அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த (21.12) தொடக்கம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையும் ஆதரவு வழங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அதற்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் என்பன செயலிழந்து காணப்படுவதுடன் அவசர சேவைகள் என்பன இயங்கி வருகின்றன.
சிகிச்சைக்காக கடந்த 2 தினங்களாக வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நோயாளி ஒருவர் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஏமாற்றுத்துடன் வீடு திரும்பியதுடன் இன்றைய தினமும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.
இன்றும் வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு தொடர்வதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நோயாளி வைத்தியசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். குறித்த நோயாளி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கிளினிக் சேவைகளுக்கு வருபவர்களுக்கு கூட மறு திகதியிட்டு வழங்குவதில்லை. இதனால் நோயாளிகள் பல சிரமத்தின் மத்தியில் முச்சக்கரவண்டி மற்றும் பேரூந்துகளில் பிரயாணம் மேற்கொண்டு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரை சந்தித்த போதிலும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவுற்றதன் பின்னரே மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியுமென தெரிவித்தார்.
இன்றுடன் மூன்று தினங்கள் ஆகின்றன. இதற்கு ஓர் முடிவு வரும் என எதிர்பார்தோம் ஆனால் இன்றும் முடிவில்லை நாங்கள் பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டுகின்றோம் போராட்டம் முடியும் வரை நோயாளர்கள் வருகை தரவேண்டாம் என தெரிவிக்கின்றார்களா? இல்லை நோயாளர்களை அலட்சியப்படுகின்றனர். இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் தை மாதம் 3 ஆம் திகதி (03.01.2022) NVQ 3, 4 மட்ட 6 மாத கால புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பொருத்தமான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Computer Graphics Design, கணனி வலையமைப்பு (Computer Networking), கணிய அளவை உதவியாளர் (Assistant Quantity Serveying), கள உதவியாளர் விவசாயம் (Field Assistant Agriculture) ஆகிய கற்கைநெறிகளே வரும் மாதம் 3ம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Computer Graphics Design : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
கணனி வலையமைப்பு (Computer Networking) : தகைமைகள் : க.பொ. த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், போதனா மொழி, ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
கணிய அளவை உதவியாளர் (Assistant Quantity Serveying) : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், போதனா மொழி, ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
கள உதவியாளர் விவசாயம் (Field Assistant Agriculture) : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் தமிழ் மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி, நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
அம்பத்தூர் ரயில் நிலையம், 3 வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகள் ஆவடி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆவடி ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், புகாரின் அடிப்படையில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தவர்கள் திருவண்ணாமலை, போளூர் தாலுகா முக்குரும்பை கிராமத்தைச் சார்ந்த ஜெயக்குமார் (25) என்பதும், ஆந்திரா மாநிலம், விஜயநகரம் பகுதியைச் சார்ந்த சரண்யாஶ்ரீ (19) என்பதும் தெரியவந்தது.
இதில் ஜெயக்குமார் அம்பத்தூரை அடுத்த பாடி பகுதியில் தங்கியிருந்து தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், சரண்யாஸ்ரீ டிப்ளமோ படித்து முடித்து விட்டு பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்றுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், பாடி, படவட்டம்மன் கோயில் 2-வது தெருவில் வசித்து வந்தார்.
இதற்கிடையில், சமீபத்தில் ஜெயகுமார், சரண்யா இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 18-ந்தேதி சரண்யாஸ்ரீயை பார்க்க அவரது பெற்றோர்கள் சென்னைக்கு வந்து உள்ளனர். அப்போது, ஜெயக்குமார் தனது பெற்றோருடன் சரண்யாஸ்ரீயின் பெற்றோரை வந்து சந்தித்து உள்ளனர்.
