டீசல் கொள்கலன் விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து..

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலன் ஒன்று இன்று (13.12.2021) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும் போதே கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை மெலிபன் தொழிற்சாலைக்கு அருகாமையில் பிரதான வீதியில் விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் பவுஸரில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது. இவ் விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் சாரதியும், உதவியாளரும் படுங்காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பவுஸரில் 33,000 லீட்டர் டீசல் இருந்ததாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு வெடித்ததில் பெண் உயிரிழப்பு : 10 கோடி ரூபாய் கோரும் குடும்பத்தினர்!!

எரிவாயு வெடித்ததில்..

கண்டியில் சமையல் எரிவாயு வெடித்தமையினால் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர் 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாவார்.

மாத்தளை வில்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், தனது பிள்ளைகளின் மேலதிக கல்விக்காக குண்டசாலை பிரதேசத்திற்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், எரிவாயு வெடித்து தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அல்லது எவ்வித பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் தேடிப் பார்க்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர் சில மணிநேரத்தில் ம.ரணம் : உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை!!

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்..

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சில மணிநேரத்தில் ம.ரணமடைந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே ம.ரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது ஏற்கனவே சினோபாம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (13.12) பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றிருந்ததுடன்,

சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தடுப்பூசி ஏற்றிய பின் சிறிது நேரம் அவ்விடத்தில் அமர்ந்து இருந்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றுள்ளார்.

வீடு சென்று சில மணி நேரத்தில் திடீரென குறித்த நபர் ம.ரணமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது ச.டலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவர் ஏற்கனவே சில நோ.ய்களுக்கு உட்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு ம.ரணமடைந்தவராவார்.

அவரது சடலத்திற்கு தற்போது பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ம.ரணத்திற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள அவரது சடலத்தை உடனடியாக உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

எரிவாயு அடுப்பு வெடித்ததால் மாடியிலிருந்து குதித்த யுவதி!!

எரிவாயு அடுப்பு வெடித்ததால்..

குருவிட்ட – பதுஹேன பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் பீதியடைந்த யுவதி ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதனால் குறித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொனராகலையைச் சேர்ந்த குறித்த யுவதி,

பதுஹேன பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வாகனங்களை வழிமறித்து மக்கள் போராட்டம்!!

போராட்டம்..

வவுனியா ஓமந்தை , பொற்கோவிலுக்குச் செல்லும் பிரதான வீதியைச் சீரமைத்துத்தருமாறு கோரிக்கையை முன்வைத்து அங்குள்ள மக்கள் வாகனங்களை வழிமறித்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா ஓமந்தை பொற்கோவில் செல்லும் வீதி அங்குள்ள கிரசர் ஒன்றின் பயன்பாட்டினால் மிகவும் பாதிப்படைந்து மக்கள் பயன்பாட்டிற்குதவாக வகையில் காணப்படுகின்றனது.

இவ்வீதியைச் சீரமைத்துத்தருமாறு பல தடவைகள் கோரியும் அது சீரமைக்கப்படவில்லை . எனவே எமது பாவனையிலுள்ள வீதி அங்குள்ள கிரசர் ஒன்றிலிருந்து அகழப்பட்டு வரும் கற்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களினால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆலயத்திற்குச் செல்லவும் பாடசாலைகளுக்குச் செல்லவும் நோயாளர்களை அழைத்துச் செல்லவும் பல்வேறு அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது வீதி சீரமைப்பதற்குரிய உத்தரவாதம் அளிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்து அங்கிருந்து கற்கள் அகழ்வு மேற்கொண்டு வரும் வாகனங்களை வழிமறித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் கிராமத்தில் மக்களின் உழுந்து பயிர்செய்கையை சேதப்படுத்தி காணிகளை கையகப்படுத்தும் வனவளத்துறை!!

மெனிக்பாம் கிராமத்தில்..

செட்டிகுளம் மெனிக்பாம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பயிரிடப்பட்ட உழுந்து பயிர்களைச் சேதப்படுத்தி எல்லைக் கற்களை நாட்டி காணிகளை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.

