இலங்கையில் இரண்டு மர்மமான சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!!

சுரங்கங்கள்..

தெனியாய, விஹாரஹேன பிரதேசத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஹாரஹேன – ஆராதெனிய வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்காக வீதியின் இருபுறமும் கரைகள் வெட்டப்படும் போதே ஆரதெனிய சந்திக்கு அருகில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப்பாதைகள் ஆரம்பத்தில் இரண்டு சுரங்கப்பாதைகளாக இருப்பதாகவும், சுரங்கப்பாதையின் இறுதிப்பகுதி வெளியில் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந்த சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுரங்கங்கள் எப்போது கட்டப்பட்டன? அல்லது இயற்கையானதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதேவேளை, குறித்த சுரங்கப்பாதைகள் தொடர்பில் ஆய்வு செய்ய இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இளைஞர் குழு அட்டகாசம் : இருவர் காயம்!!

வைரவபுளியங்குளம் பகுதியில்..

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.’

நேற்று (22.02) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் இளைஞர் குழு வீதியில் நின்று அடிதடியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதியாகவும், பல கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதியாகவும் உள்ள இடத்திலேயே இந்த அட்டகாசம் இடம்பெற்றுள்ளது.

பொல்லுகள், போத்தல்கள், கல்லுகள் கொண்டு குறித்த குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் குழுவின் அட்டகாசம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு அப் பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்த போதும் தாமதமாக வந்த பொலிசார் கைகலப்பில் ஈடுபட்டவர்களை அவ் விடத்தில் இருந்து விரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் காணப்படுவதாக தெரிவித்து வரும் நிலையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதும்,

அவர்கள் சீராக அப்பகுதியில் கடமையில் இல்லாமை காரணமாகவே குறித்த அசம்பாவிதங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை!!

மின் தடை..

நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டை ஆணையம் அனுமதித்துள்ளது.

அதற்கமைய, சில வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணையத்தின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் நாட்டில் இதே போன்ற நிலைமை நீடித்தால் 7 மணித்தியால மின் தடை அமுல்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதென தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதிகாலை 4.30 மணிக்கு கனவு கண்ட இளைஞன் : காலையில் எழுந்தபோது காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

கனடா..

கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அதிகாலை 4.30 மணிக்கு அடித்துள்ளது. அதை அவர் கனவு என நினைத்து மீண்டும் உறங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது எத்தனை மணிக்கு வரும் யாரும் கணிக்க முடியாது. முந்தைய நாள் வரைக்கும் சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவர்கள் கோடீஸ்வரராக மாறும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது.

கனடாவின், ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் 33 வயதான அரவிந்த ராகேஷ் கஸ்தூரி. இவரின் வாழ்க்கையில் சில நாட்களுக்கு முன் அசாதாரண சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

எப்போதும் போல இரவு உறங்க தொடங்கிய அரவிந்திற்கு அதிகாலை 04.30 மணிக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. மின்னஞ்சல் கேட்டு ஒலி கேட்டு பாதி தூக்கத்தில் இருந்து எழுந்த அரவிந்த் என்ன ஈமெயில் என்று பார்த்துள்ளார்.

அப்போது, லொடோ 6/49 லொட்டரி குலுக்கலில் ஒரு லட்சம் டாலர் பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார் அரவிந்த். அதன் பின் மறுநாள் காலை எழுந்தவுடன் தான் மின்னஞ்சலை ஓபன் செய்தது, லாட்டரி விழுந்த மின்னஞ்சல் எல்லாமே கனவு என நினைத்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அரவிந்த ராகேஷ் கஸ்தூரி, ‘மின்னஞ்சலை பார்த்த மறுநாள் வரை எனக்கு நடந்த சம்பவங்கள் எல்லாமே கனவு போல இருந்தது. கனவு என்று நினைத்த நான் மீண்டும் இமெயில் செக் செய்ய விரும்பவில்லை.

அதனால் நான் என் போனை அப்படியே தூரமாக தூக்கி வைத்துவிட்டேன். பின்னர் அடுத்தநாள் அதை பார்த்த போது எனக்கு வார்த்தையே வரவில்லை, அதிர்ச்சியாகி விட்டேன். ஏனென்றால் எனக்கு விழுந்த பரிசு தொகை அந்த மாதிரி.

