மனைவியின் தொல்லை தாங்காமல் 14வது மாடியில் இருந்து குதித்து கணவன்!!

 

ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர், 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் (வயது 38), ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அவர், மனைவி ஜோதி மற்றும் இரு குழந்தைகளுடன் நல்லகண்ட்லா பகுதியில் உள்ள ராங்கி கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

குடும்பத்தினர் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக சொத்துக்களை ஜோதி பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என மனைவி அடிக்கடி வற்புறுத்தியதால்,

தம்பதியிடையே தகராறு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு குடும்பங்களின் மூத்தோர் கலந்து சமரச முயற்சி செய்தும் பிரச்சனை தீரவில்லை.

இந்நிலையில், மன உளைச்சலுக்குள்ளான ஸ்ரீனிவாசராவ், நேற்றிரவு தாங்கள் வசிக்கும் 14வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் கீழே குதித்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சந்தாநகர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ஸ்ரீனிவாசராவின் தாய் கமலம்மா, தனது மகன் மரணத்தில் மருமகள் ஜோதி பங்குடையவர் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஜோதி மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ஐதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சொத்து சண்டை உயிரிழப்பாக முடிந்துள்ளதால், அந்த பகுதி மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

இளம்பெண் மர்மமான முறையில் குளியலறையில் மரணம் : தோழியிடம் போலீசார் விசாரணை!!

பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள் ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரினார்.

சமீபத்தில் அவரது தோழி ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவுக்கு ரஞ்சிதா தனது தோழி ரேகாவுடன் சென்றிருந்தார். இருவரும் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.

அன்று காலை ரேகா முதலில் குளித்து முடித்து வெளியே வந்தார். பின்னர் ரஞ்சிதா குளிக்கச் சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் ரேகா கதவை தட்டியபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. உடனே அவர் விடுதி ஊழியர்களையும், மூடிகெரே போலீசாரையும் தொடர்பு கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரஞ்சிதா உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

போலீசார் ரேகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் சூடேற்றும் கருவியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். ஆனால் ரஞ்சிதாவின் மரணம் குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவம் நடந்த விடுதி உரிய அனுமதி இன்றி செயல்பட்டதும், வரி பாக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மூடிகெரே பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டை குப்பையாக்கிய கணவன் சுத்தம் செய்யாததால் கழுத்தை அறுத்த ஆசிரியை!!

அமெரிக்காவில், வீட்டை சுத்தமாக வைக்காதது குறித்த தகராறு காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது கணவனை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சந்திரபிரபா (44) தம்பதிகள், அமெரிக்காவின் வடகரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசித்து வந்தனர். அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்; மனைவி சந்திரபிரபா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இருவருக்கும் வீட்டு சுத்தம் பற்றிய விஷயத்தில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 12ம் தேதி மீண்டும் வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பையாக வைத்திருந்ததாகக் கூறி இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் கடும் கோபத்தில் இருந்த சந்திரபிரபா, கையில் இருந்த சமையல் கத்தியை எடுத்து கணவன் அரவிந்தின் கழுத்தில் அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் ரத்தம் சிந்தி துடித்த அரவிந்தை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த அரவிந்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்திற்குப் பின்னர் போலீசார் சந்திரபிரபாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துயர சம்பவம் சார்லட் நகர இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் : வீராங்கனை பாத்திமா ஷாஃபியா வலியுறுத்தல்!!

தமது கிராமத்தில் எந்த பிரிவினைகளும் இல்லை. எனவே,வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் என இலங்கையின் ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திமா ஷாஃபியா யாமிக் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் ராஞ்சியில் அண்மையில் நடைபெற்ற, 2025 ஆம் ஆண்டின் தெற்காசிய தடகள செம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு சொந்த ஊரான கண்டியில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்போது, பேசிய யாமிக், “எங்கள் கிராமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை,” “முஸ்லிம், சிங்களம், தமிழ், பௌத்தர்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

நான் பிறந்த நாளிலிருந்து அவர்களுடன் வளர்ந்தேன். எனவே, வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

26 வயதான யாமிக், பெண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஒட்டம் , 200 மீட்டர் அஞ்சல் ஒட்டம் மற்றும் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் தங்கம் வென்று வரலாறு படைத்தார், மூன்றிலும் சாதனைகளையும் படைத்தார்.

அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.53 வினாடிகள், 200 மீட்டர் ஓட்டத்தில் 23.58 வினாடிகள் கடந்து, அஞ்சலோட்ட அணியை 44.70 வினாடிகளில் முடிக்க உதவினார் – இது பிராந்திய போட்டியில் இலங்கை தடகள வீராங்கனையின் மிகச்சிறந்த தனிப்பட்ட சாதனைகளில் ஒன்றாகும்.

