முறிகண்டி அக்கராயன் பகுதியில் புகையிரதத்துடன் விபத்து : ஒருவர் பலி!!

விபத்து..

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (18.12 பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்த குறித்த நபர், தரித்திருந்த கனரக வாகனத்தைக் கடந்து புகையிரத கடவையைக் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புகையிரத திணைக்கள பொலிஸார் மோட்டார் சைக்கிளைப் பாதுகாப்பாக அருகில் உள்ள வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த வீதி பெருமளவு மக்கள் நடமாடும் வீதி என்பதாலும், பாடசாலை மிக அருகில் உள்ளமையாலும் பாதுகாப்பான புகையிரத கடவை ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் பல்வேறு தடவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற விபத்து இறுதியான விபத்தாக அமையும் வகையில் பாதுகாப்பு கடவை ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலிக்க மறுத்ததால் பறிபோன இரு உயிர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கேரளாவில்..

காதலிக்க மறுத்தால் இளம் பெண்ணுக்குத் தீவைத்து, இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட திக்கோடி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்புதான் கிருஷ்ணபிரியா என்ற பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இவரை அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். பின்னர் கிருஷ்ணபிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நந்தகுமார் கூறியுள்ளார். இதற்கு கிருஷ்ணபிரியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து, திடீரென கிருஷ்ணப் பிரியா மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார். இதைப்பார்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது திடீரென நந்தகுமார் தன்னைதானே தீவைத்துக் கொண்டார். பின்னர் இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். காதலிக்க மறுத்தால் இளம்பெண்ணுக்குத் தீவைத்து இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் பிறிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிறிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிஸார் சந்தேக நபரான மனைவியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு மனைவியையும், அவரது இரகசிய காதலனான மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்ததுடன், இன்றைய தினம் சான்று பொருட்களையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் பகுதியில் 36 வயதுடைய முன்னாள் போராளியான நடராசா தனராஜ் 31 வயதான கீதாஞ்சலியைத் திருமணம் செய்து 8 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் இல்லாத நிலையில் மூத்த சகோதரி திருமணம் முடித்துள்ள அதேவேளை மற்றுமொரு இளைய சகோதரி இவரின் பாதுகாப்பில் உள்ளார்.

இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் தனியான வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவர் இல்லாத பொழுது கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 36 வயதான இராசநாயகம் ஜெயபாலன் என்பவருடன் 5 வருடங்களாகக் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாகக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை 7 மணியளவில், உயிரிழந்தவரின் வீட்டுக்கு அண்மித்த பகுதியில் தனராஜ் ஏ9 வீதியின் அருகில் உள்ள பூவரசு மரத்தினடியில் இருந்துள்ளார்.

வீதியால் சென்ற கிராமத்தவர்கள் அவரை கண்டு வினவியபோது, தான் புகையிலையை அதிகம் எடுத்துக்கொண்டதால் தலை சுற்றுகின்றது. அதனால் இங்கு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனராஜ்ஜை உறவினர்கள் நால்வர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அவரது வீட்டின் அறையில் சேர்த்துள்ளனர். இதன்போது அவருடைய மனைவியும் அங்கு இருந்துள்ளார்.

அதேவேளை கொலை செய்ததாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட மற்றைய சந்தேக நபரான ஜெயபாலனும் வீட்டில் மறைந்திருந்ததாக மனைவியான கீதாஞ்சலி பொலிஸாரின் விசாரணையில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து சில மணி நேரத்தில் கீதாஞ்சலி சிறிய தாயாரின் வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு 30 நிமிடங்களின் பின்னர் உறவினர்களையும் அழைத்து வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதை அவதானித்த உறவினர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சடலம் இரவு 11 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தமை வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் பாரப்படுத்துவதற்கு மாங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்டமையால், நீதிமன்ற விசாரணைக்காகக் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உதவி பெறப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற பகுதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்கு மிக அண்மித்த பகுதி என்பதால் இவ்வாறு உதவி பெறப்பட்டது.

