கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சைதன்யா நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் காளஹஸ்தியிலிருந்து தினமும் நெல்லூர் சென்று படித்து வருவதில் சிரமம் ஏற்படுவதால் கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்குமாறு அவரது பெற்றோர் சைதன்யாவிடம் கூறி வந்துள்ளனர்.
ஆனால், கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க விருப்பமில்லாத சைதன்யா வீட்டிலிருந்தே படிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சைதன்யாவின் பெற்றோர் இந்த ஒரு வருடம் மட்டும் விடுதியில் தங்கி படிக்குமாறு அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பிறகு வேறு வழியில்லாமல் கல்லூரி விடுதிக்கு சென்ற சைதன்யா புத்தாண்டுக்கு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோருடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடிய சைதன்யா காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது விடுமுறை முடிந்ததும் தன்னை மீண்டும் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க அனுப்பி விடுவார்களோ? என எண்ணி விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சைதன்யா காளஹஸ்தி அருகே செல்லும் தெலுங்கு கங்கை திட்டம் ஆற்றங்கரைக்கு சென்று கரையில் தனது செல்போனை வைத்துவிட்டு ஆற்றில் குதித்து உள்ளார்.
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர் ஆற்றங்கரையில் செல்போன் இருப்பதைக் கண்டு அந்த செல்போன் மூலம் சைதன்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ஆற்றில் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை தொட்டம் பேடு அருகே சைதன்யாவின் உடல் கரையோரம் ஒதுங்கிய நிலையில், அதனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து தொட்டம் பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி விடுதியில் தங்குவது தான் தற்கொலைக்கு காரணமா? இல்லை வேறு எதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா மாவட்ட செயலகமும் மாவட்ட கலாசார அதிகாரசபையும் இணைந்து நடாத்திய சுகந்தம்-01 நூல் வெளியிட்டு விழா மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (05.01.2022) காலை 10 மணிக்கு நடைபெற்றிருந்ததுடன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பி.ஏ.சரத் சந்திர கலந்து சிறப்பித்தார்.
நூலினை மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை அரச அதிபர் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகள் சிறப்பு விருந்தினர்கள் , கௌரவ விருந்தினர்கள் , அதிதிகள் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் ஆகியோரும் அதிதிகளாக அரச உயர் அதிகாரிகள் , கவிஞர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலக்கியத் துறை சார்ந்தோர், அரச அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பராமரிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது.
வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற வருகின்றவர்கள், மாதாந்த கிளினிக் சேவையை பெற வருகின்ற நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருகின்ற உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கொட்டகையில் வைத்து விசாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுவதாக நோயாளர்கள் விசனம் வெளியிட்டனர்.
வவுனியா பொது வைத்தியிசாலை நிர்வாகத்தினால் கொரோனா பரவாமல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் காரணமாகவே நோய் தொற்று வேகமாக பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள கொட்டகையில் மக்களும், நோயாளர்களும் நெருக்கமாக இருப்பதன் காரணமாக வேகமாக தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
வைத்தியசாலை காவலாளிகள், இராணுவத்தினர் போன்று விசாரணை செய்து நோயாளர்களை வைத்தியசாலைக்குள் அனுமதிப்பதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.
அத்துடன் வைத்தியசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் ஐந்நூறு மீற்றர் தூரம் சுற்றியே சிறிறுண்டிச்சாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
வைத்தியசாலையின் உள்ளே இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வெளியே உள்ள சிற்றுண்டிச்சாலைகளை நோக்கி செல்வதால் நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தம் காரணமாக, நோயாளர்களும், வைத்தியசாலைக்கு மருத்துவ சேவை பெறும் நோக்கில் செல்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார். வழமையாக ஜனவரி மாதத்தில், குறித்த ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கும்.
