வவுனியாவில் இந்திய திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்ரர் : இலங்கை கலைஞர்களையும் இந்திய திரைப்படத் துறைக்குள் உள்வாங்க வேண்டும்!!

கலா மாஸ்ரர்…

இலங்கை கலைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர்களையும் இந்திய திரைப்படத் துறைக்குள் உள்வாங்க வேண்டும் என இந்திய திரைப்பட நடன இயக்குனரும், மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளருமான கலா மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு வருகை தந்த அவர் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (03.03) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலத்திற்கு பின்னர் நான் சிறிலங்கா வந்துள்ளேன். நான் பல தடவை படப்பிடிப்புக்காக கொழும்பு வந்திருக்கின்றேன் படப்பிடிப்புக்கு சென்று அதனை முடித்து விட்டு மீண்டும் இந்தியா சென்று விடுவோம்.

முதல் தடவையாக நான் வவுனியா வந்துள்ளேன். என்னுடைய அதிக ரசிகர்கள் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் தான். நான் கனடா, லண்டன் என பல இடங்களில் நடன வகுப்புக்கள் எடுக்கின்றேன். அங்கும் ஈழத் தமழர்களே அதிகம் வருகிறார்கள்.

இலங்கையில் இராமர், இராவணன் இருந்த இடங்கள் உள்ளன. அதனை பார்க்க வேண்டும் என்ற ஆசை. இலங்கை தமிழர்களுக்காகவும் எனது வகுப்புக்கள் இருக்கும்.

இலங்கை தமிழர்களுக்களிடம் நல்ல திறமை உள்ளது. லொஸ்லியா எல்லாம் இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் பிரபல்யமாக உள்ளார். இதேபோல் கனடாவிலும் எனது மாணவர்கள் உள்ளனர். வயது வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கிறது.

சினிமாவைப் பொறுத்தவரை வயது ஒரு பிரச்சனையே கிடையாது. திறமை தான் முக்கியம். இலங்கை கலைஞர்களையும் இந்திய திரைப்பட துறைக்குள் உள்வாங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்.

யுத்தம் காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டமை பற்றி எனக்கு நிறைய கதைகள் தெரியும். அவற்றை கேட்டு நான் வேதனையடைந்து இருக்கின்றேன். நேரில் பார்க்கும் போது சில இடங்களில் நிறைய கவலையாக இருந்தது.

சில இடங்களில் நான் கண்ணீர் விட்டு அழுது கூட இருக்கின்றேன். இந்த உலகத்தில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. யாரும் யாருக்கு அடிமை கிடையாது. கனடா, லண்டன் என பல நாடுகளில் தமிழர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.

அந்த நாடுகள் அதற்கு உரிமை கொடுத்துள்ளது. அப்படியிருக்கும் போது ஏன் இங்கு அப்படி கொடுக்க முடியாது? நான் எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன்.

நான் கொழும்பு போகின்றேன், வவுனியா போகின்றேன் என்று சொன்ன போது எல்லோரும் அங்கு போறியா? பயமில்லையா என்றார்கள். ஆனால் எந்த பயமும் கிடையாது.

நானும் கணவனும் மட்டுமே தனியாக வந்துள்ளோம். எல்லா இடத்தையும் பார்க்கின்றோம். இது இராமர், முருகன், இராவணன் வாழ்ந்த இடம். இங்கு பயமில்லாமல் வரவலாம்.

எந்த இடத்திற்கும் செல்லலாம். இங்கு வாழும் மக்களை எல்லோரும் வந்து பார்க்க வேண்டும். அது ஒரு பாடம். இந்த மக்களுக்காக நாம் குரல் கொடுக்கனும் எனத் தெரிவித்தார்.

வவுனியாப் பல்கலைக்கழகமும் பட்டய பணியாளர் மேலாண்மை நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

வவுனியா பல்கலைக்கழகம்..

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வணிக கற்கைகள் பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறை மற்றும் பட்டய பணியாளர் மேலாண்மை நிறுவனம் என்பவற்றிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந் நிகழ்வானது வவுனியா பல்கலைக்கழக வணிக கற்கைகள் பீடத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன், வணிக கற்கைகள் பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன்,

மனிதவள முகாமைத்துவ துறையின் தலைவர் எஸ்.ஹரிகரன் ஆகியோர் வவுனியா பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் ஜயந்த அபேரத்ன, சமன் ஜயவிக்ரம, வீரதுங்க ஆகியோர் பட்டய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சிறுமிகளை அச்சுறுத்திய இலங்கை இளைஞன் : அவுஸ்திரேலிய நீதிமன்றம் கொடுத்த சிறைத் தண்டனை!!

இலங்கை இளைஞன்..

