யாழ் வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண் படுகாயம்!!

விபத்து..

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி – குஞ்சர்கடை மண்டான் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ்.சிவகலா என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குஞ்சர் கடையிலிருந்து மண்டான் வீதிக்குச் செல்லும் இடத்தில் மோட்டார் சையிக்கிலும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள் : பீதியில் மக்கள்!!

எரிவாயு சிலிண்டர்..

பன்னிப்பிட்டி-கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு இடையில் தீவிரமடையும் கொவிட் : மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!!

கொவிட்..

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்பட்டது நல்ல விடயம் என்ற போதிலும் மாணவர்கள் மத்தியில் வைரஸ் பரவுவது மீண்டும் தலைதூக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் தொடர்ச்சியாக 700 இற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தி, மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி கற்கும் வாய்ப்பை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு : மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

பாவற்குளம்..

பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் இரு வான் கதவுகள் ஒரு அடிக்கும், இரு வான் கதவுகள் 9 அங்குலத்திற்கும் ஆக நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அத்துடன், முகத்தான்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 9 அங்குலமாகவும், மருதமடுக்குளம் 12 அடி 8 அங்குலமாகவும், இராசேந்திரங்குளம் 12.6 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ள நிலையில் இக் குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன. இதனால் அதன் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களும் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், ஈரப்பெரியகுளத்தின் நீர்மட்டமும் 13 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் அக் குளமும் வான் பாயும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியை பயன்படுத்துவோருக்கான அவசர அறிவித்தல்!!

அவசர அறிவித்தல்..

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் பிரதான வீதியான இன்று (25.11) இரவு 9 மணி தொடக்கம் நாளை (26.11) அதிகாலை 5 மணிவரை மூடப்படும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து உள்ளமையால் இன்று (25.11) இரவு அதன் வான்கதவுகள் மேலும் ஆழத்திற்கு திறக்கப்படவுள்ளது.

இதன்காரணமக நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் நீர்வரத்து அதிகரித்து வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதியானது இரவு 9 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடும் மழை காரணமாக 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிப்பு!!

கடும் மழை..

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை கராணமாக 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து பல குளங்கள் வான் பாய்ந்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

அதனடிப்படையில் குளம் ஒன்று வான் பாய்வதன் காரணமாக வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்குண்ணாமடு கிராமத்தில் வெள்ள நீர் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் கிராம அலுவலர் பிரிலில் உள்ள இலுப்பைக்குளம் வான் பாய்வதன் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 குடும்பங்கள் பதிப்படைந்துள்ளதுடன்,

அப் பகுதியின் போக்குவரத்து பாதைகளும் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. மேலும் பூந்தோட்டம் ஸ்ரீநகர் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் பாதிப்படைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சென்ற மனைவியை காணவில்லையென கணவர் முறைப்பாடு!!

சிவகுமார் ஜெயந்தி..

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கடந்த 05.11.2021 அன்று சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லையென கணவனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு இன்று வரை வீடு திரும்பாத நிலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் தாயை காணாது தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும், பொலிஸாரும் தனது மனைவியை தேடி தர அக்கறை காட்டவில்லை என்றும், தாயை காணாத நிலையில் பிள்ளைகள் தவித்து வருவதாகவும், தெரிவிக்கும் கணவன் தன்னுடைய மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 0765350421 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை பொலிஸார் தனது மனைவியை தேடித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,15 வயதுடைய ஆண் மகன் மற்றும் 12 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகள் ஆகியோர் தாயை காணாது மிகுந்த சோகத்தில் வாடுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!!

பலத்த மழை..

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் தென் கிழக்கு பகுதியில் தாழமுக்க நிலை உருவாகும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் மேக மூட்டத்துடனான காலநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் அநேக பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 13 வயது சிறுவன் : விசாரணையில் தெரியவந்த உண்மை!!

லண்டனில்..

லண்டனில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் உள்ள தேம்ஸ் நதியில் Zaheid Ali என்ற 13 வயது சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான்.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் வழக்கு விசாரணை இன்று London Coroner’s நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு லண்டனில் உள்ள Ark Globe Academy in Elephant and Castle செல்லும் வழியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளான்.

அதன் பின் அங்கிருக்கும் தேம்ஸ் ஆற்றின் பாலத்தின் மீது ஏறி குதித்துள்ளான். சிறுவன் குதித்த எட்டு நாட்களுக்கு பிறகு, அதாவது ஏப்ரல் 20-ஆம் திகதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான்.

சிறுவன் குதிப்பதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக உதவுவதற்கு, உயிர் மிதவைகளை வீசியுள்ளனர். மற்றவர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

ஒரு வாரத்திற்கு பிறகு சிறுவனின் பள்ளி சீருடையுடன் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சடலத்தை பிரேதபரிசோதனை செய்த போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளான் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை கேட்டறிந்த நீதிமன்றம், திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

முடக்க நிலையை நோக்கி இலங்கை : எச்சரிக்கும் நிபுணர்கள்!!

கோவிட்..

