வீதியில் நடைபயிற்சி சென்றவருக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் : ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சுவாரஸ்யம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல் ஷுக்லா. இவர் செங்கல் சூலை வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களுடன் வாக்கிங் சென்றுள்ளார்.

அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த வழியில் சுரங்கம் ஒன்று தென்பட்டுள்ளதையடுத்து சுரங்கத்தின் உள்ளே எதோ மின்னுவது போல இருந்திருக்கிறது. அப்போது அதை கையில் எடுத்து பார்த்த போது வைர கல் போன்று மின்னியுள்ளது.

ஷுக்லா கண்டுபிடித்த வைரம் 26.11 கேரட் இருப்பதாகவும் ஏலத்தில் இந்த வைரம் 1.20 கோடி வரையில் விலைபோகும் என்று கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து சுஷீல் ஷுக்லா கூறியதாவது, எங்களது குடும்பம் 20 வருடங்களாக வைர தேடலில் ஈடுபட்டு வருகிறது.

எங்களுக்கு கிடைத்த கற்களில் இதுதான் மிக பெரியது. இந்த வைர கல்லை ஏலம் விடுவதன் மூலமாக கிடைக்கும் பணத்தை கொண்டு புதிய தொழில் ஒன்று துவங்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் உயிரிழந்த மகன் : சோகம் தாங்காமல் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. கோயம்புத்தூரின் கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்.

இவரது மனைவி சரண்யா, இவர்களுக்கு 15 வயதில் ஷ்யாம் என்ற மகன் இருந்தான். கடந்த டிசம்பர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ஷ்யாம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் அழுது புலம்பியுள்ளனர் சத்யராஜ்- சரண்யா தம்பதியினர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு அளித்த தகவலின் பேரில், பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

யாழில் புகையிரதம் மோதி பெண் பலி, மற்றுமொரு விபத்தில் இளைஞன் பலி!!

விபத்து..

யாழ்.கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற 22 வயதான இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். கொக்குவில் தொழினுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் கோயில் சந்தையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாலிசந்தி வதிரி வீதியில் மாலிசந்தி நோக்கி வந்து கொண்டியிருந்த மோட்டார் சைக்கிளும், வதிரி சந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த பொறி ரக வாகனமும் மோதிய நிலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்துக்குள்ளான இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது உயிரிழந்துள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் வீடு ஒன்றின் குளியல் அறையில் இருந்து அரிய வகை கடலாமைகள் மீட்பு!!

எழுத்தூர் பகுதியில்..

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளே இவ்வாறு நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மீட்கப்பட்ட ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன், ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோகிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடலாமைகள் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் எவரும் இருக்கவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேருந்து குடைசாய்ந்ததில் 6 பேர் படுகாயம்!!

விபத்து..

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று (24.02.2022) காலை இடம்பெற்றுள்ளது. குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருணாகல் மற்றும் நாரம்பல பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும், ஒரு சிறுவருமே காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகலையிலிருந்து திருகோணமலை சேருவில விகாரையை பார்வையிட்டு குருணாகலுக்கு திரும்பும் போதே பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை பெண்ணுக்கு கிடைத்த பிரித்தானியாவின் உயரிய விருது!!

சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக்கு, தன்னார்வத் தொண்டர்களுக்கான பொதுநலவாய விருதின் மூலம் இரண்டாம் எலிசபெத் மகாராணி அங்கீகரித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதற்கும் பராமரிப்பதற்கும் எதிரிசிங்க, தன்னார்வ சேவைக்காக 211வது பொதுநலவாய விருது வழங்கப்படுவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

38 வயதான இவர், 110 தன்னார்வ தொண்டர்கள் குழுவின் ஆதரவுடன் 1,500 குழந்தைகளுக்கான சிறுவர் இல்லமொன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில், குறித்த விருதினை பெறுவதில் நான் மகிழ்ச்சியும், பாக்கியமும் அடைகிறேன் என டெபோரா எதிரசிங்க தெரிவித்துள்ளார்.

