26,000 அடி உயரத்தில் இருந்து திடீரென சரிந்த விமானம் – கதறி அழுத பயணிகள்!!

26,000 அடி உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென சரிந்ததால் பயணிகள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.

ஜப்பான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங்737 விமானம் ஒன்று கடந்த ஜூன் 30 ஆம் திகதி, சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதில், விமான பணியாளர்கள் உட்பட 191 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவை நோக்கி, 26,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம், திடீரென கீழே சரிய தொடங்கியுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 10 நிமிடங்களில் 36,000 அடியிலிருந்து 10,500 அடிக்குக் விரைவாகக் கீழே இறங்கியுள்ளது.

கேபினில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, பயணிகள் உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதில், தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் பலரும் அதிர்ச்சியில் கண் விழித்தனர்.

விமானத்தை தரையில் மோதி விபத்தை சந்திக்க போகிறது என பயந்த பயணிகள் பலரும், உடனடியாக தங்கள் குடும்பத்தினருக்கு உயில், வங்கி கடவுச்சொல் மற்றும் காப்பீட்டுத் தகவல்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களுடன் இறுதித்தகவலை அனுப்ப தொடங்கியுள்ளனர்.

மேலும், விமானிகள் உடனடியாக அவசரநிலையை அறிவித்து, ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

இதில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு, இரவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இழப்பீடாக, 15,000 யென் (இந்திய மதிப்பில் ரூ.8,945) வழங்கப்பட்டது.

விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகள் பலரும், கண்ணீர் மல்க தங்களது பயண அனுபவம் குறித்து பேசினர்.

சமீபத்தில், அகமதாபாத்தில் போயிங் ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று, விபத்தை சந்தித்தில், 274 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மற்றொரு போயிங் விமானத்தில் நடந்துள்ள சம்பவம் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

யுனெஸ்கோவின் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயத்தில் இலங்கையின் வரலாற்று அடையாளம்!!

சீகிரியா யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் துசித் மென்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சீகிரிய குன்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.அவற்றை அகற்றுவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவில்லையாயின் யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து சீகிரியா நீக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

தற்போதைக்கு அவ்வாறான அபாயம் இல்லை என்றாலும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற முற்படாவிட்டால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண் வேடமிட்டு மகனுக்கு அழகு பார்த்த தாய் : குடும்பமே உயிரிழந்த சோகம்!!

ராஜஸ்தானில் கணவன், மனைவி மற்றும் இரு மகன்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்லால் மேக்வால்(வயது 35), இவரது மனைவி கவிதா( வயது 32), இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர்.

கடைசி மகனான ராமதேவ்(வயது 8) என்பவருக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். துரதிஷ்டவசமாக நேற்று காலை நால்வரின் உடல்களும் வீட்டின் அருகில் இருந்து 20 அடி தொலைவில் உள்ள தண்ணீர் டேங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

செவ்வாயன்று மாலை இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது, அன்றைய தினம் மேக்வால் தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நிலையில் இது நடந்துள்ளது.

மேக்வால் மற்றும் கவிதா இருவரும் தங்களது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

அவர்களது வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், மூன்று பேர் இதற்கு காரணம் என்றும், மேக்வாலின் இளைய சகோதரர் காரணம் எனவும் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய கவிதாவின் மாமா, மேக்வால் தனியாக வீடு கட்ட நினைத்தார் என்றும் இதற்கு தாய் மற்றும் இளைய சகோதரர் தடையாக இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து வருகிறது.

இந்தியாவுக்கு தப்பியோடிய முல்லைத்தீவு நபர் உட்பட மூவர் நாடுகடத்தல்!!

இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்துக்குச் சென்றனர்.

மன்னார் – பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல்தீடையில் தஞ்சம் அடைந்ததாக தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்டனர்.

இதனையடுத்து தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் ஒருவர் முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் மூவரும் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதான தகவலும் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் மேற்படி மூவரும் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழில் கனடா பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசித்து வரும் 59 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். உயிரிழந்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன் : விசாரணையில் அதிர்ச்சி!!

காலியில் மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அண்மித்த பகுதியில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான மஜுவான கமகே இந்திராணி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது மனைவியை ஒரு கட்டையால் அடித்துக் கொலை செய்து, ஊருபொக்கவில் உள்ள வீட்டிற்கு அருகே கணவர் புதைத்துள்ளார்.

பின்னர் தனது மனைவியைக் காணவில்லை என்று எல்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து நாடகமாடியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் 18 வயது மகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவம் குறித்து தகவல்களை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் சம்பவத்தை ஒப்புக்கொண்டு அனைத்து விவரங்களையும் வழங்கினார். “எனது மனைவியை திருமணம் செய்த கிராமத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தேன்.

மனைவிக்கு தகாத உறவுகள் இருந்தன. இது குறித்து நான் அவரை பலமுறை எச்சரித்தேன், ஆனால் அவர் உறவை நிறுத்தவில்லை.

இறுதியாக, என்னால் எதுவும் செய்ய முடியாததால், என் மனைவி மற்றும் மகளுடன் தெனியாயவின் ஊருபொக்க பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு சென்றேன்.

ஆனால் அவர் மீண்டும் தொலைபேசியில் முன்பு உறவு வைத்திருந்தவர்களுடன் ரகசியமாக உறவு வைத்திருப்பதை அறிந்து கொண்டேன்.

அது குறித்து வினவிய போது ஏற்பட்ட மோதலில் அவரை தாக்கி கொலை செய்து விட்டு உடலை வீட்டிற்கு அருகில் புதைத்தேன். இந்த சம்பவம் 2024ஆம் பெப்ரவரி மாதம் நடந்தது. 4 நாட்களுக்கு பின்னர் மனைவியை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன்.

