வவுனியாவில் 25 சாராயப் போத்தல்களுடன் ஒருவர் கைது!!

மதுவரி திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 சாராயப் போத்தல்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கற் முன்பாக நேற்று (20.08) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று (20.08) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை முடக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கொள்வனவு அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கற் ஒன்றிற்கு சென்ற இருவர் 25 சாராயப் போத்தல்களை கொள்வனவு செய்துள்ளனர்.

குறித்த போத்தலை ஒருவருடைய மோட்டர் சைக்கிளில் வைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,

25 சாராயப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபரை கைது செய்ததுடன், சாரயாப் போத்தல்களையும் பறிமுதல் செய்தனர்.

குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள மதுவரித் திணைக்கள அதிகாரிகள், குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வீதியில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : இருவருக்கு கொரோனா தொற்று!!

அன்டிஜன் பரிசோதனை..

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (21.08.2021) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (20.08) இரவு 10 மணி முதல் எதிர் வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படுபவர்கள் மீது பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகரப்பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன்,

வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர். இதனை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் நேரடியாக விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

வவுனியா நீதிமன்றம் மற்றும் புகையிரத நிலைய வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 30 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பாட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

வவுனியா மாவட்டம் ஊரடங்கினால் வெறிச்சோடியது : அத்தியாவசிய சேவைகள் வழமை போல்!!

பொது முடக்கம்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா மாவட்ட முழுமையாக முடங்கியுள்ளதுடன் அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இயங்குகின்றன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நேற்று (20.08.2021) வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியில் இருந்து 30.08.2021 திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் மாவட்டத்தில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் சில வியாபார நிலையங்களும் திறந்துள்ளன.

மேலும் விவசாயிகள், வைத்திய தேவை என்பனவற்றிக்கு செல்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் அனுமதி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்த கர்ப்பிணிப் பெண் மரணம் : பரிசோதனையில் கொரோனா தொற்று!!

மகாறம்பைக்குளம்..

வவுனியாவில் கிணற்றுக்குள் கு.தித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்த கர்ப்பிணி பெண் ம.ரணமடைந்துள்ளதுடன், பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (21.08.2021) இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிணற்றுக்குள் கு.தித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்துள்ளார்.

இதனையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த பெண்ணை கிணற்றில் இருந்து மீ.ட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த கர்ப்பிணிப் பெண் ம.ரணமடைந்தார்.

ம.ரணமடைந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (20.08.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த வந்த ஆண் ஒருவரும்,

கொரோனா தொற்று காரணமாக மதவுவைத்தகுளம் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரமடைந்துள்ளனர். இருவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் 200 ஐ அண்மித்த கொரோனா மரணங்கள் : ஒரே நாளில் அதிகூடிய மரணங்கள் பதிவானது!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 195 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6985 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் (19.08.2021) இலங்கையில் 195 பேர் கோவிட் பெருந்தொற்று காரணமாக மரணித்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் 98 பேர் ஆண்கள் என்பதுடன் 97 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவர் எனவும், நாற்பத்து மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், நூற்று ஐம்பத்து ஒருவர் 60 வயதையும் கடந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இதுவரையில் கோவிட் காரணமாக மொத்தமாக 6985 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய மரணங்களாக நேற்றைய தினம் பதிவான 195 மரணங்கள் காணப்படுவதுடன் அண்மைய நாட்களாக இந்த நாள் ஒன்றிலான அதி உச்ச எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மயங்கி விழுந்த 35 வயதுப் பெண் மரணம் : அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி!!

குருமன்காடு பகுதியில்..

வவுனியா, குருமன்காடு பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்ப பெண் மரணமடைந்துள்ளார். இன்று (20.08.2021) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக அப் பெண்ணை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உள்ளதா என அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 3 கொரோனா வைரஸ் திரிபுகள் கொண்ட பெண்!!

கொரோனா..

இலங்கையில் முதன்முறையாக திரிபுகளுடைய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உலகில் முதல் முறையாக மூன்று திரிபுகளுடைய பெண் ஒருவர் அடையாளம் கண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபினுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறேன் மாஸ்டர் மகுடத்தை பெற்று சாதனை படைத்த இலங்கைச் சிறுமி!!

எம்.ஜே.பாத்திமா அனத் ஜிதாஹ்..

ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற அம்பாறை சிறுமை “கிறேன் மாஸ்டர்” மகுடத்தையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அம்பாறை – நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜே.பாத்திமா அனத் ஜிதாஹ் “கிறேன் மாஸ்டர்” மகுடத்தையும்,

ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் “Fastest to Identify Flags of all Asian Countries” என்ற பட்டத்தையும் வென்று இலங்கை நாட்டுக்கும் தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

எம்.எல்.எம்.ஜெஸீம் யு.கே.பாத்திமா ஜவ்ஹறா தம்பதிகளின் செல்வ புதல்வியான இவர், அனைத்து ஆசிய நாடுகளின் கொடிகளையும் மிக வேகமாக அடையாளம் கண்ட முதல் ஆசிய சிறுமி எனும் மகுடத்தை பெற்றுள்ளார்.

03.12.2016 இல் பிறந்த இவர், தனது 4ஆவது வயதில் ஆசிய நாடுகளின் கொடிகளை 24 வினாடிகளில் வேகமாக அடையாளம் கண்டு ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதித்துள்ளார்.

சிறு வயதிலேயே சிறந்த ஞாபக சக்தியும் பல திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர், ஆங்கிலத்தை சரளமாக வாசிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டதுடன், கணிதம் உள்ளிட்ட பாடங்களிலும் மிக தேர்ச்சியாக திகழ்கின்றார்.

“கிரேன் மாஸ்டர்” எனும் மகுடத்தை பெற்றுக்கொள்கின்ற நிந்தவூர் மண்ணின் இரண்டாவது சிறுமியாக இவர் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்த ஹோட்டல் உரிமையாளர் கைது!!

வவுனியாவில்..

வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்து, சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய ஹோட்டல் உரிமையாளர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நேற்று மாலை (19.08) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் அதன் உரிமையாளருக்கு (வயது 59) கடந்த 11 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

அவரது உடல் நிலை தொடர்பில் ஆய்வு செய்த சுகாதாரப் பிரிவினர் அவர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். இருப்பினும் அவர் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்ததுடன்,

அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை அறிவதற்காக ஹோட்டல் சிசிரீவி பதிவுகளை சுகாதாரப் பிரிவினர் கோரிய போது அதனையும் காட்ட மறுத்திருந்தார். அத்துடன், சுகாதாரப் பிரிவினருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு ஒன்றையும் ஒன்லைன் மூலம் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக சுகாதாரப் பிரிவினர் வவுனியா பொலிசில் ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்து, பொலிசார் ஊடாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்திய நீதிமன்றம் குறித்த நபரை கைது செய்து கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுடன், சிசிரீவி பதிவுகளையும் சுகாதாரப் பிரிவினருக்கு காட்டுமாறு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து குறித்த ஹோட்டலுக்கு சென்ற வவுனியா பொலிசார் ஹோட்டல் உரிமையாளரை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்து, சுகாதாரப் பிரிவினர் ஊடாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேவேளை, நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கைது செய்ய பொலிசார் சென்ற போது அவர் உடன் வர மறுப்பு தெரிவித்து, தனது சட்டத்தரணி வர வேண்டும் என தெரிவித்ததுடன், சட்டத்தரணி ஒருவர் வந்த பின்னரும் நீண்ட இழுபறியின் பின்னரே நோயாளர் காவு வண்டியில் ஏறியிருந்தார்.

இதன்காரணமாக சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் குறித்த ஹோட்டல் முன்பாக நீதிமன்ற கட்டளையுடன் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாயை காப்பாற்ற முற்பட்ட நபர் பரிதாபமாக பலி!!

கிணற்றில் விழுந்திருந்த நாய்..

தெல்கொட, மீகஹவத்தை பிரதேசத்தில் கிணற்றில் விழுந்திருந்த நாய் ஒன்றை காப்பாற்ற முற்பட்ட நபர் ஒருவர் குறித்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாய் கிணற்றில் விழுந்ததை அறிந்த குறித்த நபர் நேற்று மாலை 6 மணி அளவில் கயிறு ஒன்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். பின்னர் நாயுடன் மேலே வந்துக் கொண்டிருந்த போது கயிறு அறுந்ததில் குறித்த நபர் சுமார் 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்துள்ளார்.

உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், குறித்த நாய் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இளைஞன் திடீரென உயிர் பிழைத்த அதிசயம்!!

