ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!!

ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன், தொண்டையில் விதை சிக்கி மூச்சு திணறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை, மேலப்பாளையத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நிஜாம் (35). வெளிநாட்டில் வேலைப் பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ரியாஸ் என்ற மகனும் இருந்தனர்.

சிறுவன் ரியாஸ், அருகே உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இரவில் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்காக ரம்புட்டான் பழங்களை வாங்கி உள்ளனர்.

அதில் ஒரு பழத்தை ரியாஸ் எடுத்து சாப்பிட்டான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பழத்தின் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற பழங்கள் வழுவழுப்பாக இருப்பதால் தொண்டையில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குழந்தைகள், முதியவர்கள் ரம்புட்டான் பழத்தை கவனமுடன் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செம்மணியில் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் மூன்று என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன் போது சிறுவர்களின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் மூன்று என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 37 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று 10ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ஞா. ரனித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர்.

நேற்று வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தினரின் சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன் உட்பட இருவர் அகழ்வுப் பணியின்போது முன்னிலையாகி இருந்தனர்.

கணவனை அடித்துகொன்ற மனைவி : பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த 73 வயதுடைய கணவன் அடி காயங்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (4) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி ஊன்றுகோலால் தாக்கியதில் கணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சகோதரியின் இறுதிச் சடங்கிற்கு சென்றவர் கொடூர கொலை : துயரத்தில் தவிக்கும் குடும்பம்!!

மஹியங்கனை குருமட பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில், 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் 20 வயதுடைய மற்றொரு நபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுமியின் ஆடை!!

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் இருந்து நேற்று சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடையின் சில பகுதிகள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள்,

ரோன் கமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புதிய பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பமாகின.

இந்நிலையில் நேற்று முன்தின அகழ்வின்போது ஆடை ஒன்றின் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அந்த இடத்தில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

பாரிய தொடருந்து விபத்துக்கள் நிகழலாம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கையின் தொடருந்து பாதை வலையமைப்பில் சில தொடருந்து நிலையங்களில் காணப்படும் சமிக்ஞை தொகுதிகளில் உள்ள கோளாறு காரணமாக எதிர்வரும் காலங்களில் பெரும் தொடருந்து விபத்துகள் ஏற்படலாம் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (04.07.2025) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்சென்ற தொடருந்து, ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் கட்டுப்பாட்டு சமிக்ஞை கோளாறு காரணமாக பெரும் சிக்கலை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடருந்து சமிக்ஞை கோளாறுகளை நிவர்த்திக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொடருந்து விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் செயல்பாட்டில் உள்ள தொடருந்து ஒளி வர்ண சமிக்ஞை அமைப்பு 1962 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மிகவும் எளிமையான முறை மூலம் இயக்கப்படுகிறது.

இந்த வர்ண சமிக்ஞை அமைப்புகள் அனைத்தும் மருதானை தொடருந்து நிலையத்தில் அமைந்துள்ள மத்திய தொடருந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படுகின்றன.

அத்தோடு கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள தொடருந்து வர்ண சமிக்ஞைகள் கண்டி, நவலப்பிட்டி மற்றும் அனுராதபுரம் துணை தொடருந்து அலுவலகங்களால் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில், இதுபோன்ற நிலைமைகளின் கீழ் தொடருந்துகளை இயக்குவது மிகவும் ஆபத்தானது என்று தொடருந்து தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

யாழ் – புறாப்பொறுக்கியில் தடம்புரண்ட வாகனம்!!

யாழ்ப்பாணம்(Jaffna) பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று (05.07.2025) காலை தடம்புரண்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ தெரியவருவதாவது,

கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் தடம்புரண்டுள்ளது.

முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அதனை காப்பாற்ற முற்பட்ட வேலையே குறித்த வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயிரக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை : மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. நேற்று 13,642 வளாகங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 3,886 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 382 இடங்கள் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

396 இடங்கள் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமது சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாத 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வரையான காலப்பகுதியில், 111,031 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 2,999 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குப்பைத் தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் : பொலிஸார் அதிர்ச்சி!!

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (03.07.2025) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யும் பொருட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களுக்கு இரவு இரங்கல் தெரிவித்த இளைஞன் காலையில் உயிரிழந்த சோகம்!!

யாழில் நேற்று மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நண்பன் இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தனது நண்பனுக்கான அனுதாப செய்தியை முகநூலில் பதிவேற்றிய சிலமணிநேரத்திலேயே குறித்த இளைஞனும் உயிரிழந்துள்ளமை சமூக ஊடகவாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு நேற்று விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாகினர்.

சம்பவத்தில் அதி வேகத்தில் பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பனின் இழப்பை அறிந்து இரங்கலை வெளியிட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரும் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனும் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், திடீர் நெஞ்சுவலியால் பாதிப்புற்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸ் அவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்த பயணி : விமான நிலையத்தில் ஜெக்கெட்டை கழற்றியதால் நேர்ந்த கதி!!

இலங்கையை சேர்ந்த விமானப் பயணி ஒருவர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை, தனது ஜெக்கெட்டில் மறைத்து வைத்து, 19 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை கடத்த முயன்றதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

மருதானை சங்கராஜ மாவத்தையை சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரேகைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 என்ற விமானத்தின் இன்று காலை 09.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சந்தேக நபர் வந்துள்ளார்.

சுங்க அதிகாரிகள் குறித்த நபர் கொண்டு வந்திருந்த காலணிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது, ​​அதுவரை தான் அணிந்திருந்த ஜெக்கெட்டை கழற்றி அதை ஒரு நாற்காலியில் வைத்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரி, சோதனை செயல்முறையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் கழற்றிய ஜெக்கெட்டை எடுத்து ஆய்வு செய்தார்.

இந்நிலையில், அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 847 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரையும் குஷ் போதைப்பொருளையும் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

17 வயது சிறுவனின் உயிரை பறித்த கோர விபத்து : அதிகாலையில் நேர்ந்த துயரம்!!

இன்று (04.07.2025) அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில்,

படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உழவு இயந்திரம் விபத்து : சிறுவன் பரிதாபமாக பலி!!

அநுராதபுரத்தில் அளுத்திவுல்வெவ மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கொகாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று முன்தினம் புதன்கிழமை (02.07.2025) மாலை இடம்பெற்றுளள்தாக பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுளள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் இருந்த சாரதியும் சிறுவனும் காயமடைந்துள்ள நிலையில் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அளுத்திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகாவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்திலிருந்து விழுந்த பாடசாலை மாணவன் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03.07.2025) இடம்பெற்றுள்ளது. பேருந்து பயணித்துக்கொண்டிருக்கும் போது மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்தவுடன் பேருந்து நிறுத்தப்படுகின்றது.

அதன்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மாணவனை தூக்குகின்றார்கள். இந்தநிலையில்,இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உள்ளாடைக்குள் பாம்புகள் : வெளிநாட்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையர்!!

நாட்டிலிருந்து மூன்று மலைப்பாம்புகள் உள்ளாடைகளில் மறைத்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த குறித்த சந்தேக நபர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்த மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதன் பின்னர் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஏற்கனவே பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர் வனவிலங்குகளை கடத்திய குற்றச்சாட்டில் அவர் கொழும்பில் வைத்து 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து!!

காலி – மாத்தறை பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (03.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.