2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பால நிர்மாணப் பணிகளில் 98.5% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற களனி பால மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ளார். புதிய களனி பாலத்தின் மேலதிக பணிகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவுதல், இரும்புப் பாலத்திற்கு நிறம் தீட்டுதல்,
புதிய களனி பாலத்திற்கு நுழைவாயிலில் வடிகால் அமைப்பை நிறைவு செய்தல், பாலத்திற்கு மின்விளக்குகள் இடல், பாதுகாப்பிற்காக இரும்பு வேலிகள் அமைத்தல் மற்றும் நிலத்தை செப்பனிட்டு அழகுபடுத்தல் ஆகியவை அடங்கும்.
அவற்றை உரிய தரத்திற்கு அமைவாக துரிதமாக நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர் பிரேமசிரிக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரை வீதியின் இருபுறமும் மரங்களை நடுவதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு தண்ணீர் வழங்க நிலத்தடி நீர் குழாய் அமைப்பை உருவாக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
குறித்த பாலம் பார்ப்பவர் கண்ணை கவரும் வகையில் அழகுற அமையப்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியின் 17 வயது மாணவியும் அண்மையில் கோவிட் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு, இசிபதன கல்லூரியின் பதினெட்டு வயது மாணவரும் கோவிட் தொற்றினால் உயிரிழந்தார்.
இசிபதான கல்லூரியின் சமிதா தில்துஷன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். 2021, ஆகஸ்ட் 14 அன்று,
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வள்ளுவர்புரம் – றெட்பானா, புதுக்குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 அகவையுடைய செனவிரத்தின சமரக்கோன் என்பவரே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் வாய் மற்றும் மூக்கினால் இரத்தம் வடிந்த நிலையில், சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூலித்தொழில் செய்து வரும் இவர் றெட்பான சந்திக்கு அருகில் விறகு வெட்டிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான வரிசையில் நின்ற சந்தர்ப்பத்தில் இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த வரிசையில் நின்றவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதென சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தொடக்கம் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்த வவுனியாவின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் அதன் உரிமையாளருக்கு (வயது 59) கடந்த 11 ஆம் திகதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உயர்மட்ட அழுத்தம் காரணமாக வவுனியாவில் 12 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில் மறுநாள்,
சுகாதாரத் திணைக்களத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் குறித்த நபரை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த போது தொற்றில் உள்ளவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை செய்ய முடியும் என்ற சுற்று நிருபத்தை காட்டி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதன்போது மருத்துவர்கள் அவரை வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான சுற்று நிருபத்திற்கு அமைவாக அவரது உடல்நிலை உள்ளதா என பரிசோதித்த போது குறித்த தொற்றாளருக்கு சுகர் 9.8 மில்லிகிராம் காணப்பட்டதுடன், உடலில் ஒட்சிசனின் அளவும் குறைவாக இருந்துள்ளது.
அத்துடன் நெஞ்சுப் பகுதியில் சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுற்று நிருபத்திற்கு அமைவாக இவ்வாறான நபரை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. இதனால் தொற்றாளருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனக் கருதிய சுகாதார பிரிவினர் அவரை சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல முயசித்தனர். அவர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
அத்துடன் தன்னை சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல சுகாதாரப் பிரிவினர் மிரட்டியதாக ஒன்லைன் மூலம் வவுனியா பொலிசில் தொற்றாளர் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொலிசாருக்கு விளமளித்திருந்ததுடன், தமது கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரிவினரின் நடைவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது சமூக பொறுப்புள்ள ஒருவர் செயற்பட்டமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், வட மாகாணத்தில் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் நடைமுறை 16 ஆம் திகதி முதலே நடைமுறைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பிசிஆர் பரிசோதனை செய்யும் நிலையமொன்றில் மழையில் நனைந்தபடி நபரொருவர் வலிப்பினால் பாதிக்கப்பட்டு நிலத்தில் விழுந்து அவதியுறும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த நபர் கீழே விழுந்து வலிப்பினால் அவதிப்படும் நிலையில் அதனை காணொளியாக பதிவு செய்த போதும் கூட பாதிக்கப்பட்ட நபரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ,
குறைந்தபட்சம் அவர் அருகில் செல்வதற்கோ கூட மக்கள் தயங்குகின்றமையும், மருத்துவர் அல்லது தாதியொருவரை வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
எனினும் அவர்கள் முயற்சி மேற்கொள்ளும் வேளையில் நிலத்தில் விழுந்தபடி மழையில் நனைந்தவாறு குறித்த நபர் போராடும் நிலையே அங்கு காணப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அச்சம் காரணமாக பொது இடங்களில் இவ்வாறான நிலைக்கு உள்ளாகும் நபர்களுக்கு உதவி செய்வதற்கு அச்சப்படும் நிலை தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது.
கோவிட் தொற்று நிலை நாட்டில் நிலவுகின்ற போதும் ஒரு மனித உயிர் ஆபத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஓடி சென்று உதவும் மனிதம் நாட்டில் மரித்து வருகிறதா என சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையை முடக்குமாறு சுகாதார தரப்பு, அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நாளை நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு பொது முடக்கம் அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவதற்கு இலங்கை ஜனாதிபதியால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் எடுப்பட வேண்டிய அடுத்த கட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவசர சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குறித்த செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது, இது வரையில் முடக்கம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும், இன்று மாலையளவில் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (19.08.2021) வெளியாகின.
அதில் வவுனியா வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 40 வயது மனைவியை கட்டாயப்படுத்தி 8 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண், பெண் என இரு பாலர்களும் சமம் என்று சொல்லும் காலத்தில் இப்படியும் ஒரு சிலர் இருக்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.மும்பையின் தாதர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் மீண்டும் 2011ஆம் ஆண்டு கர்ப்பம் அடைந்த போது அவரது கணவர் தமது சொத்துக்களை பாதுகாக்க ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை தெரிந்து கொள்ள மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிய வர மனைவியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.