ஆனால், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பாரிய நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வவுனியா ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் வாயில் முன்பாக இன்று (05.01.2022) காலை 09.45 மணியளவில் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாடசாலைக்கு ஆளுமைமிக்க அதிபரை நியக்குமாறு கோரிக்கை விடுத்து பாடசாலையின் வாயில் முன்பாக அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கல்வி திணைக்களமே அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு அடிபணியாதே , கல்வி திணைக்களமே ஆளுமைமிக்க அதிபரே எமக்கு வேண்டும் , எமது பாடசாலையின் தரத்தினை குறைக்காதே , கிராமப்புற பாடசாலைகளின் வளர்ச்சியினை தடுக்காதே போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் பொதுமக்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் என 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் 50 நிமிடங்கள் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் இம் மாதம் NVQ 3, 4 மட்ட 6 மாத கால புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பொருத்தமான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Computer Graphics Design, கணனி வலையமைப்பு (Computer Networking), கணிய அளவை உதவியாளர் (Assistant Quantity Serveying), கள உதவியாளர் விவசாயம் (Field Assistant Agriculture) ஆகிய கற்கைநெறிகளே இம் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Computer Graphics Design : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
கணனி வலையமைப்பு (Computer Networking) : தகைமைகள் : க.பொ. த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், போதனா மொழி, ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
கணிய அளவை உதவியாளர் (Assistant Quantity Serveying) : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், போதனா மொழி, ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
கள உதவியாளர் விவசாயம் (Field Assistant Agriculture) : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் தமிழ் மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி, நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
வவுனியாவில் குடியிருப்பதற்கு வீடு இல்லை எனத் தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் வீட்டுப் பொருட்களுடன் வந்து பெண் ஒருவர் தங்கியுள்ளார்.
நேற்று (04.01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தெர்டர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல், ஆலடிப் பகுதியில் பிறிதொரு நபரின் வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவரை வீட்டு திருத்த வேலை காரணமாக குறித்த வீட்டு உரிமையாளர் வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து வாகனம் ஒன்றில் தனது வீட்டில் இருந்த பொட்களை ஏற்றிய குறித்த பெண் வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் தனது பொருட்களை இறக்கி வைத்து விட்டு அங்கு தங்கியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அறிந்து கொண்ட பதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் குறித்த பெண்ணிடம் தகவல்களை பெற்று அவரின் நிலை தொடர்பில பிரதேச செயலாளர் மற்றும் பொலிசார் ஆகியோருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பிரதேச செயலகத்தின் மகளிர் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணின் நிலமைகளை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பொலிசாரிடமும் தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த பெண் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்தையடுத்து மருத்துவ ஆலோசனையும் பெறப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் மகளிர் பொலிசாரின் உதவியுடன் குறித்த பெண்ணை இரவு 10 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அவருடைய பொருட்கள் கிராம அலுவலர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின் பெண் தங்குவதற்கான ஒரு இடம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இலங்கையில் அதிவேக வீதியில் சொகுசு பேருந்தில் முதன் முதலாக சாரதியாக பணி புரியும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை – தெவிநுவர கிராமத்தினை சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான லக்ஷி சசிந்தா இவ்வாறு 50 பயணிகளுடன் சொகுசு பேருந்தை செலுத்தி வருகின்றார். குறித்த பெண் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் பின்வருமாறு,
மாத்தறை தெவிநுவர கிராமத்தில் கருணாசேன மற்றும் பிரேமதாச தயாவதியின் பெற்றோருக்கு பிறந்த இரண்டாவது மகள் லக்ஷி சசிந்தா, சிறுவயது முதலே வித்தியாசமான அபிலாஷைகளைக் கொண்டிருந்தேன்.
மாத்தறை சுஜாதா பாலிகா வித்தியாலயத்தின் சிறந்த பழைய மாணவி.வணிகவியலில் உயர்தரத்தில் சித்தியடைந்து வெளிநாட்டுப் பட்டப்படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் ஐந்து பிள்ளைகள்.
இரு பெண் சகோதரிகளும். மூன்று ஆண் சகோதரர்கள். எனது சகோதரனுக்குப் பிறகு குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. எனது தந்தையாருக்கு ஒரு ஹராஜ் இருந்தது.
சிறு வயதிலிருந்தே எனக்கு கார்கள் மீது அலாதியான விருப்பம் இருந்தது. லேடன் பஸ்கள் பெரும்பாலானவை எங்கள் அப்பாவின் ஹராச்சுக்கு பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்படும்.
