வவுனியாவில் கனமழை காரணமாக 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்பு : ஒருவர் மரணம்!!

கனமழை..

வவுனியாவில் மழை காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கன மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்களும் வெள்ள நீர் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இராசேந்திரங்குளம் பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதன்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 வீடுகளும் பகுதியளவில் சேதடைந்துள்ளன. 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேரும் பாதிப்பரைடந்துள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடந்தும் குளங்கள் வான் பாய்வதால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!!

குளங்கள்..

மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான குளங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.

மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான பாவற்குளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், இராசேந்திரங்குளம் என்பன தொடர்ந்தும் வான் பாய்வதுடன்,

பூவரசன்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள கல்லாறு அணைக்கட்டும் வான் பாய்ந்து வருகின்றது. இதனால் மக்கள் தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் தொடர்ந்தும் அவதானமாக இருக்கவும்.

மேலும், ஈரப்பெரியகுளத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் அக் குளமும் வான் பாயும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெற்று சமையல் எரிவாயு கொள்கலன் விலைகள் அதிகரிப்பு!!

எரிவாயு கொள்கலன்..

சந்தையில் 12.5 கிலோ கிராம் வெற்று சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 15 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இணையத்தளம் வழியாக வெற்று சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படுவதை காணக் கூடியதாக உள்ளதுடன் அவற்றில் 12.5 கிலோ கிராம் கொள்கலனின் விலை 16 ஆயிரத்து 500 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ கிராம் வெற்று கொள்கலனின் விலை 10 ஆயிரம் ரூபா எனவும் 2.3 கிலோ கிராம் கொள்கலனின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சந்தையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்திடம் எரிவாயு பற்றாக்குறையாக இருப்பதால், மற்றைய நிறுவனம் தேவையான எரிவாயுவை விநியோகித்து வருகிறது.

இதன் காரணமாக அந்த நிறுவனத்தின வெற்று கொள்கலன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக எரிவாயு விற்பனை நிலையங்களில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!!

மாவீரர் நாளை முன்னிட்டு..

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன் இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து , கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன் 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட அரவிந்தன் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

வவுனியா ஓமந்தையில் 12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம் : 32 வயது குடும்பஸ்தர் சந்தேகத்தில் கைது!!

ஓமந்தையில்..

வவுனியா, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி கர்ப்பம் தரித்துள்ள நிலையில், 32 வயது குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் இன்று (27.11) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மாணவிக்கு நேற்றையதினம் (26.11) வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியர்கள் மாணவியினை சிகிச்சைக்குட்படுத்திய போது மாணவி கர்ப்பம் அடைந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். மாணவியிடம் ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் தன்னை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில், ஓமந்தை மாதர் பனிக்கர்மகிழங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் ஓமந்தைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

வவுனியா நொச்சிமோட்டையில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!!

நொச்சிமோட்டையில்..

வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27.11.2021) காலை 5. 00 மணியளவில் மரவள்ளி கிழங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்கு சென்றுள்ளார்.

எனினும் நீண்டநேரமாகியும் குறித்த முதியவர் வீட்டிற்கு வராத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார். இதன்போது அவரது தோட்டக்காணியில் சடலமாக கிடந்தமை அவதானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் வயது 69 என்ற முதியவரே மரணமடைந்துள்ளார்.

குறித்த முதியவர் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முழு இலங்கையும் ஸ்தம்பிக்கும் : மின்சாரசபை தொழிற்சங்கம் எச்சரிக்கை!!

மின்சாரசபை தொழிற்சங்கம்..

முழு இலங்கையையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யுகதனவ் மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்தனை எதிர்த்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தின் சட்டப்படி வேலை போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சௌமய குமாரமடு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

சட்டப்படி வேலை போராட்டத்தின் ஊடாக மின்சார விநியோகக் கட்டமைப்பு கட்டம் கட்டமாக செயலிழக்கும். மின்சார துண்டிப்புக்கள் இடம்பெறும். அந்த நிலைமை அதிகரித்துச் செல்லும்.

நீர் விநியோகம் தடைப்படும். வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழக்கும். எரிபொருள் விநியோகம் தடைப்படும். நாடே ஸ்தம்பிதம் அடையும். அவ்வாறான ஓர் நிலைமைக்கு எங்களை தள்ள வேண்டாம் என அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

16 ஆண்டுகள் தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் : எவ்வளவு ரூபாய் தெரியுமா?

லொட்டரி..

இந்தியாவில் சுமார் 16 ஆண்டுகள் லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த நபருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரளா மாநிலத்தில் நடந்த Win Win lottery குலுக்கலில், Kottayam மாவட்டத்தைச் சேர்ந்த N T Girish Kumar என்பவர் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு 75 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த திங்கட் கிழமை குறித்த லொட்டரி குலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், W 338132 எண் கொண்ட லொட்டரி டிக்கெட் பரிசை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன் உரிமையாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. அதன் பின், கடந்த செவ்வாய் கிழமை, Kuravilangad ஊராட்சி பேருந்து நிலையம், அருகே உள்ள St Mary’s Lottery Agency-க்கு சென்ற N T Girish Kumar தன்னுடைய பரிசை உறுதி செய்தார். இதையடுத்து, அவர் அந்த டிக்கெட்டை கனரா வங்கி கிளையில் சமர்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கி வருவதாகவும், ஆனால் முதல் பரிசு விழுவது இது தான் முதல் முறை, இந்த பரிசு தொகையை வைத்து, ஒரு நிலத்தை வாங்கி அதில் வீட்டை கட்டி சொந்தமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதினை தடுப்பதற்கான அணுகுமுறைகள்!!(Video)

எரிவாயு சிலிண்டர்கள்..