இது போல 8 முறை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு எப்படியாவது ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தாய்லாந்திற்கு அழைத்து சென்று இந்தியாவில் தடை செய்யப்பட்ட 500 ஸ்டீராய்டு மற்றும் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்திற்கு மேல் கணவனின் கொ.டூரத்தை தாங்க முடியாத பெண் அவர் மீது புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது கணவர் கட்டாயப்படுகித்தி சிகிச்சை மேற்கொண்டதாகவும் 8 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் காதலித்து ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த காதலனை, காதலி கட்டிய லுங்கியுடன் தாலி கட்ட வைத்த சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, சின்னாத்து குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுகுனா என்ற பெண்ணும், அரியலூர் மாவட்டம் பெரியாத்து குறிச்சையை சேர்ந்த மணி்வேல் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இவர்கள் இருவருக்கும் வேலை பறிபோனதால்,
தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதால், சுகுணா கர்ப்பம் ஆகியுள்ளார்.
இதனால் அவர் உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மணிவேலை வற்புறுத்தியுள்ளார். ஆனால், மணிவேலோ சொத்திற்கு ஆசைப்பட்டு, தன்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்று வந்துள்ளார்.
இதை அறிந்த சுகுணா உடனடியாக அங்கிருக்கும் விருத்தாச்சலம் காவல்நிலையத்தில், தன்னுடைய காதலனுடன் சேர்த்து வைக்கும் படி புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், கட்டியிருந்த லுங்கியுடன் மணிவேலை பொலிசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வர, அப்போது பொலிசார் திருமண்ம செய்து கொள்ளவில்லை என்றால், நிச்சயம் சிறைக்கு தான் நீ செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
அதன் பின் மணிவேல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள, அங்கிருந்த அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் பற்சிகிச்சை நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக இரு இளைஞர்கள் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (18.08) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம், வைரவகோவில் வீதியில் உள்ள தனியார் பற் சிகிச்சை நிலையத்திற்கு சென்ற, யுவதி ஒருவருக்கு அங்குள்ள நடைமுறை பற்றி கூறியபோது வைத்தியசாலையில் கடமையில் இருந்த பணியாளர்களும் குறித்த யுவதிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுன்ளது.
இதனையடுத்து குறித்த வைத்தியசாலை வைத்தியரும் அவ்விடத்திற்கு வருகைதந்து யுவதியுடன் உரையாடிய போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து சென்ற யுவதி தனது உறவினர்களான இளைஞர்கள் இருவரை அழைத்து வந்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது குறித்த தனியார் பற்சிகிச்சை நிலைய வைத்தியர் வவுனியா பொலிசாருக்கு அறிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் 24 மற்றும் 25 வயதுடைய தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கைளை கைது செய்துள்ளனர். அவர்களின் விசாரணைகளை மேற்கொண்ட பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாக வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை வான் ஒன்றில் கடத்த மேற்கொண்ட முயற்சி பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (18.08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழில் உள்ள ஒருவரிடம் ஒரு தொகைப் பணத்தை கடனாக பெற்றிருந்தார். குறித்த பணம் இது வரை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி, பிள்ளைகளுடன் வவுனியா நகர் நோக்கி காலை முச்சக்கர வண்டியில் சென்றிருந்தார்.
இதன்போது வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் குறித்த குடும்பஸ்தரை வழிமறித்த சில நபர்கள் அவரது மனைவியையும், பிள்ளையையும் அவ்விடத்தில் விட்டு விட்டு வெள்ளை வானில் ஒன்றில் குடும்பஸ்தரை ஏற்றிச் சென்றனர்.
இதன்போது வாகன இலக்கத்தை குறித்துக் கொண்ட மனைவி வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிசார் குறித்த வானையும், குடும்பஸ்தரையும், வானில் இருந்த ஆறு பேரையும் வவுனியா வெளிக்குளம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்திருந்தனர்.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டில் நேற்று மேலும் 170 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6604 ஆக உயர்வடைந்துள்ளது. 30 முதல் 59 வயது வரையிலான 40 மரணங்களும்,
60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 130 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில் 86 பெண்களும், 84 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த வைத்தியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைத்தியர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் இரு வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெளியான கோவிட் பரிசோதனை முடிவுகளின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வவுனியாநகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு நகரில் முழு முடக்கம் ஒன்றினை ஏற்ப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சில பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா வர்த்தகசங்க வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வர்த்தகர்கள் மற்றும் சேவை பெறுநர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்நோக்கில் உடனடியாக பொது முடக்கத்தினை தவிர்த்து,
அனைத்து நிறுவனங்களும் பொதுமக்களும் இறுக்கமான சுகாதாரநடை முறைகளை பின்பற்றி தற்காலிகமாக இயங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒருவார காலப்பகுதியில் வவுனியா நகருக்குள் நுழையும் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக PCR பரிசோதனை மேற்கொள்வதோடு,
நகரில் அமைந்துள்ள நிறுவனங்களும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் அசமந்தப்போக்காக நடக்கும் பட்சத்தில் சகல தரப்பினரது ஒத்துழைப்போடு வவுனியா மாவட்டத்தில் முழு முடக்கத்தினை ஏற்படுத்துவதெனவும் தீர்கமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதியில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதை உறுதிசெய்வதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை இனம்காணவும் விசேட குழுவொன்றை அமைத்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா தனியார்பேருந்து உரிமையாளர்சங்கம், முச்சக்கரவண்டிஉரிமையாளர் சங்கம், மாவட்ட விவசாய சம்மேளனம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.