இந்த பேருந்தை திருத்தம் செய்யும்போது சிறுவயதில் ஓட்டுனர் இருக்கையில் உட்காருவது வழக்கம். ஸ்ரேரிங்கினை சுழற்றி விளையாடுவதுடன் எனக்கு பேருந்துகள் பிடிக்கும். இவ்வாறாக அப்பா படிப்படியாக எனக்கு பேருந்து செலுத்தக் கற்றுக் கொடுத்தார்.
நான் 13-14 வயதில் வாகனம் செலுத்த முடிந்தது. அப்போது என் தந்தைக்கு சொந்தமாக ஜீப் இருந்தது. அப்பாதான் முதலில் ஸ்ரேரிங் பிடித்து ஜீப்பில் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். எனக்கு சின்ன வயசுல இருந்தே பலவித கனவுகள் இருந்தது. நண்பர்கள், வைத்தியர்கள் ,ஆசிரியர்கள்,சட்டத்தரணிகள் என உள்ளனர்.
ஆனால் நான் அரச வேலை செய்வதை என் தந்தை விரும்பவில்லை. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று அப்பா எப்போதும் என்னிடம் கூறினார். நான் பஸ் ஓட்டுநர் வேலையைத் தேர்ந்தெடுத்தபோது என் அப்பாதான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
என் அம்மாவும் ஆதரவைக் கொடுத்தார். நான் முதலில் எனது சகோதரரின் மஹரகம மாத்தறை நெடுஞ்சாலை பஸ்ஸில் மாதாந்த சம்பள சாரதியாக பணிபுரிந்தேன்.
இவ்வாறு உயர்கல்வி முடிந்து வீட்டில் இருந்தபோது வீட்டில் வேலை கிடைத்தது. அந்தச் சமயத்தில் தான் பாடசாலை மாணவர்களுக்கான சேவையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நான் முதலில் சாரதி பயிற்சி பாடசாலை சென்று சாரதி பயிற்சி கற்கவில்லை என்றேன். என்னுடைய பயிற்சியாளர் அப்பா. நான் 12 அல்லது 13 வயதில் காரை செலுத்த முடிந்தது.
ஆனால் எனது சாரதி அனுமதி கிடைக்கும் வரை அப்பா என்னை செலுத்தவிடமாட்டார். எனக்கு 18 வயதாக இருந்தபோது, எனது சாரதி அனுமதி கிடைத்தது.
ஆனால் ஒரு நாள் பஸ் செலுத்த வேண்டும் என்பது என் கனவு. சாரதி அனுமதி பெற எனக்கு 5 ஆண்டுகள் ஆனது. கனரக வாகன சாரதி உரிமம் பெண்களுக்கு வழங்கப்படாது என்று முதலில் நினைத்தேன்.
ஒரு நாள் நான் சென்ற மோட்டார் போக்குவரத்து ஆணையரிடம் தகவல் கேட்டேன். பெண்கள் தகுந்த தகுதிகளைப் பெற்றால் பேருந்து உரிமம் பெறுவதற்கு சட்டத் தடை ஏதுமில்லை என்றார்.
சாரதி அனுமதி பெறலாம் என்று தெரிந்ததும், உலகப் பட்டத்தை வென்றதுபோல் மகிழ்ச்சி அடைந்தேன். நான் கடினமாக உழைத்து எனது அனைத்து தகுதிகளையும் செய்தேன். 2008 இல் கனரக வாகன சாரதி அனுமதி பெற்றேன்.
சாரதி அனுமதி பெற்று, முதலில் பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் சிறிய பேருந்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று . மாத்தறையில் உள்ள பல பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றேன்.