போரின் பாதிப்புக்களை சுமந்த பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மெனிக்கபாம் கிராமத்தில் 850 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரமாக உழுந்து செய்கையை பல வருடங்களாக செய்கை பண்ணி வருகின்றனர்.

குறித்த பகுதியில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது மேட்டு நிலக் காணி வாழ்வதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என பிரதேச செயலகத்தால் வாய் மொழி மூலம் வழங்கப்பட்ட உத்தரவாத்திற்கு அமைவாக அம் மக்கள் தமது வீடுகளுக்கு பின்னால் இருந்த சிறிய பற்றை காடுகளை துப்பரவு செய்து கடந்த பல வருடங்களாக மேட்டு நிலப் பயிற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்முறையும் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் உழுந்து பயிரிட்டுள்ளனர். குறித்த உழுந்து பயிரிடப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் பூத்துக் காணப்பட்ட உழுந்து செடிகளுக்குள் தமது உழவு இயந்திரத்தை ஓடிச் சென்று அவ் உழுந்து பயிர்களை சேதப்படுத்தி எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர்.

இதனால் பலரது உழுந்து செய்கை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், தற்போதைய பொருளாதார நிலைக்கு ஈடுகொடுக்க முடியாது கடன் பட்டும், வட்டிக்கு பணம் பெற்றும், அடைவு வைத்தும் உழுந்து பயிற்செய்கையில் ஈடுபட்ட பலர் தமது கண் முன்னே உழுந்து பயிர்கள் சேதமாக்கப்பட்டதை பார்த்து கண்ணீர்விட்டு அழுததுடன், வனவள திணைக்கள அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயற்பாடு தொடர்பாக கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தமது உழுந்து பயிற்செய்கை நிலங்களை தமது வாழ்வாதாரத்திற்கான மேட்டு நிலப் பயிற்செய்கைக்கு பெற்றுத் தர உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர்.

வவுனியாவில் பண்ணைக்குள் மாடு சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் உட்பட நால்வாவர் காயம் : மூவர் கைது!!

பூவரசன்குளம்..

வவுனியா, பூவரசன்குளம் பண்ணை ஒன்றுக்குள் மாடுகள் சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றுக்குள் அப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்க்கும் மாடுகள் நேற்று (11.12) மாலை உட்சென்றுள்ளதாக பண்ணையில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மாட்டு உரிமையாளர்கள் அவ்விடத்திற்கு சென்ற போது பண்ணையில் இருந்தோருக்கும், மாட்டு உரிமையாளர்களான கணவன், மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த வாய்த்தர்க்கமானது கைகலப்பாக மாறியதில் பெண் ஒருவரும், பண்ணையில் இருந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து பண்ணையில் நின்றவர்கள் வீதியில் சென்ற போது அங்கு வந்த சிலர் அவர்களை வழி மறித்து தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இக் கைகலப்பு சம்பவங்களில் மாட்டு உரிமையாளரின் மனைவியான பெண் மற்றும் பண்ணையில் இருந்தோர் இருவர் என மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பண்ணையில் நின்றவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பூவரசன்குளம் பொலிசார் அப் பகுதியைச் சேர்ந்த மூவரை இரவு (11.12) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வாகனங்கள் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு சோகமான செய்தி!!

வாகனங்கள்..

இலங்கையில் பயன்படுத்திய வாகனங்களின் விலை மீண்டும் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் வருடமும் வாகனம் இறக்குமதி செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தையடுத்து வாகனங்கள் கொள்வனவு செய்யும் எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு மேலும் சில காலங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பயன்படுத்திய மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கும் நபர்களுக்கும் இதுவரையில் கடுமையான நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையர்கள் அதிகமாக பயன்படுத்தும் எல்டோ ரக மோட்டார் வாகனம் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2015ஆம் ஆண்டில் வெளியான எல்டோ வாகனம் தற்போது 30 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஜப்பான் வாகனங்கள் பல மடங்கு விலை அதிகரித்துள்ளதென தெரியவந்துள்ளது. அத்துடன் வாகனங்களின் உதிரிபாகங்களின் விலைகளும் பாரிய அளவு அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் புகையிரதம் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து!!

