வவுனியா நெடுக்கேணிபகுதியில் இன்று மதியம் சூட்டு காயங்களுடன் வீதியில் பெண்ணின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெடுங்கேனி சேனைப்பிளவு பகுதியில் மோட்டார் சைக்கிளிலுடன் வீதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 31 வயதுடைய பெண் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்கள் வீதியில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் மீது கட்டுத்துப்பாக்கியால் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு தப்பித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றுள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (14.12) சபைத் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரனால் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பாதீடு தொடர்பாக சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இதன்போது பாதீட்டினை வாக்கெடுப்புக்கு விடுமாறு உறுப்பினர்கள் கோரியதையடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டப்பது. பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 05, ஈபிஆர்எல்எப் 03, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 01, முஸ்லிம் காங்கிரஸ் 01 என 10 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
பாதீட்டுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (சிறிரெலோ) 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் ஆக 6 பேர் வாக்களித்தனர்.
இதனால் 4 மேலதிக வாக்குகளால் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றிபெற்றது. பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினர் பாத்தீட்டு வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகித்திருந்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளுகைக்குள் இருந்த செட்டிகுளம் பிரதேச சபையின் பாதீடு கடந்த வருடம் தோற்கடிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று வவுனியா வைத்தியசாலையின் காசநோய் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது. காசநோய் தடுப்பு மருத்துவ நிலையத்தில் இந்நிகழ்வு இன்று (14.12) இடம்பெற்றது.
இதன்போது காசநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதனை தடுப்பதற்கான வழிவகைகள் மற்றும் காச நோய்கான மருத்துவ முறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், மக்கள் இதில் இருந்து விடுபட செயற்படும் முறை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர், வைத்தியர்கள் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியதுடன், தாதியர்கள், சுகாதார பரிசோதகர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா தெற்கு பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மரக்காரம்பளை வீதியில் அமைத்துள்ள காத்தான் கோட்டம கிராமத்தின் உள்ளக வீதி கடந்த 20 வருடங்களாக எவ்வித அபிவிருத்தியுமின்றி தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலமையில் காணப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் 75க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதுடன் குறித்த உள்ளக வீதியினை செப்பனிட்டு தருமாறு பிரதேச சபை மற்றும் அரசியல்வாதிகள் என பலரிடம் கோரிக்கைகள் முன்வைத்த போதிலும் இதுவரையிலும் எவருமே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
பாடசாலை மாணவர்கள் இவ் வீதியூடாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் தங்களது பாடசாலை பருவத்தினை கடந்து செல்வதுடன் தொழில் நிமித்தம் செல்பவர்களும் இவ்வீதியினை பயன்படுத்த முடியாத நிலை தற்போது நிலை உருவாகியுள்ளமையினால் மக்கள் மாற்று வீதியினால் பயணத்தினை தொடர்ந்து வருகின்றனர்.
இக் கிராமத்தின் வீதி வீதி புரணமைப்பு தொடர்பில் அக்கிராமத்தில் வசிக்கும் சசிகுமார் டனுசன் என்ற மாணவன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ் வீதியுடாக தான் தினசரி எனது பாடசாலைக்குச் சென்று வருகின்றேன். மழை பெய்தால் என்னால் பாதணி கூட அணிந்து செல்ல முடியாத நிலையில் இவ் வீதி காணப்படுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் எமக்கு தற்காலிகமாகவாவது இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு கோரிக்கையினை முன்வைத்தார்.
இவ் வீதி தொடர்பாக முதியவர் கருத்து தெரிவித்தபோது ,எனக்கு 74 வயது ஆகின்றது. எனது இந்த முதுமைப்பருவத்தில் இவ் வீதியூடாக என்னால் நடந்து செல்வதற்குக்கூட கடினமாக காணப்படுகின்றது. கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இவ் வீதி பழுதடைந்து காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
பிரதேச சபை மீது மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
வீதி புரணமைப்பு தொடர்பில் எமக்கு தினசரி பல முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமேயுள்ளது. எம்மிடம் தற்போது குறைந்தளவு நிதியே காணப்படுகின்றது. அவற்றின் ஊடாக எம்மால் தற்போது எம்மால் வீதியினை செப்பனிடும் பணிகளை முன்னெடுப்பது கடினம்.
எனினும் மழையுடான காலநிலை முடிவடைந்தததன் பின்னர் பிரதேச சபையிடம் காணப்படும் இயந்திரங்களை கொண்டு வீதியினை சற்று மறுசீரமைத்து வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் விமானியான பிருத்வி சிங் சவுகானின் மகள் தானும் ஒரு விமானியாக மாறுவேன் என உறுதிப்பட சபதம் எடுத்துள்ளார்.
குன்னுார் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப் படையின் விங் கமாண்டராக பணியாற்றிய பிருத்வி சிங் சவுகானும் ஒருவர்.
சவுகானின் உடலுக்கு அவரின் மகள் ஆராத்யா (12) மகன் அவிராஜ் (7) ஆகியோர் இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு தீ மூட்டினர். 7ஆம் வகுப்பு படிக்கும் ஆராத்யா அளித்த பேட்டியில், நான் என்னுடைய தந்தையை பின்பற்றி நடக்க விரும்புகிறேன்.