இந்த நிகழ்வை என் மனைவியும் இதை முதலில் நம்பவில்லை, சரியாக பார்த்து உறுதிப்படுத்த சொன்னார். நான் பரிசு தொகையில் புதிய வீடு வாங்கவுள்ளேன், என் வாழ்வில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியாக நான் இதுவரையில் இருந்ததில்லை’ என கூறியுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் : பெற்றோர் பொலிசில் முறைப்பாடு!!

குழந்தை மரணம்..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையின் கவனயீனத்தாலேயே மரணம் சம்பவித்ததாக தெரிவித்து குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனுக்கு சுகவீனம் ஏற்ப்பட்டநிலையில் நேற்றயதினம் இரவு வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளான். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் முரண்பட்டதுடன் வைத்தியசாலையின் கவனயீனத்தினாலேயே குழந்தை மரணமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தமது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டினையும் பதிவுசெய்துள்ளனர். சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த டினோஜன் அக்சயன் என்ற 9 மாத குழந்தையே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் கலந்துரையாடியதுடன் குறித்த குழைந்தையின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நாளை முதல் நாடு முழுவதும் 4 மணிநேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு!!

மின்வெட்டு..

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து நாளையதினம் (23.02.2022) மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒரு சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 30 நிமிட மின்வெட்டும் மேலும் சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 40 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்த, இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டை 11 வலயங்களாக பிரித்து இரண்டு கட்டங்களில் புதிய நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய A,B,C பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய பகுதிகளான P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சிறு வயதில் இருந்து திருமண ஆசை : 66 வயதில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த முதியவர்!!

ஒடிசா மாநிலம்..

இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின்.

5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. 66 வயதாகும் இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஒரு பெண், தனது கணவர் குறித்து ஒரு புகார் கொடுத்தார்.

தன்னுடைய கணவர் பல பெண்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் ரமேஷ் குமாரை கைது செய்தனர்.

அப்போது இவர் 14 பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மொத்தம் 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஒடிசா மாநில உதவி பொலிஸ் ஆணையர் சஞ்சீவ் சத்பதி கூறும்போது, ரமேஷ் குமார் ஒரு விலாசத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இல்லை.

தன்னுடைய இடத்தை அடிக்கடி அவர் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். அவர் இதுவரை 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பெண்களை பணத்துக்காக மணம் முடித்து இருப்பதும் கேரளாவில் 13 வங்கிகளிடம் சுமார் ஒருகோடி ரூபாய் மோடி செய்ததும்,

128 போலி கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதும் தெரிந்து பொலிசாரே அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஹைதராபாதில் எம்.பிபிஎஸ் படிப்புக்கு இடம் பிடித்து தருவதாக சுமார் 2 கோடி ரூபாய் வசூலித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிசார் கூறியுள்ளார். விசாரணைக்கு பிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளியல் அறையில் கேட்ட அலறல் சத்தம் : விடுமுறையில் ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

திண்டுக்கல்..

இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ்.

இவர் அதே ஊரில் கேபிள் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 22 வயதில் நிவேதா என்ற மகளும் 17 வயதில் சபரி என்ற மகனும் உள்ளனர். நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்,

நிவேதா குளியல் அறைக்கு சென்று கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த நிவேதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து நிவேதாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அந்த மாணவி செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம் : அதிர்ச்சி சம்பவம்!!

கேரளா..

இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிப் (41).

என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் ஆஷிப் சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டினார்.

ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் பொலிசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பொலிசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் இருந்து நச்சுத்தன்மை உடைய வாயு வெளியேறியது. இதனால் போலீசாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீசார் வெளியே சென்றனர். பின்னர் வீட்டுக்குள் விஷவாயு படர்ந்து இருப்பதை உணர்ந்த அவர்கள்,

முதற்கட்டமாக அதனை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது ஜன்னல் இடுக்குகளில் காற்று வெளியேறாதவாறு டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் அதனையும் அகற்றி வீடு முழுவதும் பரவியிருந்த விஷ வாயுவை வெளியேற்றிய பிறகு பொலிசார் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு ஒரே அறையில் ஆஷிப் உள்பட 4 பேரும் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் 4 பேர் உடல்களையும் பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், விஷ வாயுவை வீட்டுக்குள் நிரப்பி 4 பேர் தற்கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடன் தொல்லை காரணமாக ஆஷிப் இந்த விபரீத தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண் : திருமணத்தின் பின்னர் நடந்த சோகம்!!

பேஸ்புக் மூலம்..