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நீதிமன்றம் இலங்கை மாணவனுக்கு 13 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இலங்கையின் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான ரண்பதி அமரசிங்க என்ற இளைஞனுக்கு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

சிறுமிகளை அச்சுறுத்தியதாக இளைஞனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு இளைஞன், சிறுமிகளை அச்சுறுத்தியுள்ளார்.

படங்களை அனுப்பவில்லை என்றால், போலி படங்களை தயாரித்து அவற்றை சிறுமிகளின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைக்க போவதாக இளைஞன் மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் சந்தேக நபரான இளைஞனை கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்தனர். விசாரணைகளில் இளைஞன் 10 வயதான சிறுமிகளை கூட இவ்வாறு அச்சுறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பொலிஸார் வழக்கு விக்டோரியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இளைஞனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டனை முடிந்த பின்னர், இளைஞன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என கூறப்படுகிறது.

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

வாகனம்..

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற 600 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது என்பதனை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது வாகனங்களை இறக்குமதி செய்யாது இருப்பதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் கோவிட் ஆரம்பித்தது முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், இன்று நாம் காணும் எரிபொருள் வரிசை இன்னும் பல கிலோமீட்டர்களை கடந்திருக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான தடை, எரிபொருள் நெருக்கடி மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யாமை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகத் தோன்றுவதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் தற்போதுள்ள வாகனங்களின் விலைகள் மக்கள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கலாம் என வாகன இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

மாலைதீவில் உயிரிழந்த தேசிய கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது!!

டக்சன் பியூஸ்லஸ்..

மாலைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தது.

இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பூதவுடலை பெற்றுக் கொள்ள அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

சடல பரிசோதனையின் பின் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அஞ்சலிக்காக யாழிற்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக் கொட்டிலில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்படும் என கூறப்பட்டுள்ளது.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில் , தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக எடுத்து வரப்படும் எனவும், எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டுள்ள எரிவாயு விநியோகம் : நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

எரிவாயு விநியோகம்..

தமக்கான கடன் பத்திரத்தை வங்கிகள் வெளியிடாமையினால், உரிய வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ ம்றறும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அடங்கிய மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும், வங்கிகள் கடன் பத்திரத்தை வெளியிடாமையினால், எரிவாயுவை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப் எரிவாயு விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

எரிவாயுவை நாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகபிட்டிய தெரிவிக்கின்றார். லாஃப் எரிவாயு சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் ATM பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

ATM பாவனையாளர்களுக்கு..

இலங்கையிலுள்ள பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான ATM அட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு ATM அட்டை வழங்கும் செயற்பாடு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாமலும் புதிய அட்டையைக் கோர முடியாமலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிய வருகிறது.

எந்த நேரத்தில் பணத்தை எடுக்கும் வசதியை இழந்த வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணத்தை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கி அட்டைகளை இறக்குமதி செய்வதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால் அவ்வகை அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு!!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கு பின்னர் கடந்த மாதம் கடைகளில் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

BRC-NielsenIQ Shop விலைக் குறியீட்டின் படி ஜனவரியில் 1.5 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் பெப்ரவரியில் 1.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் விளைச்சல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு விலைகள் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம் ஜனவரியில் 0.9 வீதத்தில் இருந்து பெப்ரவரியில் 1.3 வீதமாக உயர்ந்துள்ளது, இது 2011 செப்டெம்பருக்குப் பிறகு மிக உயர்ந்த விகிதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேசிய காப்பீடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே செலவழிக்கக்கூடிய வருமானம் வீழ்ச்சியடையும் குடும்பங்களுக்கு விலை உயர்வு விரும்பத்தகாத செய்தியாக இருக்கும்” என்று பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஒரு தசாப்தத்திற்கும் பின்னர் கடைகளில் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன ஜனவரியில் பணவீக்கம் 5.5 வீதமாக உயர்ந்துள்ளது.

1992 மார்ச் மாதத்திற்கு பிறகு, பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்நிலையில், “சில்லறை விற்பனையாளர்கள் இந்த விலை உயர்வுகளைத் தணிக்கவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஹெலன் டிக்கின்சன் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பணவீக்கத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) டிசம்பரில் 5.4 வீதமாக இருந்தது.

எனினும் ஆடை, வீடுகள் மற்றும் தளபாடங்கள் விலைகள் உயர்ந்ததால், பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.

600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

இறக்குமதி தடை..

அந்நிய செலாவணி நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளை தடை செய்து வெளிநாட்டு கையிருப்புகளை சேமிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரச பங்காளிக்கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்தகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எங்கள் முன்னுரிமைகளை அங்கீகரிக்காதது மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் விளைவுகளுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.

எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நமது முன்னுரிமைகளை வரிசைப்படுத்த தவறியதே இதற்குக் காரணம். வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருந்தால், அவை மருந்து, எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் இப்போதும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், நாம் விரும்பும் எதையும் இறக்குமதி செய்ய முடியாது, ”என்று அவர் கூறினார்.

