போக்குவரத்துக் காவலர்களில் இருவர் சாலையில் சென்ற நபரைத் தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட நபர் கேகாலையில் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருளுக்கு அடிமையான இவர், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் கைது செய்ய முற்பட்ட போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (The Department of Motor Traffic )சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் அலுவலகத்தில் இப்படியான மோசடிகள் சம்பந்தமாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கிடைத்த சில முறைப்பாடுகளை அடுத்து, இந்த நடவடிக்கையை நிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எழுத்து மூலம் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பின்னர், செயன்முறை பரீட்சையில் தேர்ச்சி பெறும் நபர்கள் 500 ரூபாய் செலுத்திய பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.
செயன்முறை பரீட்சையில் தேர்ச்சி பெற்ற தினத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாவிட்டாலும் தற்காலிக அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்பதுடன் அதனை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட முடியும்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நேரத்தை ஒதுக்கிக்கொண்ட நபர்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய சேவைகள் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், கொலைச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தாய், சகோதரி மற்றும் மைத்துனர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்குடியிருப்பு உடையார்கட்டில் 12 வயது சிறுமி காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர், டிசம்பர் 18ம் திகதி சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மற்றும் பிரேதப் பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தந்தை, தாய் மற்றும் 21 வயதுடைய சகோதரி ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கள் கொலையை திசை திருப்புவதற்காக பொலிஸ் அதிகாரிகளை தவறாக வழிநடத்த முற்பட்ட போதிலும், சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்து சில நாட்களில் சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் மைத்துனர் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 2022 ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையை இன்றையதினம் படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக,
12,000 புள்ளிகளைத் கடந்ததன் ஊடாக இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 12,070.68 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
மேலதிக அரை விடுமுறை காரணமாக இன்றைய வர்த்தக அமர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்ததாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி,
4000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இக் கொடுப்பனவு விசேட கொடுப்பனவாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஏர்வினியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்கள் தனது தயாரிப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையுடன் உரப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சீன ‘Seawin Biotech’நிறுவனம்,
பணம் செலுத்தத் தவறியமை தொடர்பில் இலங்கை அரச வங்கிகளுக்கு எதிராக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்ததாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அறிக்கையின்படி, கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட சீவின் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்ட 20,000 தொன் சேதனைப் பசளைகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என்று குறித்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
‘Seawin Biotech’ நிறுவனம் இலங்கையின் அரச வங்கிக்கு எதிரான தரநிலைகள் மற்றும் புவர்ஸ் தரப்படுத்தல் (Poor’s rating) மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை (Moody’s) மற்றும் ஃபிட்ச் தரப்படுத்தல்(Fitch Group) ஆகிய முன்னணியான மூன்று சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாக கூறியுள்ளது.
“இந்த மூன்று நிறுவனங்களுடன் தொடர்புடைய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தொடர்புடைய அபாயங்களை நினைவூட்டுவதற்காக தமது நிறுவனம் இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக ‘Seawin Biotech’ நிறுவன பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடப்போவதாக ஏற்கனவே சீன நிறுவனம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் மக்கள் இயேசு பிறப்பின் நாளாக கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தை நாளைய தினம் (25.12) கொண்டாட உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்களாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு கடந்த சில வருடங்களாக முகம் கொடுத்து வந்த நிலையில் மக்கள் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து உள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் சிறிய அளவிலான கிறிஸ்து பிறப்பு மற்றும் விசேட நள்ளிரவு திருப்பலிகளுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களை சுகாதார நடைமுறைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடரூந்து திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடரூந்து பயணச் சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதுடன் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகியுள்ளனர். எனினும் முற்பதிவு ஆசணங்களுக்காக பயணச்சீட்டு மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் பயணச்சீட்டையின்றி புகையிரத்தில் பயணம் மேற்கொண்டு வருவதுடன் பொதிகளையும் கையில் எடுத்து செல்கின்றனர்.
பயணச்சீட்டை கோரிய போதிலும் முற்பதிவு ஆசனங்களை தவிர ஏனைய ஆசனங்களுக்கு பயணச்சீட்டை தர புகையிரத நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அதன் காரணமாக நாம் பயணச்சீட்டையின்றி புகையிரத்தில் பயணிக்கவுள்ளோம். பயணச்சீட்டையின்றி எம்மை பயணிக்குமாறு அவர்களே தெரிவித்தனர். எனவே பயணச்சீட்டையின்றி பயணிப்பது தொடர்பில் தண்டம் விதிக்கும் பட்சத்தில் அவர்களே முழுமையான பொறுப்பு கூறல் என பயணிகள் தெரிவித்தனர்.
