“அம்மா என்னை மன்னித்து விடு”… மாணவியின் உருக்கமான கடிதம் : அதிர்ச்சியில் பெற்றோர்!!

ஜெயா..

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார்.

இந்நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த ஜெயா நீட் தேர்வில் 69 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ஜெயாவை அவரது பெற்றோர் திருப்பூரில் இருக்கும் அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதாக அக்காவிடம் கூறிவிட்டு வந்த ஜெயா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் கு.டி.த்து தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஜெயாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

அதில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனது முடிவு உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

எனவே அம்மா என்னை மீண்டும் மன்னித்துவிடு என ஜெயா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென வைரலான பெண் : யார் இந்த அன்னபூரணி சாமியார்.. பல உண்மைகள் வெளியானது!!

அன்னபூரணி

உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த ஆதிபராசக்தி அம்மா என தேடியதில் இணையத்தில் ஒரு பேஸ்புக் பக்கம் சிக்கியது. ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறிக் கொண்டு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் செய்யும் பூஜை வீடியோக்கள் ஏராளமான பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாமே நெட்டிசன்களுக்கான கண்டெண்ட் ரகம். சொல்லப்போனால் நம்ம ஜெய் பாலையா.. நித்தி சாமிக்கு எல்லாம் டஃப் கொடுக்கிற அளவுக்கு கண்டெண்ட் இருக்கு. தாயி மகமாயி வேதபுர காளி.. என ஹைப்பிச்சில் ஒலிக்கிறது பாடல்கள்.

அம்மன் கோயில்களில் விஷேச நாள்களில் ஒலிக்கும் எல்லா பாடல்களும் இந்த அம்மாவுக்காக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. எல்லை மீறிப்போறீங்கன்னு.. பக்தர்கள் டென்சன் ஆக வேண்டாம்.

இந்த திடீர் அம்மா குறித்து தேடுனா தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபல நிகழ்ச்சியில் இந்த அன்னபூரணி பங்கேற்ற வீடியோக்களை ட்ரெண்டிங்கில் விட்டிருக்காங்க நெட்டிசன்கள். பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. என்ற வசனம் அடிக்கடி இடம்பெறும் நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியில் பக்கத்து வீட்டுக்காரரோட பிரச்னைன்னு இந்த அன்னபூரணி வந்திருக்காங்க.

இந்த அன்னபூரணி தான் ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்திருக்காங்க. செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி அருள் வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர் ஓட்டி இருக்காங்க.

இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

தடையை மீறி அருள்வாக்கு சொல்ல அனுமதித்தால் மண்டபத்தின் உரிமையாளர் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்படும் என்று எச்சரித்துள்ளனர். அருள்வாக்கு அன்னபூரணி அம்மா என கூறிக்கொள்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இலங்கையில் வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

வாகன இறக்குமதி தடையால்..

2020ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கையில் கோவிட் தொற்று பரவியதை தொடர்ந்து, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அடுத்த வருடம் இறுதி வரை தடை தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,நாட்டில் விதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதி தடையினால் சிறிய ட்ரக்டர்கள் மற்றும் லொறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக, குறைந்த விலையிலாவது வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

யாழில் 16 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் : மர்ம கும்பலை தேடும் முயற்சியில் பொலிஸார்!!

யாழில்..

யாழ்.சுன்னாகம் – தாவடி பகுதியில் 16 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நேற்றைய தினம் குறித்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்நிலையில், குறித்த சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வவுனியாவில் நாளை பல இடங்களில் மின்தடை : விபரம் உள்ளே!!

