்ட உருக்கமான பதிவு!!

மறுமணம்..

கணவனை இழந்த பெண் தனது குடும்ப நண்பரை மகன் ஆதரவுடன் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டு வருகிறது.

குழந்தை இல்லாத இளம்பெண் கணவனை இழந்து மறுமணம் செய்து கொண்டால், அங்கீகரிக்கும் சமூகம், குழந்தையுடன் இருப்பவர்களின் மறுமணம் மீது விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்த நிலையில், இளைஞர் ஒருவர் தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

2013-ம் ஆண்டு தனது 44 வயதில் அப்பெண் கணவனை இழந்துள்ளார். இதன் பின்னர் கேன்சர், கொரோனா தொற்று என பலவற்றை கடந்து, தனது 52 வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, துபாயில் வசிக்கும் ஜிமீத் காந்தி என்பவர் தனது தாய் வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, 52 வயதில் தனக்கான காதலை தேடி பிடித்து திருமணம் செய்து கொண்டுள்ளதை லிங்டு இன் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், ‘என் தாய் காமினி காந்தி, 2013-ம் ஆண்டு 44 வயதில் கணவனை இழந்தார். அதன் பின்னர் 2019-ம் ஆண்டு அவருக்கு 3-ம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டார்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பலரும் ஜிமீத் காந்தியின் தாய் மறுமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களுடன் பாலம் உடைந்து விழுந்தமையினால் குழப்பம்!! (காணொளி)

மாத்தறை..

மாத்தறையில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த மரத்திலான பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது. மாத்தறை பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பலகையில் செய்யப்பட்டுள்ள பாலம் ஒன்று இன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

விகாரைக்கு மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது பாலம் உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.எனினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் பொது மக்களுக்களுடன் சேர்ந்து உடைந்து விழுந்தமையினால் உதவுமாறு மக்கள் கத்தி கூச்சலிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார் : அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!!

ஷேன் வோர்ன்..

அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

15 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஷேன் வார்ன், 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் விக்கெட் பட்டியலில் தொடர்ந்தும் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், ஷேன் வோர்ன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்திய 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரிக்கு கோயிலுக்கு சென்ற தம்பதிக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!!

திருப்பூர்..

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ சரண் (வயது 7) என்ற மகன் உள்ளான். தம்பதி இருவரும் வீட்டிலிருந்தே நெசவுத்தொழில் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதற்காக காங்கேயம் ஊதியூர் கோவிலுக்கு கோபி தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது குள்ளம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வண்டியை திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் கோபியின் வண்டியின் மீது பலமாக மோதியுள்ளது.

இதில் கோபி, மனைவி மல்லிகா மற்றும் மகன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனைியல் சிகிச்சை பெற்று வந்த கோபி மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகன் ஸ்ரீ சரண் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான். கோயிலுக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகன விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தை உலுக்கிய மாணவி லாவண்யா தற்கொலை : மதமாற்றம் காரணமா?

மாணவி லாவண்யா..

மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் அரியலூா் மாவட்டம், வடுகர்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (17), திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், பூச்சிமருந்தை குடித்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தாா். பள்ளியில் மதமாற்றத்திற்கு மாணவியை கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த தற்கொலை குறித்து விசாரித்த தேசிய குழந்தைகள் நல ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகார் குறித்த எந்த ஆதாரமும் இல்லை.

மாணவியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரருக்கு மனநலம் குறித்த மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். உரிய பதிவின்றி செயல்பட்ட பள்ளி விடுதியின் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்களை வேறு விடுதிகளுக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரால் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட புதுமண தம்பதி : நடந்தது என்ன?

மதுரை..

இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தின் பழைய குயவர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜன்(46). இவரும் இவரது மனைவியும் ஒன்று சேர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.

பங்குச் சந்தை குறித்த அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ள இவர் ஆலோசகராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தம்பதி பங்கு சந்தையில் நல்ல லாபம் ஈட்டி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் வெடிக்கும் போர் காரணத்தினால் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாகராஜன் தனது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவியின் சகோதரி பல முறை கால் செய்தும் எடுக்காததால் சந்தேகத்தின் பெயரில் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கதவை திறக்க முடியாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொழுது இருவரும் பிணமாக தொங்கியதையடுத்து அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவில் தீப்பற்றி எரிந்த ஆடம்பர வாகனங்கள்!!