அத்துடன் புகையிரத நிலையத்திலுள்ள ஒலிவாங்கிகள் மூலம் புகையிரதம் செல்லும் இடங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பையேற்றும் வாகனம் இன்று (24.12.2021) அதிகாலை நேரத்தில் தீடிரென தீப்பற்றி ஏரிந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரின் கழிவுகளை நேற்று (23.12) இரவு ஏற்றிய பின்னர் நகரசபை வளாகத்தில் குப்பையேற்றும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் அதிகாலை 2.00 மணி வரை ஊழியர்கள் கடமையாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நகரசபை ஊழியர் ஒருவர் காலை கடமைக்கு திரும்பிய சமயத்தில் குப்பையேற்றும் வாகனம் எரிந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் வாகனம் பகுதியளவில் மாத்திரமே சேதமடைந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சி.சி.ரி.வி உதவியுடன் தீ விபத்திற்கான காரணத்தினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தீவிபத்து சம்பவம் குப்பையேற்றும் வாகனத்தில் காணப்பட்ட எதேனும் எரிபொருளால் உருவானதா? அல்லது யாரேனும் தீ வைத்துள்ளார்களா? என இரு கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை கல்லூரி அதிபர் கணேசலிங்கம் தலைமையில் இன்று (23.12.2021) திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு சரஸ்வதி சிலையை திறந்து வைத்தார்.
பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.தனஞ்சயனின் நிதிப்பங்களிப்பில் சரஸ்வதி சிலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்வின் முன்னதாக அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.
இந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி ரஞ்சித்குமார், பழைய மாணவர்சங்கத் தலைவர் (லண்டன் கிளை) ஞானேஸ்வரன், ஓய்வுநிலை அதிபர் அமிர்தலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் காணப்படுவதுடன் இவ்வாறான மணிக்கூட்டு கோபுரம் நகரின் மத்தியில் ஏன் என்ற விசனம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நகரத்துக்கு மத்தியில் அதாவது பொதுச்சந்தை, வங்கிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிக்கு செல்லும் பாதையில் காணப்படுகின்ற இம்மணிக்கூட்டு கோபுரமானது கடந்த வருடங்களில் சீரான முறையில் இயங்கியதுடன் வடக்கின் வாயிலாக வவுனியா நகரம் காணப்படும் நிலையில் இம் மணிக்கூட்டு போபுரம் பலருக்கு நேரம் பார்ப்பது உதவியாக காணப்பட்டது.
மணிக்கூட்டு கோபுரம் பல லட்சம் செலவில் நகரசபையினரால் புதுப்பிக்கப்பட்டிருந்ததுடன் சில நேரத்தில் அவை தவறான நேரத்தினை காட்டியவண்ணம் காணப்பட்டது.
அதன் பின்னர் தற்போது முற்றாக செயலிழந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் உட்பட எமது பகுதி மக்களும் வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தில் நேரம் காட்டாமையினையடுத்து ஏமாற்றம் அடைகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபையினரை தொடர்பு கொண்டு வினாவிய போது, குறித்த மணிக்கூட்டு கோபுரம் கடந்த பல வருடங்களாக நகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டது.
குறித்த மணிக்கூட்டு கோபுரத்தில் விளம்பரப்படுத்தல் மூலம் நிதியினை ஈட்டி அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியில் மணிக்கூட்டு கோபுர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தோம்.
ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொறியியலாளர் மணிக்கூட்டு கோபுரம் அவர்களது அதிகார சபைக்கு சொந்தமானது என தெரிவித்தமையுடன் மணிக்கூட்டு கோபுரத்தில் நகரசபையினர் எவ்வித விளம்பரப்படுத்தல் குத்தகைக்கும் வழங்க முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையினாலேயே நகரசபைக்கு தற்போது அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக எம்மால் மணிக்கூட்டு கோபுரத்தினை மீள்திருத்தம் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.
நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிக்கு இடையே ஏற்பட்டுள்ள சிறு பிரச்சனையின் காரணமாக மணிக்கூட்டு கோபுரம் தற்போது மக்களுக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன.
கடந்த வாரம் 15 ஆம் திகதி காணாமற்போன நிதர்சனா, 18 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.
ஆனால் இக்கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது அக்காவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களின் விசாரணையின் பின்னர் சிறுமியின் தந்தை கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில்,
ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் குறித்த சிறுமி கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிசார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ்.சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி, இராணுவத்தினர் போன்ற பலரும் நேரடியாக சென்று சம்பவ இடத்தில் இருந்த பழைய கிணற்றினை பார்வையிட்டதோடு நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், குறித்த கிணற்றின் நீரை இறைத்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சிறுமியின் வீட்டில் இரத்த கறைபடிந்திருந்த மேசையினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பசியால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டு பேர் தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
விழுப்புரத்தின் மேல்தெரு என்ற பகுதியில் இருந்த தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கு பதிவு செய்த விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
எதனால் இந்த சிறுவன் கொலை செய்யப்பட்டான்? யார் காரணம்? என்ற பல கோணங்களில் போலீசாரின் விசாரணை தொடர்ந்தது. இதற்கிடையே பிரேத பரிசோதனையில், சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும்,
சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை என்றும் தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில், அதில் 2 சிசிடிவி காட்சிகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதன்படி, அந்த 2 சிசிடிவி காட்சியிலும் “2 இடங்களில் 2 நபர்கள் நடந்து செல்கின்றனர். அதில் ஒரு நபர், ஒரு சிறுவனைச் சுமந்து வரும் காட்சியும், அதன் பிறகு அவர் கையில் ஒரு கை தடியோ அல்லது இரும்பு பைப்பையோ தூக்கி வரும் காட்சியும்” அதில் இடம் பெற்று இருக்கிறது.
அதே போல் மற்றொரு சிசிடிவி காட்சியில், “குழந்தை உடல் மீட்கப்பட்ட இடத்தில் சிறுவனை அவர்கள் தூக்கி வருகின்ற அந்த காட்சியும்” இடம் பெற்றிருக்கிறது.
மிக முக்கியமாக, “சிறுவனைத் தூக்கி வரும் 2 பேரும் வட மாநிலத்தவர்கள் போன்று இருப்பதால், அவர்கள் குழந்தையைக் கடத்தி வந்து சாலையோரங்களில் பிச்சை எடுக்க வைத்து இருக்கக்கூடும்” என்றும், சந்தேகம் எழுந்து உள்ளது.
இதுதொடர்பாக ஒருவரை பிடித்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், சிறுவனின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும் நிலையில் பல உண்மைகள் வெளியே வரலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (23.12) காலை தொடக்கம் மதியம் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்சந்தை இடம்பெற்றது.
உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இடம்பெற்ற தொழிற்சந்தையில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர தலைமை வகித்திருந்தார்.
இதன் போது தொழிற்சாலைகள், உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், பேக்கரி நிலையங்கள் என 18க்கு மேற்பட்ட தொழில் வழங்குனர்கள் பங்கு வகித்திருந்ததுடன் தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கு பற்றியிருந்தனர்.
தொழிற்சந்தை நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் பெ.கிருஷ்ணாந்தி தொழிற்சந்தை தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
எதிர்வரும் 3 வாரங்களின் பின்னர் இலங்கையினுள் பரவும் முதன் கோவிட் மாறுபாடாக ஒமிக்ரோன் காணப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது சுகாதார பரிசோதகர் உப்புல் ரோஹன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 3 ஒமிக்ரோன் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர். அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 7 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்திய பொது சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மிகவும் ஆபத்தான நிலைமை நாட்டினுள் ஏற்படுவதனை தடுப்பதற்கு புத்தாண்டு காலத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் உப்புல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
மடகஸ்கார் தீவு அருகே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் 12 மணி நேரம் நீந்தி கரையை அடைந்தார்.
ஆபிரிக்கா கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு மடகஸ்கார். மடகஸ்காரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் , 39 பேர் உயிரிழந்துள்ளனர். 68 பேரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சரக்குகளை ஏற்றிச் செல்ல வேண்டிய அந்த கப்பலில் சட்டவிரோதமாக மக்களை ஏற்றிச் சென்றுள்ளனர். அதிக பாரம் காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.