பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : பெண்களே அவதானம்!!

பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..

கண்டியில் பேருந்துக்காக காத்திருந்த இளம் யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போகம்பரை தொலைதூர பேருந்து நிலையத்தில் நின்ற 23 வயதுடைய யுவதியை சாரதி மற்றும் நடத்துனர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த யுவதி செல்லும் இடத்திற்கு பேருந்து செல்வதாக கூறி, கடத்தி செல்லப்பட்டுள்ளார். கொழும்பு – கண்டி தனியார் பேருந்திற்குள் ஏற்றி கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குறித்த யுவதி வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.

இறுதியாக பணியாற்றிய வீட்டில் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறி அவர் அந்த வீட்டில் இருந்து இரகசியமாக வெளியேறியுள்ளார். அங்கிருந்து தப்பியவர் நுவரெலியாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

வவுனியாவில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் மாயம் : தேடும் பணி தீவிரம்!!

கொக்குவெளி பகுதியில்..

வவுனியா – கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளதுடன், அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காகச் சிறுவன் ஒருவன் இன்று (20.12.2021) குதித்துள்ளான். குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததுடன்,

கிணற்றில் குளிக்கச் செல்வதாக அருகிலிருந்த இளைஞர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞர் தனது ஆடைகளைக் கழற்றி கிணற்றின் அருகில் வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் சென்றுபார்த்தபோது, அந்த இளைஞரைக் காணவில்லை. இதனையடுத்து ஊர்மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற கிராமத்தவர்கள் கிணற்றினுள் இறங்கித் தேடுதல் நடாத்திய நிலையில் நீண்டநேரமாகியும் குறித்த சிறுவனை மீட்கமுடியவில்லை.

இதனையடுத்து கடற்படையினரின் உதவி கோரப்பட்டுத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே காணாமல் போயுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!

கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு..

தரம் ஒன்று மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சற்று தாமதமாகி 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பாடசாலைகள் 2021 டிசம்பர் 23 அன்று மூடப்பட்டு, புதிய கல்வியாண்டிற்காக 2022 ஜனவரி 03 அன்று மீண்டும் திறக்கப்படும். கோவிட் தொற்று காலக்கட்டத்தில் விடுபட்ட பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியிருப்பதால் முதல் தவணை ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 3ம் வாரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரியிலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை சற்று தாமதித்து ஏப்ரலில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும். இது தொடர்பான சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு தற்போது வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் அதனை பயன்படுத்தி அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஏனைய தரங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தரம் ஒன்றின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

வவுனியாவில் 4 இளைஞர்கள் பொலிசாரால் அதிரடியாக கைது!!

பண்டாரிக்குளம் பகுதியில்..

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் பொதிகளை தம்வசம்வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் நான்கு பேரை வவுனியா பொலிசார் இன்று (20.12) கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த,

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர்களை சோதனை செய்த போது ஹெராயின் மற்றும் கஞ்சா என்பவற்றை சிறு சிறு பொதிகளாக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 800 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா குறாறத்தடுப்பு பிரிவுபொலிசார் தெரிவித்துள்ளதோடு,

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தாண்டிக்குளம், புதுக்குளம், மரக்காரம்பளை மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 24, 25, 22, 29 வயதுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!!

மத்திய வங்கி வெளியிட்ட தகவல்..

இலங்கைக்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வரும் பணம் 2021 நவம்பரில் மேலும் குறைந்துள்ளது.

நவம்பர் 2021 இல் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் பெறப்பட்ட பணப்பரிமாற்றத்தின் 611.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 55.6% குறைவு ஆகும்.

2021 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் பெறப்பட்ட பணப்பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு 5,166.3 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது, இது 2020ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 6,291.2 மில்லியன் டொலரிலிருந்து 17.9 வீதம் குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அக்டோபர் 2021 இல் 317.4 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது, 2020 அக்டோபரில் 630.7 மில்லியன் டொலரில் இருந்து 49.6 வீதம் குறைந்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு உத்தியோகபூர்வ வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு மீண்டும் முடக்கப்படுமா? இன்று வெளியான தகவல்!!

நாடு மீண்டும் முடக்கப்படுமா?

