பாபிகியூ சாப்பிட்டு விட்டு உறங்கிய தம்பதி மரணம்!!

தம்பதி மரணம்..

குருணாகல் மாவட்டம் கொகரெல்ல பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணம் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த கணவன், மனைவி, தங்கியிருந்த ஹொட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினருடன் நுவரெலியா சென்றிருந்த இந்த தம்பதி உள்ளிட்டோர் நேற்று நள்ளிரவு வரை பாபிகியூ (Barbeque) அடுப்பில் இறைச்சியை சுட்டு சாப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் கணவனும் மனைவியும் கடும் குளிர் காரணமாக பாபிகியூ அடுப்பை அறைக்கு எடுத்துச் சென்று உறங்கியுள்ளனர்.

58 மற்றும் 59 வயதான இந்த தம்பதி மறுநாள் காலையில் எழுந்திருக்காத காரணத்தினால், குடும்பத்தினர் அவர்கள் தங்கி இருந்த அறையை திறந்துள்ளனர். அப்போது இரண்டு பேரும் இறந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்திய நுவரெலியா நீதவான், உடல்களை பிரேதப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது.

டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

அரச வங்கிகள் இரண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன் வழங்கினால், வங்கிகள் இரண்டின் வீழ்ச்சியை தடுப்பது கடினமாகிவிடும்.

அந்த இரண்டு வங்கிகளிடமிருந்தும் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி யோசனை முன்வைத்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை 56 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கூட்டுத்தாபனத்திற்கு மேலும் கடனுதவி வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதற்கும் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைப்பதற்காக எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளது.

வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது.

இதன்படி, நிறுவனங்களின் செயற்பாடுகளை காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணிவரை தொடரவும் யோசனைகள முன்வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலை செய்வதற்கும் முன்னதாக வீட்டிற்குச் செல்லும் திட்டத்தையும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

தனிப்பட்ட வாகனங்கள் பயன்படுத்துவதை குறைத்து பொதுப் போக்குவரத்தில் மக்களை திருப்பிவிடவும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஏற்பட்ட நெருக்கடி நிலை மற்றும் எரிபொருளை சிக்கமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பாரிய ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி முன்வைத்துள்ள யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் குறைந்த வயதில் இரு துறைகளில் சாதித்த தமிழன்!!

அனங்கன் சின்னையா..

ஜெர்மனியின் வடமேற்கு மாநிலத்தில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களைப் பெற்று தமிழ் இளைஞனான அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார்.

ஜெர்மனியின் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன் சின்னையா என்ற இளைஞன் தனது 29 ஆவது வயதில் மாஸ்ட லோ மற்றும் பட்டய கணக்காளராக (Master Low and Chartered Accountant) குறைந்த வயதில் கல்விப் புலத்தில் சாதனை படைத்துள்ளார்.

அனங்கன் சின்னையாவைக் கௌரவிக்கும் முகமாகக் கடந்த 22 ஆம் திகதி ஜெர்மனியின் வடமேல் மாநில நிதி அமைச்சு தனது உத்தியோகபூர்வ இலச்சினை பொறிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

இவர் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கை இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச்செயலாளரும் ஜெர்மனியின் இலங்கைக்கான குடிவரவு குடியகல்வு சட்ட ஆலோசனை நிறுவனத்தின் தலைவருமான தேசமானிய எம்.டி இராமச்சந்திரனின் ஒரே ஒரு புதல்வர் ஆவார்.

நாளையும் நீண்ட நேர மின்வெட்டு!!

மின்வெட்டு..

நாட்டில் நாளைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு,

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் காணி அமைச்சர் தலைமையில் நடமாடும் சேவை!!

நடமாடும் சேவை..

வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று காணி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இவ் நடமாடும் சேவை இன்று (27.02) காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.

வன்னியின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,

அவற்றிற்கு விரைவான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி காணி அமைச்சருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதன் போது வனவள திணைக்கள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட காணிகள் உட்பட வன்னி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு இதன்போது தீர்வு காணப்பட்டது.