தற்போதே பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் உடலை தோண்டி எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்!!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து (02) பாலி நோக்கி பயணிகள் படகு புறப்பட்டது, மேலும் 23 பேர் விபத்தில் இருந்து தப்பியுள்ளதாகவும் நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பலில் 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாகவும், 14 கனரா வாகனங்கள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாக இந்தோனேசியா தரப்புக்கள் தெரிவித்துள்ளன. எனினும் மோசமான வானிலை காரணமாக கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

4ஆவது முறையாக ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் Microsoft!!

கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட், இந்த ஆண்டில் 4ஆவது முறையாக மீண்டும் ஊழியர்களை பணிநீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க அறிவிப்புக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. எத்தனைபேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.

 

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : கனகசபை தங்கம்மா!!

கனகசபை தங்கம்மா
பிறந்த இடம் – மாமடு
வாழ்ந்த இடம் – மாமடு சந்தி வவுனியா

 

அன்று எங்கள் அழுகை சத்தம் கேட்டு
சிரித்தவளே
இன்று அழகின்றோம் சிரிப்பதற்கு நீ
இல்லையென்று..
நீ இல்லாத உலகில் மட்டும்
தவிக்க விட்டு சென்றாயே அம்மா
நீ மீண்டும் கிடைக்காத
பொக்கிஷம் அம்மா..
உயிருக்குள் அடைகாத்து
உதிரத்தை பாலாக்கி
பட்டினியுடன் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே மட்டும்
வாழ்ந்து முடித்த அம்மாவே..
பேசியும் புரியாத
உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் வாழ்ந்து
முடித்த அம்மாவே..
அம்மா உன்னை இழந்து
ஆண்டு ஒன்று முடிந்தது
உங்கள் இழப்பை மறக்க முடியாத
பிள்ளைகளாக பேரப்பிள்ளைகளாக
எங்கள் இதயத்தில் உங்களை
சுமந்து திரிகிறோம்..
ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் கூட
அனாதையாய் உணர்கிறோம்
அம்மா நீ இல்லாததால்
உங்கள் இழப்பால் தவிக்கும்

பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்.

வவுனியா ஓமந்தையில் பொலிசாரால் காணி அபகரிப்பு முயற்சி : பா.உ சத்தியலிங்கம் தலையீட்டினையடுத்து நிறுத்தம்!!

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலையீட்டினையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஓமந்தையில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பில், நேற்றைய தினம் (02.07.2025) இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் பொலிசார் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவரிடம் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இது அமைந்துள்ளது. குறித்த காணியை நேற்று முன்தினம் (30.06) துப்புரவு செய்துள்ளனர்.

குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த காணிக்கு உரிமை கோரும் நபர் இக்காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிசார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.

அத்துடன், தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியாகும். அதற்கு பதிலாக ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள காணியில் இருந்து பொலிசார் இதுவரை வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிசாருடன் இடம்பெற்ற நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின் காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கினைப்புக்குழுவால் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் களஆய்வொன்றினை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் தலைமையில் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!!

வவுனியா சமயபுரம் பகுதியில் தனதுமனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (02.07.2025) மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு எரித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு எதும் குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிசாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் வசந்தி (வயது 30), அவரது தாயாரான இந்திரா (வயது 69), என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் விவசாயத்தை மேம்படுத்தல் தொடர்பில் பிரதி அமைச்சர்கள் தலைமையில் விசேட கூட்டம்!!

வவுனியா மாவட்டத்தின் விவசாய மேம்படுத்தல் தொடர்பிலான விசேட கூட்டம் காணி மற்றும் நீர்ப்பாசன வளங்கள் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (01.07.2025) காலை 9.30 மணி தொடக்கம் 12.30மணி வரை இடம்பெற்றது.

காணி மற்றும் விவசாயம் மேம்படுத்தல், புதிய திட்டங்களை அமுல்படுத்தல், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், குளத்தின் கீழுள்ள வனத்துறையினரின் கட்டுப்பாட்டினுள் உள்ள காணிகளை விடுவித்தல், நவீன தொழிநுட்பம், உரம் தொடர்பான பிரச்சனை என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி : 07 பேர் காயம்!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 76.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (02.07.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமநைட்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4வது நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்!!

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளம்பெண்ணொருவர் திருமணமான நான்காவது நாளிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). இவருக்கும் காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

பன்னீர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். லோகேஸ்வரி பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார்.

இந்த நிலையில் 30ஆம் திகதி தாய் வீட்டிற்கு சென்ற லோகேஸ்வரி, தனது பெற்றோரிடம் கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து திங்கட்கிழமை இரவு லோகேஸ்வரி வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகேஸ்வரி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன் பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், வழக்குப்பதிவு செய்து பன்னீர் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பன்னீர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதாவது 5 சவரன் நகை கொடுப்பதாக பெண் வீட்டார் ஒப்புக்கொண்ட நிலையில், 4 சவரன் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

எனினும் சீர்வரிசை பொருட்களுடன் இருசக்கர வாகனம் ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனாலும், மீதமுள்ள 1 சவரன் நகையை வாங்கி தருமாறு கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நான்காவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி!!

கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30.06.2025) இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார்.

இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபருக்கு மேலதிக சிகிச்சை வழங்கும் நோக்கில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது நிலைமை தீவிரமாக மாற்றமடைந்ததால்,உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வினை வழங்குங்கள் : செம்மணி புதைகுழிக்கு நீதி கோரும் தென்னிலங்கை இளைஞன்!!

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம்.

யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். இதனால் அமைச்சர்களுக்கும் பெரிய பிரச்சினை இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் இதனால் பிரச்சினை உள்ளது.

எனவே புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.