வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்!!

முன்பள்ளி ஆசிரியர்கள்..

சம்பள அதிகரிப்பு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், வடமாகாண ஆளுனரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

வவுனியா, பூங்கா வீதியில் உள்ள ஆளுனரின் பிராந்திய அலுவலகம் முன்பாக இன்று (21.02) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ‘முன்பள்ளி கலைத்திட்டத்தை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்?, இன்றைய விலை வாசியில் 6000 ரூபாய் போதுமனதா, உழைப்பிற்கான ஊதியமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும்,

கல்விப் பயணத்தின் முதற்படியான ஆசிரியர்களை முழுமையாக்குங்கள’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களாக பல வருடங்களாக நாம் பணியாற்றுகின்ற போதும், உதவித் தொகையான வெறும் 6000 ரூபாய் மட்டுமே எமக்கு கிடைக்கின்றது.

தற்போதைய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் இந்த 6000 ரூபாய் பணத்தை வைத்து நாம் எவ்வாறு குடும்ப சீவியத்தை கொண்டு நடத்த முடியும்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் என பலரும் சேவை நோக்கத்தோடு பணியாற்றி வருகின்றோம். எனினும் எம்மால் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாது.

எமது குடும்பங்கள் பட்டினியால் இறக்கும் நிலை வரும். எனவே எமக்கான சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு நாம் இந்த அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை மட்டுமே தருகிறார்கள் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா அவர்களது கோரிக்கை தொடர்பான மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன், ஒரு வாரத்திற்குள் தீர்க்கமான முடிவினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

வழி தவறி பயணித்த வான் விபத்து : 5 பேர் பலத்த காயம்!!

விபத்து..

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில்,

அதில் பயணம் செய்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை – கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே அவர்கள் பயணம் செய்த வான் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாத்தறை – கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வானில் 12 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெறும்போது அனைவரும் நித்திரையில் இருந்ததாக, அதில் பயணம் செய்த ஒருவர் தெரிவித்துள்ளார். யாத்திரையை முடித்துவிட்டு பொகவந்தலாவ – பலாங்கொடை வழியாக மாத்தறை செல்ல தீர்மானித்த இவர்கள் வழி தவறி சாமிமலை வீதியின் ஊடாக சென்ற வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து : முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்!!

ராஜஸ்தானில்..

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர்.

தகவல் அறிந்த கோட்டா போலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், உஜ்ஜயினில் நடக்கவிருந்த திருமணத்துக்காக சென்ற போது காலை 7.30 மணியளவில் விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள கோட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு பணித்திருக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என டுவிட் செய்துள்ளார்.

Kishan Gopal-ன் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகனுக்கு திருமணம் ஆகவில்லை. அவரது இளைய மகனான Avinash Valmikiயே மணமகன் ஆவார், கடந்த ஞாயிறன்று Neha என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமண சடங்களுக்காக அனைவரும் தயாரான நிலையில் மணமகனின் கார் வர தாமதம் ஆனதால், அவரது மாமாவை விட்டு விட்டு மணமகனை உறவினர்களுடன் வேறொரு காரில் அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளார் Kishan Gopal.

அனைவரும் உற்சாகமாக புறப்பட்ட நிலையில், அதிகாலையில் விபத்து நடந்துள்ளது, இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம் Avinashன் மாமா. இந்த விபத்தில் மணமகன், மணமனின் சகோதரர், மணமகனின் மச்சான் உட்பட 9 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் கவிழ்ந்த கார்.. மணமகன் உட்பட 9 பேர் பலி : திருமணத்துக்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்!!

ராஜஸ்தானில்..

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். இரவு நேரம் என்பதால் கார் விபத்துக்குள்ளானது குறித்து யாருக்கும் தெரியவில்லை என தெரிகிறது.

வெகு நேரத்திற்கு பிறகு கார் விபத்து குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ், மாவட்ட நிர்வாகம், மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் விரைந்தனர்.

பின்பு, ஆற்றில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும், ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்த 9 பேரின் சடலங்களையும் எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகளை அழைத்து வருவதற்காக சென்ற போது நடந்த இந்த விபரீத சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் பெண்ணொருவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இராணுவத்தினரால் கடை கையளிப்பு!!

கடை கையளிப்பு..