விபத்து..

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழமையில் உயிர் தப்பியுள்ளார். இன்று (12.12) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற கடுகதி புகையிரதமானது தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் காரணமாக சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அது முழுமையாக சேதமடைந்துள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதி விபத்தின் போது பாய்ந்தமையால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பாதுகபாப்பற்ற புகையிரதக் கடவையில் பல தடவைகள் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையும், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியுடன் டிப்பர் மோதுண்டு விபத்து ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (12.12.2021) காலை 9.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தினை அண்மித்த சமயத்தில் வீதியோரமாக துவிச்சக்கரவண்டியில் சென்றவரை துவிச்சக்கரவண்டியின் பின்பகுதியில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

இவ்விபத்தில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியினுள் துவிச்சக்கரவண்டி சிக்குண்டதுடன் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுடன் உயிர்தப்பினார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை முழுவதும் மீண்டும் மின்வெட்டு?

மீண்டும் மின்வெட்டு?

நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் பழுதடைந்த ஜெனரேட்டர்கள் தேசிய மின்வலயத்துடன் இணைக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன் பழுது காரணமாக சில பகுதிகளில் இரவில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்படலாம் என அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்சாரம் தடைப்படும். எனினும் நாளை மறுதினம் வரை மாத்திரமே மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

10 நிமிடங்கள் ஜிம் இயந்திரத்துக்குள் சிக்கித்தவித்த 4 வயதுச் சிறுமி!!

4 வயதுச் சிறுமி..

துபாயின் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள “ஜிம்“ இயந்திரத்தில் ஏற்பட்ட விபத்தில் 4 வயதான சிறுமி ஒருவர் சிக்கி கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அவர் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நரயா பிரவுன் (Naraya Broun) என்ற சிறுமி ஜிம் இயந்திரத்தில் இருந்து மீட்கப்பட்டபோது இயந்திரத்தின் பின்பகுதியில் சிக்குண்டு வெளியேறமுடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் கைகளும் கைகளும் இயந்திரத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்தன. பின்பக்க “பெல்ட் ரோலர்” பகுதியில் சிறுமியின் கழுத்து தள்ளப்பட்டிருந்தது.

இதன்போது அவரின் தந்தையான அலெக்ஸ் பிரவுன்,( Alex Broun) இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தியபோதும் தமது மகளை இயந்திரத்தில் இருந்து வெளியே இழுக்க போராடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 நிமிடங்கள் வரை அவர் இயந்திரத்துக்குள் சிக்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்திலிருந்து தமது மகளின் கைகளை விடுவிப்பதில் தந்தை கவனம் செலுத்தியபோது, மகளின் கழுத்து சுருக்கப்பட்டிருப்பதையும் அவள் மூச்சுவிட சிரமப்படுவதையும் கண்டுள்ளார்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நரயா பிரவுன் நான்கு நாட்களில் இயல்புக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் பண்ணைக்குள் மாடு நுழைந்தமையால் ஏற்பட்ட கைகலப்பு : பெண் ஒருவர் உட்பட மூவர் காயம்!!

கைகலப்பு..

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்குள் மாடு நுழைந்தமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை (11.12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றுக்குள் அப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்க்கும் மாடுகள் உட் சென்றுள்ளதாக பண்ணையில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மாட்டு உரிமையாளர்கள் அவ்விடத்திற்கு சென்ற போது பண்ணையில் இருந்தோருக்கும், மாட்டு உரிமையாளர்களான கணவன், மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வாய் தர்க்கமானது கைகலப்பாக மாறியதில் பெண் ஒருவரும், பண்ணையில் இருந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தையடுத்து பண்ணையில் நின்றவர்கள் வீதியில் சென்ற போது அங்கு வந்த சிலர் அவர்களை வழி மறித்து தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இக் கைகலப்பு சம்பவங்களில் மாட்டு உரிமையாளரின் மனைவியான பெண் மற்றும் பண்ணையில் இருந்தோர் இருவர் என மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சமபவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் வீதியில் கிடந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் : இளைஞனின் நேர்மையான செயல்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை தவற விட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

அரியாலையில் பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர். அந்தப் பையில் தாலி கொடி உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளன.