மேலும், அவர்கள் ஜெயக்குமாருக்கு, சரண்யாஸ்ரீயை திருமணம் செய்து வைக்க சம்மதம் கேட்டு உள்ளனர். ஆனால், அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, ஜெயக்குமார் தனது பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலை சரண்யாஸ்ரீ பாடியில் உள்ள வீட்டில் இருந்து மாயமானார். இதனையடுத்து அவரது தாய் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இதற்கிடையில், இன்று சரண்யாஸ்ரீ, ஜெயக்குமார் இருவரும் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.
பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால், காதலன் ஜெயக்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் சரண்யாஸ்ரீ. பின்னர், அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து,
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவிற்கு வந்து வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், கணவன் காணவில்லை என பீவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, புகார் கொடுத்த பீவியிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கணவர் மன்சூர் மாலிக்கை நண்பருடன் சேர்ந்து அவரது மனைவி பீவி கொலை செய்து வீட்டிலேயே புதைத்து காணவில்லை என நாடகம் ஆடியதை அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மனைவி பீவியை, மன்சூர் மாலிக் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கணவனை அடித்து கொலை செய்து வீட்டிலேயே புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் வாயிலில் முதியவர் ஒருவரின் சடலத்தினை இன்று (22.12) இரவு 8 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு முன்பாக முதியவர் ஒருவர் எவ்வித அசைவுமின்றி மரணமடைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில்,
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் 1990 அவசர நோயாளர் காவு வண்டிக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
அதன் பின்னர் 1990 அவசர நோயாளர் காவு மூலம் அவ்விடத்திற்கு விரைந்த வைத்திய குழுவினர் வயோதிபரின் உடலை பரிசோதனைக்குட்படுத்தியதுடன் அவரின் மரணத்தினை உறுதிப்படுத்தினர்.
குறித்த வயோதிபர் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தாரோ அல்லது யாரேனும் தாக்குதல் மேற்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த முதியவர் பழைய பேரூந்து நிலையத்தில் தினசரி நடமாடித் திரிபவர் என பொதுமக்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா – கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்று உயிரிழந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொக்குவெளிப் பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள, கிணற்றில் குளிக்கச்சென்ற நிலையில் கிணற்று நீரினுள் மூழ்கி மரணமடைந்திருந்தார்.
இந்நிலையில் கிராம மக்களின் முயற்சியால் கிணற்றுநீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்று (21) இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவரது சடலத்தினை சுகாதார நடைமுறைகளைப் பேணி எரியூட்டுவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை, காரணம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் தான்.
ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட, பெற்ற பிள்ளைகளே தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட மகள், தன்னுடைய தாய்க்காக வரன் தேடிய நிகழ்வு நடந்தது.
இந்நிலையில் தற்போது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த நிகழ்வை மகள் டுவிட்டரில் வெளியிட வைரலானது. @alphaw1fe என்ற ட்விட்டர் யூசர், சமீபத்தில் திருமணத்தின் சில ஸ்னாப்ஷாட்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவரது தாயார், மணமகள் ஆகவிருப்பதையும், மங்களகரமான நாளுக்காக தனது தாய்க்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்து வருவதையும் பகிர்ந்திருந்தார். மேலும் அதில், தன் தாய் திருமணம் செய்து கொள்வதை தன்னால் நம்ப முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த டுவிட் வைரலாக வாழ்த்துகள் குவிந்தனு, தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயாருக்கு ஏற்பாடு செய்யப்பட இருந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லி விலகி விட்டதாக ஒரு நெட்டிசன் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார்.
ஏனெனில் நானும் எனது 16 வயது சகோதரனும் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் துணை வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இப்போது? எங்கள் வாழ்க்கையில் தந்தையாக ஒருவரை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ” என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மகளின் அடுத்தடுத்த பதிவு மிகவும் பிரபலமானதால், அவர் தனது தாயின் மோதிரம் மாற்று விழாவின் மகிழ்ச்சியான தருணங்களின் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அநேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் இரு தடவைகள் தோல்வியடைந்திருந்தது. இதனையடுத்து உள்ளூராட்சி சட்டங்களின் பிரகாரம் புதிய தவிசாளரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
குறித்த தேர்தல் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று (22) காலை வடக்கு பிரதேச சபையின் காலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது சபையின் 26 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.
