யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக நின்ற வவுனியா 18 வயது இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
அத்துடன், குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தி விட்டு அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேருந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விசாரணைகளையடுத்து, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 முதல் 21 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமந்திரனின் வழக்கால் காணி உரித்து தொடர்பிலான வர்த்தமானி நிறுத்தப்பட்டாலும் அரச உத்தியோகத்தர்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி காணி உரித்து தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாய காணி நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் காணி பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றது. ஒரு புறத்தில் மக்களுடைய காணிக்கான உரித்து இழக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காணிகளை பயன்படுத்த முடியாத நிலைமையில் மக்கள் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் இராணுவத்தினராலும், பாதுகாப்பு தரப்பபாலும், வனவளத் திணைக்களத்தாலும் கையகப்படுத்தப்பட்ட காணிகளும் உள்ளன.
இவ்வாறான விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கலந்துரையாடி அந்த காணிகளை மக்களுக்கு மீள வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உள்ளோம்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி விவசாய காணிகளில் பெரும் பகுதியானவற்றை விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஏற்கனவே அவை வனவளத் திணைக்களத்திற்குரித்தானதாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் விவசாயிகளுக்காக அதனை மீள வழங்குவதற்கு வனவள திணைக்களம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகள் மீள பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுவரை காலமும் எம்மிடம் விவசாயம், கால்நடை, காணி விடயங்களை உள்ளடக்கி ஒன்றிணைந்த வேலைத்திட்டம் இருக்கவில்லை. தற்போது அது உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இனி வரும் காலங்களில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இதனை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
வட மாகாணத்தில் உள்ள காணி உரித்து தொடர்பாக நாங்கள் ஒரு விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இருந்தோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வர்த்தமானி தற்போது கைவிடப்பட்டிருக்கிறது.
எனினும் நாங்கள் அரச உத்தியோகத்தர்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி காணி உரித்து தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
அதாவது,உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய ‘நாகரிகமான பிரஜை – முன்னேற்றகரமான மனிதவளத்தை’ உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களைப் பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 04 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. க.பொ.த (உ/த) பரீட்சையில் பிரதான பாடத்துறைகளின் கீழ் உயர்வான இசட் புள்ளிகளைப் (Z-Score) பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
குறித்த விண்ணப்பங்களில் பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கூடிய தேர்ச்சிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.
அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02.07.2025) சற்று உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,001,304 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,320 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 282,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,380 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 259,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,910 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 247,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களம் தமது அதிகார பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் செயல்படுத்துவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே, இலங்கை பொலிஸாரின் அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவது கருத்து தெரிவிப்பவரின் குணத்தை மட்டுமே சேதப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய பொலிஸ் திணைக்களம், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பு இலங்கை முழுவதும் ஆரம்பித்து வைக்கப்ட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை எலோன் மஸ்க் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2024 இல் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது.
இந்நிலையில், கடந்த வாரம், டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்னே, 10 சாதனங்களைப் பயன்படுத்தி ஸ்டார்லிங்க் குறித்த ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறினார்.
ஸ்டார்லிங்க் பாரம்பரிய செயற்கைக்கோள் சேவைகளை விட வேகமான இணைய வேகத்தையும் குறைந்த தாமதத்தையும் வழங்குகிறது. அத்துடன், தரைவழி உட்கட்டமைப்பு குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளில் பயனர்களையும் இணைக்கும் திறனையும் வழங்குகிறது.
எரிபொருள் விலையில் ஜுன் மாதம் தொடக்கத்திலும் ஜுன் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பே எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏதுவானது என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (02.06.2025) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜுன் மாதத்தில் ஏற்பட்ட விலை தளம்பலுக்கேற்பவே ஜுன் 30 திகதி விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான நடைமுறையே பின்னபற்றப்படுகிறது. மாதத்தின் தொடக்கத்தில் விலை குறைவடைந்தால் அதன் பலனை மாத இறுதியில் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறே விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அரசாங்கத்தில் இறக்குமதியின் போது ஏற்படுத்தப்பட்ட மோசடி இன்றும் எம்மை பின் தொடந்து வருகிறது.
அவர்கள் சென்றாலும் அவர்களால் எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் ஏற்படுத்தப்பட்ட நட்டத்தை நாம் சரி செய்யும் போது இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(2) அனுமதி வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஸ சட்டத்தரணி அசோக் பரன், பிரதிவாதியான அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்தில் அரச வைத்திய சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதால் அரசியலமைப்பின் படி, அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி, அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்ததுள்ளது. பின்னர் குறித்த மனுவை ஓகஸ்ட் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
வவுனியா ஓமந்தை பறநாட்டான்கல் பகுதியில் இன்று (02.07.2025) காலை 9.30 மணியளவில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் ஏ9 வீதியிலிருந்து பறநாட்டான்கல் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் 20 நிமிடங்கள் தாமதத்துடன் புகையிரம் கொழும்பு நோக்கி பயணித்தது.
விபத்து இடம்பெற்ற இப் புகையிரதக் கடவை ஒர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும் என்பதுடன் எச்சரிக்கை பாதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் தம்பதியினர் பாலைவனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரவிக்குமார் (17) மற்றும் சாந்திபாய் (15). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இதில் ரவிக்குமாருக்கு வேலை இல்லாததால் தம்பதியினர் இந்தியா வர முடிவு செய்தனர். இதற்காக இருவரும் விசா கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், விசா மறுக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து ராஜஸ்தானுக்குள் வந்தனர்.
அப்போது, ஜெய்சால்மர் பகுதியிலுள்ள தார் பாலைவனத்தின் வழியாக பயணம் செய்த போது தம்பதியினர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் உடலில் நீர் சத்து குறைந்து உயிரிழந்துள்ளனர்.