குறித்த நடமாடும் சேவையில் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், காணி அமைச்சின் செயலாளர், காணி அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்,

வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர்கள், வடமாகாண பிரதம செயலாளர், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இணைய பயன்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

இணையவழி மோசடிகள்..

இலங்கையில் இணையவழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கையில் இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கணினி குற்ற விசாரணை பிரிவிற்கு நாளாந்தம் 15 முதல் 20 வரையான இணைய வழி குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைப்பதாக சி பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, இணைய வழி மோசடிகள் குறித்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், பிடியாணை உத்தரவு இன்றி கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் புகையிரத பாதைக்குள் நுழைந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!!

மாவிட்டபுரம் பகுதியில்..

யாழ். மாவிட்டபுரம் பகுதியில் புகையிரத பாதைக்குள் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்த குடும்பஸ்தர் மீது புகைரதம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி போடப்பட்டிருந்த பாதுகாப்பு கடவை பூட்டப்பட்டிருந்த நிலையிலும் குறித்த நபர் அதனை மீறி புகையிரத பாதைக்குள் நுழைந்துள்ளார்.

இதன்போது காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது. விபத்தில் பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் மரணம் : 103 பேர் காயம்!!

வீதி விபத்துக்களில்..

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் மரணமடைந்ததுடன், 103 பேர் காயமடைந்தனர் என வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பேரும் தொற்று காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மூலமாக வவுனியா மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் மூலம் 16 பேர் மரணித்துள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தும், 60 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இவ்வாறான விபத்துக்களின் மூலமாக சிறுவர்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்களே பாதிக்கப்படுகின்றனர். இது தவிர்ந்து கடந்த இரு மாதங்களில் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 4 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான ஒரு நிலை தொடருமாயின் இவ்வருடத்தில் 20 தொடக்கம் 25 மரணங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்காரணம்,

சட்டதிட்டங்களை மதிக்காத சாரதிகள் மற்றும் இரவு வேளைகளில் வெளிச்சங்கள் இல்லாத வாகனங்களில் பயணிப்பது போன்ற காரணங்களினால் இவை ஏற்படுகின்றது என்று தெரிவித்தார்.

உக்ரேனில் வாழும் இலங்கை மாணவன் விடுக்கும் உருக்கமான கோரிக்கை!!

உக்ரேனில்..

ரஷ்யா – உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் பல உக்ரேனியர்கள் அச்சத்திலும் பாதுகாப்பின்மையிலும் வாழ்கின்றனர். இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் இலங்கை இளைஞன் ஒருவர் தெரிவித்த கருத்து ஒன்றின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பகிரப்பட்டு வருகின்றது.

தக்ஷித் விஜேசேகர என்ற இலங்கை இளைஞனே இவ்வாறு குறித்த காணொளியை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக விடுதியில் நான் இருக்கின்றேன். நான் பாதுகாப்பாக இருக்கின்றேன். எனது நண்பர் ஒருவர் சுரங்க ரயிலில் உள்ளார். எங்கள் பாதுகாப்பு குறித்து தூதரகத்திடம் பேசியுள்ளேன்.

துருக்கி தூதரகம் எங்களை குறித்து ஆராய்ந்து பார்த்து வருகின்றது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். வெளியே நகரங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் என்னையும் தனது நண்பர்களை லிவிவ் நகருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து போலந்து எல்லை வழியாக இலங்கைக்குத் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.

புகையிரத, வாகன சேவைகள் போன்ற போக்குவரத்து சேவைகள் எதுவும் தற்போது இயங்கவில்லை . தன்னையும் தனது தரப்பினரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த காணொளி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் 4 மடங்காக அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வால் வழக்கத்தை விட வர்த்தகம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் தங்கத்தின் விலை நான்கு மடங்கு அதிகரிக்கிறது. அதற்கமைய, நாளொன்றுக்கு 5,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் டொலர்களுக்கு பதிலாக தங்கத்தை கொண்டுவரும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயரும் நிலை காணப்படுவதாகவும், நுகர்வோர் இந்த விலை உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் நகை வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக பட்டம் பெற சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி!!