வவுனியாவில் வசிக்கும் அன்னையொருவருக்கு இராணுவத்தினரின் நிதி உதவியுடன் மரக்கறி கடை ஒன்று கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா – கனகராஜன் குளத்தில் வசிக்கும் விக்னேஸ்வரி இராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மரக்கறி கடை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடைக்கப்பட்டு அங்கு இருந்த பொருட்கள் திருடப்பட்டது.

இதனையடுத்து குறித்த அன்னையின் வாழ்வாதாரம் பின்தங்கியிருந்ததையடுத்து குறித்த பகுதியில் உள்ள 561 வது காலாட்படை படையின் தளபதியும், இராணுவத்தினரும் இணைந்து மரக்கறி கடையினை புதிதாக அமைத்து நேற்று முன்தினம் (18.02.2021)குறித்த அன்னையிடம் கையளித்துள்ளார்கள்.

குறித்த கடை கையளிக்கும் நிகழ்வில்56 ஆவது படை பிரிவை சேர்ந்த 561 மற்றும் 562 காலாட்படையின் தளபதிகள், 16 ஆவது சிங்க றெஜிமன்ட் மற்றும் 17 ஆவது விஜயபாகு றெஜிமன்ட் ஆகிய படை பிரிவின் கட்டளை அதிகாரிகள், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் பெருந்திரளான பெண்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாடு!!

பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாடு..

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட மகளிர் மாநாடு பெருந்திரளான பெண்களின் பங்கேற்புடன் வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை (19.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.

வன்னி தேர்தல் மாவட்டத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவிலான பெண்கள் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மகளிர் மகத்துவத்தை உலகறியச் செய்யும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தை உயிரோட்டமாக்கும் வகையில் இம் மாநாடு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி கூட்டம் ஒன்றில் முதன் முதலாக அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

l

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாளைய தினம் தென் மாகாணத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நாளைய தினம் நாடு பூராகவும் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்றும் தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தாா். நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே தென் மாகாணத்தில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான நேரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் அவ்வாறு ஏனைய பகுதிகளில் நாளை மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டி தேவை ஏற்பட்டால்,

பிற்பகல் 12 மணிக்கு முன்னா் அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினாா். தற்போது கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டாா்.

மரண அறிவித்தல் : சங்கரலிங்கம் மகாதேவி!!

யாழ்.சரவணையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பெரேரா வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் இல.40A, இரண்டாம் குறுக்குத்தெரு வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சங்கரலிங்கம் மகாதேவி அவர்கள் கடந்த (18.02.2022) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சங்கரலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மகளும் திரு.திருமதி தம்பையா அவர்களின் பாசமிகு மருமகளும்,

சிவசுதன், தயா, லதா, கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்றவர்களான இரட்சணிய தேவி, கிருபா தேவி, தவநாயகம், கமலாதேவி மற்றும் தற்பரா தேவி [கொழும்பு] ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ஸ்ரீதீபா, ஜீவாகரன், குகநாதன்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கலைமகள் அவர்களின் அன்பு மைத்துனியும்,

நிருஷா, ரேணுஷா, சாயிதன், ஜெனிபர், ஜெரோஜிதா, அனிஷா, அனுஜன், அருஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21.02.2022 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இல.40A , இரண்டாம் குறுக்குத்தெரு, வவுனியாவில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயன்(வவுனியா) – மருமகன்
Mobile:+94771605110
Mobile:+94774053666

வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திரக் கட்சியின் மாநாடு!!

உயர்தரப் பரீட்சைக்கு இடையூறு..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாட்டால் சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நகரசபையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்து மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறின்றி கட்சியின் மாநாட்டை நடாத்துமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (19) காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பிக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

எனினும் மண்டபத்தில் ஒலி பெருக்கியின் அதிக சத்தத்தினால் அருகிலுள்ள வைசப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களிடம் பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பரீட்சை இடம்பெற்று வருகின்றது. எனவே ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்துக்கொண்டு மாநாட்டை நடாத்துமாறு நகரசபையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஒருசில மணித்தியாலயத்தின் பின்னர் கட்சியின் மாநாடு முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது. இருப்பினும் மாநாட்டிற்கு வாகனங்களில் வருகைதந்த போது பரீட்சை மண்டபத்தில் இருந்து மாணவர்கள் வெளியே எட்டிப்பார்த்த வண்ணம் இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமால் சிறீபால, தயாசிறி ஜெயசேகர,
துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நண்பனின் மனைவியை கொன்று சோபாவில் மறைத்து வைத்த கொடூரன் : நடந்த விபரீதம்!!