மின்தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (28.12.2021) ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேசத்தில் மரக்காரம்பளை கணேசபுரம், சமயபுரம், ஈச்சங்குளம், கல்லறை. ஈஸ்வரிபுரம், கல்மடு கரு வேப்பங்குளம், கற்குளம் (சாஸ்திரிகூழாங்குளம்), கிடாச்சூரி, கோதாண்டர் நொச்சிக்குளம்,

மறவங்குளம், பூம்புகார், தரணிக்குளம், இரணையிலுப்பைக்குளம், ஹபீப் நகரம், காக்கையங்குளம், கங்காணிகுளம், கீரி சுட்டான், கோவில்புளியங்குளம் (மடு), மதீனாநகர், முள்ளிக்குளம் திட்டம். பரசங்குளம் (மடு துணுக்காய் வீதி),

சின்ன வலயங்கட்டு. விளாத்திக்குளம் (எம்.என்) ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் எரிவாயு கிடைக்கப் பெற்றதையடுத்து மீண்டும் கொரோனா சடலங்கள் தகனம் : நகரசபை தவிசாளர்!!

வவுனியா நகரசபையின் பூந்தோட்டம் மயானத்திற்கு எரிவாயு கிடைக்கப் பெற்றதையடுத்து மீண்டும் கோவிட் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

கோவிட் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பில் இன்று (27.12) அவர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டம் மின் மயானத்தில் கோவிட் தொற்றால் மரணிப்பவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்பட்டு வந்ததன.

எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் மின் மாயானத்தில் எரிவாயு முடிந்தமையால் கடந்த சில நாட்களாக மின் மாயனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த சிலரது உடல்கள் தகனம் செய்ய முடியாது திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலை தொடர்பில் சுகாதாரப் பிரிவினர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.

வவுனியா மாவட்ட அரச அதிபரால் மின் மாயனத்திற்கு நான்கு எரிவாயு சிலின்டர்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கோவிட் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை வழமை போன்று தொடர்ந்தும் வவுனியா நகரசபையின் பூந்தோட்டம் மின் மயானத்தில் தகனம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய 11 வயது சிறுவன்!!

மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாதவ கல்ஹார என்ற சிறுவன் தனது 71 வயதுடைய தாத்தாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது கீழே கிடந்து ஒரு தொகை பணத்தை கண்டெடுத்துள்ளார்.

6 ஐயாயிரம் நாணயத்தாள்கள் வீதியில் கிடந்துள்ளன. அதன் பெறுமதி 30 ஆயிரம் ரூபாயாகும்.

அதனை கையில் எடுத்த சிறுவன் இந்த பணத்தை உரிமையாளரை தேடி ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உரிமையாளைரை எங்கு சென்று தேடுவது என தாத்தா வினவிய போது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்போம் என சிறுவன் கூறியுள்ளார்.

அதற்கமைய சிறுவன் தனது தாத்தாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று இந்த பணத்தை ஒப்படைத்துள்ளார்.

இந்த பணத்தை ஏன் பொலிஸாரிடம் ஒப்படைக்க நினைத்தீர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கலாமே என சிறுவனிடம் பொலிஸார் வினவியுள்ளார்.

எனது அப்பாவுக்காக தான் இதனை ஒப்படைக்க நினைத்தேன். அவர் மிகவும் சுகயீனமடைந்த நிலையில் உள்ளார்.

எனது அப்பாவும் ஒரு பொலிஸ் அதிகாரி தான். எனது தந்தை சீக்கிரம் குணமடைய வேண்டும்.

நான் செய்யும் இந்த புண்ணியம் எனது தந்தைக்கு சென்றடைந்து எனது தந்தை குணமடைய வேண்டும் என சிறுவன் கூறியுள்ளார்.

இவ்வளவு சிறந்த மகனை வளர்த்த தந்தை சீக்கிரம் குணமடைந்து விடுவார் என பொலிஸ் அதிகாரி சிறுவனிடம் கூறி அனுப்பி வைத்துள்ளார்.

கொழும்பு பல்கலையில் சாதனைப் படைத்த தமிழ்ப் பெண் : யாரிந்த வைத்தியர்!!

தர்ஷிகா தணிகாசலம்..

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே இந்த வியப்பு மிகுந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் முதன்நிலைப் பல்கலைக்கழகம் என தரப்படுத்தப்பட்டுள்ள, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர் தர்ஷிகா.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இம்மாதம் நடைபெற்றபோது, தனது பட்டத்துடன் 13 தங்கப் பதக்கங்களையும் தர்ஷிகா பெற்றுக் கொண்டார்.