இந்த நிலையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கொலை செய்யப்பட்டவரின் மனைவி வழங்கிய வாக்குமூலமும், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையும், கிராமத்தவர்களால் வழங்கப்பட்ட இரகசிய தகவல்களும் விசாரணையைத் திருப்பி போட்டுள்ளது. குறித்த மரணம் திடீரென்று ஏற்பட்ட மரணம் எனக் கொலை செய்யப்பட்டவரின் மனைவியால் விசாரணையின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது உறவினர்களும் மனைவியின் வாக்குமூலத்திற்கு அமைவாகவே மரணம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், குறித்த நபர் மறைந்திருந்த பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்பட்டமை தொடர்பில் திடீர் விசாரணை அதிகாரிக்கு கிராம மட்ட செயற்பாட்டாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினடிப்படையில் முதுகு விலா என்புகள் உடைந்துள்ளமையும், முதுகு பகுதியில் உட்காயமும் இரத்த கண்டல்களும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் திடீர் மரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் கிராம மட்ட செயற்பாட்டாளர்களின் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விசாரணைக்குப்படுத்தப்பட்டனர்.

இதன்போது மனைவி வழங்கிய வாக்குமூலத்திற்கும், அழைத்துச் சென்றவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

விசாரணை மேற்கொண்டிருந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம், உடற்கூற்று அறிக்கை ஆகியன பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக கிளிநொச்சி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், மாங்குளம் பொலிஸாரின் கண்காணிப்பில் பொன்னகர் மயானத்தில் புதைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நபரின் சடலம் பொலிஸாரின் கண்காணிப்பில் பொன்னகர் மயானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டது. தொடர்ந்து மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் அறிக்கையிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கு அமைவாக விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்த மாங்குளம் பொலிஸார் சந்தேக நபர்களான கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும், அவரது 5 வருட இரகசிய காதலனையும் விசாரணைக்காக நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, தானும், ஜெயபாலன் என்ற சந்தேக நபரும் இணைந்து கொலை செய்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஜெயபாலன் சவள் ஒன்றினால் முதுகு பகுதியில் தாக்கியதாகவும்,

பின்னர் விபத்து ஏற்பட்டது போன்று காண்பிப்பதற்காக உயிரிழந்தவரின் சைக்கிளைக் கல்லினாலும், இரும்பு கம்பியினாலும் அடித்து நெளிவுகளையும், உடைவுகளையும் ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபரான உயிரிழந்தவரின் மனைவியை இன்று பொலிஸார் அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதுடன் , சவல் மற்றும் உயிரிழந்தவரின் மேல் ஆடை உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் அடித்து கொலை செய்யப்பட்டமைக்கான சான்று பொருட்கள் பொலிஸாரால் இன்றைய தினம் மீட்கப்பட்டது. கொலை செய்துவிட்டு, விபத்தில் உயிரிழந்தது போன்றதான தோற்றப்பாட்டைக் காண்பிக்க முற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிஸார் விசாரணை அறிக்கை மற்றும் சான்று பொருட்களுடன் சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராசநாயகம் ஜெயபாலன் என்பவர் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாங்குளம் வட்டார வேட்பாளராகக் களமிறங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

முல்லைத்தீவில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு : விசாரணைகள் தீவிரம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி புதன் கிழமை முதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்பு தொடர்பிலான விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார். திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் சடலம் காணப்பட்டுள்ளது. சடலத்திற்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் தூரம் காணப்பட்டுள்ளதுடன்,

சிறுமியின் சடலத்தினை அயல் வீட்டார் கோழியினை காணவில்லை எனத் தேடிச் சென்ற போதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தரமிறக்கப்பட்டது இலங்கை : மத்திய வங்கி வெளியிட்டுள்ள அவசர அறிக்கை!!

மத்திய வங்கி..