நாட்டில் பல இடங்களில் தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்குள்ளாகுவதனை தடுப்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

தரம் குறைந்த உதிரிப்பாகங்களின் பயன்பாட்டால் அல்லது தவறான செயற்பாடுகளால் வீடுகளில் கசிவு ஏற்பட்டால் முதலில் துர்நாற்றம் வீசும் அந்த நேரத்தில் வீடுகளில் எந்த ஒரு மின் சாதனங்களையும் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.

பின்னர் எரிவாயு சிலிண்டரை கழற்றி வீட்டின் வெளியே வைக்கவேண்டும். இப்படி கழற்றி வெளியே கொண்டு செல்லும் போது கொள்கலனை சாய்க்காமல் நேராக நிலைக்குத்தாக பிடித்து கொண்டு செல்ல வேண்டும்.

வெளியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு சென்று வைக்கவேண்டும். எரிவாயு சிலிண்டர் வெளியே வைக்கப்பட்ட இடத்தின் அருகில் யாரையும் செல்ல அனுமதிக்கவேண்டாம். காரணம் அந்த இடத்திற்கு தொலைபேசியுடன் ஒருவர் சென்றால் கூட அது ஆபத்தானது.

ஆகவே யாரையும் அந்த இடத்திற்கு அனுமதிக்காது உடனே சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்புகொண்டு அவர்களுக்கு விடயத்தை சொல்லி தெளிவுபடுத்தவேண்டும்.

அதன் பின்னர் அவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவுபடுத்துவார்கள். நீங்கள் முதலில் செய்யவேண்டியது மின்சாரத்துடன் தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

அடுத்தது எரிவாயு சிலிண்டரை வெளியே பாதுகாப்பான இடத்திற்கு நேராக தூக்கிச்சென்று வைப்பது இப்படி செய்வதால் வெளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சர்ச்சை!!

ஆயிஷா குமுதுனி..

பொலநறுவையில் சமையல் எரிவாயு வெடித்தத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தாக வெளியான செய்திகள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் எரியுண்டு 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கும், அங்கிருந்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது, மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அளித்த வாக்குமூலத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 19 வயதான ஆயிஷா குமுதுனி எனும் பெண் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை : வெளியானது தகவல்!!

பாடசாலைகளுக்கு விடுமுறை..

அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் விசேட விடுமுறைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறைகள் வழங்கப்பட உள்ளன.

இதன்படி, டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட் பரவல் காரணமாகப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாட்டில் கோவிட் பரவல் குறைவடைந்து வந்த நிலையில் தற்போது பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டு, கல்வி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மற்றுமொரு இடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு!!

எரிவாயு சிலிண்டர்..

இலங்கையில் மற்றுமொரு இடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நிக்கவெரட்டிய, கந்தேகெதரவில் உள்ள வீடொன்றிலேயே சந்தேகத்திற்கிடமான எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் தாயும் தந்தையும்,பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தமை காரணமாக எவரும் பாதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஒரு மாதத்தில் நாட்டில் இடம்பெற்ற ஐந்தாவது சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் சமையல் எரிவாயு வெடிப்பினால் யுவதி பலி!!

ஆயிஷா குமுதுனி..

இலங்கையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறும் சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி வீடொன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய பகுதியை சேர்ந்த ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் எவரும் இல்லாமையால் அயலவர்கள் வருகை தந்து சமையல் அறை முழுவதும் எழுந்த தீயை அணைத்து குறித்த பெண்ணை வெலிக்கந்த பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேஸ் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிய வருகிறது.

எனினும் புதிதாக வீட்டுக்கு கொண்டு வருகின்ற எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக கையாளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் மின்னல் தாக்கி மரணம்!!

இராசேந்திரங்குளம் குளத்தில்..

வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று (26.11) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இராசேந்திரங்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது அப் பகுதியில் மின்னல் தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் 30 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

எரிவாயு கொள்கலன்கள்..

நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் எரிவாயு கொள்கலன்களில் நிரப்பப்படும் எரிவாயுவின் கலவை குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

நாட்டின் பிரதான எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிற்றோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் கொள்கலன்களில் இருந்து நேற்றைய தினம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார பாதுகாப்பு அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று இது பற்றி அறிவித்துள்ளார்.

எரிவாயு மாதிரிகள் இன்று ஆய்வுகூட பரிசோதனைக்காக இன்று பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ் : மற்றுமொரு புதிய பிறழ்வு கண்டுபிடிப்பு!!

கொரோனா வைரஸ்..

கொவிட் வைரஸின் மற்றுமொரு புதிய பிறழ்வு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்தே,

இந்த புதிய வைரஸ் பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், ஹெங்கொங் உள்ளிட்ட சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மீறிய வலுவை இந்த வைரஸ் கொண்டுள்ளதாக வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் பிரித்தானியா முக்கிய இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் புதிதாக 47,240 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 21 ஆயிரத்து 497 ஆக உயர்ந்திருக்கிறது.

இதைப்போல கொரோனா தொற்றால் மேலும் 147 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,44,433 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.