தங்காலை..

தங்காலை பொலிஸ் பிரிவின் நாகுலுகமுவ இஹலகொட பகுதியில் ஆலயம் ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆடம்பர வாகனங்கள் நேற்றிரவு தீப்பிடித்து அழிந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆடம்பர கார், இரண்டு வான்கள் இவ்வாறு தீயில் அழிந்துள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் நான்கு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 10.30 அளவில் இனந்தெரியாத சிலர் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கொளுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மாத்தறை நகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முதலில் கார் எரிந்துள்ளதுடன் பின்னர், வான்கள் தீப்பற்றி எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் சடுதியாக அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
தற்போது அவுன்ஸூக்கு 5.80 டொலர்கள் அதிகரித்து, 1941.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

மேலும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கையிலும் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.

அதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 110,500 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 101,300 ரூபாவாகவும், 21 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 96,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

நாளை மற்றும் நாளைமறுதினம் மின்தடை நேரம் குறைப்பு!!

மின்தடை..

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மின் தடைக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு பொது சேவைகள் ஆணைக்குழு அனுமதியினை வழங்கியுள்ளது.

05 ஆம் திகதியுடன் மின்தடை நிறைவுக்கு வருமென மிசாரசபை உயர் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனாலும் மின்தடை அதன் பின்னரும் தொடரவுள்ளது.

நாளை(05.03.2022) சனிக்கிழமை P, Q, R, S, T, U, V, மற்றும் W பகுதிகளில்காலை 8.30 மணி,முதல் மாலை 5.30 வரையான நேரப்பகுதியில் மூன்று மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் மாலை 10.00 மணி வரையான நேரப்பகுதியில் 01 மணி நேரமும் மின் தடை அமுல் செய்யப்படவுள்ளது.

பகுதிகள் E மற்றும் F பகுதிகளில் நான்கு மணித்தியாலயம் மற்றும் மூன்று மணித்தியாலங்களாக இரண்டு தடவைகள் 7 மணித்தியாலங்களுக்கு மின் தடை செய்யபபடவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை A, B , C ஆகிய பகுதிகளில் 2மணி நேரமும் அரை மணி நேரமும் மின்தடை அமுல் செய்யப்படவுள்ளது.

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அடகு உட்பட பல வட்டி வீதங்கள் அதிகரிப்பு : இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு!!

வட்டி வீதங்கள் அதிகரிப்பு..

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. அந்த வகையில், நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

துணை நில் கடன் வசதி வீதமானது 7.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் அனுமதி!!

சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார்..

தொல்பொருள் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தினுடைய கட்டுமான பணிகளுக்கு தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு நேற்று மாலை (03.03) மாலை அமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.

வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயம் கடந்த 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது.

குறித்த கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற்தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டட இடிபாடுகள் என்பன காணப்படுகின்றன.

அத்துடன், ஆலயத்தின் புனர்நிர்மாண கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் குறித்த ஆலயம் அமைந்திருந்த பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி என தெரிவித்து கட்டுமான பணிகளுக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகனத்தினர் மற்றும் அப் பகுதி மக்கள் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்திருந்ததுடன், கடந்த காலங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர,

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினர், மக்களின் கோரிக்கையினை கேட்டறிந்தனர்.

ஆலயத்தின் கட்டுமான பணிக்காக மாதிரி வரைபடத்தினை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கி தொல்பொருட்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தாத வகையில், புனர்நிர்மாண வேலைகளை முன்னெடுத்து ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள அமைச்சரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்டு கடற்படை வீரர் ஒருவர் மரணம்!!

புல்வெட்டும் இயந்திரத்திற்குள்..

புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்டு வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் (03.03.2022) மரணமடைந்துள்ளார். பூனாவ இராணுவ முகாமில் புல்வெட்டும் இயந்திரம் மூலம்,

துப்பரவுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அதனுள் அகப்பட்டு காயமடைந்த கடற்படை சிப்பாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

போலீஸ் கணவரின் செயலால் வாழ்க்கையை தேடி அலையும் காதல் மனைவி!!

