இந்தியாவில் இலங்கை நடிகைக்கு வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகளை பறிமுதல் செய்ய முடிவு!

இந்தியாவில் இலங்கை நடிகைக்கு வழங்கப்பட்ட

பாலிவுட் பிரபலங்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு சுகேஷ் சந்திரசேகர் வழங்கிய மதிப்புமிக்க பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய இந்தியாவின் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு 10 கோடி ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட பரிசுகளை சுகேஷ் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஜாக்குலின் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அவரின் சகோதரிக்கு 1.5 லட்சம் அமெரிக்க டொலர் கடன் கொடுத்ததுடன், அவரின் தாயாருக்கும் பரிசுகளை வழங்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, சுகேஷ் தனக்கு கார் மற்றும் பரிசுப்பொருள்கள் கொடுத்ததாகவும், அவற்றைத் மீள வழங்க தான் தயாராக இருப்பதாகவும் நோரா ஃபதேஹி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவர்கள் ஜாக்குலின் மற்றும் நோராவிடம் வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரை பிணையில் வெளியில் எடுப்பதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் 200 கோடி ரூபாவை தொழிலதிபரின் மனைவியிடமிருந்து மிரட்டிப் பறித்திருக்கிறார்.

இவ்வாறு பெறப்பட்ட பணத்தை நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்குச் சுகேஷ் செலவு செய்துள்ளார்.

இந்நிலையிலேயே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு சுகேஷ் சந்திரசேகர் வழங்கிய மதிப்புமிக்க பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய இந்தியாவின் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒமிக்ரோன் தீவிர பரவல்: ஒருநாளில் நூறுக்கு மேற்பட்டோர் அடையாளம்

ஒமிக்ரோன் தீவிர பரவல்

உலகளவில் கோவிட்டின் மாறுபாடு பரவிவரும் நிலையில் இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 135 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களிலும், ஒமிக்ரோன் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் டெல்லியில் நேற்று மாத்திரம் 63 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகின்ற நிலையில், ஏற்கனவே செலுத்திக் கொண்ட கோவிட் தடுப்பூசியை தான் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

கல்வி அமைச்சு..

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிலையில் அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையும். அதற்கமைவாக அனைத்துப் பாடசாலைகளுக்கும்,

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பால் மாவை அடுத்து திரவப் பாலுக்கும் தட்டுப்பாடு

பால் மாவை அடுத்து

நாட்டில் பால் மாவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது திரவ பாலுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதித்துள்ளதால், உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

பால் மா இறக்குமதி செய்யப்படாத சூழலில் உள்ளூர் திரவப் பாலுக்கு வரி விதிக்கப்பட்டமை தொழில்துறையையும் அதன் பொறிமுறைகளையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை என தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,டொலர் நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி பால் நிறுவனங்கள் பயன்படுத்திய பொதிகளும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதோடு அவற்றில் சில அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆண்டில் மிக நீண்ட விடுமுறை நாட்கள் 2022 இல் – கலண்டர் இணைப்பு

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள ஆண்டாக காணப்படுகின்றது. அதன்படி, 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி, இந்த நீண்ட விடுமுறையை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி, 2022 ஆம் ஆண்டு,

ஜனவரி மாதம் – 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளும் பெப்ரவரி மாதம் – 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகள் மார்ச் மாதம் – 17,18,19 மற்றும் 20 ஆம் திகதிகளும் ஏப்ரல் மாதம் – 13, 14, 15, 16, 17 ஆம் திகதிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 30, 01, 02 மற்றும் 03, அத்துடன், மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளும்

ஜூன் மாதம் – 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள் ஆகஸ்ட் மாதம் – 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள் ஒக்டோபர் மாதம் – 08, 09, 10 ஆம் திகதிகளும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளும் நவம்பர் மாதம் – 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகள் டிசம்பர் மாதம் – 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளும் 2022 ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறை நாட்களாகக் காணப்படுகின்றன

மத்திய வங்கியின் டொலர் இருப்பு திடீர் உயர்வு!

மத்திய வங்கியின்

மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருப்பதாக அவர் தமது ட்வீட்டர் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் செலுத்தப்படவில்லை:அத்தியவசிய பொருட்களை வழங்க தயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

டொலர் செலுத்தப்படவில்லை

இலங்கைக்கு அத்தியவசிய உணவு பொருட்கள் உட்பட பொருட்களை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், பொருட்களை வழங்க தயக்கம் காட்டி வருவதாக அத்தியவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெற்றுக்கொண்ட பொருட்களுக்காக சரியான முறையில் டொலரை செலுத்தாதது இதற்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக சில இறக்குமதி பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் குறித்த வெளிநாட்டு நிறுவனங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பணத்தை செலுத்தும் வரை குறித்த நிறுவனங்கள் பொருட்களை வழங்குவதை நிறுத்தியுள்ளன என அத்தியவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன (Nihal Senaviratna) தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக வர்த்தக அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