ஃபிட்ச் மதிப்பீடுகளின் (Fitch Ratings)அவசர மதிப்பீடு நடவடிக்கையை அரசாங்கம் கடுமையாக மறுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிட்ச் மதிப்பீடுகள் ஒரு அவசரமான நடவடிக்கையில், 17 டிசம்பர் 2021 அன்று இலங்கையின் சர்வதேச இறையாண்மை மதிப்பீட்டை தரமிறக்கியது, முழு உலகமும் கோவிட் அலைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், இலங்கையில் நடக்கும் சாதகமான முன்னேற்றங்களை அங்கீகரிக்கத் தவறிவிட்டது.

இந்த நடவடிக்கையானது, 2020ம் ஆண்டு தேசிய வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் செய்த தேவையற்ற தரமிறக்குதலை ஒத்திருக்கிறது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரமதிப்பீட்டு நிறுவனம் இலங்கையை தரமிறக்குவதற்கான அவசர உணர்வு சிந்திக்க முடியாதது.

குறிப்பாக பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் உடனடி அந்நிய செலாவணி வரவுகள் குறித்து இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நிதி தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) மூலம் இலங்கை மேலும் தரமிறக்கப்பட்டுள்ளது. ஃபிட்ச் மதிப்பீடுகளின் சமீபத்திய தரவரிசைகளின்படி, இலங்கை CC இலிருந்து CCC ஆக தரமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தனி நபரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிப்பு : மழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியா, பறநாட்டாங்கல் கிராம அலுவலர் பிரிவில் தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏ9 வீதி பறநாட்டாங்கல் சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (18.12) இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பறநாட்டாங்கல் கிராமத்தில் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய நிலங்கள் அற்றவர்களாகவும், தொழில் வாய்ப்பு அற்றவர்களாகவும் வாழ்ந்து வரும் நிலையில் எமது கிராமத்தில் தனிநபர் ஒருவர் 500 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன், அதனை விற்பனை செய்தும் வருகின்றார்.

எனவே அதனை தடுத்து நிறுத்தி அக் கிராமத்தில் வாழ்வாதாரத்திற்காக காணிகளற்ற மக்களுக்கு அதனை வழங்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

போரராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘ 500 ஏக்கர் காணி அபகரிப்பு நியாயமா, அரசே எங்கள் தாய் நிலங்களை மீட்டுத் தா, நிலம் எங்கள் உரிமை, அரசே கொள்ளையர்கள் பக்கம் நிற்காதே, அரசின் நீதி நியாயமானதா?

ஏழை விவசாயிகளை வாழவிடு, பணம் படைத்த ஒருவனுக்கு 500 ஏக்கர் நிலம் சொந்தம் – ஏழை மக்களுக்கு எது சொந்தம்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்,

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோர் சென்று, மக்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், குறித்த காணிகளை மீளப் பெற்று அதனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அத்துடன், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் குறித்த 500 ஏக்கர் காணியினை அக் கிராம மக்களுடன் இணைந்து பார்வையிட்டதுடன்,

ஆவணங்கள் அற்ற அரச காணிகளை உடனடியாக மீளப்பெற்று அதனை காணிகளற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளருக்கு வலியுறுத்தி இருந்துடன், குறித்த தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் பொலிசாருக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

வவுனியாவில் தொட்டில் கயிறு சிக்கி நான்கு வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி!!

பரமேஸ்வரன் அருட்சிகா..

வவுனியா அண்ணாநகர் பகுதியில் ஏணைக் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

ஆயினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளது

சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்குவயது குழந்தையே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

படிக்கச் சென்ற பள்ளி மாணவியிடம் கணவனும் மனைவியும் சேர்ந்து செய்து வந்த மோசமான செயல்!!

கோவை..

கோவை சூலூர் ஆரஞ்ச் அவென்யூ பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் அக்ஷித், 22. இவர், அதே பகுதியில் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி கிருபா, 21 என்பவரிடம் கோவையை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 பயிலும் மாணவி கிருபாவின் வீட்டிற்கு சென்று ‘டியூஷன்’ படித்து வந்துள்ளார்.