கொரோனா…

குருநாகல் பிரதேசத்தில் திடீரென வீதியில் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக எண்ணி குருநாகல் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர் திடீரென உயிர் பிழைத்து வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற சென்றுள்ளார். குருநாகல், யத்தம்பாலவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

அதிக போ.தை பொருளுக்கு அடிமையாகியிருந்த இந்த இளைஞன் குருநாகல் வில்கொட வீதியில் மரத்திற்கு கீழ் விழுந்து கிடந்த நிலையில் பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர்.

குறித்த இளைஞனுக்கு அருகில் செல்லும் போது உயிரிழந்தவர்கள் மீது காணப்படுவது போது ஈக்கள் மக்கள் எறும்புகள் அவர் முகத்தில் நிறைந்து காணப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையில் இந்த நபர் கொவிட் தொற்றினால் உயிரிழந்து கிடப்பதாக பிரதேச மக்கள் நம்பியுள்ளனர். கொவிட் அச்சம் காரணமாக அவரை நெருங்க முயற்சிக்காத மக்கள் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக அம்பியுலன்ஸ் ஊடாக குருநாகல் வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சில நிமிடங்களில் அவருக்கு சுயநினைவு வந்துள்ளது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் எந்தவித நோய் அறிகுறிகள் அற்றவர்களும் மரணம் : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா..

நோய்களுக்குரிய எந்தவித அறிகுறிகளும் அற்றவர்களும் கோவிட் தொற்றால் மரணமடைவதால் மக்கள், அவதானமாக இருக்க வேண்டும் என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பெரியார்குளம், சாந்தசோலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த 73 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (19.08) மரணமடைந்திருந்தார். குறித்த பெண் எந்தவித நோய்களும் அற்ற நிலையில் இருந்ததுடன், கோவிட் தொற்றுக்கான அறிகுறிகளும் அற்றவராகவே இருந்துள்ளார்.

குறித்த பெண் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்திருந்தார். மரணமடைந்த பின் அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவருடைய உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவருடைய குடும்பத்தினர் மற்றும் தொடர்புகளைப் பேணியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் இன்று (20.08) காலை அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதேபோன்று, தெற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்களும் கோவிட் தாக்கம் காரணமாக மரணமடைந்து வருகின்றனர்.

எனவே மக்கள் நிலமையை உணர்ந்து சுகாதார நடைமுறைகனைப் பின்பற்றி சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகருக்குள் அத்தியாவசிப் பொருட் கொள்வனவுக்காக திரண்ட மக்கள்!!

பொது முடக்கம்..

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்று இரவு முதல் நாடாளவிய ரீதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசியப் பொருட் கொள்வனவுக்காக வவுனியா நகருக்குள் மக்கள் அதிகளவில் வருகை தந்தனர்.

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இன்று பிற்பகல் அரசாங்கத்தின் அறிவித்தல் வெளியாகிய நிலையில்,

அத்தியாவசிப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வவுனியா நகர வர்த்தக நிலையங்களில் அதிகளவிலான மக்கள் வருகை தந்து முண்டியத்துக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அரசி, மா, சீனி, பால் மா, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவிலான மக்கள் வர்த்தக நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றதுடன்,

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும் நீண்ட வாசையில் மக்கள் நின்று எரிபொருட்களைப் பெற்றுச் சென்றனர். இதனால் வவுனியா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இன்று இரவு முதல் இலங்கை முழுவதும் பொது முடக்கம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!!

பொது முடக்கம்..

இன்று இரவு பத்து மணி முதல் நாடாளாவிய ரீதியிலான முடக்கம் அமுலாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த முடக்கமானது எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வரலட்சுமி பூஜை வழிபாடுகள்!!

வரலட்சுமி பூஜை..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வரலட்சுமி பூஜை வழிபாடுகள் இன்று (20.08) சிறப்பாக இடம்பெற்றது.

இந்துக்களின் விசேட விரதங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்றாகும். சுமங்கலிப் பெண்கள் தமது கணவன்மாருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், அவர்களுக்கு நலம் வேண்டியும் வரலட்சுமி விரத நாளில் அம்மனிடம் வரம் வேண்டி விரதம் இருந்து நூல் கட்டுவர்.

அந்தவகையில் வவுனியாவில் உள்ள அம்மன் ஆலயங்கள் மற்றும் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் வரலட்சுமி பூஜை விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலயத்தின் பிரதமகுரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் கருமாரி அம்மனுக்க விசேட அபிடேகம், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வரலட்சுமி விரத வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது விரதம் இருந்தவர்களுக்கு அம்மன் ஆசியுடன் நூல் கட்டும் நிகழ்வும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றிருந்தது.