மகாவலி ஆற்றில் குதித்த இளைஞன், யுவதி!!

மகாவலி ஆற்றில்..

மஹியங்கனை பாலத்தில் இருந்து ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ஆற்றில் குதித்த நபர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாகவும், அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நேற்று காலை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறி வீட்டிலிருந்து வந்துள்ளனர். யுவதி ஆற்றில் குதித்ததாகவும், அந்த நபரும் ஆற்றில் குதித்ததாகவும் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட நடிகை : நீதிமன்றம் விதித்த அபராதம்!!

நடிகை சேமினி இத்தமல்கொட..

அனுமதிப் பத்திரமின்றி பாதுகாப்பு சேவை நிலையம் ஒன்றை நடத்தி வந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொடவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பதில் நீதவான் பீ.டி.பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

இது சம்பந்தமான முறைப்பாட்டை கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர். முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால், நீதிமன்றம் சேமினியை கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதுடன் பிடியாணை திரும்ப பெற நீதிமன்றம் தீர்மானித்தது. குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர்,

பதில் நீதவான், அதனை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை சேமினிக்கு மொழிப்பெயர்த்து விளக்குமாறு மொழிப்பெயர்ப்பாளர் சிந்தக உஹனோவிவுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதனையடுத்து அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நடிகை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் : வெளியான அறிவிப்பு!!

வெளியான அறிவிப்பு..

மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்தச் செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. ஆனால், நாம் எதிர்ப்பார்த்தளவு அதனைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு நாம் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

தப்பிச் செல்ல முயற்சித்த சாரதி : பொலிஸ் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை!!

புறக்கோட்டை பிரதான வீதியில்..

மோட்டார் சைக்கிளில் தொங்கிய நிலையில் சென்று சந்தேக நபரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார்.
புறக்கோட்டை பிரதான வீதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாகனம் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் வினவிய போது அதன் உரிமையாளர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தருடன் வீதியில் இழுத்துக்கொண்டு சாரதி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். எனினும், சுமார் எழுபது மீற்றர் தூரத்திற்கு பின் மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி கவிழ்ந்தது.

சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

திருமணமான அடுத்தநாளே தேனிலவுக்கு பதிலாக மயானத்திற்கு சென்ற தம்பதி!!

திருமணமான அடுத்தநாளே..

திருமணமான மறுநாளே தேனிலவுக்குப் பதிலாக கல்லறைக்கு வந்த கணவன்-மனைவி ஆகிய இருவரும் ஒரே நாளில் 15 பேரை தகனம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புதுமணத்தம்பதியினர், கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை மயானத்துக்கு சென்று நிறைவேற்றினர்.

மலேசியாவை சேர்ந்த 34 வயதான முஹம்மது ரிட்ஜீவன் ஒஸ்மான் மற்றும் அவரது மனைவி நூர் அஃபிஃபா ஹபீப் ஆகியோர் கடந்த டிசம்பர் 13 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வதற்குப் பதிலாக, கொரோனா முன்களப் பணியாளராக மாற முடிவு செய்தனர். மணமகன் ரிட்ஜீவன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

இந்தநிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே, கொரோனா நோயாளி இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் கூறினார்.

இதனை தாம் தமது புது மனைவியிடம் கூறியபோது அவரும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார். இதனையடுத்து புதுமணத் தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடலங்களை தகனம் செய்தனர்.

தமிழகத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் : பாடசாலையில் மாணவி எரித்துக்கொலை?

தமிழகத்தில்..

தமிழகம் – திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரின் ஒன்பது வயதான மகள் பிரித்திகா பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பாடசாலையில் கல்வி கற்கின்றார்.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் பிரித்திகா நேற்றைய தினம் வழமை போல் பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், காலை 11 மணியளவில் பிரித்திகா வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர் வகுப்பறைக்கு வரவில்லை.

இந்தநிலையில் மாணவி பிரித்திகா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவியின் உடலை கைப்பற்றிய பொலிஸார் குறித்த மாணவியை யாரும் எரித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

யாழில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

யாழில்..

யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பினை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 07.45 மணியளவில் கொடிகாமம் – சாவகச்சேரி இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த இளைஞன் விசேட தேவையுடையவர் எனவும் அதனால் ரயில் வந்தது தெரியாமல் அவர் அந்த தண்டவாளத்திலிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வரலாற்று சாதனை : சூரியனுக்கு அருகில் சென்று தரவுகளை சேகரிக்கும் விண்கலம்!!