அப்போது அந்தப் பள்ளி மாணவிக்கும் கிருபாவின் கணவர் அக்ஷித்துக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோத்தகிரியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு அழைத்துவந்து அவர்களது பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த அக்ஷித், கோத்தகிரிக்கு வந்து அந்த மாணவியை அழைத்து சென்று, கோவை சூலாரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர்.

மாணவி காணாததால் உறவினர்கள் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில்,

சூலூரில் அக்ஷித்துடன் மாணவி இருந்தது தெரியவந்தது. இருவரையும் அழைத்து வந்த போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஊட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை செய்தார். மாணவியை கடத்திச்சென்று உறுதியானதை அடுத்து, அக்ஷித் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருபா இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் மணப்பெண்!!

ஆவடி..

ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நித்திய லட்சுமி (34). இவருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (37) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்தது.

அப்போது திருமணத்திற்காக 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவர் விஜயகுமார் பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாக நித்திய லட்சுமியிடம் கூறி சென்ற நிலையில், தொலைபேசி மூலம் அவ்வப்போது வெவ்வேறு எண்களில் நித்திய லட்சுமியுடன் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்திய லட்சுமி தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய பெண், என் பெயர் நாதஸ்ரீ என்றும் விஜயகுமார் என்பவருடன் கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தன்னை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணுடன் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான திருமண பத்திரிகை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை நித்திய லட்சுமிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நித்திய லட்சுமி, விஜயகுமார் குறித்து தீவிரமாக நாத ஸ்ரீயிடம் விசாரித்துள்ளார். அப்போது விஜயகுமார் திருமணமானதை மறைத்து மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

இந்நிலையில், மீண்டும் மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பெண்களை குறிவைத்து பணம், நகைக்காக விஜயகுமார் அவரது தங்கை ரேவதி, அப்பா சக்திவேல், அம்மா அம்சவேணி ஆகியோர் கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு திருமணம் என்ற பெயரில் மோசடி செய்து ஏமாற்றுவதாக நித்திய லட்சுமி கூறுகிறார்.

இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நித்ய லட்சுமி புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுபோன்று பல பெண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்ற முயற்சிக்கும் விஜயகுமார் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் திருமணத்திற்காக கொடுத்த 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மீட்டுத்தர வேண்டும் என நித்திய லட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கணவனின் பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

இந்தியாவில்..

மனைவி தனது பிறப்புறுப்பை துண்டித்து விட்டதாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் அந்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மிகவும் தாமதமாகவே கணவர் புகார் அளித்திருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் திகம்நகர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்னை தான் இந்த அளவுக்கு சென்றிருக்கிறது.

24 வயதாகும் அந்த பெண், 24 வயதாகும் தனது கணவரை கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் சில காலம் தனித்தனியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

பின்னர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்த நிலையில் இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதியன்று மனைவியுடன் ஒன்றாக இருக்க கணவர் முயன்ற நிலையில் இதில் மனைவிக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.

இருப்பினும் கணவர் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவருடைய மனைவி, கணவரின் பிறப்பு உறுப்பை தனியாக துண்டித்துள்ளார் தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்திலும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக தனது மகனுடன் இருந்த போது அவரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற நபரின் பிறப்புறுப்பை தனியாக துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டி – கார் விபத்து : இருவர் பலத்த காயம்!!

விபத்து..

சாரதி பயிற்றுவிப்பு பாடசாலை ஒன்றினால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது கார் ஒன்று குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு ஆண்கள் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (17.12.2021) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சிக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டி, கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் மோதுண்ட முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்து தொடர்பில் திம்புள பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இந்த வாரம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த வாரத்தில் தங்கத்தின் விலை 1.4 சதவீதம் அதிகரித்துள்ளதென ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதற்கமைய, நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தின் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பு இதுவாகும். தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1807 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை தங்க விற்பனை செய்யும் சந்தையில் பதிவாகிய தங்கத்தின் விலைகள் வெளியாகியுள்ளது. 24 கரட் 117,000 ரூபாயிற்கும், 22 கரட் 107,250.00 ரூபாயிற்கும், 21 கரட் 102,375 ரூபாயிற்கும் 18 கரட் 87,750 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பேராறு நீர்த்தேக்கம் அமைச்சரினால் திறந்து வைப்பு!!