“என்னைப் பரிசீலித்ததற்கும், அங்கீகரித்ததற்கும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் பெண்களுடனான எனது பணி அதன் வளர்ச்சியையும், ஆதரவையும் வழங்கியமைக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், வளர்ப்பு மற்றும் ஆதரவு சமூகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அவரது பணி பாராட்டத்தக்கது” என்று பிரித்தானிய உயர் ஆணையர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உதவும் இந்த சிறந்த பயணத்தைத் தொடர அவரை வாழ்த்துகிறேன்.” எனவும் பிரித்தானிய தூதுவர் கூறியுள்ளார்.

பலரையும் சோகத்திற்குள்ளாக்கிய ஆசிரியரின் மரணம் : மகளின் உருக்கமான கடிதம் வெளியானது!!

வே.மகேஸ்வரன்..

நுவரெலியா – ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் 200 வருடங்கள் பழமையான ஆல மரக்கிளையொன்று விழுந்து உயிரிழந்த ஆசிரியரின் உடல் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றையதினம் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, அவரின் சவத்தினை தாங்கிய பேழையில் அவரது மகள் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. “எனது அன்புள்ள அப்பா, நீங்கள் இல்லாமையை நான் உணர்கின்றேன். நான் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெறுவேன் என உங்கள் மீது சத்தியம் செய்கின்றேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் வே.மகேஸ்வரன் என்ற 39 வயதான ஆசிரியர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டம் ஒன்றையும் சம்பவதினத்தன்று முன்னெடுத்திருந்தனர். எனினும் பொலிஸார் வழங்கிய உறுதிமொழிக்கமைய மேற்படி போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது.

தலவாக்கலை பிள்ளையார் ஆலய பகுதியில் அமைந்துள்ள மரத்தை அகற்றும் சந்தர்ப்பத்தில், வீதி தடைகள் எதுவும் தகுந்த முறையில் இடவில்லை எனவும், இந்த மரத்தை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது எனவும் கோரி, பிரதேசவாசிகள் தொடர்ந்தும் முரண்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கஹாவத்தை இரத்தினக்கல்!!

இரத்தினக்கல்..

கஹாவத்தை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி கஹாவத்தை பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த இரத்தினக்கல்லின் மொத்த எடை 510 கிலோ கிராம் என்புது குறிப்பிடத்தக்கது.

இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்நூல் ரக இந்த இரத்தினக்கல் தொகுதி கடந்த ஆண்டு இரத்தினபுரி கஹாவத்தையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லாக இந்த இரத்தினக்கல் கருதப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!!

சமையல் எரிவாயு..

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 6,000 மெற்றிக் டன் எரிவாயுவை விடுவிப்பதற்கு தேவையான டொலர்கள் இன்று வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயுவை விடுவிப்பதற்காக சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்ட போதிலும், நேற்று பிற்பகல் வரை இலங்கை மத்திய வங்கி எந்தவொரு டொலர்களையும் வழங்கவில்லை.

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு எரிவாயுவுடனான கப்பல்கள் தற்போது இலங்கையின் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரத்திற்கமைய நிறுவனத்திடம் 2000 மெற்றிக் டன் எரிவாயு மாத்திரமே உள்ளது. அவசியமான எரிவாயுவை இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கைகளை விடுத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!!

பொருளாதாரத் தடை..

உக்ரைனுக்கு எதிராக யுத்தத்தை ரஸ்யா ஆரம்பித்துள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ‘பாரிய பொருளாதார தடைகளை” விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் இதனை தெரிவித்துள்ளார். இன்று, ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக “பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளின் தொகுப்பு” வழங்கப்படும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த தடைகள் மூலம், முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைத் தடுத்து ரஷ்யப் பொருளாதாரத்தின் மூலோபாயத் துறைகளை குறிவைக்கப்படும்.

