கழட்டி விட்ட காதலியை போஸ்டர் அடித்து பழிவாங்கிய காதலன்.. பின்னர் நடந்த விபரீதம்!!

நெல்லை..

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். இவர் களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக 2 வது வார்டில் போட்டியிட்டு உள்ளார், அதில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் விஜய்ரூபன் 18 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் தனது தூரத்து உறவினரான மேலபத்தை பகுதியை சேர்ந்த கிருபா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் கிருபாவின் வீட்டிற்கு சென்று விஜய்ரூபன் கிருபாவை பெண் கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால் கிருபாவின் தந்தை திருமணம் செய்து கொடுக்க முடியாது என மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கிருபாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்து உள்ளனர், இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கிருபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது.

இதனை அறிந்த விஜய் கிருபாவுடன் பழகும் நாட்களில் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் காதலி கிருபா எழுதி கொடுத்த காதல் கவிதை கடிதம் ஆகியவற்றை வால்போஸ்டரில் அச்சிட்டு Happy Engagement என நெல்லை மாவட்டம் களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டி உள்ளார்.

குறிப்பாக கிருபாவிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டின் முன்பும் சுவரொட்டியை ஓட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபாவின் தந்தை தானியேல் இது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் களக்காடு போலீசார் விசாரணை செய்து வருவதோடு களக்காடு முழுவதும் சுவரொட்டி ஒட்டிய விஜயை தேடி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான விஜய்ரூபன் இது போன்ற செயல்களை செய்ததோடு தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் அவருடைய மொபைல் எண்ணையும் அணைத்து வைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனது காதலிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆத்திரத்தில் காதலியுடம் எடுத்த புகைப்படம் மற்றும் அவள் எழுதி கொடுத்த கவிதையை போஸ்டரில் அச்சிட்டு களக்காடு முழுவதும் ஒட்டி தனது எதிர்ப்பை விஜய்ரூபன் என்பவர் வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற இரு இளைஞர்கள் மாயம் : தேடும் பணி தீவிரம்!!

நீர்வீழ்ச்சியில்..

வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

21 மற்றும் 22 வயதுயுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,காணாமல்போயுள்ள இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காதலனுக்காக தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கப்பம் பெற முயற்சித்த யுவதி!!

இனந்தெரியாத சிலர் தன்னை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக தொலைபேசி அழைப்பை எடுத்து தெரிவித்து, சூட்சுமான முறையில் தனது தந்தையிடம் இருந்து 15 லட்சம் ரூபாவை கப்பமாக பெற முயற்சித்த 24 வயதான யுவதியை அனுராபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தையிடம் 15 லட்சம் ரூபாவை பெற்று அதனை தனது காதலனுக்கு வழங்க திட்டமிட்ட இந்த யுவதியுடன் அவரது காதலனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் தாதி கல்லூரியில் பயின்று வரும் நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியும் தாதி பாடநெறியை பூர்த்தி செய்த அனுராதபுரம் நகரை சேர்ந்த 26 வயதான இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

எப்பாவல பிரதேசத்தில் தென்னம் காணி ஒன்றை கொள்வனவு செய்ய சந்தேக நபரின் தாய் அவருக்கு 15 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

எனினும் இளைஞன் புதையலில் எடுத்த தங்கம் எனக் கூறி ஒருவர் விற்பனை செய்த தங்க முலாம் பூசப்பட்ட இரும்புகளை கொள்வனவு செய்து ஏமாந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசடியில் இழந்த இந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யுவதியும், இளைஞனும் திட்டம் தீட்டியுள்ளனர். யுவதி வீட்டில் இருந்து சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.

இதனிடையே யுவதியின் காதலன், யுவதியின் தந்தையிடம் 15 லட்சம் ரூபாயை கப்பமாக கேட்டுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்றால், யுவதியை கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அச்சமடைந்த யுவதியின் தந்தை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தலைமறைவாக இருந்த யுவதியையும் இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

இதன் பின்னர், நடத்திய விசாரணைகளில் 15 லட்சம் ரூபா பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், யுவதி மற்றும் இளைஞனின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். தமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் தொடர்பில் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கை அடுத்து, பொலிஸார் சாட்சியங்களை பதிவு செய்துக்கொண்டு இருவரையும் விடுதலை செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

விபத்து..