அன்றாடம் வாகனம் ஓட்டியதில் திருப்தி அடைந்த பெற்றோர் பிள்ளைகளை ஒப்படைக்கத் தயங்கவில்லை. பதினோரு அல்லது பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து பாடசாலைப் பேருந்தில் சாரதியாகப் பணிபுரிந்து, பாதுகாப்பு மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
சில நாட்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 25 இருக்கைகள் கொண்ட பேருந்தை நிறுத்திவிட்டு பிள்ளைகளை 48 இருக்கைகள் கொண்ட பேருந்தில் பயணிக்கத் தொடங்கினேன். அசோக் லேடன் பேருந்தின் ஆரம்ப நாட்களில் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
பயணிகள் போக்குவரத்து சேவையை விட பாடசாலை பேருந்தில் பணிபுரிவது ஒரு பொறுப்பாகும். உடம்பு சரியில்லாம ஒரு நாள் கூட லீவு எடுக்க முடியாது. எனக்குப் பதிலாக வேறொருவரை அனுப்ப முடியாது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும், அவர்கள் வீடு திரும்பும் வரை என்னை நம்புகிறார்கள். இதனால் பேருந்து சாரதியாக பல வருடங்கள் மாணவர்களை மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு ஏற்றிச் சென்றேன்.
இவ்வாறான நிலையில் அந்த நேரத்தில் தான் தங்காலை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் பொறுப்பதிகாரியான ஒருவரை திருமணம் செய்தேன். இப்போது எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவ்வாறாக காலி – மாத்தறை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிறைவின் பின்னர், லக்ஷி சேவையில் இணைவதற்கு அதிக நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால் பல தடைகள் இருந்தன.
இந்தப் பயணத்தில் பெண் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்ட இடங்கள் ஏராளம். இது குறித்து கூறுகையில் காலி – மாத்தறை அதிவேகப் பாதை நிறைவடைந்ததும் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றை இயக்குவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டேன் ஆனால் அது எனக்கு வழங்கப்படவில்லை.
பெரிய கதிரைகளில் இருந்தவர்கள் எனக்கு நிறைய கூறினார்கள். ஏனென்றால் நான் ஒரு பெண் அனுமதி பெறுவதற்கான பல வாய்ப்புகளை கிடைக்கவில்லை . ஆனால் எல்லாரையும் போல் கோடிக்கணக்கான பணம் வைத்திருந்தால் உரிமம் பெற்று இன்னும் மேலே சென்றிருக்கலாம். இந்நிலையில் என் ஒன்றுவிட்ட சகோதரர் என்னை பஸ் சாரதியாக வேலை செய்யச் சொன்னார்.
கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். பல வருடங்களாக நான் எனது சகோதரரின் மஹரகம – மாத்தறை நெடுஞ்சாலைப் பேருந்தில் சாரதியாக மாதச் சம்பளத்திற்குப் பணிபுரிந்தேன். இதன்போது நான் முதலில் அனுமதிக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் விண்ணப்பித்தேன்.
அப்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரேணுகா துஷ்மந்த, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெண்களை சாரதி நடத்துனர்களாக பணியமர்த்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்திருந்தார். தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டதால் சாரதிக்கு விண்ணப்பித்தேன்.
அதற்கு முதலில் விண்ணப்பித்தது நான் என்று நினைக்கிறேன். அதன்படி, தெற்கு அதிவேக வீதியில் 50 இருக்கைகள் கொண்ட அசோக் லேடன் பேருந்தில் சாரதியாக பணியாற்ற முடிந்தது.
மார்ச் 14, 2014 அன்று அதிவேக வீதியை திறந்து வைத்து போது அசோக் லேடனில் முதன்முதலில் பயணித்ததை அவர் இவ்வாறு விவரித்தார். அப்போது என்னால் நன்றாக பேருந்தினை செலுத்த முடியும். அன்று முதன் முதலில் பேருந்து மிக மெதுவாக நெடுஞ்சாலையில் நகர்ந்தது .
அப்பா என் அருகில் இருந்தார். அப்பா என்னுடன் இருந்ததால் எனக்கு சிறிதும் பயம் ஏற்படவில்லை. ஆண்கள்தான் வீதியில் இவ்வளவு நேரம் பஸ் செலுத்துகிறார்கள், அதனால் பஸ்ஸில் ஏறிய என்னை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
இதனால் நான் அன்று இலங்கையின் முதல் மற்றும் அதிவேக வீதியில் பயணித்த பஸ் சாரதியானேன். நான் ஒரு பெண் என்று நினைத்து நிறைய பேர் என் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.