அத்துடன் ரஷ்யாவின் பொருளாதாரத் தளத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை ரஷ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய – உக்ரைன் போர் ஆரம்பம்.. சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்.. உள் நுழைந்துள்ள ரஸ்ய படைகள்!!

ரஸ்ய – உக்ரைன் போர்..

ரஸ்ய படைகள் நடத்திய குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன்போது 19 பேரையும் காணவில்லை. மரியுபோல் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உகரேய்ன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இந்தநிலையில் ரஸ்யாவின் இராணுவ கான்வாய்கள் எல்லையை கடப்பதாக உக்ரைனின் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

வடக்கு செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகளிலும், கிழக்கு லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளிலும் ரஸ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததாக உக்ரைனின் எல்லைக் காவல் சேவை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அது கூறுகிறது.

இதன் காரணமாக உக்ரேனிய எல்லைப்படையினர் பலர் காயமடைந்துள்ளனர் இந்தநிலையில் உக்ரைனின் எல்லை படையினரும்; ஆயுதப் படையினரும்”எதிரிகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன” என்று உக்ரைனின் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஸ்யாவின் வான்வழித் தாக்குதலை எதிர்த்து தனது விமானப்படை போராடி வருவதாக உக்ரைன் இராணுவத்தின் அறிக்கைக்கு ரஸ்ய படையினர் பதில் வழங்கியுள்ளனர். அதில் “உக்ரேனிய ஆயுதப்படைகளின் வான் பாதுகாப்பு ஒடுக்கப்பட்டது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

உக்ரேனிய எல்லைப் படைகள், ரஸ்ய படைகளுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை” என்று ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் ரஸ்யாவின் இந்த உரிமைகோரல்களுக்கு சுயாதீன உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று பி பி சி கூறுகிறது. ரஸ்யாவின் ஐந்து விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் கூறுகின்றன.

“அமைதியாக இருங்கள் மற்றும் உக்ரைன் படையினரை நம்புங்கள்” என்று உக்ரைன் படைகளின் அறிக்கை பொதுமக்களை கேட்டுள்ளது. எனினும் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறுத்துள்ளது.

உக்ரெய்ன் தலைநகரில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் ரஸ்யாவின் தாக்குல்களை அடுத்து கெய்வ் தலைநகரில், அவசரகால ஒலி ஒலிக்கப்பட்டது, மேலும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலர் தாங்கள் பதுங்கிடங்களுக்கு விரைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்வதை தொலைக்காட்சிகள் காண்பித்துக்கொண்டிருகின்றன.

சர்வதேசத்திடம் உக்ரேய்னின் கோரிக்கை ரஸ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டிய பட்டியல்” ஒன்றை ட்வீட் செய்துள்ளார். “உலகம் உடனடியாக செயல்பட வேண்டும்” அத்துடன் “ஐரோப்பாவின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்விஃப்ட (SWIFT) நிதி பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதில் இருந்து ரஸ்யாவை தடை செய்வது உட்பட, அந்த நாட்டின்; மீது உடனடி தடைகளுக்கு” குலேபா அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளரின் வீட்டில் பட்டப்பகலில் வீடு உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு!!

திருட்டு..

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடு உடைத்து பணம், நகைகள், கமரா என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி அறிக்கையிடல் ஒன்றுக்காக காலை 10.50 மணிக்கு வீட்டில் இருந்து சென்றுள்ளார். கணவர் வர்த்தக நிலையத்திற்கும் பிள்ளைகள் தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் மதியம் 12.15 மணியளவில் கடமை முடிந்து தனது பிள்ளையுடன் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து காணப்பட்டுள்ளது.

வீட்டின் இரு அறைகளிலும் காணப்பட்ட அலுமாரிகள் உடைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களும் பரவிக் காணப்பட்டுள்ளன.

