குறைக்கப்படுகிறது பேருந்து கட்டணம் : வெளியான விபரம்!!

பேருந்து கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 0.55 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின்படி இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணையம் முன்னர் அறிவித்திருந்தாலும், கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து குறித்த முடிவு கைவிடப்பட்டது.

இதன்படி, புதிய எரிபொருள் விலை நிலவரப்படி, பேருந்து கட்டணங்களை 0.55 சதவீதத்தால் மட்டுமே குறைக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்தின் கீழ், பேருந்து கட்டணமான 100 ரூபாவில் எந்த மாற்றமும் இருக்காது. வழக்கமான சேவைகளுக்கு ரூ.27, இரண்டாவது கட்டணத்திற்கு ரூ.35, மற்றும் மூன்றாவது கட்டணம் ரூ.45.

பொது சேவைகள், அரை சொகுசு சேவைகள், அதி சொகுசு சேவைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளுக்கும் இந்த பேருந்து கட்டணக் குறைப்பு பொருந்தும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

காற்பந்து உலகில் அதிர்ச்சி : திருமணமான 10 நாட்களில் உயிரிழந்த காற்பந்து வீரர்!!

லிவர்பூல் கிளப் மற்றும் போர்த்துக்கல் அணியின் முன்கள கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் டியோகோ மற்றும் 26 வயதான அவரது சகோதரர் ஆண்ட்ரே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஜோட்டாவிற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஜோட்டாவின் மறைவு காற்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது காற்பந்து வாழ்க்கையை பாசோஸ் டி ஃபெரெய்ரா கழகத்தில் தொடங்கிய ஜோட்டா, பின்னர் 2016இல் அத்லெட்டிகோ மாட்ரிட் கழகத்தில் சேர்ந்தார்.

2016இல் எஃப்சி போர்டோவிலும், 2017இல் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் (வோல்வ்ஸ்) அணியிலும் தற்காலிகமாக விளையாடினார். 2018இல் வோல்வ்ஸ் அணியில் நிரந்தரமாக இணைந்து, 131 போட்டிகளில் 44 கோல்கள் அடித்தார்.

தொடர்ந்து 2020இல் லிவர்பூல் கழகத்திற்காகவும் போர்த்துக்கல் தேசிய அணிக்காக 49 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவர் நாடு கடத்தப்பட்டனர்!!

மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இலங்கையர்கள் மூவர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இலங்கையர்கள் மூவரும் நேற்று வியாழக்கிழமை (03) மாலை 05.20 மணியளவில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் புத்தளம் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நீ்ர்கொழும்பு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து விபத்து : 15 பேர் காயம்!!

கண்டி, வத்தேகம, அரலிய உயன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (03.07.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகமவிலிருந்து குடுகல நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 15 பேர் காயமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாமையால் மாணவன் போராட்டம்!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையால் இன்றையதினம் (04.07.2025) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றுலா ஒன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார்.

இருப்பினும் இன்று காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.

இதனையடுத்து வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அரச கரும மொழிகள் வாரம் அனுஸ்டிப்பும் சித்திரக் கண்காட்சியும்!!

தேசிய அரச கரும மொழிகள் வாரம் ஜூலை 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை வவுனியா மற்றும் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு அரச கரும மொழிகள் தினம் வாரத்தை நடை முறைப்படுத்துகிறது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் அரச கரும மொழிகள் தினம் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (03.07.2025) காலை 9 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டமையுடன் அரச கரும மொழிகள் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் வரவேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் தமிழ் சிங்கள கலச்சார நடனம், சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கல், அதிதிகள் உரை, சிங்கள /தமிழ் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

வவுனியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!!

வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது, பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தாம் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையத்தை நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, வவுனியா மாநகர சபையில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 மற்றும் அதன் கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வ நிலையங்களை நடத்த முடியாது என தீர்மானம் எட்டப்பட்டதுடன்,

10 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் இடஙகளில் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கான மலசலகூட வசதி, குடிநீர் வசதி என்பன இருக்க வேண்டும் எனவும், அதனை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று (04.07.2025) காலை இடம்பெற்றது.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வவுனியா யாழ் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு செயலமர்வு!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் சித்தரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு வன்னி பிராந்திய பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான செயலமர்வு வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (03.07.2025) காலை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் (பதில்) தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் வைத்தியர் ஜிகான் குணதிலக வளவாளராக கலந்து கொண்டு,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளான, “நபர் ஒருவர் காவல்துறை காவலில் இருக்கும்போதும், காவல்துறையினருடனான கருத்து முரண்பாடுகளின் போதும் ஏற்படும் மரணங்களைத் தடுப்பது குறித்தும்,

இலங்கை காவல்துறைக்கு அனுப்பப்பட்ட 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரை “மற்றும்
“மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு குறித்தான 2024 ஆண்டின் 01 இலக்க பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரை” போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச் செயலமர்வில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குருணாகல் – கொழும்பு வீதியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!!

குருணாகல் – கொழும்பு வீதியில் வந்துராகல பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (03.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தரையிறங்குவதற்கு முன்னர் விபத்துக்குள்ளான விமானம் : மூவர் பலி!!

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.

சோமாலியாவில் அல் – ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக அமைதி காக்கும் பணியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், மொகடிஷு நகரில் உள்ள விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விமானத்தில் ஏழு பேர் இருந்ததாகவும் ஏனையவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்!!

இரத்தினபுரியில் தங்க சங்கிலிக்காக இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குருவிட்ட, தேவிபஹல – தொடன்எல்ல வீதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெண்ணின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்திவிட்டு, அவரது தங்க சங்கிலியை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கத்திக்குத்து காயங்களுடன் சரிந்து விழுந்த பெண், இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் குருவிட்ட, தேவிபஹல பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைமறைவான சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குருவிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய கோர விபத்து : அதீத வேகத்தால் பலியான இரு இளைஞர்கள்!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (02.07.2025) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர்களில் ஒருவர் திங்கட்கிழமை (30) மோட்டார் சைக்கிள் ஒன்றினை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புத்தூர் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்த கம்பத்துடன் மோதியது.

இதில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

லொறி மற்றும் டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து இன்று (03) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வந்த லொறி, எதிரே வந்த டிப்பருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் லொறி சாரதி காயமடைந்து உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பரை ஓட்டிச் சென்ற சாரதி இடத்தைவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டியால் பரபரப்பு!!

ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா தோட்டத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (02.07.2025) பகல் இடம்பெற்றுள்ளது.

ஹேவாஹேட்ட நகரில் வாடகைக்கு மக்களை ஏற்றிகொண்டு சென்ற முச்சக்கரவண்டி ரூக்வூட் தோட்ட பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு தீ பற்றி எரிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 வருட காதல் : பெற்றோர் சம்மதிக்காததால் காதலர்கள் ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில், காதல் ஜோடி ஒன்றாக தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசித்து வருபவர் ராகவேந்திரா யாதவ்(28). அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) எனும் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில்,

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ரச்சிதாவுக்கு, அவருடைய பெற்றோர் வேறொரு இளைஞருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

இதனையடுத்து மீண்டும் அவரது காதலன் ரட்சிதா வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரிடம் பேசினார். ஆனால் தங்களுடைய பெண்ணை தருவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அதே நேரத்தில் இளைஞரின் வீட்டிலும் இவர்களது திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் மன வேதனையில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. வனப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஆட்டோவில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையின் படி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோவில் வைத்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.