உயிர் பயத்தில் 8 முறை கொரோனா தடுப்பூசி போட்ட நபர் என்ன ஆனார் தெரியுமா?

கொரோனா தடுப்பூசி..

இந்தியாவில் கொரோனாவிற்கு பயந்து 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு எந்த் ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்த வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகவும் முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதன் படி உலகின் பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

தற்போது ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், பூஸ்டர் தடுப்பூசி, அதாவது மூன்றாவது தடுப்பூசி அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெலகாவிவை சேர்ந்த நபர் நபர்(பெயர் தெரிவிக்கப்படவில்லை) உயிர் பயம் காரணமாக, கொரோனாவிடம் இருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்பதற்காக, தற்போது வரை 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

அதன் பின் 9-வது முறையாக தடுப்பூசி போடும் போது, அவர் போலி ஆவணங்களை வைத்து தடுப்பூசி போட முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த பொலிசார், அவரை பிடித்து விசாரித்த போது, தான் 8 முறை தடுப்பூசி போட்டும் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி : 600 கிலோ தங்கத்தை அடமானம் வைத்த மக்கள்!!

பொருளாதார நெருக்கடி..

கடந்த சில மாதங்களில் மட்டும், ஏற்பட்டுள்ள பொருளாதார பணவீக்கத்தால் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 600 கிலோ நகைகளை அடமானம் மற்றும் விற்பனை செய்துள்ளதாக நகை வர்த்தகத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புதிய நகைகளை கொள்வனவு செய்வது சுமார் 80 வீதத்தால் குறைந்துள்ளதாக கொழும்பில் செட்டியார் தெரு மற்றும் கிரான்பாஸ் பகுதிகளில் உள்ள பல நகைக்கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நகைகளை அடகு வைத்து விற்பனை செய்ய ஆட்கள் வருவது அதிகரித்து வருவதாக கூறும் அவர்கள், இந்நிலையால் தங்களது வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்படுத்துவதாகவும், இதன் காரணமாக வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வங்கி பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மீள்பெற்றுக்கொள்ள ஏராளமானோர் ஆசைப்படுவதாக பல வங்கிகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக நகைக்கடைகள் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

கொலைக்கு பின்னரும் “தாய் பாசத்தை மறக்காத“ பொலிஸ் அலுவலர்!!

திருக்கோவில்..

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (24.12.2021) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச்.முகமட் ஷம்சா நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸார் பலியானதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மேலும் இரு பொலிஸார் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தமிழர், முஸ்லிம் என இரு பொலிஸாரும் சிங்களவர் இருவருமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சார்ஜன் தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி இரு துப்பாக்கி மற்றும் ரவை குண்டுகளுடன் அவரது சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தனது தாயை பார்த்த பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை மாவட்டத்தின் எதிமலை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர், பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன் பொலிஸ் நிலையத்தில் முன்காவல் கடமையில் இருந்த பொலிஸார் ஒருவரின் துப்பாக்கியை பறித்தே ஏனைய உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

இவர் பொலிஸ் நிலையத்தில் சிவில் உடை தரித்து உள்ளக கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் விடுமுறை கோரிய நிலையில் வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலங்கள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விசேட தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் ஊசி போட்ட தாதியிடம் தகாத முறையில் செயற்பட்டவர் கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் கோவிட் ஊசி போட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் ஆதார மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு நேற்று (24.12) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 05.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினரால் பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் மக்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு : ஆசிரியர் கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (24.12) இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர்க்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் இன்று (25.12) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து குறித்த சந்தேக நபர் வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்படவுள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் தற்போது பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அது தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகளின் பாதுகாவலர்கள், சிறுவர்கள் தொடர்பில் சரியான அக்கறையுடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும். பல வன்முறை சம்பவங்கள் வெளிப்படுத்த முடியாமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாயார் குற்றமற்றவரென நீதிமன்றம் தீர்ப்பளிப்பு!!

அவுஸ்திரேலியா..

அவுஸ்திரேலியா – பெர்த் நகரில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தாயார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த கொலையை மேற்கொண்ட தாயார் கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்த,

சந்தர்ப்பத்திலேயே இக்கொலைகளைச் செய்துள்ளதாக தெரிவித்து 40 வயதான தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்படுவதாக மேற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்த்தின் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டில் வசித்துவந்த Milka Djurasovic என்ற பெண், தனது 10 வயது மற்றும் 6 வயது மகள்களை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

வீட்டிலிருந்து வெளியேற முன்னர் காணொளி ஒன்றைப் பதிவு செய்து இச்சம்பவத்தையிட்டு தான் வருந்துவதாகவும் தனது வாழ்க்கையையும் முடித்துக்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சம்பவம் இடம்பெற்று இரு மணி நேரங்களின் பின்னர் வாகன தரிப்பிடமொன்றில் வைத்து காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது.

சந்தேகநபரை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக கருத முடியவில்லை எனவும், மனநல கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் முடிவில் நீதிபதி அறிவித்து குறித்த பெண்ணை விடுதலை செய்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலை கைதிகளுக்கு கிறிஸ்மஸ் தின பரிசுப்பொதிகள் வழங்கி வைப்பு!!