கோவிட் தடுப்பூசி அட்டையை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பணியாற்றி வருகிறோம் அத்துடன் நாட்டை முடக்காமல் கோவிட் பரவலை கட்டுப்படுத்த முடிந்தால், அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், மரபணு பரிசோதனையானது, வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்கு சுகாதாரத் துறையால் முன்னெடுக்கப்படும் ஒரு அணுகுமுறையாகும்.

இந்த செயற்பாட்டினால், நாட்டில் கோவிட் 19 வைரஸின் அல்பா, டெல்டா மற்றும் ஒமிக்ரோன் ஆகியவற்றின் புதிய திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இந்த விஞ்ஞான முறையானது நோயாளர்களை அடையாளம் காண, புதிய திரிபு வகைகளை கண்டறியவும் தொடர்ந்தும் பயன்படுத்தப்படும்.

இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது தொடர்பில், சுகாதார பிரிவினரால் ஆராயப்பட்டு வருகின்றது.

சுகாதார அமைச்சு இந்த நீண்ட மற்றும் தீவிரமான செயல்முறையை தனியாளாக மேற்கொள்வது கடினம், இதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களின் முழு ஆதரவு தேவை. செயலூக்கி தடுப்பூசியை கட்டாயமாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த வைரஸ் பரவுமானால்,

பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மீண்டும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த வைரஸ் உடலில் நுழையும் போது வைரஸின் செயற்பாடு நபருக்கு நபர் மாறுபடும்.

மூன்றாவது தடுப்பூசி தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது, பொதுவாக தடுப்பூசி செலுத்துகையின் பின்னர் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பொதுவான சிக்கல்களால் அச்சப்பட வேண்டாம்.

கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின்படி, நாட்டை முழுமையாக முடக்காமல், கோவிட் பரவலை கட்டுப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பூசிகளைப் பெறுக்கொள்வது சிறப்பானதாக அமையும்.

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்த இளைஞன் யானை தாக்கி பலி!!

சிவபால சுந்தரம் மயூரன்..

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19.12) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சிவபால சுந்தரம் மயூரன் (33வயது) என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- 69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்று வருகின்ற நிலையில் இவர் நடுவராக கடமையாற்றி வந்துள்ளார்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் வருகை தந்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது யானை வீதியால் கடக்க முற்பட்டபோது தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மரணமடைந்த மயூரன் பூப்பந்து, கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளில் நடுவராக செயற்பட்டு வந்த அதேவேளை, சிறந்த மேல்வல்லுநர் வீரராகவும் திகழ்ந்துள்ளார். அத்தோடு விளையாட்டு சம்மந்தப்பட்ட பல செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருபவர் என அறியமுடிகிறது.

பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

திண்டுக்கல்..

இந்தியாவில் 9 வயது பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்யராஜ்.

இவரின் மகள் பிரித்திகா(9). இவர் பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி அன்று இடைவேளையின் போது பள்ளியை விட்டு வெளியேறிய சிறுமி பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் 3 நாட்களாக பள்ளி வளாகத்தில் முகாமிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனையில் இறந்து போன மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மண்ணெண்ணை ஊற்றி சிறுமியை கொல்ல முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியின் மரணத்துக்கு நரபலி கும்பல் காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். 9 வயது சிறுமி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பட்டினியால் ஐந்து வயது சிறுவன் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சமபவம்!!

ஐந்து வயது சிறுவன்..

தமிழகம் விழுப்புரத்தில் பட்டினியால் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மேல் தெரு பகுதியில் தள்ளுவண்டியில் கிடத்தப்பட்ட நிலையில் இந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தநிலையிலேயே மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. எனினும் கடந்த இரண்டு நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இன்றியே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

,இதேவேளை ஞாயிற்றுக்கிழமை ரோயல் ஹோபார்ட் மருத்துவமனையில் மற்றொரு சிறுவன் உயிரிழந்தமையை பொலிசார் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவின் வடக்கில் இடம்பெற்ற விபத்தில் இறந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

11 வயதான சேஸ் ஹரிசன் என்ற மாணவரே விபத்தின் பின்னர் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் இன்று மரணமானார் அண்மையில், Devonport’s Hillcrest ஆரம்ப பாடசாலையின் ஆண்டு நிறைவு விழாவின் போது,

10 மீட்டர் உயரத்தில் இருந்து விளையாடிக்கொண்டிருந்து வீழ்ந்தநிலையில் 5 மாணவர்கள் ஏற்கனவே மரணமாகினர் இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றும் ஒருவரே இன்று மரணமாகியுள்ளார்.