ஆனால் என்னுடன் பயணிப்பவர்களின் நம்பிக்கையை நான் இன்னும் சுமக்கிறேன், இன்னும் நான் அவர்களை பாதுகாப்பாக அவர்கள் இலக்குக்கு கொண்டு செல்கிறேன். சிலர் பேருந்தில் ஏறுகிறார்கள், நான் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.
மக்கள் கீழே இறங்கி செல்லும்போது நான் மிகுந்த வருத்தத்தை உணர்ந்தேன். இப்போது எனது பேருந்தைத் தேடி வந்து ஏறி செல்லும் மக்கள் குழுவாக உள்ளது. அப்போது என் பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் இன்று என்னைக் கண்டுபிடித்து பேருந்தில் ஏறுகிறார்கள்.
மாத்தறை-கொழும்பு அலுவலக ஊழியர் போக்குவரத்தை ஆரம்பித்த முதல் சாரதியும் நான்தான். எனது பேருந்தில் முதலில் 7 பேர் இருந்தனர். என் கையில் எண்ணையுடன் இந்தப் பேருந்து நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கு கொழும்பு வீதிகள் தெரியாது. அப்பா இரண்டு நாட்களாக வீதிகளைக் காட்ட வந்தார். அதன்பின் பகலில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுத்து கொழும்பு வீதிகளில் ஓடினேன் . அப்போது அலுவலகம் செல்லும் வீதிகளைக் கண்டு பழகினேன் என்றார்.
இவ்வாறாக ஓட்டுநர் பணியைச் தொடர்ந்து முயற்சியை கைவிடாததால் இன்று மூன்று சொகுசு பேருந்துகளை வைத்து பஸ் சாரதியாக பணிபுகின்றார். தற்போது நான் இந்த வேலையை 20 வருடங்களாக செய்து வருகிறேன்.
என்னிடம் சேவை செய்ய வருபவர்களுக்கு என்னால் முடிந்ததை வழங்குகிறேன். எனது பயணம் அப்பாவின் கடையில் தொடங்கியது. அங்குதான் எனக்கு இந்த விடயங்களில் ஆர்வம் ஏற்பட்டது. அப்பா எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார்.
நான் வித்தியாசமாக சிந்தித்ததால் வாழ்க்கையில் நிறைய விடயங்களை வென்றேன். கோரிக்கை வைக்க விரும்புகிறேன். சாரதிப் பணியை விரும்பும் இளம் பெண்கள் இருந்தால், அவர்களுக்குப் பயிற்சி அளித்து எனது பேருந்துகளில் பணிபுரிய அவர்களுக்கு வேலை வழங்க விரும்புகிறேன்.
எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். எனது தொழில் வாழ்க்கைக்கு எனது கணவர் பெரும் உறுதுணையாக இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் அப்படித்தான்.
எனது பயணத்தில் பலமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார். ’தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளுங்கை’ என்ற பழமொழியை இன்று பெண்கள் வேறு பரிமாணத்திற்கு கொண்டு செல்வதை பல்வேறு நிலைகளில் துணிச்சலாக பார்க்கிறோம்.
மட்டக்களப்பு – கிரான்குளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இன்று(04.01.2022) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாகன விபத்தில் 5பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் கிராமத்திலிருந்து குடும்ப உறவினர்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம்(03.01) திருகோணமலைக்குச் சுற்றுலா சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்,
கிரான்குளம் பிரதான வீதியில் வைத்து அதிகாலை வேளையில் வேன் பாதையை விட்டு விலகி இலங்கை மின்சாரசபை மின்கம்பத்தில் மோதுண்டு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் வேன் மற்றும் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இலங்கையின் பலாங்கொடை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட”ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை,
டுபாய் நிறுவனமொன்று வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்துக்குக் குறித்த இரத்தினக்கல்லை இலங்கை பெறுமதிப்படி 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று (3) மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் நேற்று (03.01.2022) இரவு பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது.
அந்நேரம் அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார். அதன்போது, பின்னால் வந்த பேருந்து ஆசிரியர் மீது மோதியுள்ளது.