மகாராஷ்டிரா..

இந்தியாவில் நண்பனின் மனைவியை கொலை செய்து ஷோபாவிற்கு பின்னாடி மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் வசித்து வந்தவர் சுப்ரியா ஷிண்டே. இந்நிலையில் இவர் கடந்த 15ஆம் திகதி தனது வீட்டின் ஷோபாவில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸ் கொலை செய்த நபரை குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணியை பொலிஸ் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் நண்பர் ஒருவர் இது போன்ற காலணி வைத்திருப்பதும் அவரது பெயர் விஷால் தாவார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதன்பின் பொலிஸ் விஷால் தவாரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்த போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது அவர் தனது நண்பனின் மனைவி என்று கூட பாராமல் சுப்ரியாவிடம் தவறாக நடந்துள்ளார்.

ஆனால், சுப்ரியா இதற்கு மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.

இதனால் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே உயிரிழந்ததால் உடலை மறைக்க ஷோபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி சென்றதாக தெரியவந்து உள்ளது.

பிரிந்து சென்ற மனைவி… காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

கேரளா..

மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், தலைக்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கணவர் ரியாஸை விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி, மகளை அழைத்துக் கொண்டு, பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில், மேனேஜராகவும், ரியாஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அதிலிருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கோபிசெட்டிபாளையம் பஜனை தெருவில், ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, ரியாஸ் வேலை தேடி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவரை ரியாஸ் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமான காரணத்தினாலும் ரியாஸ் விரக்தியில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, இரவு நேரத்தில் தன்னுடைய உறவினர் ஒருவருடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், தான் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், விரக்தியில் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், எனது உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போகிறேன் என்றும் ரியாஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த ரியாஸின் உறவினர், என்ன செய்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

தொடர்ந்து, ரியாஸை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், உறவினர் இறங்கியுள்ளார். ஆனால், வீடியோ காலில் இருக்கும் போதே, தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில், ரியாஸ் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால், செய்வதறியாமல் ரியாஸின் உறவினர் திகைத்துப் போன நிலையில், செல்போன் இணைப்பும் அந்த நேரத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ரியாஸின் உறவினர் மீண்டும் மீண்டும் அவருக்கு அழைத்துள்ளார். அப்போது, ரியாஸ் வீட்டின் அருகில் இருந்தவர்கள், அவரது அறையில், தொடர்ந்து தொலைபேசி அழைத்துக் கொண்டே இருந்ததால், அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜன்னல் வழியாக அவர்கள் கண்ட கட்சி, அனைவரையும் உறைந்து போகச் செய்துள்ளது.

தூக்கில் தொங்கிய படி, தனது உயிரை ரியாஸ் மாய்த்த நிலையில், இந்த சம்பவம் பற்றி, கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார், ரியாஸின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். காதலி மற்றும் மனைவி ஆகியோர் பிரிந்த விரக்தியில் இருந்த ஒருவர், தற்கொலை முடிவை எடுத்துக் கொண்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு : வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்!!!

அசாம் மாநிலத்தில்..

அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.

அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார்.

ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய பணம் சேர்ந்ததும் அவர் சேமித்து வைத்து இருந்த சில்லறை நிறைந்த நாணய முட்டைகளை தூக்கிக்கொண்டு ஸ்கூட்டர் ஷோரூம்க்கு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த இளைஞரின் செயலை கண்டு வியப்படைந்த ஷோரூம் ஊழியர்களும் அவரை அன்புடன் வரவேற்று, அவர் கொண்டு வந்த மூட்டைகளில் இருந்த நாணயங்களை எண்ணியுள்ளனர்.