இதன்போது சபையின் புதிய தவிசாளர் ஒருவரை தெரிவுசெய்யுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் கோரப்பட்டதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சோ.சத்தியேந்திரன் மற்றும் சுதந்திரக்கட்சியின் த.பார்தீபனின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இருவர் பரிந்துரை செய்யப்பட்டமையால் தவிசாளர் தெரிவு வாக்கெடுப்பிற்குவிடப்பட்டது. வாக்கெடுப்பை பகிரங்க வாக்கெடுப்பாக நடாத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்வதா என்று ஆணையாளர் கோரியிருந்தார்.
இந்நிலையில் 12 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பிற்கும் 13 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துமாறும் இணக்கம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தவிசாளர்களாக பரிந்துரை செய்யப்பட்ட இருவருக்கும் தலா 12 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தது. ஒரு வாக்கு எவருக்கும் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரை தேர்வு செய்வதாக ஆணையாளர் அறிவித்தார்.
இதனையடுத்து சபை முன்னிலையில் இருவரது பெயரும் திருவுளச்சீட்டில் எழுதப்பட்டு தெரிவு செய்யப்பட்டது. அதன் மூலம் சுதந்திரக்கட்சியினை சேர்ந்த த.பார்தீபன் தவிசாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“எஜமானி அணிந்திருந்த தங்க நகைகளை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்” என சம்பவம் தொடர்பில் கைதான குறித்த வீட்டின் பணிப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவகையில் கைதான இருவரையும் எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதிவரை,
விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று (21) உத்தரவிட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தின் பின்னர், குறித்த பணி பெண்ணினால் 46 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில , நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிரப்பாக்கிகள் செயலிழந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதன் காரணமாக இன்று (22) மின் வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாலை 6 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான காலப்பகுதியில் 30 அல்லது 45 நிமிடங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பளையில் சிறுமி ஒருவர் அவர்களின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மவுன்ட்டெம்பல் பகுதியில் வசித்து வந்த சிறுமி, அவரின் தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோரினால் தாக்கப்பட்டு கொலை செய்யபட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். உறவின பெண் ஒருவரின் காதல் விவகாரத்திற்காக உதவி புரிந்தமைக்காக சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி அங்கம்மனையில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு குறித்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். சித்தப்பாவின் மகள் மற்றும் தாயாரின் துணைக்காக குறித்த சிறுமி இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சில நாட்கள் அங்கு இருந்த அவர், கடந்த 19ம் திகதி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து அவர் பல முறை வாந்தி எடுத்துள்ளார். மேலும் சித்தப்பா தன்னை அடித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
குறித்த சிறுமி தனது சித்தப்பாவின் மகளின் காதல் விவகாரம் குறித்த தகவலை மறைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 21ஆம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அன்று காலை சிறுமியின் தந்தையும் அவளைத் தாக்கியுள்ளார்.
அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதிலும் தந்தை அதற்கு அனுமதிக்காததால் சிறுமி வீட்டில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கம்பளை நீதவான் குறித்த வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நீதவானிடம் கருத்துத் தெரிவிக்கையில், “அக்கா புலம்புவதாக தெரிவித்து அதிகாலை 2 மணிக்கு அப்பா அக்காவை அடித்தார். கால் பகுதிக்கு தாக்கினார். பின்னர் அக்கா அறைக்கு சென்று தூங்கினார். பின்னரும் புலம்பியதால் அக்காவை வெளியே கொண்டு வந்த விட்டார்.
அப்பா கொஞ்சமாக குடிந்திருந்தார். அம்மாவும் அப்பாவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லை, பக்கத்தில் இருக்கும் மாமி வீட்டுக்கு அம்மா அழைத்துச் சென்றார்.