வவுனியா சிறைச்சாலை..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தினை முன்னிட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் ஆலோசனைக்கமைவாக கைதிகளுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கனடா ஜீவாதிபதி கிறிஸ்தவ தேவாலயம் நிதி அனுசரனையில் தண்டனைக் கைதிகளும் விளக்கமறியல் கைதிகளும் உட்பட 209 கைதிகளுக்கு சுமார் 1500 ரூபா பெறுமதியான (ஒர் பரிசுப்பொதியின் பெறுமதி) பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் இணைந்து கைதிகளுக்கு இப் பரிசுப்பொதியினை வழங்கி வைத்திருந்தனர்.

வவுனியாவின் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நத்தார் கொண்டாட்டங்கள்!!

நத்தார் கொண்டாட்டங்கள்..

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் பொடித்தோர் ஆண்டகை தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று, வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதுகாப்புக்கு மத்தியில் பாலன் பிறப்பு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியாவில் முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று (25.12) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புகையிரத நிலைய வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக,

மாணவி ஒருவரை இறக்கி விட்டு வவுனியா நகரை நோக்கி செல்வதற்காக வீதியின் குறுக்கே முச்சக்கர வண்டி ஒன்று திரும்ப முற்பட்ட போது குருமன்காடு பகுதியில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி என இருவரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனைவியின் செல்லப் பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கு வைத்ததால் நடந்த விபரீதம்!!

குஜராத்..

மனைவிக்கு ஆசையாக வைத்த செல்லப்பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கும் வைத்து கூப்பிட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் அந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

அம்மாநிலத்தில் பாவ் நகரில் வசித்து வருகிறார் நீத்தாபென்(35). இவர் ஒரு நாய்க்குட்டி வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டிக்கு சோனு என்று பெயர் வைத்து அழைத்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரபாய்க்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தனது மனைவியை சோனு என்றுதான் செல்லமாக அழைத்து வந்திருக்கிறார்.

இதனால் நீதாபென்னிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். நாயை சோனு என்று அழைக்கக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார். இதில் என்ன இருக்கிறது என் வீட்டு நாய்க்கு நான் செல்லமாக பெயர் வைக்கிறேன்.

இந்த பெயரை வைக்கக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்று அவர் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் நீதாபென் கணவரும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இல்லாத நேரத்தில் , தனது ஆட்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு நீதாபென் வீட்டுக்குள் சென்றிருக்கிறார் சுரபாய். நாய்க்கு சோனு என்று பெயர் வைக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்து இருக்கிறார்.

வாக்குவாதம் நடந்தபோது திட்டமிட்டு எடுத்துச் சென்றிருந்த மண்ணெண்ணெய்யை நீதாபென் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் துடிதுடிக்க அலறியிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து உள்ளனர்.

அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த கணவரும், குழந்தைகளும் வந்திருக்கிறார்கள். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்திருக்கிறார்கள் . இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால் இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த கொலைவெறி தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மன உளைச்சலில் இருந்த மாணவிக்கு நடந்த விபரீதம் : கதறும் உறவினர்கள்!!

அரியலூர்…

அரியலூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடியில் ஒரு வாடகை வீடு எடுத்து தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

இவருடன் 2 மனைவிகள் தங்கியிருந்தனர். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு சென்ற தனுசியாவை அவரது தந்தை கல்லக்குடிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் தனுசியா அவர் இருக்கும் வாடகை வீட்டிற்கு தாமதமாக சென்றதால் ரவிச்சந்திரன் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தனுசியா கல்லக்குடி முதுவத்தூர் சாலை அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ரயில் மோதியதால் தனுசியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனுசியாவின் சடலத்தை கைப்பற்றி,

அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மற்றுமொரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் : பொலிசார் விசாரணை!!

எரிவாயு அடுப்பு..

வவுனியா, காத்தார்சின்னக்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது காஸ் அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கத்தார்சின்னக்குளம், லக்சபானா வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது இன்று (24.12) பிற்பகல் திடீரென் காஸ் அடுப்பு வெடித்துள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மானாவடு தலைமையிவ் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற தந்தை : நடந்த விபரீதம்!!

கர்நாடகா..

காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட 21 வயது மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துப்போட்ட, தந்தை ஒருவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

சினிமாவில் வருவது போல வீட்டை விட்டு ஓடிச்சென்று பதிவு திருமணம் செய்து கொண்ட மகளை தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள ஹரதலே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசவராஜ் நாய்கின் மகள் சைத்ரா. இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரா என்ற 21 வயது இளைஞரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்தார்.

இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் சைத்ரா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இதையறிந்த பசவராஜ் நாய்க், தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். இதையடுத்து சைத்ரா, வீட்டை விட்டு வெளியேறி காதலன் மகேந்திராவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் வீட்டைவிட்டு வெளியேறிய சைத்ரா, தனது காதலன் மகேந்திராவை சந்தித்தார். தன்னை தந்தை விரட்டி வருவதை அரிந்த சைத்ரா காதலனின் கையை இழுத்துக் கொண்டு நஞ்சன்கூடுவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஓடிச்சென்றார்.