பேராதனையில் இருந்து அக்மீமன பகுதியை நோக்கிச் சென்ற சொகுசு காரொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற சொகுசு காரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கார் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், அக்மீமன பகுதியைச் சேர்ந்த யு.கமகே ரத்னசேன என்ற 67 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 29 வயதுடைய மருத்துவ பட்டதாரி தனது குடும்பத்துடன் அக்மீமனவில் உள்ள தனது வீட்டிற்கு அதிவேக வீதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று பட்டம் பெற்ற 29 வயதுடைய மருத்துவ பட்டதாரி தனது குடும்பத்துடன் அக்மீமனவில் உள்ள தனது வீட்டிற்கு அதிவேக வீதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் காரின் பின் இருக்கையில் பயணித்தவர் எனவும் அவர் வாகனத்தை ஓட்டியவரின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நால்வரில் 29 வயதுடைய மருத்துவப் பட்டதாரியும், காரை ஓட்டிய அவரது சகோதரரும், அவர்களின் ஏழு, நான்கரை வயதுடைய மூன்று பிள்ளைகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்து : எட்டு பேர் வைத்தியசாலையில்!!

விபத்து..

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று, லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்கானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (26.02.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து கலேவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், திருகோணமலை மொரவெவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மொரவெவ பிரதேசத்தில் கிரவெல் ஏற்றும் லொறிகள் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று,

எரிபொருள் வரும்வரை உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சக லொறி சாரதி ஒருவர் லொறியை பின்புறமாக நிறுத்துவதற்காக சென்றபோது உறங்கிக் கொண்டிருந்த சக நண்பரை அவதானிக்காமல் டிப்பர் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த நபரின் தலைப்பகுதி டயர் ஓரத்தில் பட்டு காயங்ளுக்கு உள்ளான நிலையில் அவசர ஆம்புலன்ஸ் 1990 வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகின்றது.

குறித்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளவத்தையில் வெளிநாட்டு பெண் மர்மமாக உயிரிழப்பு : காதலனை தேடி இலங்கை வந்ததாக தகவல்!!

வெள்ளவத்தையில்..

வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் குளியலறையிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வெளிநாட்டு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நெதர்லாந்து பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நெதர்லாந்தை சேர்ந்த 67 வயதுடைய கலிடீன் நிஷா காடன் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சமூக வலைத்தளத்தினூடாக அறிமுகமான இலங்கை இளைஞரொருவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்த இப்பெண் அவரை தேடி இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் இலங்கை வந்து அந்த இளைஞருடன் வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தரணிக்குளத்தில் பொதுமக்கள் வீதியினை மறித்து போராட்டம்!!

தரணிக்குளத்தில்..

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் பொதுமக்கள் இன்று (26.02.2022) காலை 11 மணியளவில் தரணிக்குளம் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2001ம் ஆண்டு தரணிக்குளம் பகுதியில் 1/2 ஏக்கர் காணி வீகிதம் 250 குடும்பத்தினர் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் அவர்களின் வாழ்வதாரத்தினை மேம்படுத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் 2003ம் ஆண்டு தரணிக்குளம் பிற்பகுதியில் காடாக காணப்பட்ட புதியநகர் பகுதியினை காட்டினை வெட்டி விவசாயம் மேற்கொண்டிருந்ததடன் தற்போது 612 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 2014 ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தின் கீழ் பேராறு நீர் வழங்கல், வடிகாலமைப்பு திட்டத்தில் உள்வாக்கப்படும் காணிகளிற்குப் பதிலாக முதலியார்குளத்தில் 15 ஏக்கர் அரச காணியினையும் பத்தியார்குளத்தில் 120 ஏக்கர் அரச காணியினையும்,

கற்குளம் கிராமத்தில் 40 ஏக்கர் அரச காணியினையும் நெற் செய்கைக்காக வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டு பேராறு நீர்த்தேக்கமும் நிர்மானிக்கப்பட்டது.