குறித்த பணப்பையை கண்டெடுத்த இளைஞன் ஒருவர் உரியவர்களிடம் கொடுத்துள்ளமை பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்- அரியாலையை சேர்ந்த 22 வயதான தியானேஸ் மதுசன் என்ற இளைஞனே இந்த மனிதாபிமான செயலை செய்துள்ளார்.

பேருந்து வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறும்போது, அரியாலை பஸ் தரிப்பிடத்தில் கைப்பை தவறி கீழே விழுந்ததை அதன் உரிமையாளர் கவனிக்கத் தவறிவிட்டார்.

ஆனால் அந்தவழியாகச் சென்ற தியானேஸ் மதுசனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது. எடுத்துத் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் இருந்தமையே இதற்கு காரணமாகும்.

பணப்பையிலிருந்து உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.

சமகாலத்தில் தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கண்டெடுத்த போதும்,

அதனை உரியவர்களிடம் ஒப்படைத்த அவரின் நேர்மையான செயல் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

வவுனியா அல் – இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் தேசிய ரீதியில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் சாதனை!!

அல் – இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள்..

மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலய 8 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சுகாதாரத் திணைக்களத்தின் மலேரியா ஒழிப்பு பிரிவினரால் தேசிய ரீதியில் மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் சித்திரப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அதில் மலேரியா ஒழிப்பு தொடர்பில் சிறப்பான விழிப்புணர்களை வழங்கக் கூடிய சித்திரங்களை வரைந்த மாணவர்கள் வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

அதற்கமைய வவுனியா, சூடுவெந்தபுலவு அல் – இக்பால் மகாவித்தியாலயத்தை சேர்ந்த 8 மாணவர்களின் சித்திரங்களும் சிறந்த படைப்புக்காக தெரிவு செய்யப்பட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிபெற்ற என்.எப்.றிமாசா, எஸ்.அப்ரா, எம்.கே.எம்.இம்ராஸ், என்.எப்.ஹஸ்னா, ஏ.அசீமா, எல்.எப்.சம்கா, வி.எப்.அன்சிபா, ஏ.எம்.பகாத் ஆகிய மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத்,

சுகாதாரப் திணைக்களின் பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவைச் சேர்ந்த எஸ்.சரண்ராஜ் மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து மாணவர்களுக்கான வெற்றிச் சானிறிதழ்களை வழங்கி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் : மக்கள் போராட்டம்!!

டயகம…

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06.12.2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து இன்று (10.12.2021) குறித்த தோட்டத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த தோட்டத்தில் சுமார் 100 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வீதிக்கு இறங்கி பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கறுப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக பேரணியாக வந்து, குறித்த பெண் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பொலிஸார் சரியான விசாரணை முன்னெடுத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடலை பார்க்கவிடாமல் பெட்டியினை திறக்கப்படாமல் நல்லடக்கம் செய்ய பொலிஸார் அனுமதி வழங்கியதாகவும், ஆற்றில் மிதந்த சடலம் உடையின்றி கிடந்தமையால் இதில் சந்தேகம் நிலவுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சந்தேகத்துக்கு இடமான இந்த செயலில் நீதி வேண்டும், முறைக்கேடான விடயங்கள் நடந்திருப்பின் சட்டத்தின் முன் குற்றவாளியை முன்னிருத்தப்பட வேண்டும் என்பதையும், பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி இல்லை எனவும்,

இது தொடர்பான அறிக்கை பொலிஸாரால் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் போராட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர். எனவே பொலிஸார் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.