மகேந்திராவின் நண்பர்கள், அவரது உறவினர்கள் முன்னிலையில் காதல் ஜோடி பதிவு திருமணம் செய்து கொண்டது. அதற்குள்ளாக அங்கு வந்த தந்தை பசவராஜ் நாய்க், பத்திரப்பதிவு அலுவலகத்தில் காதலனுடன் ஜோடியாக நின்ற மகளை கண்டு ஆத்திரம் அடைந்து தாக்கியதாக கூறப்படுகின்றது.

மகளின் கழுத்தில் கிடந்த மாலை மற்றும் தாலியை பிடித்து இழுத்து பறித்து தூக்கிவீசியதோடு, மகளின் கையை பிடித்து இழுத்துச்சென்றார். தந்தையுடன் செல்ல மறுத்து கையை தட்டிவிட்ட சைத்ராவின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்துச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பசவராஜின் இந்த செயலை கண்டு கோபமடைந்த சிலர் , அவரை தடுத்து நிறுத்தியதோடு, அவரது பிடியில் இருந்து சைத்ராவை மீட்டு அனுப்பி வைத்தனர்.

அரசு அலுவலகத்துக்குள்ளேயே அத்துமீறி நடந்து கொண்ட பசவராஜை பிடித்து போலீசில் ஒப்படைக்க முயன்ற நிலையில் அவர் அங்கிருந்து நழுவிச்சென்றார்.

தனது தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றஞ்சாட்டிய சைத்ரா, பதிவு திருமண சான்றிதழை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

இதற்கிடையே தனது மகளை காதலன் மகேந்திரா கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக நஞ்சன்கூடு போலீசில் புகார் செய்த பசவராஜ் நாய்க், தனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறும் கூறியிருந்தார்.

புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் பருவ காதல், பெற்றவர்களின் பாசத்தை கூட மறக்கடிக்க செய்து விடும் என்று.

சாக்கு மூட்டையில் கிடந்த தாயின் உடல்… அலறிய மகன்கள் : தப்பியோடிய தந்தை!!

சென்னை..

சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கௌதம், ஹரிஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

ரமேஷ் அடிக்கடி குடித்து விட்டு வாணியுடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். மேலும் வாணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடிக்கடி அடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு நேற்று முன்தினம் இரவு ரமேஷ் தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ரமேஷின் மூத்த மகன் கௌதம் அம்மா எங்கே என்று கேட்ட போது அம்மா வேறு ஒருவருடன் ஓடிப் போய் விட்டார்கள் என்று கூறி சென்றுள்ளார். அன்று இரவு வீட்டில் கௌதம் மற்றும் அவரது நண்பர் மட்டுமே இருந்துள்ளனர்.

நேற்று முழுவதும் வாணியின் மகன்கள் தனது தாயை தேடி உள்ளனர். மேலும் தந்தையையும் காணவில்லை என உறவினர்கள் இடத்தில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கௌதம் , ஹரிஷ் மற்றும் கௌதமின் நண்பர் ஒருவர் என மூன்று பேர் மட்டுமே வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர். வாணியின் இளைய மகன் எழுந்து பார்த்த போது டிவியின் அடியிலுள்ள டேபிள் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கண்டுள்ளார்.

மேலும் லேசான துர்நாற்றமும் வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலே வந்து பார்த்த போது துர்நாற்றம் வீசியதால் உடனடியாக இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் அங்கு வந்த ஓட்டேரி போலீசார் டிவி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் டேபிள் அடியில் துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் முகத்தில் பலத்த காயங்களுடன் வாணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வாணியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாணியின் கணவர் ரமேஷை தேடி வருகின்றனர்.

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்!!

தீப்பந்தப் போராட்டம்..

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் இன்று (24.12) இரவு 7 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பொருட்களின் விலைகளை குறை, அரசே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, பெற்றோலின் விலையை குறை, பாணின் விலையைக் குறை’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்களான ரசிக்கா பிரியதர்சினி, கருணாதாச உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

நடு ஆற்றில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : 32 பேர் பரிதாபமாக பலி!!

தீப்பிடித்து எரிந்த கப்பல்..

பங்களாதேஷில் இன்று காலை படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் தெற்கு பகுதியில் தலைநகர் தோகாவில் இருந்து 250 கிலோ மீற்றர் தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் இந்த தீ விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஓபிஜான் 10 என்கிற மூன்றடுக்கு கொண்ட படகில் தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பியுள்ளனர். அதே நேரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கப்பலில் சுமார் 500 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலானோர் தீயினால் இறந்தனர் மற்றும் சிலர் ஆற்றில் குதித்த பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலின் இயந்திர அறையில் தீ தோன்றியதாக நம்பப்படுகிறது, “தீக்காயங்களுடன் சுமார் 100 பேரை பரிசலில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொலிஸ் தலைமை அதிகாரி மொய்னுல் கருத்து வெளியிடுகையில், “தற்போது வரை 32 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளோம். பெரும்பான்மையானவர்கள் தீயினால் இறந்துள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.