பொருளாதார நிலைமை குறித்த உண்மையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு முன், இங்கே நமக்கு ஒரு உண்மையான பிரச்சனை உள்ளது என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்கு எதிரான பொதுக் கலவரங்களைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து அந்நிய செலாவணி நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் விடுத்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு நான் ஒரு அந்நிய செலாவணி நெருக்கடி பற்றி எச்சரித்தேன். அதில் கவனம் செலுத்தாமல் சிலர் என்னை அவமானப்படுத்தினர். நான் சுட்டிக்காட்டிய இந்த உண்மையை மறைக்கவும் முயன்றனர்.

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முந்தைய நாள், அரசாங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் கூட நான் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசினேன்.

அப்போது உயர்மட்ட அமைச்சர் ஒருவர், நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி எதுவும் இல்லை என்றும், இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தெரிவித்ததாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்!!

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்காக காத்திருக்கும் நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவு உற்பத்தியில் தன்னிறைவான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றையேனும் உற்பத்தி செய்ய முடிந்தால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதனை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு : வழமைக்கு வரும் மின்வெட்டு?

வழமைக்கு வரும் மின்வெட்டு?

நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர். மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது பணிப்புரை விடுத்தார்.

தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல், மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும்,

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றையதினம் ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் உக்ரைன் – ரஷ்ய யுத்தம் : ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெயின் விலை 116 டொலர்களாக அதிகரிப்பு!!

கச்சாய் எண்ணெய்..

உலக சந்தையில் பிரேன்ஞ்ச் ரக கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சாய் எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளமை மற்றும் கேள்வி அதிகரித்துள்ளமை இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நாள் தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படும் அபாயம் : கடுமையான எச்சரிக்கை!!

மின்தடை..

நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் இவ்வாறு நீண்ட மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மின்சாரப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தேவையற்ற மின் குமிழ்களை பயன்படுத்துவதனை தவிர்ப்பதேயாகும் என குறிப்பிட்டுள்ளனர். மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்தாலும் பாரியளவில் செலவினை எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

வீடுகளில் தேவையற்ற மின் குமிழ்களை அணைக்க வேண்டுமெனவும், அலுவலகங்களில் காற்று சீராக்கிகளை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் மின்வெட்டு நேரத்தை வரையறுத்துக் கொள்ள முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

நெருக்கடியான நிலையில் இலங்கை மக்களிடம் விசேட கோரிக்கை!!

மின்சார நெருக்கடி..

இலங்கையில் ஒரு வீட்டில் இரண்டு மின் விளக்குகளை அணைத்தால் நாளொன்றுக்கு 200 மெகா வோட் மின்சாரம் சேமிக்க முடியும் என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் 200 மெகா வோட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வற்றி வருவதனால் நீர் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் காரணமாக நீர்மின் உற்பத்திக்கு தண்ணீர் விடுவதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான வறண்ட வானிலையால் தினசரி மின் தேவை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்ககூடும்.

இதனால் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் உபகரணங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு மின்சார சபை பொறியியலாளர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம்!!

26 ஆண்டுகளுக்குப் பின்னர்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இன்றைய தினம் ஏழரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

26 வருடங்களின் பின்னர் இலங்கையில் இப்படியான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டிலேயே நாளாந்தம் அதிக நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக எரிசக்தி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

நெருக்கடியான நிலையில் ஏழரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று முதல் பகலில் ஐந்து மணி நேரம், இரவில் இரண்டரை மணி நேரம் என இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மின்வெட்டுக்கு காரணமான அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை பெறுவதற்கு ஒரு வாரத்திற்குள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய வங்கி மற்றும் திறைசேரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

தென்னிலங்கையில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி : கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்!!

வறுமை..

தென்னிலங்கையில் வறுமையின் காரணமாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

களுத்துறை, வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான நாகராஜா ரஞ்சன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வினை செய்ய முடியாத நிலையில் குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக நூற்றுக்கு 20 ரூபாய் வட்டிக்கு மனைவி பணம் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மலர்சாலைக்கு 17,500 ரூபாய் வழங்குவதற்காக அவர் இந்த பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சடலத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியாதென்பதனால் மலர் சாலைக்கு இந்த பணம் வழங்கப்பபட வேண்டும். அதற்காக நூற்றுக்கு 20 ரூபாய் என்ற கணக்கில் வட்டிக்கு பணம் பெற்றதாக உயிரிழந்த நாகராஜன் ரஞ்சனின் தாயாரான ருக்மனி நாகொட வைத்தியசாலையில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் பசியில் இருப்பதனை பார்க்க முடியாமலேயே எனது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது இறுதி அஞ்சலி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கேனும் கையில் 5 சதம் பணம் இருக்கவில்லை என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு உதவி செய்ய எந்தவொரு அரசியல்வாதிகளும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.