ஐந்து வருடங்களைக் கொண்ட மருத்துவ பீடக் கற்கையில் வெளிக்காட்டிய திறமைகளுக்காக, இந்தப் பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

சிறந்த மருத்துவபீட மாணவி, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு பரீட்சையில் பெற்றுக் கொண்ட சிறந்த பெறுபேறு, சிகிச்சை மருத்துவத்தில் சிறப்பினை வெளிப்படுத்தியமை மற்றும்,

அறுவை சிகிச்சையில் சிறப்பான பெறுபேற்றினை அடைந்து கொண்டமை உள்ளிட்ட 13 விடயங்களில் சிறப்புத் தேர்ச்சியினை வெளிப்படுத்தியமைக்காக இவருக்கு இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

குடும்பப் பின்னணி : தர்ஷிகாவின் தந்தை தணிகாலசம் பாடசாலை அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். தாயார் குமுதா. இவர்களின் நான்கு பிள்ளைகளில் தர்ஷிகா இரண்டாமவர்.

தர்ஷிகாவின் சகோதரர்கள் அனைவரும் உயர் தரத்தில் (பிளஸ் 2) விஞ்ஞானத்துறையை தேர்ந்தெடுத்து கற்றவர்கள். தர்ஷிகாவின் அண்ணன் விஞ்ஞானத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். தற்போது ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகின்றார்.

மருத்துவ பீடத்தில் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட தர்ஷிகா தற்போது மருத்துவராக பணியாற்றத் தொடங்கியுள்ளார். இவரின் தம்பி ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாமாண்டு மாணவராக உள்ளார். தங்கையும் உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையைக் கற்று வருகின்றார்.

பிள்ளைகள் எல்லோரும் விஞ்ஞானத் துறையைக் கற்பதற்கு பெற்றோர்களின் அழுத்தம் அல்லது விருப்பம் காரணமாக இருந்ததா என, தர்ஷிகாவின் அம்மாவிடம் கேட்டபோது; “இல்லை” என்றார்.

“நாங்கள் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை, விஞ்ஞானத்துறை என்பது அவர்களின் விருப்பத் தெரிவாக இருந்தது. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்களாக நாங்கள் உதவி வருகின்றோம்” என அவர் பதிலளித்தார்.

விஞ்ஞானத் துறையைக் கற்பதில் தனது அப்பாவின் குடும்பத்தினர் இயல்பாகவே ஆர்வமுடையவர்கள் என்று கூறும் தர்ஷிகா, “அம்பாறை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தின் முதலாவது பெண் விஞ்ஞானப் பட்டதாரி (பி.எஸ்.சி) சொர்ணசோதி, எனது அப்பாவின் தங்கை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார்” என்றார்.

அக்கரைப்பற்று ராமகிருஷ்ண மிடின் மாகா வித்தியாலயத்தில் ஆரம்பம் முதல் 05ஆம் வகுப்பு வரையிலும், 06ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அக்கரைப்பற்று ராமகிருஷ்ணா கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியைப் பயின்ற தர்ஷிகா, 2014ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குத் தேர்வானார்.

”சிங்கள மொழி தெரியாமல் பெரும் பிரச்னை”

சாதாரண கிராமம் ஒன்றிலிருந்து தலைநகரில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட தர்ஷிகா, ஆரம்பத்தில் நகர்ப்புற வாழ்க்கையுடன் ஒத்துப் போவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகின்றார். “சிங்கள மொழி தெரியாமலிருந்தமை பெரும் பிரச்னையாக இருந்தது” என்கிறார்.

இருந்தபோதும் சவால்களையெல்லாம் கடந்து, ஐந்து ஆண்டுகளைக் கொண்ட மருத்துவப் படிப்பில், ஒவ்வொரு வருடமும் முதன்நிலை மாணவியாக தான் தெரிவாகி வந்ததாக பூரிப்புடன் கூறினார்.