விண்கலம்..

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட ரோபோ விண்கலம் சூரியனின் மேற்பரப்புக்கு இடையே சென்று தரவுகளை திரட்டியுள்ளதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“Parker Solar Probe” என்ற இந்த ரோபோ விண்கலம் சூரியனை ஆராய்ச்சி செய்ய முதல் ஆய்வு விண்கலமாகும். “Parker Solar Probe” சூரியனின் காந்தப் புலத்தை ஆய்வு செய்து, சூரியனின் நுகள் மாதிரிகளை சேகரித்துள்ளதாக நாசா கூறியுள்ளது.

இந்த விண்கலம் சூரியனின் வெப்பத்தை தாங்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட விண்கலமாகும். விண்கலம் சூரியனின் மேல் வலயத்தை கடந்து கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி தரவுகளை சேகரித்துள்ளது.

தரவுகளை ஆய்வு செய்து அவற்றை உறுதிப்படுத்த நாசா விஞ்ஞானிகளுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன. “Parker Solar Probe” விண்கலம் கடந்த 2018 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சூரியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விண்கலம் மெதுவாக சூரியனை சுற்றி, அதனை அண்மித்தது. இந்த விண்கலம் மணிக்கு 6 லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது. “Parker Solar Probe” விண்கலத்தை தயாரிக்க 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கின்றதா?

எரிபொருள் விலை..

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கோ அதற்கான திட்டமோ இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கான திட்ட ம் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தடுப்பூசி..

இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான தரப்பினர் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறுவர்களை ஆடையகங்களுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு அத்தியாவசிய நபர் மாத்திரம் வெளியே செல்லுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் ஒன்றுக்கூடுவதனை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

திருமணங்கள், விருந்துகள், வைபவங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு சென்ற ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
விசேடமாக ஆடை நிலையங்களுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களை ஒரு போதும் அழைத்து செல்ல வேண்டாம் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியாவில் இளைஞர்கள் மூவர் பொலிசாரால் அதிரடியாக கைது!!

இளைஞர்கள் மூவர்..

வவுனியாவில் கஞ்சா பொதிகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவரினை வவுனியா பொலிசார் இன்று கைது செய்துள்ளார்கள். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று சென்ற பொலிசார் அங்கு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது,

உடமையில் கஞ்சாவினை சிறுசிறு பொதிகளாக வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிகுளத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 15 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த 18, 21,22 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தெருவில் சுற்றித்திரிந்த இளைஞன் : பின்னர் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் சந்தேகத்திற்கிடமான இளைஞர் சுற்றித் திரிந்ததால், பொலிசார் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிருக்கும் Park St பூங்காவில் சந்தேகத்திற்கிடமான நபர் நிறைய பணத்துடன் சுற்றி திரிவதாக நேற்று(டிசம்பர் 14-ஆம் திகதி) பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர், அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பெயர் Maheshtala என்பதும், 27 வயது மதிக்கத்தக்க இவர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள பேங்க்சல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அவர் பை முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அவரிடம் இந்த பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து கேட்ட போது, அவர் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. இதனால் அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் நடக்கவுள்ளதால், இது தேர்தல் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டதா? ஹவாலா வழியாக பணத்தை பெற்றாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நாளை பெரும்பாலான இடங்களில் மின்தடை : விபரம் உள்ளே!!

மின்தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி நாளை (16) ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் ஈச்சங்குளம், ஈச்சங்குளம் கல்லறை, ஈஸ்வரிபுரம். கல்மடு. கருவேப்பங்குளம், கற்குளம் (சாஸ்திரி கூழாங்குளம்). கிடாச்சூரி, கோதண்டர் நொச்சிக்குளம், மணிபுரம், மணிபுரம் வீட்டுத் திட்டம், மரக்காரம்பளை (அபிராமி ஆலை) மறவங்குளம்,

புதிய பேருந்து நிலையம், பத்தினியர் மகிழங்குளம், பூம்புகார், சமயபுரம், சாஸ்திரி கூழாங் குளம், சோயாவீதி, தாண்டிக்குளம், சுந்தரபுரம், தரணிக் குளம், திருநாவற்குளம். வடக்கு பண்ணை, சமயபுரம் வரன் அரிசி ஆலை, தாண்டிக்குளம் நீர்வழங் கல், நீர்வழங்கல்- புதுக்குளம், மரக்காரம்பளை (பயிற்சி நிலையம்),

வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலடி. அறுகம்புல்வெளி, குருமன்காடு பிள்ளையார்கோவிலடி கூமாங்குளம், கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக், கூமாங்குளம் சாய்சிறுவர் இல்லம், குகன்நகர், குழுமாட்டுச்சந்தி, குருமன்காடு, குருமன்காடு கோவில் வீதி, மரக்காரம்பளை- கணேசபுரம்,

நாகரிலுப்பைக்குளம், நொச்சிக்குளம், அவுசதப்பிட்டிய. பட்டைக்காடு. வேப்பங்குளம் 6 ஆவது வீதி, பட்டாணிச்சூர் புளியங்குளம், பொன்னாவரசங்குளம், வைரவபுளியங்குளம். அஸ்வி அரிசி ஆலை. ஜீவன் அரிசி ஆலை, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, சுஜன் அரிசி ஆலை, சுஜன் அரிசியாலை- காத்தான் கோட்டம்,

தெய்வேந்திரம் அரிசி ஆலை, யு.என்.எச்.சி.ஆர்- குருமன் காடு. அரசன் அரிசி ஆலை வேப்பங்குளம், சியாம் அரிசி ஆலை (சிவா அரிசி ஆலை). காத்தார் சின்னக்குளம், பூந்தோட்டம் மகாறம்பைக்குளம். அறவந்த லாவ-2. அறுகம்புல் வெளி, அவறந்துலாவ, நவகம்மான, பாவற்குளம், பாரதிபுரம், கூமாங்குளம், கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக்,

கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம், நெளுக்குளம் கலைமகள் பாடசாலையடி, நொச்சிக்குளம், அவுசதப்பிட்டிய, பழையனூர், பாண் சின்னகுளம், பொன்னாவரசங்குளம், இராஜேந்திரகுளம். சாம்பல் தோட்டம் வீட்டுத் திட்டம், சூடுவெந்தபுலவு. ட்ராக்- 07, பாவற்குளம் விநாயகபுரம் வீட்டுத் திட்டம். நெளுங்குளம் நீர்வழங்கல் சபை.

இரணையிலுப்பைக்குளம், ஹய் நகரம், காக்கையங்குளம், கங்காணி குளம், கீரிசுட்டான், கோவில் புளி யங்குளம் (மடு), மதீனா நகர் காக்கையன்குளம். முள்ளிக்குளம் திட்டம். பரசங்குளம் (மடு துணுக்காய் வீதி). சின்ன வலயங்கட்டு. விளாத்திக்குளம் (எம்.என்). குருக்கள் புதுக்குளம் – மணியர் குளம், குருக்களூர் மன்னார் வீதி. முகந்தாங்குளம் முதலாவது பண்ணை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் மோதி இளைஞர் பரிதாபமாக பலி!!

பதுளையில்..

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தலவாக்கலை, சென்.கிளயார் மற்றும் சென். அன்ட்ரூஸ் ஆகிய இடங்களுக்கு இடையில் இன்று (15.12.2021) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் கொட்டகலை சென்.அன்ட்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஆர். மோகனசுந்தரம் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவாறு ரயில் பாதையில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கொட்டகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து குறித்து தலவாக்கலை மற்றும் திம்புளை பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

எரிபொருள்..

இலங்கையில் தற்போது போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யு.டபிள்யு.டீ.சுமித் விஜேசிங்க கருத்து வெளியிடுகையில்,

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதும் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. டொலர் நெருக்கடி காணப்படுகின்ற போதிலும், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உரிய காலத்தில் அவ்வப்போது தேவையான எரிபொருள் இறக்குமதி செய்யப்படும். எரிபொருளை இறக்குமதி செய்வதில் எவ்வித சிக்கலும் இல்லை.

எனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக தகவல் வெளியாகியிருந்தால், அவை உண்மைக்கு புறம்பானவையாகும். மக்கள் இது குறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம் : சற்று நேரம் ஏற்பட்ட பதற்றம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரைக் கும்பல் ஒன்று துரத்தித் துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. சன நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் குறித்த பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். நகர் பகுதியை நோக்கிக் குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையாக வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலிலிருந்து தப்பித்து, பல்கலைக்கழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தித் துரத்தி வெட்டப்பட்டுள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், பெரும் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த பகுதியில் சற்று நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.