இலங்கையிலுள்ள பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான ATM அட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு ATM அட்டை வழங்கும் செயற்பாடு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாமலும் புதிய அட்டையைக் கோர முடியாமலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிய வருகிறது.
எந்த நேரத்தில் பணத்தை எடுக்கும் வசதியை இழந்த வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணத்தை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கி அட்டைகளை இறக்குமதி செய்வதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால் அவ்வகை அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கு பின்னர் கடந்த மாதம் கடைகளில் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
BRC-NielsenIQ Shop விலைக் குறியீட்டின் படி ஜனவரியில் 1.5 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் பெப்ரவரியில் 1.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் விளைச்சல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு விலைகள் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம் ஜனவரியில் 0.9 வீதத்தில் இருந்து பெப்ரவரியில் 1.3 வீதமாக உயர்ந்துள்ளது, இது 2011 செப்டெம்பருக்குப் பிறகு மிக உயர்ந்த விகிதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேசிய காப்பீடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே செலவழிக்கக்கூடிய வருமானம் வீழ்ச்சியடையும் குடும்பங்களுக்கு விலை உயர்வு விரும்பத்தகாத செய்தியாக இருக்கும்” என்று பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஒரு தசாப்தத்திற்கும் பின்னர் கடைகளில் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன ஜனவரியில் பணவீக்கம் 5.5 வீதமாக உயர்ந்துள்ளது.
1992 மார்ச் மாதத்திற்கு பிறகு, பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில், “சில்லறை விற்பனையாளர்கள் இந்த விலை உயர்வுகளைத் தணிக்கவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஹெலன் டிக்கின்சன் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பணவீக்கத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) டிசம்பரில் 5.4 வீதமாக இருந்தது.
எனினும் ஆடை, வீடுகள் மற்றும் தளபாடங்கள் விலைகள் உயர்ந்ததால், பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளை தடை செய்து வெளிநாட்டு கையிருப்புகளை சேமிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரச பங்காளிக்கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்தகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எங்கள் முன்னுரிமைகளை அங்கீகரிக்காதது மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் விளைவுகளுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.
எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமது முன்னுரிமைகளை வரிசைப்படுத்த தவறியதே இதற்குக் காரணம். வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருந்தால், அவை மருந்து, எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால் இப்போதும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், நாம் விரும்பும் எதையும் இறக்குமதி செய்ய முடியாது, ”என்று அவர் கூறினார்.
பொருளாதார நிலைமை குறித்த உண்மையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு முன், இங்கே நமக்கு ஒரு உண்மையான பிரச்சனை உள்ளது என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்கு எதிரான பொதுக் கலவரங்களைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து அந்நிய செலாவணி நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் விடுத்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு நான் ஒரு அந்நிய செலாவணி நெருக்கடி பற்றி எச்சரித்தேன். அதில் கவனம் செலுத்தாமல் சிலர் என்னை அவமானப்படுத்தினர். நான் சுட்டிக்காட்டிய இந்த உண்மையை மறைக்கவும் முயன்றனர்.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முந்தைய நாள், அரசாங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் கூட நான் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசினேன்.
அப்போது உயர்மட்ட அமைச்சர் ஒருவர், நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி எதுவும் இல்லை என்றும், இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தெரிவித்ததாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்காக காத்திருக்கும் நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவு உற்பத்தியில் தன்னிறைவான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றையேனும் உற்பத்தி செய்ய முடிந்தால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதனை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர். மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது பணிப்புரை விடுத்தார்.
தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல், மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும்,
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றையதினம் ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் பிரேன்ஞ்ச் ரக கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சாய் எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளமை மற்றும் கேள்வி அதிகரித்துள்ளமை இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் இவ்வாறு நீண்ட மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மின்சாரப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தேவையற்ற மின் குமிழ்களை பயன்படுத்துவதனை தவிர்ப்பதேயாகும் என குறிப்பிட்டுள்ளனர். மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்தாலும் பாரியளவில் செலவினை எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகளில் தேவையற்ற மின் குமிழ்களை அணைக்க வேண்டுமெனவும், அலுவலகங்களில் காற்று சீராக்கிகளை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் மின்வெட்டு நேரத்தை வரையறுத்துக் கொள்ள முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு வீட்டில் இரண்டு மின் விளக்குகளை அணைத்தால் நாளொன்றுக்கு 200 மெகா வோட் மின்சாரம் சேமிக்க முடியும் என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் 200 மெகா வோட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வற்றி வருவதனால் நீர் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.
விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் காரணமாக நீர்மின் உற்பத்திக்கு தண்ணீர் விடுவதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான வறண்ட வானிலையால் தினசரி மின் தேவை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்ககூடும்.
இதனால் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் உபகரணங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு மின்சார சபை பொறியியலாளர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இன்றைய தினம் ஏழரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
26 வருடங்களின் பின்னர் இலங்கையில் இப்படியான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டிலேயே நாளாந்தம் அதிக நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக எரிசக்தி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நெருக்கடியான நிலையில் ஏழரை மணித்தியாலங்கள் மின் விநியோகத்தை துண்டிக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று முதல் பகலில் ஐந்து மணி நேரம், இரவில் இரண்டரை மணி நேரம் என இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
மின்வெட்டுக்கு காரணமான அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை பெறுவதற்கு ஒரு வாரத்திற்குள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய வங்கி மற்றும் திறைசேரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என,
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
தென்னிலங்கையில் வறுமையின் காரணமாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
களுத்துறை, வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான நாகராஜா ரஞ்சன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வினை செய்ய முடியாத நிலையில் குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக நூற்றுக்கு 20 ரூபாய் வட்டிக்கு மனைவி பணம் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மலர்சாலைக்கு 17,500 ரூபாய் வழங்குவதற்காக அவர் இந்த பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சடலத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியாதென்பதனால் மலர் சாலைக்கு இந்த பணம் வழங்கப்பபட வேண்டும். அதற்காக நூற்றுக்கு 20 ரூபாய் என்ற கணக்கில் வட்டிக்கு பணம் பெற்றதாக உயிரிழந்த நாகராஜன் ரஞ்சனின் தாயாரான ருக்மனி நாகொட வைத்தியசாலையில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் பசியில் இருப்பதனை பார்க்க முடியாமலேயே எனது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது இறுதி அஞ்சலி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கேனும் கையில் 5 சதம் பணம் இருக்கவில்லை என தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடியான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு உதவி செய்ய எந்தவொரு அரசியல்வாதிகளும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக நாடளாவீய ரீதியில் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அதன் பின்னர் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட தீர்மானங்கள் இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவீய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுகின்றது.
மருந்தகம், கதிர் பிரிவு (எக்ஸ்ரே), இரத்த மாதிரி பெறுதல் மற்றும் பரிசோதனை பிரிவு, தொழிநுட்பவியலாளர்கள் பிரிவு என பல பிரிவுகளின் சேவைகளை மக்கள் பெறமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளதுடன்,
வைத்தியர்கள், தாதியர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வெளிநோயாளர் பிரிவு, விடுதிகள், கிளினிக், அவசர சேவைகள் என்பன இயங்கி வருகின்றன.
திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்ததுடன் வைத்தியரின் சிபாரிசுடன் மருந்துச் சிட்டைகளை பெற்று தனியார் மருந்தகங்களுக்கு சென்றமையினையும் அவதானிக்க முடிந்தது.
வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடு நேற்று (01.03.2022) சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா கோவிற்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆலயத்தின் பிரதம குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்த அடியார்கள் புடைசூழ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானுக்கு மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகம் மற்றும் பூஜைகளும் இடம்பெற்றன.
மேலும் அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களையும் இதன்போது நிறைவேற்றி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானின் அருட் கடாற்சத்தினைப் பெற்றுக் கொண்டனர்.
சுகாதார நடைமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் பொலிசாரும் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் ஊடக சந்திப்புக்கு பொலிசார் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.
தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் பிரச்சனை தொடர்பில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவரால் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து பதிவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நேற்று (01.03.2022) ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு ஊடகவியலாளர்கள் சென்று ஊடக சந்திப்பை பதிவு செய்ய தயாராகிய போது பொலிசார் அங்கு நடத்த முடியாது என தெரிவித்தனர்.
பின்னர் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவரை அழைத்து விபரங்களை பெற்றதுடன், ஊடகவியலாளர்கள் மற்றும் குறித்த ஊடகவியலாளர்கள் பணியாற்றும் ஊடக நிறுவனங்களின் விபரங்களையும் பொலிசார் கோரினர்.