பேராறு நீர்த்தேக்கம்..

வவுனியா நீர் வழங்கல் திட்டத்திற்கான குடிநீர் வழங்கலுக்காகச் சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் 1400 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பெற்ற பேராறு நீர்த்தேக்கத்தினை நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இன்று (17.12.2021) திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது அமைச்சர் நீர்த்தேக்கத்தினை பார்வையிட்டதுடன், நீர்த்தேக்கத்தின் ஊடாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தார்.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், கு.திலீபன் மற்றும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நீர்த்தேக்கமானது 3.85 எம்.சி.எம் நீர்க்கொள்ளளவை கொண்டதுடன், இவ் நீர்த்தேக்கம் மூலமாக 23500 பயனாளிகள் பயனடைவது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணியில் பெண் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!!

நெடுங்கேணி..

வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவரை கொலை செய்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் கடந்த புதன்கிழமை மோட்டர் சைக்கிளில் சென்ற பெண் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதான சத்தியகலா என்ற பெண் மரணமடைந்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெடுங்கேணி பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் உறவினரான 31 வயது இளைஞர் ஒருவரை அப் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் கைது செய்தனர்.

பொலிசார் குறித்த இளைஞரை கைது செய்ய முற்பட்ட போது அவர் நஞ்சு மருந்தை அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக நோயாளர் காவு மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த இளைஞனை தோட்டத்தில் மறைந்து இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிசார் இச் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டவர்களின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள ஆபத்து!!

வெளிநாட்டவர்கள்..

இலங்கை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவதன் காரணமாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெலிகம, மிரிஸ்ஸ பகுதிகளில் இந்த ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. மிரிஸ்ஸ நகரிலிருந்து வெலிகம நகரத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் பேருந்துகளில் முகம் கவசம் அணியாமல் பயணிக்கின்றனர்.

அத்துடன் முகக் கவசமின்றி வெலிகம முழுவதும் சுற்றி திரிகின்றனர். வர்த்தக நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் முகக் கவசமின்றி வெளிநாட்டவர்கள் சுற்றி திரிவதனால் பாரிய அபாயமிக்க நிலைமை ஏற்பட்டுள்ளது.

வங்கிகள் உட்பட அவர்கள் முகக் கவசம் அணிவதில்லை என அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் முகக் கவசம் அணியாமல் பயணிக்கும் வெளிநாட்டவர்களை பொலிஸார் அவதானித்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலி – மாத்தறை பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் முகக் கவசமின்றி நுழைய முயற்சித்த போது பயணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எனினும் அதனை கண்டுகொள்ளாமல் அவர்கள் பேருந்திற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். வெளிநாட்டவர்களை முகக் கவசம் அணிந்து வருமாறு கூறும் தங்களுக்கு அவர்களின் மொழி தெரியாதென வெலிகம வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனார்.

“11 நாட்களுக்கு சிரிக்கக் கூடாது” : கடும் உத்தரவை பிறப்பித்துள்ள நாடு!!

வடகொரிய அரசாங்கம்

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, ம.து அருந்தக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 1994-ம் ஆண்டு வடகொரியாவை ஆட்சி செய்த கிம் ஜோங் இல், நாட்டை 17 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி காலமானார்.

இதனையடுத்து, அவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இந்தநிலையில் தமது தந்தையின் நினைவுத்தினத்தை நினைவுக்கூரும் முகமாக வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது,

ம.து அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அதிபர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். கிம் ஜோங் இல் இறந்த நாளான இன்று, ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வழமையாக இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும். எனினும் இது கிம் ஜோங் இல் இ.றந்து 10 – வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.