அங்கு அக்கா பயந்துள்ளதாக அவர் கூறினார். இன்று மாலை மூச்சித்திணறல் வந்ததால் வைத்தியாசலைக்கு அழைத்துச் சென்றோம். அப்போதே அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
சிறிய தந்தை மற்றும் தந்தையின் தாக்குதலால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளையில் பகுதியில் வைத்து, குறித்த சிறுமியை ஆண் நண்பருடன் பார்த்த அவருடைய சிறிய தந்தை சிறுமியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் செவ்வாய்க்கிழமை காலை, சிறுமி உடல்நிலை சரியில்லாமல், வலியால் புலம்பியபோது, சிறுமியின் தந்தை அவரை நித்திரை செய்ய விடமாட்டேன் என்று கூறி தாக்கியுள்ளார்.
இதன் பின்னர் சிறுமியை அவரது தாயார் கம்பளை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் தமது மகள் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை மற்றும் சிறிய தந்தையை பொலிசார் கைது செய்தனர்.
வவுனியா பல்கலைகழகத்தின் வியாபாரக்கற்கைகள் பீடத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆய்வுமாநாட்டில் ஆய்வுகளை சமர்பிக்குமாறு வவுனியா பல்கலைகழகம் கோரியுள்ளது.
இது தொடர்பாக வவுனியா பல்கலைகழகத்தின் வியாபார கற்கைள் பீடத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக்கற்கைகள் பீடமானது 4வது வியாபாரக் கற்கைகள் ஆய்வு மாநாட்டினை நடாத்துவுள்ளது.குறித்த மாநாடு இம்முறை ‘பெரும்பரவல் தொற்று நோய்க்கான வியாபாரத் தயார் நிலை முன்னுதாரண மாற்றத்திற்கான நேரம்’ என்ற ஆய்வுக் கருப் பொருளில் 2022ஆம் ஆண்டு ஆடி மாதம் 4ம், 5ம் திகதிகளில் நடாத்த தீர்மானித்திருக்கின்றது.
இந்த ஆய்வு மாநாடானது வியாபாரக்கற்கைகள் பீடத்தின் வெள்ளி விழாவையொட்டி நடாத்தப்பட இருக்கின்றது.நாம் எல்லோரும் பல்வேறுபட்ட எதிர்பாராத சவால்கள் மற்றும் இடர்கள் நிறைந்த சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக கொவிட்-19 பேரிடர் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திலும் வியாபார செயற்பாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் அரிதாகவுள்ளது. இந்த இடரானது பல மில்லியன் வேலைவாய்ப்புக்களை ஆபத்து நிறைந்ததாக மாற்றியுள்ளது.
அத்துடன் நாடுகளின் பொருளாதாரமந்தம், வறுமை மற்றும் நிறுவன அமைப்புக்களின் முடக்க நிலை போன்றவற்றினைத் தோற்றுவித்துள்ளது. இவை நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு வித்திட்டு வருகின்றது.
இந்த வகையில் எதிர்கால சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதுடன் நெருக்கடியினைத் தவிர்த்து வாய்ப்புக்களினையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களினையும் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் புதிய வியாபார எண்ணங்களைத் தூண்டி அவர்களை வியாபாரச் சூழலில் காலத்திற்கேற்ப மாற்றங்களினைச் செய்வதற்கு, முனைவிப்பது தற்காலத்தில் மிகமுக்கியமான அம்சமாக உள்ளது.
தற்காலகொவிட்-19 பெருந்தொற்று பரவும் காலத்தில் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதார நலன் சார்ந்து இயங்கிவரும் வியாபார தொழில் துறைகளைக் காலத்தின் தேவைக்கேற்ப கட்டியெழுப்பும் வழி வகைகளைச் செய்ய வேண்டியுள்ளது.