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கிராமப்புறங்களில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. நோயாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்தால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும். நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களில் 10,837 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

-தமிழ்வின்-

கோட்டாபய, மஹிந்தவினால் திறக்கப்பட்ட “கோல்டன் கேட் கல்யாணி” அதி நவீன களனி பாலம்!!

அதி நவீன களனி பாலம்..

கொழும்பின் புறநகர், பேலியகொடவில் “கோல்டன் கேட் கல்யாணி” (Golden Gate Kalyani”) என பெயரிடப்பட்டுள்ள அதிநவீன நவீன களனி பாலம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், ஆறு வழிப்பாதைகளைக் கொண்ட உயர் தொழில்நுட்பக் கேபிள்களுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதல் பாலமாக இது அமைகிறது.

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் பின்னர், நாளாந்தம் கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்தின் கொள்ளளவு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்ல போதுமானதாக இல்லாததால், புதிய பாலம் அமைக்கும் திட்டத்திற்கான பூர்வாங்கத் திட்டங்கள் 2014ல் ஆரம்பிக்கப்பட்டன.

“கோல்டன் கேட் கல்யாணி” இரண்டு கட்டங்களின் கீழ் கட்டப்பட்டது. கட்டுமானத்திற்காக முதல் கட்டத்தின் கீழ் 31,539 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 9,896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த அரசாங்கம்!!

அரசாங்க ஊழியர்களுக்கு..

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது விருப்பத்திற்கு அமைய அரச சேவையாளர்கள் 55 வயதில் ஓய்வு பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதன் காரணமாக டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெற இருப்பவர்கள் தற்போது குழுப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளை எப்படி வளர்க்கப் போகின்றேன் என்று தெரியவில்லை : கணவரை இழந்து தவிக்கும் இலங்கை தமிழ்ப்பெண்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் லொறி மோதி இலங்கை தமிழர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் அவர் மனைவி பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளதோடு போராட்டத்திலும் இறங்கியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் தயானந்த். தயானந்த் சில தினங்களுக்கு முன்னர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தயானந்த் மரணத்துக்கு காரணமான ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை தேவை என கூறி அவர் மனைவி அனுஷா பொலிஸ் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்தனர்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால், பொலிசார் அந்த ஓட்டுநருக்கு பதிலாக வேறொரு நபரை வழக்கில் சேர்த்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதையடுத்து தயானந்த் மீது லொறி மோதிய சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழரான அனுஷா தன் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்தார்.

அனுஷா கூறுகையில், என் கணவர் சம்பாதித்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். இனி அவர் இல்லாமல் என் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என தெரியவில்லை.

என் குழந்தைகள் கல்விக்கு அரசு உதவி செய்யணும். இந்த வழக்கு தொடர்பாக எங்களுக்கு மிரட்டல் வருகிறது. ஒரு லட்சம் பணம் தருகிறோம், இந்த வழக்கில் இருந்து ஒதுங்குமாறு சொல்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். பொலிசார் கூறுகையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சரியான நபர்கள் மீது தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஐந்து பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் உயிரிழப்பு!!

விபத்து..

ஐந்து இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக களுத்துறை, பதுருளிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்ஹேன வீதி, போல்லுன்ன பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடை சாய்ந்து எதிர்த் திசையில் வந்த லொறியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். பதுருளிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே உயிரிழந்தார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவு, கொழும்பு – காலி வீதி, தோட்பல சந்திக்கு அருகில், பேருந்தொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பாதசாரி மரணமடைந்தார். அஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபரே உயிரிழந்தார்.

கொழும்பு, நீர்கொழும்பு வீதி – வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த கொள்கலனென்று மோட்டார் சைக்கிளொன்றின் மீது மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது நபரே உயிரிழந்தார்.

பொலனறுவை, மனம்பிட்டிய வீதியில், டிப்பர் ரக வாகனமொன்று ஓட்டோ ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் ஓட்டோ சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த நபருமே உயிரிழந்தனர்.

குருநாகல், ஜயந்திபுர வீதி, படுமக பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மின்சாரத் தூணொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது நபரே உயிரிழந்தார்.

வவுனியாவில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கடும் மழை..

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று மாலையில் இருந்து வவுனியாவில் மழை பெய்து வருவதுடன் இன்று அதிகாலை முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.

நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 61.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பாளர் தா . சதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையிலும் பார்க்க அதிக மழை வீழ்ச்சி இன்றையதினம் பதிவாகியுள்ளது. இக்காலநிலை மாற்றம் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமக தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் காணப்படுவதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைவடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளுக்கு மாணவர் வரவும் மிகவும் குறைவாக அமைந்துள்ளதாக எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப் பகிஷ்கரிப்பு!!

பணிப் பகிஷ்கரிப்பு..

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (24) காலை 7 மணி முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றது. எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியர்கள், மற்றும் ஏனைய சுகாதார பிரிவினர் கடமைக்கு சமூகமளிக்காமையினால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக இன்று அதிகாலை தொடக்கம் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் மழை பெய்துவரும் நிலையில் மழையினையும் பொருட்படுத்தாது வைத்தியசாலைக்கு பல்வேறு மருத்துவ தேவைக்காக வந்த நோயாளிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதேவேளை, 7 கோரிக்கைகளை முன்வைத்துப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.