அவர் வழியில் நான் இந்திய விமானப் படை விமானியாக மாறி பணியாற்றுவேன். என் தந்தை எனக்கு முன்மாதிரியாக இருந்தார். அவர் எப்போதும் எனது இலக்குகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி வந்தார்.
நான் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றி என்னுடைய கனவை அடைவேன். அவர் சொன்னது போலவே செய்ய ஆசைப்படுகிறேன். இதில் மாற்றம் எதுவும் இல்லை என உறுதிப்பட தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மதிப்பெண்களை பெற வேண்டும் என அதை துரத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என என் தந்தை எனக்கு அறிவுரை கூறுவார், அதாவது படிப்பில் கவனம் செலுத்தினால் மதிப்பெண்கள் தானாக வரும் என்பார் என கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா யாரையும் விட்டு வைக்காது என்று கூறி, மருத்துவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், தடயவியல் பேராசிரியராக வேலை செய்து வந்தவர் தான் மருத்துவர் சுஷில் சிங். 55 வயது மதிக்கத்தக்க இவருக்கு, சந்திரபிரபா(50) என்ற மனைவியும், 21 வயதில் ஷிகார் சிங் என்ற மகனும் குஷி சிங் (16) என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் திகதி சுஷில் சிங் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். மனைவிக்கு டீ யில் மயக்க மருந்து ஒக்டுத்து, சுத்தியலால் அடித்து கொலை செய்த அவர், மகன மற்றும் மகள் இருவரையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, சுஷில் சிங் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அவர்களிடன் வீட்டில் சிக்கியுள்ளது.
அதில், தான் குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும், கொரோனா யாரையும் விட்டுவைக்காது. எனது குடும்பத்தை பிரச்சினையில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை.
அவர்களை விடுதலை செய்து பிரச்சினைகளில் இருந்து வெளியேற்ற விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பொலிசார் அவரை தேடி வந்த நிலையில், சுஷில் சிங், கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுஷில் சிங்கின் ஆதார் அட்டை, செல்போன், டிரைவிங் லைசன்ஸ் உள்பட ஆவணங்கள் வைத்து பொலிசார் அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் வினய். சங்கீதா என்பவரை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார்.
மனைவி அழகாக இருப்பதால் அவர் யாருடனும் பேச கூடாது என அவரிடம் கூறியுள்ளார். மேலும் செல்போனை சோதிப்பது நண்பர்களுடன் பேசினால் சந்தேகிப்பது போன்ற காரியங்களை அவர் செய்துவந்ததால் சங்கீதா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் என்பதால் அவரை விட்டு விலகவும் முடியாமல் தவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வினயின் சந்தேக புத்தி அளவுக்கு அதிகமாக சென்றுள்ளது.
இதனால் அவர் சில நாட்களாக சங்கீதாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனை ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வினயை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் பயன்படுத்தப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்துள்ளன. 62 ஆயிரம் கடன் அட்டைகளை இரத்துச் செய்த போதிலும் புதிய கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதன் காரணமாக,
2021 செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட 18 லட்சத்து 56 ஆயிரத்து 191 கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது நவம்பர் மாத இறுதியல் 18 லட்சத்து 94 ஆயிரத்து128 ஆக அதிகரித்துள்ளது. 37 ஆயிரத்து 937 கடன் அட்டைகள் இவ்வாறு அதிகரித்துள்ளன.
எவ்வாாறாயினும் இரத்துச் செய்யப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளில் 150 கடன் அட்டைகள் இலங்கையில் மாத்திரம் பயன்படுத்தக் கூடியவை. ஏனைய அனைத்து அட்டைகளும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பயன்படுத்தக் கூடியவை.
ஒரு தொகை கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்திருந்தாலும் 2021 ஒக்டோபர் இறுதி வரையான காலம் வரை கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை124.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. செலுத்த வேண்டிய இந்த தொகையானது கடந்த செப்டம்பர் மாதம் 121 பில்லியன் ரூபாயாக இருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய முழு தொகையானது 117 பில்லியன் ரூபாயாக இருந்தது.
கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படாமை மற்றும் இணையத்தளம் வழியாக செலுத்தும் முறை வரையறுக்கப்பட்டமை என்பன இவ்வாறு பெருந்தொகையான கடன் அட்டைகளை இரத்துச் செய்ய ஏதுவாக அமைந்தன என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் நான்காவது கோவிட் தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது பொதுமக்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கண் வைத்தியசாலைக்கு வைத்திய உதவி பெற வந்த சகோதரிகளாகிய வயோதிபப் பெண்கள் இருவரை கண் நிபுணரிடம் அறிமுகம் செய்வதாக உறுதியளித்த நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.
பாதுக்காவில் உள்ள வாகா பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான ஹேமலதா மற்றும் பிரேமாவதி ஆகியோர் மருத்துவ சிகிச்சை பெற வந்ததாகவும், அவர்கள் அணிந்திருந்த காதணிகள் தங்களை ஏமாற்றி ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறினார்.