அத்துடன் தற்கால நெருக்கடியான சூழலில் வியாபாரங்களைக் கட்டியெழுப்புவதனூடாக வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல்,வறுமை ஒழிப்புத் திட்டங்களை வலுப்படுத்தல்,ஆரோக்கியமான மனித வளத்தை உருவாக்குதல், மகிழ்ச்சியான நல்வாழ்வுச் சூழலை உருவாக்குதல் போன்றவற்றினை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் வினைத்திறனான, ஆக்கபூர்வமான மற்றும் காலத்திற்கேற்ற வியாபார சூழலைக் கட்டியெழுப்பக் கூடிய நடைமுறைக்கு சாத்தியமான விடயப் பரப்புக்களை உள்ளடக்கி வியாபாரத் துறையில் நடாத்தப்படுகின்ற ஆய்வுகளானவை மிகவும் பயனுறுதி வாய்ந்ததாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக நிதியியல் மற்றும் கணக்கீடு, நெருக்கடி முகாமைத்துவம், விவசாய வணிகம், வியாபாரப் பொருளியல், முயற்சியாண்மை, மனிதவள முகாமைத்துவம், அறிவு முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், செயற்றிட்ட முகாமைத்துவம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம், சர்வதேச வியாபாரம், தகவல் முறைமை கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பாடல் மற்றும்,
வியாபார தொடர்பாடல் போன்ற தலைப்புக்கள் சார் சவால்களைத் தீர்க்கக்கூடிய பொறிமுறைகளைத் தற்காலத்தின் தேவைக்கேற்ப நிறுவுவதுடன் வியாபாரங்களைத் தற்கால வியாபாரச் சூழல் சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவதுடன் இந்த ஆய்வு மாநாடு முனைப்பாக நடாத்தப்படவுள்ளது.
மேலும் தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வவுனியாப் பல்கலைக்கழக வியாபார முகாமைத்துவ இதழில் பிரசுரிக்கக்கூடிய சந்தர்ப்பமானது பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது. ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரையினை மார்ச் மாதம் 31 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு வரை சமர்ப்பிக்க முடியும்.
ஆய்வுமாநாட்டில் முதல் முறையாக உலகப் புகழ் வாய்ந்த பேராசிரியர் மல்கொம் கூப்பர், கலாநிதி நைகெல் வில்லியம்ஸ் மற்றும் பேராசிரியர் ரவிசங்கர் ஆகியோர் முதன்மைப் பேருரைகளை வழங்கவிருக்கின்றனர். மேலும் இந்த ஆய்வு மாநாட்டிற்கு பணியாளர் மேலாண்மை பட்டயநிறுவனம், சான்றளிக்கப்பட்ட மேலாண்மைக் கணக்காளர்கள், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் திட்ட மேலாண்மை நிறுவனம் ஆகியோர் பங்காளர்களாக விளங்குகின்றனர்.
இந்த மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களினை
https://fbs.vau.ac.lk/rcbs2022/ என்ற இணையத்தளத்தில் அல்லது இந்த ஆய்வு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர். யூட் லியோனிடம் (0773400855) பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த மாநாடுதொடர்பாக வவுனியா பல்கலைகழக வளாகத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. பல்கலைகழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் மற்றும் வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தலைவர் வை.நந்தகோபன் ஆகியோர் இது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க தேசிய வீரர்களை உருவாக்கும் நோக்குடன் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் 33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வவுனியாவின் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் சபையின் கௌரவ தலைவர்/ பணிப்பாளர் நாயகம் தமித விக்கிரமசிங்க மற்றும் பலர் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்டத்தில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக விசேட செயல்மர்வு மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வு தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் OFERR நிறுவனத்தின் ஒருங்கமைப்பில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை HELVETAS அமைப்பு மற்றும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் மாவட்ட ரீதியில் உள்ள மத தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளடக்கி இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும்,தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety, மேலும் உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.
இதனையடுத்து,மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து, கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் இவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,இவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார். மேலும்,உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது என்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதத்தில் இருப்பதால், அடுத்தக்கட்டமாக மாணவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.