அத்துடன், வீட்டில் இருந்த சங்கிலி, மோதிரம், கைச்செயின், தோடு உள்ளிட்ட 14 பவுண் நகைகள், 42 ஆயிரம் ரூபாய் பணம், கமரா, தொலைபேசி, பென்ரைவ் உள்ளிட்ட பல லட்சம் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருந்தன.

இதனையடுத்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் பொலிசார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளம்பெண் கொலை : பெற்ற மகனை ஆதாரத்துடன் போலீசில் மாட்டிவிட்ட தந்தை!!

மும்பை..

இந்தியாவில் இளம்பெண்ணை கொன்ற வழக்கில தனது மகனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவரது தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

மும்பையின் மிஸ்குய்ட்டா பகுதியை சேர்ந்தவர் கேரல்(வயது 29), கடந்த மாதம் 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை.

எங்கு தேடியும் கேரல் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேரலை தேடி வந்ததில்,

கடந்த 3ம் திகதி பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் சடலமாக இருந்ததை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து நடந்த பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக கேரலின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் தகவல்களை ஆய்வு செய்ததில் கடைசியாக ஜீக்கோ(வயது 27) என்பவருடன் இருந்தது தெரியவந்தது.

அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர், இதற்கிடையே தன்னுடைய வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஜீக்கோவின் தந்தை அன்சேம் ஆராய்ந்துள்ளார்.

அப்போது, சம்பவ தினத்தன்று ஜீக்கோ பைக்கில் வெளியே சென்றது தெரியவந்தது, இதனையடுத்து ஜீக்கோவின் மடிக்கணனியை எடுத்து சோதனை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

உடனடியாக போலீசுக்கு போன் செய்த ஜீக்கோவின் தந்தை, தன் மகன் தான் குற்றவாளி என்றும், ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜீக்கோவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில்,

கேரலை காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொள்ளுமாறு அதிக அழுத்தம் கொடுத்த காரணத்தால் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். தன் மகன் தான் குற்றவாளி என்று தெரிந்ததும், தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையரின் பெருமளவு பணம் கற்பாறைக்குள் கண்டுபிடிப்பு!!

கற்பாறைக்குள் பணம்..

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாறை ஒன்றின் கீழ் இருந்து 80 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளள்னர்.. பாணந்துறை குற்ற விசாரணை பிரிவினரால் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மறைந்திருந்து பாரியளவு போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பாணந்துறை சலிது என்பவருக்கு சொந்தமானதென கூறப்படும் பணமே இவ்வாறு கண்டுபிடிக்ககப்பட்டுள்ளதென குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சலிதுவின் போதை பொருள் வர்த்தகத்திற்கு உதவும் பிரதான உதவியாளர் பணம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, அந்த நபரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு அருகில் குருப்புமுல்ல விகாரையின் கற்பாறையின் கீழ் பாரிய அளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் : அமைச்சர் ரமேஷ் பத்திரன!!

எரிபொருள் விலை..

விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் எனவும், இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பதற்றங்களின் பின்னணியில் உலக சந்தையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலையைத் திருத்துவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை. எவ்வாறாயினும், அத்தகைய திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கோவிட் வைராஸால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

கோவிட் வைராஸால்..

கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்ட அனைவரின் மரணத்திற்கும் கோவிட் தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழந்தவர்களில் பலர் சிறுவயது முதல் நாட்பட்ட நோய்களுக்கு நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு மரணிப்பவர்களுக்கு சிறுநீரக நோய் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் மரணத்துக்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக விசேட வைத்தியர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் தொற்றுக்குள்ளானதன் பின்னர், நீண்டகால நோய்களில் ஏற்படும் சிக்கல்களினால் இவர்கள் உயிரிழப்பதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு இதுவரையில் செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசியை பெறாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் மேற்கொள்ள வேண்டும் என்றும், அது பொறுப்புள்ள பிரஜைகளின் கடமை மற்றும் சமூகப் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.