அதில் அவர் விரும்பிய ஸ்கூட்டருக்கான போதுமான நாணயங்கள் இருக்கவே ஸ்கூட்டர் வாங்குவதற்கான ஆவணங்களில் கையொப்பம் வாங்கி கொண்டு அந்த ஸ்கூட்டருக்குரிய சாவியையும் அந்த இளைஞரிடம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளைஞரின் கடும் உழைப்பையும், பொறுமையையும், மற்றும் சேமிக்கும் திறனையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பெற்ற குழந்தையை கடத்தியதால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தந்தை : மரணத்திற்கான காரணம் வெளியானது!!

இலிபே நீலக..

கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபரான நீலக சந்தருவன் என்ற இலிபே நீலகவின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி தோட்டாக்கள் காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சண்டையின் போது சந்தேக நபரின் மார்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு பதிவாகி இருந்தது.

அங்குருவத்தோட்ட, வல்பிட்ட, பீடி கொல சந்தி பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் நேற்று முன்தினம் (17) மறைந்திருந்த சந்தேகநபர், STF அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்த நிலையில் STF அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதன்போது சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, 42 வயதுடைய நிலக்காவின் தாயார் சாந்தனி குமாரி குருப்புஆராச்சி இவ்வாறு சாட்சி வழங்கியிருந்தார்.

எனது மூன்று மகன்களில் மூத்தவரான நீலகதான் உயிரிழந்துள்ளார். நீலக போதைப்பொருளுக்கு அடிமையானவர். மருமகள் மீது சந்தேகப்பட்டு இம்மாதம் 11ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகாயமடையச் செய்திருந்தார்.

அவள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். பின்னர் அவர்களின் 8 வயது மகன் நீதிமன்றத்தால் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டான்.

கடந்த 17ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் நீலக, ஹல்வதுர இங்கிரிய பகுதியில் அமைந்துள்ள எமது வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினார். கணவர் கதவைத் திறந்தார். மகன் குழந்தையைப் பார்த்து கையைப் பிடித்து இழுக்க முற்பட்ட போது அவரது தந்தை கதவை மூடிவிட்டார்.

“அன்றைய தினம் காலை 6 மணியளவில் நாங்கள் இருவரும் எங்கள் மகனின் மகனை அழைத்துக் கொண்டு ஹொரண கந்தானையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றோம். அன்று காலை 7.40 மணியளவில் நீலக முச்சக்கரவண்டியில் வந்து குழந்தை எங்கே என்று கேட்டார்.

குழந்தையை ஒரு அறையில் மறைத்து வைத்தோம். முச்சக்கரவண்டியில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து வீட்டின் எல்லா இடங்களிலும் தேடி, அறையில் இருந்த குழந்தையை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டிக்கு அருகில் சென்ற பின்னர் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார்.

“அப்போது முச்சக்கர வண்டி சாரதியை காணவில்லை. முச்சக்கரவண்டியை கொளுத்திவிடுவதாக மகன் எச்சரித்து சத்தம் போட்டான். அப்போது மறைந்திருந்த முச்சக்கரவண்டியின் சாரதி வந்தார்.

பின்னர் மாலை வேளையில், மகன் வல்பிட பீடிகொல சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்து. உயிரிழந்தது எமது மகன் என பின்னர் நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம்.

வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது வெளியேறிய மைத்திரி!!

மைத்திரிபால சிறிசேன..

வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறிச் சென்றுள்ளார். இதன்போது அவரை மறித்து கேள்வி கேட்ட முற்பட்ட வவுனியா ஊடகவியலாளர்களை முன்னாள் ஜனாதிபதியின் மெய்பாதுகாவலர்கள் வழிமறித்து தள்ளு முள்ளில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19.02) இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாநாட்டிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிகழ்வு முடிவடைந்து மேடையில் இருந்து இறங்கி வெளியேறிச் சென்ற போது தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட முற்பட்டனர்.

இதன்போது மேடையில் பேசினேன் எனக் கூறிவிட்டு, கேள்விக்கு பதிலளிக்காது அங்கிருந்து அவர் நகர முற்பட்ட போது ஊடகவியலாளர்கள் சுற்றி வர வந்து கேள்வி கேட்டனர்.