திருகோணமலை – உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து இன்று (01) 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் (15வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மற்றவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகளுக்கு உணவு இல்லாமையினால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை : இலங்கையில் நடந்த துயரம்!!

களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு வழங்க பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அவர் வீட்டிற்கு வராமையினால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு வழங்கினேன் என தற்கொலை செய்துக் கொண்ட நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துக் கொண்டவர் வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த நாகராஜா ரஞ்சன் என்ற 37 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையாகும்.

உயிரிழந்தவரின் மனைவியான 30 வயதான மாடசாமி மஞ்சுலா என்பவர், மரண பரிசோதனை அதிகாரிகளிடம் சாட்சி வழங்கியுள்ளார்.

உயிரிழந்திருப்பவர் எனது கணவர், எங்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் உள்ளனர். மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

எனது கணவருக்கு வேலை தேடி தெபுவன மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 9 மாதங்களுக்கு முன்னர் வெலிபென்ன பிரதேசத்திற்கு வந்தோம். என் கணவருக்கு நிரந்தர வேலை இல்லை.

அவரை கூலி வேலைக்கு அனுப்பி அதில் கிடைத்த பணத்திலேயே வாழ்ந்தோம். நிரந்தர வீடு இல்லை. 3,500 ரூபாய் வாடகைக்கு அறையில் இருந்தோம். நிரந்தர வீடு இல்லாததால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை.

கடந்த சில நாட்களாக கணவருக்கு வேலை கிடைக்கவில்லை. எங்களுக்கு கடனுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கவில்லை. பிள்ளைகளுக்கு உணவில்லாமையினால் கணவர் வருத்தத்தில் இருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அன்று முழு நாளும் வரவில்லை். பிள்ளைகளால் பசி தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு பெற்றுக் கொடுத்தேன்.

கணவருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தினேன் பதில் கிடைக்கவில்லை. பின்னர் கணவர் உறவினரின் வீட்டிற்கு அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் என தகவல் கிடைத்தென மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் 7.30 மணித்தியால மின்வெட்டு : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாடளாவிய ரீதியில் நாளை ஏழரை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை வேளையில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், இரவு வேளையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி!!

இந்திய மாணவன்…

ரஷ்ய படையினர், உக்ரைனின் கார்கிவ் நகரை இலக்கு வைத்து நடத்திய செல் வீச்சு தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இராணுவ தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த வெளியாட்டு மாணவன் உயிரிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். உக்ரைனில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த மாணவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல பல நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. இந்தியாவும் ரஷ்ய இராணுவம் உக்ரைனை ஆக்கிரமிக்கும் முன்னர் மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தியது.

இந்த நிலையில் உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் இன்று காலை இடம்பெற்ற செல் வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவனே உயிரிழந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் என இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. கார்கிவ் உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும்.

இவ்வாறான நிலையில், ரஷ்யா, அந்த நகரில் வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பை ஆபத்துக்குள் தள்ளும் வகையில் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனரக வாகனத்துடன் கார் மோதி விபத்து : கார் சாரதி பரிதாபமாக பலி!!

விபத்து..

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற காருமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று (01) காலை 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்கு தந்தையான கனேஷபிள்ளை நிதிதாசன் (49வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கெப்பித்திகொள்ளாவ நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் தற்போது ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் எரிபொருள் நிலையங்களில் ஊழியர்களிற்கு கையூட்டு கொடுத்தே எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை : ராஜேஸ்வரன்!!

எரிபொருள்..

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை வழங்கும் ஊழியர்களிற்கு கையூட்டலை கொடுத்தே எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலமை ஏற்படுள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலமை தொடர்பாக வவுனியாவில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தனியார் பேருந்து தரப்பினராகிய நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவைகளை வழங்கிவருகின்றோம்.

குறிப்பாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் எமது பேருந்துகளுக்கான எரிபொருள் மிகவும் தாமதமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கின்றது. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளும் ஆரம்பமாக இருக்கின்றது. எனவே இந்த நிலைமை நீடித்தால் பாடசாலை மாணவர்களுக்கான சேவைகளை வழங்குவதிலும் பாரிய சிக்கல் நிலமை இருக்கின்றது.