37 பதக்கங்களில் 13 பதக்கங்கள் உங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா என தர்ஷிகாவிடம் கேட்டதற்கு, சிரித்தபடி “இல்லை” என்றார். தற்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தர்ஷிகா டாக்டராக நியமனம் பெற்றுள்ளார்.

 

வவுனியா பண்டாரிகுளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு கொவிட் தடுப்பூசி பெற இறுதிச் சந்தர்ப்பம்!!

பண்டாரிகுளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு..

வவுனியா பண்டாரிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்கள் நாளை செவ்வாய்கிழமை (28.12) கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பண்டாரிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், ரகுபாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தமக்கான கோவிட் தடுப்பூசிகளை நாளை (28.12) காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும். பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது டோஸ், இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளாக சினோபாம் தடுப்பூசியும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியும் ஏற்றப்படவுள்ளன.

இதனால் தடுப்பூசிகளைப் பெறாதவர்கள், முதலாவது டோஸ் மட்டும் போட்டவர்கள், இரண்டாவது டோஸ் வரை போட்டவர்கள் வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி அட்டைகள் பொது இடங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா புளியங்குளத்தில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்து!!

விபத்து..

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் இன்று (27.12.2021) மதியம் 12.30 மணியளவில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் புளியங்குளம் பகுதியில் வீதியின் குறுக்காக மாடு குறுக்கிட்டதால் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தமையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லொறி டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி!!

விபத்து..

திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி 96ம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ் விபத்து இன்று (27.12.2021) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி சென்ற லொறியும் கந்தளாயில் இருந்து வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும்,

சீமந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

பாடகர் மாணிக்க விநாயகம்..

திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம். இவர் பாடிய ‘கண்ணுக்குள்ள ஒருத்தி, விடை கொடு எங்கள் நாடே, வண்டி வண்டி உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.

சினிமா பாடல்கள் மட்டுமின்றி, இவர் பாடிய தெய்விக பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் மாணிக்க விநாயகம்.

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்கள் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

இவருடைய மரண செய்தி தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

யாழில் திருமணமாகி சில மாதங்களில் உயிரை மாய்ந்த பெண்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் தெற்கு கொடிகாமம் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்ணே விபரீத முடிவை எடுத்துள்ளார்.

திருமணமாகி 11 மாதங்களே ஆன நிலையில் தனது சாவிற்கு கணவனோ, வேறு யாருமோ காரணம் இல்லை, தலைவலி காரணமாகவே இம்முடிவை எடுத்தேன் எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.


உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா தம்பனைக்குளத்தில் இளைஞரின் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!!

இளைஞரின் சடலம் மீட்பு..

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளத்தில் இன்று (26.12) மாலை இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

தம்பனைக்குளத்திற்கு அண்மித்த பாதையில் வழமை போன்று மக்கள் சென்ற சமயத்தில் குளத்தினுள் சடலம் காணப்பட்டதினையடுத்து,

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த செட்டிக்குளம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் மதவாச்சி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஹரிந்து கோசல்யுஸ்வெத்யராச்சி என தெரியவந்துள்ளதுடன், கொலையா அல்லது நீரில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மின் கம்பத்தை மோதித்தள்ளிய கார் : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் மின்சாரக் கம்பத்துடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (26.12) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று வவுனியா,

மூன்றுமுறிப்பு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து வீதி ஓரத்தில் காணப்பட்ட மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து காரணமாக மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதுடன், அப் பகுதியில் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த மின்சார கம்பத்தை சீர் செய்து மக்களுக்கு மின் வழங்கும் நடவடிக்கையை மின்சார சபையினர் முன்னெடுத்துள்ளனர். விபத்து குறித்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல்!!

சுனாமி நினைவேந்தல்..

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 17 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு சுனாமி நினைவுத்தூபி முன்பாக இன்று (26.12.2021) காலை இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு 9.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டன.

நிகழ்வில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி,

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலய நிர்வாகனத்தினர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.