எனினும் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் பெட்டிகளை விடுவிப்பது சம்பந்தமாக எதிர்வரும் 31 ஆம் திகதி முன்னர் தீர்வு ஒன்றை வழங்குவதாக அமைச்சர் கூறினார் எனவும் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பாவனையாளர்களுக்கு “லிட்ரோ” எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

பாவனையாளர்களுக்கு

எதிர்காலத்தில் பாவனையாளர்களின் கேள்விக்கு ஏற்ப தாமதமின்றி லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கமுடியும் என்றுஅந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

வீடுகள் மற்றும் வியாபாரத்தளங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உடனடியாக செயற்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ள இரண்டு எரிபொருள் கப்பல்களில் இருந்தும் நாளாந்த தேவைக்கான எரிபொருட்கள் நிரப்பப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சந்தையின் எரிவாயுத் தேவையில் 80 சதவீதத்தை தாம் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் மேற்பார்வையின்கீழ் எரிவாயு கலவை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

காதலியின் மூக்கை கோடாரியால் அறுத்த காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியா..

மத்திய பிரதேசத்தில் மது குடிக்க காசு தராததால் காதலியின் மூக்கை காதலன் வெட்டியெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவ்-இன் வாழ்வில் இருந்த பெண்ணின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

கந்த்வா மாவட்டத்தில் உள்ள பமங்கான் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 35 வயதான சோனு என்ற பெண் லவ்குஷ் என்ற நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே சோனுவின் கணவர் இறந்ததை அடுத்து தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். லவ் குஷ் உடனான பழக்கத்தில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். எந்த பணிக்கும் செல்லாமல் லவ் குஷ் மது அருந்துவதையே வழக்கமாக கொண்டிருந்தவராம்.

சம்பவத்தன்று வழக்கம் போல் சோனுவிடம் லவ் குஷ் குடிப்பதற்கு 200 ரூபாய் காசு கேட்டிருக்கிறார். அப்போது பணம் தருவதற்கு சோனு மறுத்ததால் ஆத்திரத்தின் சோனுவின் மூக்கை கோடாரியால் வெட்டியிருக்கிறார் லவ் குஷ்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மூக்கறுந்த வலியால் துடித்துக்கொண்டிருந்த சோனுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் காவல்துறைக்கு சென்றிருக்கிறது.

இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட கந்தவா மாவட்ட கத்வாலி காவல்துறை அதிகாரி பல்ஜித் சிங் பைசென் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் மூக்கை அறுத்த லவ் குஷ்-ஐ கைது செய்திருக்கிறார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியம் நூல் வெளியீடு!!

வவுனியம் நூல் வெளியீடு..

வவுனியாவில் வவுனியம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும்,

வவுனியா பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த நூல் வெளியீட்டு விழா வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28.12) இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார பேரவைத் தலைவருமான நா.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ‘வவுனியம்’ நூலினை வெளியிட்டு வைத்தார். அத்துடன் அதிதிகளுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திருமதி மு.சபர்ஜா, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ச.பிரியதர்சினி, கலாபூசணம் இ.சிவசோதி, தமிழ்நிதி அருணா செல்லத்துரை, தமிழ் மணி அகளங்கன், தமிழரவி த.சிவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்பை வந்தடைந்தார் உலகம் சுற்றும் யுவதி!!

சாரா ரதர்போர்ட்..

இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க சாரா திட்டமிட்டுள்ளார். 19 வயதான அவர் தனது உலக சுற்றுப்பயணத்தை ஆகஸ்ட் 18, 2021 அன்று தொடங்கினார்.

52 நாடுகளில் உள்ள 5 கண்டங்களில் 51,000 கி.மீ தூரத்தை கடப்பதே அவரது இலக்கு. சாரா 2022 ஜனவரி நடுப்பகுதியில் தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

56 வது தரிப்பிடமாக அவர் இலங்கை வந்துள்ளார். சாரா ரதர்போர்ட் பயணிக்கும் விமானம் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட உயர் செயற்திறன் கொண்ட ultralight விமானமாகும்.

இந்த விமானம் மணிக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக் கூடியது. நீண்ட தூர பயணத்திற்காக இந்த விமானம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் சாரா ரதர்போர்ட்டை வரவேற்றதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு நிறைவேறியது : சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம் சென்ற சபை!!

சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம் சென்ற வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நேற்று (27.12) நிறைவேறியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு முன்னாள் தலைவர் சு.தணிகாலம் அவர்களால் முன்வைக்கப்பட்டு இரண்டு தடவைகள் தோல்வியடைந்த நிலையில் புதிய தவிசாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததுடன், ஈபிஆர்எல்எப் கட்சி உறுப்பினர்கள் இருவரும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்ததாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், சபையின் புதவி தவிசாளர் த.பார்த்தீபன் அவர்களால் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய பாதீடு சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.