தருமபுரி..

தருமபுரி மாவட்டம் சோலை கொட்டாய் அருகே உள்ள ஜம்புகாலன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (24). பட்டதாரியான இவர் கம்பைநல்லூர் அருகே உள்ள குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

விக்னேஷ் டெல்லி திகார் சிறையில் எட்டாவது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்யும் போது எந்தவித எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை வரதட்சணை என்பது தேவையில்லை என்றுதான் விக்னேஷ் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், திருமணம் நடந்த பின்பு விக்னேஷின் தாயார் என் மகன் காவல் துறையில் பணிபுரிந்து வருவதால் 50 சவரன் நகை வரதட்சணையாக தரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து வேறு வழியில்லாமல் நிவேதாவின் குடும்பத்தினர் நிவேதாவிற்கு 30 ச்வரனும் மாப்பிள்ளை விக்னேஷ்க்கு 3 சவரன் நகையும் கொடுத்து ரூபாய் 50 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

மேலும், கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், விக்னேஷின் தாய் தந்தை மற்றும் தங்கை இவர்களின் பேச்சை கேட்டு அடிக்கடி பணம் கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் நிவேதா மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதால் மருத்துமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் விக்னேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், விக்னேஷ் காவலராக பணிபுரிந்து வருவதால் காவல் நிலையங்களில் பேசி முடித்து விடுவதாகவும் நிவேதா தரப்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், விக்னேஷுக்கு இரண்டாவது திருமணமும் செய்துவிட்ட நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிவேதா தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த மாதம் 11 ஆம் தேதி எனது கணவரின் குடும்பத்தார் சேர்ந்து எனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் தற்போது என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை என் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் நிவேதா புகார் மனுவை அளித்துள்ளார்.

21 வயதில் திருநங்கையாக மாறிய ஆண்… மஞ்சள் நீராட்டு விழா செய்த குடும்பத்தினர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

கடலூர்..

திருநங்கையாக மாறிய தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி ஏற்றுக்கொண்டுள்ளனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர்.

திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை இப்போது சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

அவர்களுக்கான கல்வி சலுகைகள், வேலைகளில் இட ஒதுக்கீடு, சுய தொழில்களுக்கான முன்னெடுப்புகள் என இப்போது சமூகம் முன்னேறி சென்று கொண்டுள்ளது. ஆனாலும் இன்னமும் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களை அவரின் குடும்பத்தார் தங்களோடு வைத்துக் கொள்வதில்லை.

அதனால் திருநங்கைகள் தனித்த ஒரு குழுவாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். புதிதாக ஒரு மூன்றாம் பாலினத்தவரை அந்த குழுவில் இருக்கும் மூத்தவர் ஒரு குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வார்.

இவ்வாறு திருநங்கைகள் சமூகத்தில் இருந்து விலக்கியே வைக்கப்பட்டு இருக்கும் சோகம் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு திருநங்கையாக மாறிய ஒருவரை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டுள்ள நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம்.விருத்தாசலம் பகுதியில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி- அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த். இவர் டிப்ளமோ கேட்டரிங் படிப்பை முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே அவருக்கு ஹார்மோன் பிரச்சனைகளால் ஆண் தன்மையை விட பெண் தன்மையே அதிகமானக் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து தனது 21 ஆவது வயதில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு நிஷா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர் திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் அவரை வீட்டுக்கு அழைத்துவந்த பெற்றோர் அவருக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடத்தியுள்ளனர்.

அந்த நிகழ்வையும் சிறப்பாக உறவினர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள் அனைவரையும் அழைத்து சீரும் சிறப்புமாக செய்துள்ளனர். இந்த நிகழ்வானது இனிமேற்கொண்டு மாற்றுப் பாலினத்தவர்களை குடும்பத்தினர் ஒதுக்குவது போன்ற,

சோகமான நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க ஒரு தொடக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புவோம். அதே போல நிஷாவை மீண்டும் தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோரின் அன்பை போற்றுவோம்.