இதன்போது அவரது மெய்பாதுகாவலர்கள் ஊடகவியலாளர்களை தமது கைகளால் தள்ளி, தள்ளு முள்ளில் ஈடுபட்டதுடன், முன்னாள் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து சென்றிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதியின் பின் வந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்னாள் ஜனாதிபதி அவரசரமாக யாழ் செல்கிறார் எனத் தெரிவித்து ஊடகவியலார்களின் கேள்விகளுக்கு தான் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான சுரேன் ராவகனிடம் ஊடகவியலாளர் கேட்ட போது,

கட்சியினுடைய செயலாளர் தயாசிறி ஜயசேகர நிற்கின்றார். அவர் கட்சியின் கருத்தை வெளியிடுவார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை கேட்டு எப்போதும் தீர்ப்பவர் அவர்.

ஏன் போனார் என நான் அறியவில்லை. ஒரு வேளை மலசல கூடத்திற்கு ஏதும் போக வேண்டி இருந்ததோ தெரியவில்லை. ஆனால் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் என்பவற்றை கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர அவர்களே வழங்குவது நடைமுறையில் உள்ளது எனத் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் : பொது மக்களுக்கு அவரச அறிவிப்பு!!

வைரஸ் காய்ச்சல்..

தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் மற்றும் டெங்கு அல்லாத வேறு புதிய வகை வைரஸ் காய்ச்சல் சமூகத்தில் பரவி வருவதாக சுகாதார மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படுவன்துடுவாவ தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்டால் 1390 மற்றும் 247 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. பெரியவர்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.

அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு கோரியுள்ளார். இறுமல், உடல் வலி மற்றும் சளி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் 1390/247 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது வீட்டிலேயே இருந்தால் நோய் தீவிரமடைந்து மரணம் கூட நேரிடும் அபாயம் காணப்படுவதாக டொக்டர் படுவான்துடுவாவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்கம் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன? வெளியாகியுள்ள தகவல்!!

தங்கம் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?

உலக அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இலங்கையில் தற்போது ஒரு பவுண் தங்கம் ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம், பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை, நாணய மதிப்புச் சரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை சடுதியாக உயரந்துள்ளது. இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.

கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வரும் காலத்தில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்த வேளையில் தங்கம் விலை குறைய வேண்டும். எனினும், தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்வாகவே இருந்தது வருகின்றது. இதற்கு இந்தியா மற்றும் சீனா முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா : World Gold Council இன் தகவல் படி கடந்த ஆண்டு இந்தியாவில் நகை வாங்குவோரின் அளவு சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்திய தங்க விற்பனை 611 மெட்ரிக் தொன் ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், சீனாவில் தங்கம் வாங்கும் அளவு சுமார் 63 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், அங்கு தங்க விற்பனை 675 தொன் ஆக உயர்ந்துள்ளது. தங்கம் விற்பனை 2021ல் மட்டும் இந்தியா மற்றும் சீனா சுமார் 556 தொன் தங்கத்தைக் கூடுதலாக வங்கியுள்ளது.

2021ம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்தது. இதனால் 558 தொன் தங்கம் விற்பனை இப்பிரிவின் மூலம் சரிந்தது. இது எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகத் தங்கம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

Supply and Demand : Supply and demand ஈடு செய்யப்பட்டதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து உயர்வாக இருக்க முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிட் ஊரடங்கு : சீனா மக்கள் 2019ம் ஆண்டு சுற்றுலாவுக்காக மட்டுமே 255 பில்லியன் டொலர் செலவு செய்துள்ளனர். கோவிட் தொற்றுக் காரணமாக மக்கள் அனைவரும், நாட்டுக்குள்ளேயும் முடங்கிய காரணமாக இந்தத் தொகை அப்படியே தங்கம் மீது திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் : இந்தியாவில் கோவிட் தொற்றுக் காரணமாக ஒன்றரை ஆண்டுகள் முற்றாக முடங்கிய நிலையில், 2021ல் இந்தியா முழுவதும் திருமணங்கள் அதிகமாக நடந்தன. இந்தியத் திருமணங்களில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறிப்போன நிலைமை : இந்தியாவில் 10 கிராம் தங்கம் 30,000 ரூபாய் தாண்டு போதெல்லாம் தங்கம் விற்பனை மற்றும் இறக்குமதி பெரிய அளவில் குறையும், ஆனால் தற்போது இந்த நிலை மாறியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வருமானம், வேலைவாய்ப்பு இழந்த காலகட்டத்திலும் தங்கம் இறக்குமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது தான் முக்கியமான விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.