மூன்றாவது கணவருடன் சேர்ந்து பெண் செய்துவந்த மோசமான செயல் : அதிர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து பொலிசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதியினரைத் தடுத்து நிறுத்திய போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிந்தது.

சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில், அந்தப் பெண் நாகர்கோவில் டவுன் பகுதியைச் சேர்ந்த லதா (40) என்பதும், அவருடன் வந்தது மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு (32) என்பதும் தெரியவந்தது.

லதா, ராமுவை மூன்றாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார். லதா தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரின் முதல் கணவர் அவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இரண்டாவது திருமணம் செய்த லதா இரண்டாவது கணவருடன் சேர்ந்து கொள்ளையடித்து வந்தார், அவர் சமீபத்தில் சிறைக்கு சென்றுவிட்டதால் ராமுவை மூன்றாவது மணந்து கொண்டு பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு,

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்த 30 பவுன் தங்க நகையை கைப்பற்றியுள்ளனர்.

பெற்ற குழந்தையை விற்று அந்த பணத்தில் போதைப்பொருள் வாங்கிய பெற்றோர்!!

குருநாகல் பகுதியில்..

பெற்ற குழந்தையை விற்று அந்த பணத்தில் போதைப்பொருள் வாங்கிய பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையை ஏழு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குருநாகல் நகரிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் ஊடாக, கடிதமொன்றை கையெழுத்திட்டு, அநுராதபுரம் பகுதியிலுள்ள தம்பதிகளுக்கு குழந்தையை கையளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரின் கைப் பையிலிருந்து குழந்தையொருவரின் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆடைகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை விற்பனை செய்த பணத்தில் 30,000 ரூபாவிற்கு போதைப்பொருளை கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எஞ்சிய 6,70,000 ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பயந்து ஒரு வருடமாக மனைவி, குழந்தைகள் அடைத்து வைத்த கணவன்!!

கொரோனா தொற்றுக்கு பயந்து..

கலேவெல – பம்ரகஸ் வெவ பிரதேசத்தில் ஒரு வருட காலம் பெண் ஒருவரும் இரண்டு பிள்ளைகளும் சிறை வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கோவிட் வைரஸ் தொற்றிற்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு அதிக காலம் இந்த மூவரும் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கணவனாலேயே இவ்வாறு மனைவி மற்றும் பிள்ளைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தான் மற்றும் பிள்ளைகள் கடுமையான மன அழுத்ததிற்குள்ளாகியுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்குழுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. பெண் ஒருவரும் இரண்டு பிள்ளைகளும் சிறை வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் முன்னாள் போராளி கொலை : மனைவி மற்றும் பிறிதொரு நபருக்கு தடுப்புக் காவல்!!

முல்லைத்தீவில்..

முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேக நபர்களான அவரின் மனைவி மற்றும் பிறிதொரு நபரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிஸார் முற்படுத்தினர். இதன் போது எதிர்வரும் 22.12.2021 வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிஸாருக்கு மன்று அனுமதி வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிறிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறித்த சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிஸார் சந்தேக நபரான மனைவியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு மனைவியையும், மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்ததுடன், நேற்றையதினம் (18) சான்று பொருட்களையும் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேடையில் வைத்து முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பட்டதாரிகள் : வெளியானது காணொளி!!

பட்டமளிப்பு விழாவில்..

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சம்பிரதாய பட்டமளிப்பு விழாவில் பல்கலையின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை பட்டதாரிகள் பொது மேடையில் வைத்து புறக்கணித்தமை தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற சிலர் மறுத்துள்ள நிலையில், மாணவர்கள் சிலர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன.

வவுனியாவில் மேலும் ஒரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு : பொலிஸில் முறைப்பாடு!!

எரிவாயு அடுப்பு வெடிப்பு..

வவுனியா – 4ம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்ததாக பூவரசன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – 4ம் கட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக மேலதிக அனர்த்தம் ஏற்படாதவாறு அகற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் கட்டாயமாகிறது தடுப்பூசி அட்டை : அறிவிக்கப்பட்டது திகதி!!

தடுப்பூசி அட்டை..

எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும் போது,

கோவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கோவிட் தடுப்பு குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-