இதன்போது, நாம் ஏன் எமது விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என ஊடகவியலாளர்கள் கோரியதுடன் விபரத்தை கொடுக்க மறுத்தனர். இதன்பின் அமைதியாக நின்ற பொலிசார் ஊடக சந்திப்பு நடைபெற்ற போது அதனை முழுமையாக கண்காணித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கரூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
சென்னையை சார்ந்த இளம்பெண் சத்தியபிரியா (23). இவர் பி.காம் முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்து சென்ற கரூர் காந்திகிராமத்தை சார்ந்த சதீஸ்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறி கடந்த 2021 ஏப்ரல் மாதம் 22ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்பு சதீஸ் ஒரு பட்டதாரி என்றும், சட்ட ஆலோசகராக பணிபுரிவதாகவும் கூறி திருமணம் செய்துள்ளார். பின்னர் திருமணமாகி 7வது நாளிலேயே அவர் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சத்திய பிரியா, சதீஸ்குமாரிடமும், அவரது தாய், தந்தையிடமும் கேட்டு சண்டையிட்டுள்ளார். காலம் போக, போக சதீஸ்குமார் கஞ்சா விற்பனை செய்வது, ரவுடிகளுக்கு பட்டாகத்தி, கள்ள துப்பாக்கி விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தது.
மேலும், இணையதள வங்கி பரிவர்த்தனை மூலம், சியாம், பிரசாத், சதீஸ், பவித்ரா பிரசாத், ஸ்ரீராம் என்ற பல பெயர்களிலும், பல ஊர்களிலும் போலியாக ஆதார் கார்ட், விசிடிங் கார்ட் தயாரித்து வெளி நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி அலுவலகம் வைத்து பணத்தை பலரிடம் மோசடி செய்துள்ளார் சதீஸ்குமார்.
அதுமட்டுமின்றி சத்தியபிரியாவிற்கு தெரியாமல் அவருடைய வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பண பரிவர்த்தனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சதீஸ்குமார் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சதீஸ்குமாரிடம் கேட்ட போது சண்டை அடிக்கடி வந்துள்ளது.
மேலும், சத்தியபிரியாவை வீட்டினுள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி கஞ்சாவை கட்டாயப் படுத்தி புகைக்க செய்ததாகவும், கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவருக்கு கருகலைப்பு செய்து வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மயில் துத்தநாக பொடியை குளுகோஸில் கலந்து கொடுத்து வந்துள்ளனர். பின்பு அவர் உயிரிழந்து விட்டால் பிரச்சினையாகி விடும் எனக் கூறி அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.
கடந்த 6 மாத காலமாக வீட்டினுள் அடைத்து வைத்து உணவு வழங்காமல், பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாக கூறி சத்தியபிரியா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
தனது நண்பரின் திருமணத்திற்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு சென்னை சென்ற சத்தியபிரியா ஆன்லைனில் 3 முறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் எம்ஜிஆர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(31). இவர் எலெக்ட்ரிசின் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து குழந்தைகளுடன் புழல் கண்ணப்ப சாமி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பாரிமுனையில் எலக்ட்ரிக் வேலை செய்வதற்காக சென்றபோது,
சென்னை புளியந்தோப்பு சென்ற வெண்ணிலா இவர் பாரிமுனையில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தவர். அப்போது வெண்ணிலாவுக்கும் இளங்கோவனுக்கும் காதலாக மாறி இருவரும் எம்ஜிஆர் நகரில் உள்ள இரண்டாவது தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெண்ணிலா தனது மகன், மகள்களை பார்ப்பதற்காக செல்ல வேண்டுமென்று நேற்று இளங்கோவனிடம் சொல்லியுள்ளார். இதற்கு இளங்கோவனுக்கும் வெண்ணிலாவுக்கும் இடையோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை இளங்கோவின் தாத்தா தமிழ்தாசன் இருவரிடம் சமரசம் மேற்கொண்டபோது திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இளங்கோவன் வெண்ணிலாவை கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு புழல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெண்ணிலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து புழல் போலீசார் இளங்கோவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று (01.03.2022) காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்தி வைத்துள்ளமையினால் சில எண்ணை நிரப்பு நிலையங்கள் முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தன.
அத்துடன் வாகன சாரதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் டீசல் எண்ணெய்யினை தேடி ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கிச் சென்று வருவதாகவும் இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டிருப்பதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.