சந்தேக நபர் அவர்களைச் சந்தித்ததாகவும் அவர் தனக்குத் தெரிந்த கண் நிபுணரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்ததாகவும் பிரேமாவதி கூறினார்.
“அவர் எங்களை ஒரு கண் நிபுணரிடம் அறிமுகப்படுத்தி, எங்களுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுத்தருவதாக கூறினார். நாங்கள் ஏழைகள் என்பதை நிரூபிப்பதற்காக எங்கள் காதணிகளைக் கழற்றுமாறு அறிவுறுத்தினார்.
நாங்கள் அவரைப் பின்தொடர்ந்து எங்கள் காதணிகளைக் கழற்றி அவர் கொடுத்த காகிதத்தில் சுற்றினோம். நாங்களும் கைக்குட்டையால் கட்டி வைத்துக்கொண்டோம். எனினும் அவர் காதணிகளை கொள்ளையிட்டதை பின்னர் கண்டுபிடித்தோம்” என்று பிரேமாவதி கூறினார்.
பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். எனினும் அங்குள்ள பொலிஸார் தங்கள் எல்லைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக கூறி புகாரை எழுத மறுத்துவிட்டார்.
பின்னர் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். “நாங்கள் ஏழை ஆதரவற்ற பெண்கள், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று பிரேமாவதி கூறினார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் நடமாட்ட தடை விதிப்பதற்கு பதிலாக மாற்றுவழி ஊடாக நிலைமையை முகாமைத்துவப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நடமாட தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுகாதார வழிகாட்டுதல்களை மீறி கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் இரவு விடுதிகள், வீடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது கோவிட் தொற்று பரவி வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறான விருந்துகள் நடத்தப்படுமாயின் 011-2676161 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரில் சுகாதார விதிகளை மீறும் நபர்களை துரித ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாதவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தனியார் பேருந்து ஒன்றில் தவறவிட்ட ஐந்து பவுண் தாலிக்கொடி மற்றும் மூன்று வங்கி புத்தகம் என்பவற்றை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்த பேருந்து சாரதியின் நேர்மையான நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட பேருந்து ஒன்றில் நேற்றைய தினம் (13.12.2021) பயணம் மேற்கொண்ட கிளிநொச்சி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பேருந்திலிருந்து இறங்கும்போது தவறுதலாக தனது கைப்பை ஒன்றினை பேருந்தில் தவறவிட்டு இறங்கியுள்ளார்.
அதனை பார்வையிட்ட தனியார் பேருந்தின் சாரதியும், உரிமையாளருமான கே.ஜீவானந்தபவனினால் பேருந்தில் கைவிடப்பட்ட குறித்த கைப்பை வவுனியா மாவட்ட பேருந்து சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கைப்பையில் காணப்பட்ட அடையாள அட்டை ஆவணத்தின் முகவரிக்கு குறித்த உரிமையாளருடன் தொடர்புகொண்டு அவர் பேருந்தில் தவறவிட்ட ஐந்து பவுண் தாலிக்கொடி மற்றும் மூன்று வங்கி புத்தகம் என்பவற்றை உரிமையாளர் ஊடாக உறுதிப்படுத்திய பின்னர் இன்றையதினம் (14.12.2021) வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சு.இராஜேஸ்வரினால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா குட்சைட் வீதியில் இன்று (14.12.2021) காலை 9.45 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குட்செட் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருமாரி அம்மன் ஆலயத்தினை அண்மித்த நேரத்தில் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தேனி உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த கௌதம் – புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த மாதம்தான் திருமணம் முடிந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
விளையாட்டில் பல விருதுகள் வாங்கிய புவனேஸ்வரிக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும் வற்புறுத்தலின் பேரிலேயே, திருமணம் நடைபெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
கணவருடன் வாழ விரும்பாத புவனேஸ்வரி அவரை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் அதன்படி கடந்த 2ஆம் தேதி கௌதமை தனியே அழைத்துச் சென்று, கூலிப்படையினரைக் கொண்டு அவர் மீது காரை மோதவிட்டு கொலை செய்ய முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
காரின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளிகளை நெருங்கி வருவதை அறிந்து பயத்தில் புவனேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (14.12.2021) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
வவுனியா பிரதேசத்தில் வைரவபுளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, நெடுங்குளம். சூரிய மின் உற்பத்தி நிலையம், மரக்காரம்பளை – கணேசபுரம், ஜீவன் அரிசி ஆலை, சுஜன் அரிசி ஆலை- காத்தான் கோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் ஒரே நாளில் 10 முறை கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசியை பெற்றவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அவரை “நம்பமுடியாத சுயநலவாதி” என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் ஏனையவர்களின் பெயர்கள் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாகவும் அதற்காக பணம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நியூஸிலாந்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமான தடுப்பூசி அளவை பெற்றுக்கொண்டால் அவர் விரைவில் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வேறொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்துவது “ஆபத்தானது” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தவறுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கேள்விப்பட்டுள்ள போதும் இது போன்ற சம்பவத்தை கேள்விப்பட்டதில்லை என்றும் நியூஸிலாந்தின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.