நீடிக்கப்படும் பாடசாலை நேரம் : மாணவர்களுக்கு விசேட சலுகை!!

புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இதற்கமைய, மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலை புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் ஐந்து முதல் தரம் 13 வரையான அனைத்து வகுப்புகளுக்கான நேரமும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் இனி எவரும் தப்ப முடியாது நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு!!

கொழும்பு உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்புகளை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்குத் தேவையான கமராக்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான செலவு குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாதாள உலக குற்றவாளிகள் உட்பட பல்வேறு சந்தேக நபர்களைப் பிடிக்க பாதுகாப்பு கமராக்கள் பெருமளவில் உதவியுள்ளன. மேலும் இந்த கமரா அமைப்பு பல சந்தேக நபர்களைப் பிடிப்பதை இலகுவாக்கியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மாகாண மட்டத்தில் இந்த பாதுகாப்பு கமரா அமைப்பை செயல்படுத்துவது மற்றும் மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த கமரா அமைப்பை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

வரலாற்று சாதனை படைத்த Apple நிறுவனம் : தொடரும் வெற்றிப்பயணம்!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple, தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய மூன்றாவது நிறுவனமாக Apple நிறுவனம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் Nvidia மற்றும் Microsoft ஆகிய நிறுவனங்கள் இந்தச் சாதனையை அடைந்தன.

iPhone 17 இன் வலுவான விற்பனையால் Appleஇன் பங்குகள் இன்று 0.1% அதிகரித்து இந்தச் சாதனையை அடைந்தன.

Apple நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $1 ட்ரில்லியன் மதிப்பையும், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $2 ட்ரில்லியன் மதிப்பையும், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் $3 ட்ரில்லியன் மதிப்பையும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடலில் மிதந்து வந்த திரவத்தால் பறிபோன உயிர்கள் : துயரத்தில் உறவுகள்!!

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏர்படுத்தியுள்ளது.

குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தையே அவர்கள் அருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திரவத்தை அருந்திய பின்னர், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ந்தவர்களை தேடி தீவிர விசாரணை!!

சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வவுனியாவிலும் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப்பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் சிலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வினை பதிவு செய்து வருகின்றது. உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாவாக உயர்ந்திருந்தது.

இதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (28) 3,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

எனினும் இன்று (28) , செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 325,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை298,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் பப்ஜி விளையாட்டால் விபரீதம் : குடும்பத்தாரை மிரளவிட்ட இளைஞன் : மயிரிழையில் தப்பிய உயிர்!!

யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்த தங்கத்தின் விலை : நகை வாங்க காத்திருப்போருக்கு நற்செய்தி!!

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கையில் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 17 ஆம் திகதி அன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக இருந்தது.

இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,000 ரூபாவாக ஆகக் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம் : கல்வி அமைச்சின் முடிவு வெளியானது!!

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்த சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.

இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.

இந்த கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும், தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீட்டிக்க முன்மொழிந்த நிலையில், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.

எனவே, பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும், என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்களுக்கு எதிர்காலத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் என்று நம்புவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் ஆதரவுடன் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, பொது நிர்வாக அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வசதியாக தேவையான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும்.

வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!!

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் நிலவி வந்த 8,547 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான ஆட்சேர்ப்பு தொடர்பில் ஆராயும் குழு கடந்த 2 ஆம் திகதியன்று சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் கீழ் 5,198 வெற்றிடங்கள் (காவல்துறை ஆட்சேர்ப்புக்கள் உட்பட) நிரப்பப்படவுள்ளன.

இதைத் தொடர்ந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு (1,261), மேல் மாகாண சபை (414), இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு (355), மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (310) ஆகியவற்றிலும் கணிசமான எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறவுள்ளன.

இந்த ஆட்சேர்ப்புகள் அரச சேவையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திர கோளாறு : சென்னையில் அவசரமாக தரையிரங்கிய விமானம்!!

நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், மதுரையில் இருந்து துபாய் கிளம்பி சென்றுக் கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் 167 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 173 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டு சில மணி நேரத்தில், நடுவானில் பறந்துக் கொட்னிருந்த போதே இயந்திர கோளாறு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.

உடனே விமானி மதுரை மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தார். அப்போது விமானம் சென்னை வான்வெளியில் இருந்ததால், சென்னையில் அவசரமாக தரையிறங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி, விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர், விமானம் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டு பொறியாளர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

இயந்திர கோளாறு சீர்செய்வதற்காக நீண்ட நேரம் பிடித்ததால், பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு,

அதே விமானம் இரவு நேரத்தில் 173 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.