எனவே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளை சுழற்சி முறையில் வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை அடுத்த வாரமளவில் கொழும்பில் இருந்து வடக்கிற்கு வரும் புகையிரதங்களின் சேவைகள் வீதிப்புனரமைப்பு பணிகளிற்காக இடைநிறுத்தப்படவுள்ளது. எனவே பயணிகள் மேலும் அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்ப்படும்.

எனவே கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வடக்கிற்குள் சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு உரிய நேரத்தில் எரிபொருள் கிடைப்பதற்கு ஆவண செய்யுமாறு வடமாகாண ஆளுனர் மற்றும் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை வழங்கும் ஊழியர்களிற்கு கையூட்டலை கொடுத்தே எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலமை இருக்கின்றது. எனவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் என்ன நடக்கிறது என்று பரிசோதனை செய்யுமாறு பொலிசாரை கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது வரை எமது முழுமையான சேவைகளை வழங்கி வருகின்றோம். ஓரிரு தினங்களில் எரிபொருள் சீராக கிடைக்காவிட்டால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே வழங்க வேண்டிய நிலை ஏற்ப்படும் என்றார்.

வவுனியா பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

வாழ்வாதார உதவிகள்..

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28.02.2022) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கினைப்புக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 45 குடும்பங்களுக்கு,

தையல் இயந்திரம், ஆடு கோழி வளர்ப்பிற்கான பணம், விவசாயத்திற்காக மோட்டர் மற்றும் வேலி முள்ளுக்கம்பி, சமையல் உபகரணங்கள், சலூன் உபகரணங்கள் , பிரிண்டர் , வாகன திருத்தும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன், வவுனியா மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் பத்மரஞ்சன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!!

தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம்..

இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இன்று (28.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களினால் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கபப்ட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினரொருவரால் மாணவர் ஒருவருக்கு வழங்குவதற்காக துவிச்சக்கரவண்டியொன்று மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி A9 வீதியில் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியின் வீதியோரத்திலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், விபத்தில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

விபத்து..

நுவரெலியா – ஹட்டன் வீதியில் நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் இரண்டு கனரக வாகனங்கள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (27) மாலை 6.00 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கனரக வாகனமொன்று பட்டிப்பொலயிலிருந்து கொழும்பு நோக்கி சிலிப்பர் மரக்கட்டையை ஏற்றிச் சென்ற போது செங்குத்தான ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு கனரக வாகனத்தை முந்திச் சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மற்றைய கனரக வாகனமும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு கனரக வாகனங்களிலும் பயணித்த இருவர் மற்றும் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கனரக வாகனத்தின் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் எரிபொருள் நிலையங்களில் டீசல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!!

டீசலுக்கு தட்டுப்பாடு..

வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று (28.02.2022) காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எரிபொருள் (பெற்றோல் மற்றும் டீசல்) இன்மை காரணமாக நகரிலுள்ள ஓர் எரிபொருள் நிலையம் மூடப்பட்டதுடன் ஏனைய எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை வேளையில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டுள்ளன.

அத்துடன் சில எரிபொருள் நிலையத்தில் டீசல் இல்லை என பாதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதன் காரணமாக சில எண்ணை நிரப்பு நிலையங்கள் முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் டீசல் தேடி ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கிச் சென்று வருவதாகவும் இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் 5 பேர் கைது!!

5 பேர் கைது..

வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை கண்காணிக்க பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மரக்கறிச்சந்தை பகுதியில் வைத்து கப் வாகனம் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் சோதனையிடப்பட்டது.

இதன்போது குறித்த வாகனத்தில் நிலத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படும் ஸ்கானர் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வவுனியா பொலிசில் ஒப்படைத்தனர்.

பியகமவை பகுதியைச் சேர்ந்த 4 பேரும், பிலியந்தலாவை பகுதியைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்ததுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்!!

கையெழுத்துப் போராட்டம்..

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28.02) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வவுனியாவின் இலுப்பையடி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, கனகராயன்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளிலும் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்துப் போராட்டத்தில் பங்கு பற்றினர்.

வவுனியாவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன்,

தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னனி தலைவர் கி.சேயோன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.