கற்குளம் கிராமத்தில் 40 ஏக்கர் அரச காணியினை வழங்காது அவர்களை தரணிக்குளம் புதியநகர் பகுதியில் மேட்டுக்காணியில் குடியேற்றுவதற்கு பிரதேச செயலகத்தினர் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் 612 குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளனர். அரசாங்கத்தினால் பேராறு நீர்த்தேக்கத்தில் கீழ் வசித்தவர்களுக்கு நெற் செய்கைக்கான காணியே வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும்,

தற்போது 612 குடும்பத்தினர் வசிக்கும் மேட்டுக்காணியினை பிரதேச செயலகத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தரணிக்குளம் பிரதான வீதியினை வழிமறுத்த பொதுமக்கள் இருப்பதற்கு வீடு காணி இல்லை எமது காணியினைப்பிரித்து இன்னொருவருக்கு வழங்குவது சரியா?, நீங்களே எமது நிலத்தை தந்து விடுங்கள் இல்லையெனில் நாங்கனே அதனை எடுக்க வேண்டி வரும்,

வீடு இல்லை காணி இல்லை 60 ஏக்கர் காணியியை மீட்டுத்தா, 1/2 ஏக்கருக்குள் மீள்குடியேற்றம் செய்யும் பொழுது 250 குடும்பம் இன்று 570 குடும்பம் நாம் எங்கு சென்று வசிப்பது போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவன்னம் சுமார் 1 மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழில் மனைவி இறந்து 18வது நாளில் கணவர் திடீரென உயிரிழப்பு : உறவினர்கள் சோகம்!!

யாழில்..

மனைவி இறந்து 18ஆவது நாள் அவரது கணவரும் உயிரிழந்த விடயமானது அந்த குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றிரவு யாழ்ப்பாணம் அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

செல்வரத்தினம் பரமேஸ்வரி என்பவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2022.02.07அன்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சிறந்த உடல் ஆரோக்கியத்தோடு இருந்த அவரது கணவர், மகளிடம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு கதிரையில் உட்கார்ந்திருந்தவாறு உயிரிழந்துள்ளார்.

சிற்றம்பலம் செல்வரத்தினம் என்பவரே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட இந்த இரண்டு மரணங்களும் அக்குடும்பத்தையும் அப்பகுதி மக்களையும் மீளா துயருக்குள் தள்ளியுள்ளது.

வவுனியாவில் வெளிச்சமின்றி பயணித்த துவிச்சக்கரவண்டிகளுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கை!!

பொலிஸார் சட்டநடவடிக்கை..

வவுனியா மாவட்டத்தில் வெளிச்சமின்றி (லைட்) பயணித்த துவிச்சக்கரவண்டிகளை செலுத்துபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளமை வெளிச்சமின்றி பயணிக்கும் துவிச்சக்கரவண்டிகளே ஆகும்.

எனவே வவுனியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் துவிச்சக்கரவண்டிகளில் செல்வோர் டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தியிருக்கவேண்டும் எனவும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று (25.02.2022) இரவு 7.30 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலாக காலப்பகுதியில் வவுனியா வைரவப்புளியங்குளம் மற்றும் குருமன்காடு ஆகிய பகுதிகளில் விசேட பொலிஸார் கடமையில் ஈடுபட்டு,

வெளிச்சமின்றி (லைட்) பயணித்த துவிச்சக்கரவண்டிகளை செலுத்துபவர்களை வழிமறித்து அவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களை சேகரித்ததுடன் இரு தினங்களில்,

துவிச்சக்கரவண்டிக்கு டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தி வவுனியா பொலிஸ் நிலையத்தில் காண்பிக்க வேண்டும் எனவும் இதனை மீறி செயற்பட்டால் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தபடுவீர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வெளிச்சமின்றி துவிச்சக்கரவண்டியில் பயணித்த 30க்கு மேற்பட்டவர்களின் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.