அதாவது, அதிகப்படியான தாகத்தால் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இவர்களது சடலமானது கடந்த 28-ம் திகதி கிடைத்துள்ளது.
இது குறித்து பொலிஸார் கூறுகையில், “தார் பாலைவனத்திலுள்ள பிபியான் பகுதியில் இவர்களது உடல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் பெரிய அளவிலான குடிநீர் கேனை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், குடிநீர் தீர்ந்து விட்டதால் அதிகப்படியான தாகத்தால் உயிரிழந்துவிட்டனர். தம்பதியினரின் உடல் அருகே காலியான குடிநீர் கேன் இருந்தது” என்றார்.
யாழில் பாடசாலை மாணவன் ஒருவர் செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான இலத்திரனியல் கருவியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம்- சுழிபுரம் விக்டோரியா கல்லுரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் ஜஸ்மினன் என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தாக்க போட்டியில் சமர்ப்பிப்பதற்கான மாணவன் இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.
அத்தோடு, செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கு இந்த கருவி பயன்படும் முறையில் அமைப்பதற்கு உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இந்த இலத்திரனியல் சாதனத்தை சரியாக செய்து முடித்து தமது பாவனைக்கு கையளிக்குமாறும் அதற்கான ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாகவும் விழிப்புணர்வற்றோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.
“ஜஸ்டிஸ் போர் அஜித்குமார்” (#JusticeForAjithkumar) என்ற வாசகம் சமூக ஊடகங்களில், குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஹேஷ்டேக் ஆகும்.
இந்த ஹேஷ்டேக்கானது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் தற்காலிக பாதுகாவலராகப் பணியாற்றிய 28 வயது அஜித்குமார் என்ற இளைஞரின் பொலிஸ் தடுப்பு மரணத்துடன் தொடர்புடையதாகும். இது தொடர்பில் தெரியவருகையில்,
அஜித்குமார் என்ற இளைஞன் கோயிலுக்கு வந்த ஒரு பக்தரின் காரில் இருந்த 9.5 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஜூன் 28, 2025 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதின் பின்னர் இடம்பெற்ற விசாரணையின்போது அவர் மரணமடைந்துள்ளார். இதன்படி குறித்த இளைஞன் பொலிஸாரால் தாக்கப்படும் காணொளியொன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மரணம் பொலிஸ் வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(AIADMK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(cpi) மற்றும், பாரதிய ஜனதா கட்சி(BJP) உள்ளிட்ட கட்சிகள் இந்த மரணத்தைக் கண்டித்து, நீதி விசாரணை, இழப்பீடு, மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன.
“ஜஸ்டிஸ் பார் அஜித்குமார்” என்ற ஹேஷ்டேக், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், பொலிஸ் முறைகேடுகள் மற்றும் தமிழ்நாட்டில் பொலிஸ் தடுப்பு மரணங்களுக்கு எதிராகவும் ஒரு டிஜிட்டல் பிரச்சாரமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், , அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் அஜித்குமார் தீவிரவாதியா என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
மேலும் விசாரணையை முன்னெடுத்த இந்திய உயர்நீதிமன்றின் மதுரை கிளை, தமிழ்நாட்டில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்தது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு சட்டத்தரணிகள் அருண், சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
இதன்போது ஆளும் கட்சியினர் தலையீட்டால், பெற்றோரின் சம்மதமின்றி பொலிஸாரே அஜித்தின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்த அஜித்தை, கடுமையாக தாக்கிய பொலிஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைக் விசாரித்த நீதிபதிகள், அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா என்றும், அவரை ஏன் அடித்து கொலை செய்துள்ளீர்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தியது ஏன் என்றும் வினவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுடுள்ளதோடு ஆறு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் வழக்கு தமிழ்நாட்டு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போலி தகவல்களை நாடாளுமன்றில் வெளியிடுவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அமர்வில், அர்ச்சுனா தவறான தகவலை வெளிப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் தனது உரையில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளைக் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக, ஒரு தாயும், மூன்று மாதக் குழந்தையும் சேர்ந்து புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குழந்தையை தாய் தனது கைகளில் பற்றிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு நடவடிக்ககைகளின் இரண்டாவது கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதில், ஒரு தாய் தனது குழந்தையை கட்டிக் கொண்டு இருந்தது போன்ற எலும்புக்கூடுகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு பதிலாக, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட உருவப்படத்தின் அடிப்படையிலேயே அர்ச்சுனா இராமநாதன் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனாவின் இந்தக் கருத்துக்கு தமிழ் சமூகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர், லெப்டொப், கைத் தொலைபேசி, தொலைபேசி, தொலைகாட்சி போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
அதில் தொலைபேசி, லெப்டொப் என்பன தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் இருந்த போது அப்பகுதியூடாக சென்றவர்கள் அதனை எடுத்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களும் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, 32,28,21 வயதுடைய மூன்று பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில், பொருளாதார இயக்கப் பாதைகள் முன்னோடித் திட்டத்தின் (EMPP) அடிப்படையிலான, புதிய குடியிருப்பு அனுமதி வழிமுறை ஒன்றை கனடா அறிமுகம் செய்யவுள்ளது.
கனடா தன் பொருளாதார புலம்பெயர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த திட்டத்தை அறிமுகம் செய்கின்றது.
இடம்பெயர்ந்த தனிநபர்கள் மற்றும் திறமையான அகதிகள் நாட்டில் வாழவும் வேலை செய்யவும் ஒரு நிலையான பாதையை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த அறிவிப்பு, 2025–2026க்கான கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் (IRCC) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும் இத்திட்டம் குறித்த முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும், இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, EMPP திட்டம் காலாவதியாகும் முன் இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மஹியங்கனை , மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் T-56 துப்பாக்கியொன்று இன்று (01) சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.