பாதீடு மீதான விவாதங்கள் இடம்பெற்ற பின் பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது சில உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு கோரியதையடுத்து பாதீடு இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என தீர்மானிக்கும் பொருட்டு சபை உறுப்பினர்களின் கருத்து பெறப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு -08, தமிழ் தேசிய மக்கள் முன்னனி-03, ஈபிஆர்எல்எப் -01, ஜேவிபி -01 என 13 பேர் பகிரங்க வாக்கெடுப்பையும், பொதுஜன பெரமுன -05, சிறிலங்கா சுதந்திரக் கட்சி -02, ஈபிஆர்எல்எப் -02, ஐக்கிய தேசியக் கட்சி -03, சுயேட்சை -01 என 13 பேர் இரகசிய வாக்கெடுப்பையும் கோரினர்.

இரண்டும் சமனிலை பெற்றிருந்த நிலையில் தவிசாளர் தனக்கு இருந்த ஒரு மேலதிக வாக்கைப் பயன்படுத்தி இரகசிய வாக்கெடுப்புக்கு சென்றிருந்தார்.

இதில் பாதீட்டுக்கு ஆதரவாக 15 வாக்குகளும், பாதீட்டு எதிராக 11 வாக்குளும் கிடைத்தன. இதனால் 4 மேலதிக வாக்குகளினால் பாதீடு வெற்றி பெற்றது. இதன்மூலம் சுதந்திரக் கட்சி தனது ஆட்சியை வவுனியா வடக்கு பிரதே சபையில் உறுதிப்படுத்திக் கொண்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை : மூடப்பட்ட உணவகங்கள்!!

மூடப்பட்ட உணவகங்கள்..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக புறக்கோட்டையில் 3000இற்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சிறு வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு நகரில் மாத்திரம், 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட ஏனைய உணவு விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள், பால்மா ஆகியவற்றுடன் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், திறக்கப்பட்டுள்ள சில சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு கோப்பை பால் தேநீர், 85 ரூபாவரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-

வவுனியா செட்டிகுளத்தில் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : பெண் ஒருவர் கைது!!

செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் மக்கள் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம், பண்ணை இரண்டு பகுதியில் உள்ள மக்கள் குடிமனைக்குள் உள்ள தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட காணியில் கிரவல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலகத்தால் நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பகுதியில் கிரவல் அகழ்வதற்கு சென்றபோது கிரவல் அகழும் காணியை சுற்றியும், அதனையண்டியும் குடியிருக்கும் மக்கள் மக்கள் குடிமனைக்குள்,

கிரவல் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்த முற்பட்டதுடன், அது தொடர்பில் அப் பகுதி கிராம மக்கள் பிரதேச செயலாளருக்கு அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், கிரவல் அகழ்வதற்கு அனுமதி பெற்றவர் குறித்த பகுதியில் கிரவல் அகழ முற்பட்ட போது மக்களுக்கும், கிரவல் அகழ வந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பெண் ஒருவர் தன்னை தாக்கியதாக கூறி கிரவல் அகழ அனுமதி பெற்றவர் செட்டிகுளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் குப்பைக்கு தீமூட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

மட்டக்குளி..

கொழும்பு – மட்டக்குளி படகுதுறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதில் இரண்டு படகுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குப்பையை தீமூட்டிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள்,

அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே டாக்டர் ஆகி அசத்திய இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்!!

சஞ்சய் கந்தசாமி..

இந்தியாவிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை ஒன்று வளர்ந்து, டாக்டருக்கு படித்து, தான் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே டாக்டராகி சாதனை புரிந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கந்தசாமி. கடந்த 1998-ம் ஆண்டு இவர் 20 மாதக் குழந்தையாக இருந்தபோது, கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சஞ்சய் கந்தசாமியின் தந்தையிடம் இருந்து 20 சதவீதம் கல்லீரல் பெற்று கல்லீரல் மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே முதல் முறையாக கல்லீரல் மாற்று ஆப்ரேசன் வெற்றிகரமான முதல் குழந்தை சஞ்சய் கந்தசாமி தான். இந்த ஆப்ரேசன்டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் செய்யப்பட்டது.

தற்போது சஞ்சய் கந்தசாமி மருத்துவப் படிப்பு முடித்து, தனக்கு எந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மறுபிறப்பு அளிக்கப்பட்டதோ, அதே மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் சஞ்சய் கந்தசாமி கூறுகையில் எனக்கு சிறுவயதில் இருந்தே டாக்டராகணும்னு ஆசை. நான் இன்று உயிரோடு இருப்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் எனக்கு ஆபரேசன் செய்த மருத்துவர்கள் தான் காரணம்.

எனவே நானும் டாக்டராகி பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன். அதனால் தான் என் லட்சியத்தை அடைய மிகவும் கவனமுடன் படித்து இன்று மருத்துவராகி உள்ளேன் கூறினார்.