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த தமிழக வாலிபரை கரம் பிடித்துள்ளார் இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி. சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன்,

இவருக்கும் இலங்கை பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பானது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா விசா மூலம் சேலம் வந்தடைந்தார் நிஷாந்தினி, அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது,

திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே விசா காலமும் விரைவில் முடிவடைவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இலங்கையர்கள் பரிதாபமாக பலி!!

விபத்தில்..

ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ருமேனியாவின் ஹொரியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து மேற்படி இரு இலங்கையர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது. குறித்த இருவரும் வீதியோரமாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது எதிரில் வந்த மகிழுந்து,

அவர்களை மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது. ருமேனியாவில் பணியாற்றிவந்த இலங்கையர்கள் இருவரே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

வாகன இறக்குமதி..

எதிர்காலத்தில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் போது, இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளுர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதில் இணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி என்ற வகையில், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி நான் எப்போதும் சிந்தித்துள்ளேன்.

மேலும், வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் போது, ​​எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாகவே இருக்கும். எதிர்காலத்தைப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

“அன்னிய செலாவணி உருவாக்கம், முதலீட்டு ஊக்குவிப்பு, ஏற்றுமதி வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போதுமான உரம் வழங்கல், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

உலகளாவிய தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து அரசாங்கம் தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது வர்த்தக சமூகம் சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் தவறான கருத்துக்களை திருத்த முடியும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. விலைக் கட்டுப்பாட்டில் இருந்து விலகும் அரசின் முடிவை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மொத்தமாக எரிபொருளை பெற்றுக்கொள்வது சவாலான விடயம் எனினும் அபிவிருத்தி மற்றும் தொழில்துறைக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் பேரூந்துக்காக காத்திருந்த பெண் மீது மோதிய லொறி : பெண் பரிதாபமாக பலி!!

பெண் பரிதாபமாக பலி..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (22.02.2022) காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்து கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.

விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துயா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்த்தி அதிக வேகமாக வந்தநிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றும் பல மணிநேரம் மின்தடை : தீவிரமடையும் மின்சார நெருக்கடி!!

மின்தடை..

இலங்கையில் மின்சார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அதற்கமைய இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய தினம் நாடு முழுவதும் 11 வலையமைப்புகளில் தலா 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. 541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“நேற்று இரவு அதிகபட்சமாக 2,150 மெகா வோட் மின்சார தேவை காணப்பட்டது. இரவு நேரத்தில் அதிகபட்ச மின் தேவை 2,700 மெகா வோட் வரை அதிகரிக்கலாம் என்பதால், அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்கும் நெருக்கடிக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான எரிபொருள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். மற்றொரு காரணம், நீர்மின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளமையாகும்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 22 வீதமாகவும், சமனல ஏரியின் நீர்மட்டம் 32 வீதத்திலிருந்து 9 வீதமாகவும், மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 45 வீதத்திலிருந்து 4 வீதமாகவும் குறைவடைந்துள்ளமை நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

ரன்னெகல நீர்த்தேக்கத்தில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகமான நீர்மட்டம் காணப்படுகின்றது. இதனால், அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

07 மின் உற்பத்தி நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை. களனிதிஸ்ஸ சுழற்சி மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெப்தாவும் நேற்று இரவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால், தற்போது ஒரு சில மின் உற்பத்தி நிலையங்களில் மாத்திரமே போதுமான எரிபொருள் இருப்பது நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தரம்பெற்ற அதிபர் சங்கத்தின் (GPA) கூட்டம்!!

அதிபர் சங்கத்தின் கூட்டம்..

தரம்பெற்ற அதிபர் சங்கத்தின் (GPA) வவுனியா மாவட்டத்திற்கான கூட்டம் தரம்பெற்ற அதிபர் சங்கத்தின் தலைவர் திரு நிமல் முதுன் கொட்டுவ மற்றும் உபசெயலாளர் திரு சாலிஹீன் அகமது ராஜீ தலைமையில் வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்று (21.02.2021) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் வவுனியா தெற்கு மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலய அதிபர்கள் பங்குபற்றியிருந்ததுடன் அதிபர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகளும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் சங்கத்துக்கான புதிய அங்கத்தவர்களை இணைத்தல் மற்றும் மாவட்ட இணைப்பாளர், வலய இணைப்பாளர்கள் மற்றும் கோட்டமட்ட இணைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மின்துண்டிப்பு தொடர்பில் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!!

மின்துண்டிப்பு..

நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இதன்படி, ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும்,

ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.