குறித்த ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது காயமடைந்தவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்க விபத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயிரிழந்த ஆசிரியரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேவேளை, குறித்த பதில் நீதவானும், அவரது சாரதியும் இன்றைய தினமே பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பதில் நீதவானின் சாரதியும், பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
17 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிக் டொக் காணொளி தொடர்பான தகராறில் குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதம்பிட்டிய லேனில் வைத்து குறித்த இளைஞரை கத்தியால் குத்தியதாகவும், இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரும் மேலும் இருவர் ரண்திய உயன வீட்டுத் தொகுதியை நோக்கி பயணித்ததாகவும், டிக் டொக் காணொளி தொடர்பாக ஒரு குழுவினர் அவர்களை தாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், பாதிக்கப்பட்ட நபரை கத்தியால் குத்தியதுடன், சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் பரந்தன் சந்தியில் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்த நிலையில் பொலிஸாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (04.01.2022) காலை 10 மணியளவில் இளைஞனின் இறுதி கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்திவரை சென்றது.
தொடர்ந்து குறித்த பகுதியில் ஏ9 வீதியை மறித்து இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறுபட்ட வயதை சேர்ந்தவர்கள் இணைந்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த போக்குவரத்திற்காக மாற்று வழிகள் பொலிஸாரினால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான பொலிசார் வரவழைக்கப்பட்ட போதிலும் அவர்களை கட்டுப்படுத்த பொலிஸாரால் முடியாது போனது.
தொடர்ந்து குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், குடும்பத்தினரிடமும் கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பரந்தன் சந்தியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதேவேளை குறித்த விடயங்களை உள்ளடக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஒப்பத்துடன் கடிதம் ஒன்றும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து பொலிஸ் அத்தியட்சகர் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்று உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை, ஹபரன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்ற 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம பிரதேசத்தை சேர்ந்த மிலான் பிரமுக்க விஜேசிங்க என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி ஆபத்தான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் திருமணம் செய்த இந்த தம்பதி புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் இரவு ஹபரன ஹோட்டலில் தங்கிய நிலையில் பிற்பகல் திருகோணமலை நோக்கி பயணித்துள்ளனர்.
இதன் போது தவறான வீதியில் பயணித்த பேருந்து ஒன்றுடன் இந்த தம்பதியின் மோட்டார் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஓன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை பெருங்குடி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன் (45). இவர் மனைவி ப்ரியா (40). தம்பதிக்கு 10 வயதில் தரண் மற்றும் ஒரு வயதில் தாஹன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.
மணிகண்டன் போரூரில் உள்ள லண்டனை தலைமையகமாக கொண்ட பிரபல வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆண்டு வருமானமாக ரூ.28 லட்சம் சம்பளம் பெற்று வந்துள்ளார்.
சூதாட்டத்தில் விருப்பம் கொண்ட மணிகண்டன் அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அதன் மீதான ஆசையில் மணிகண்டன் ஒரு கட்டத்தில் நண்பர்களிடம் ரூ 75 லட்சம் கடன் வாங்கி ஓன்லைன் சூதாட்டத்தில் விளையாடி ரூ 1 கோடிக்கு மேல் இழந்தார்.
இதை குடும்பத்தாரிடம் சொல்லாமல் மனதுக்குள் புழுங்கியபடி இருந்தார். இந்த நிலையில் மணிகண்டனுக்கு கடன் கொடுத்த நண்பர்கள் அவர் வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் மனைவி ப்ரியாவுக்கு உண்மை தெரிந்தது.
இது குறித்து கணவரிடம் கேட்ட போது ஆத்திரமடைந்த மணிகண்டன் மனைவி தலையில் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். பின்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்ற மணிகண்டன், ஆத்திரத்தில் புத்தி கெட்டு இப்படி செய்துவிட்டோமே என பயந்து ஒரு மணி நேரமாக அழுதுள்ளார்.
பின்னர் சமையல் அறைக்கு சென்று தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மணிகண்டன். இவை அனைத்தும் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3500 மாதாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.