பின்னவல பொலிஸ் பிரிவில் ஹட்டன்-பலாங்கொடை வீதியில் நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடயில் இருந்து பின்னவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது காதலியும் பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி காதலி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அரநாயக்கவைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்றது. வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பு நிலையத்துள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி இவ்வாறு வாகனம் ஓட்டுபவர்கள், தம் உயிரை போக்குவது மட்டுமன்றி வீதியில் செல்வோரிற்கும் உயிராபத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
காலி – அம்பலாங்கொடை பகுதியில் சமய நிகழ்வொன்றில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எட்கந்துர, தனபத்தேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பி.எம்.மகிஷ பகாஷண என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை, மாதம்பே நகர வீதியில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர், திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞருக்கு வேறு எந்த தொற்று நோயும் இல்லை என்றும், இளைஞனின் மரணம் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் – ஒட்டாவா நகரானது, வெளிநாடுகளில் உள்ள புத்த கோவில்களுக்கு இலங்கையர் ஒருவரின் தலைமையில் சாலை அடையாளங்களை நிறுவும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது.
ஒட்டாவா நகரத்தின் பொதுப்பணி மற்றும் சேவைகள் துறை, போக்குவரத்து செயல்பாட்டுப் பிரிவுடன் இணைந்து, நகரத்தில் உள்ள புத்த கோவில்களை அடையாளம் காண ஒரு சாலை அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
“இதுவரை, 14 அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இலங்கை கோயில்கள் மட்டுமல்ல, கம்போடிய, வியட்நாமிய மற்றும் தாய் சமூகங்களைச் சேர்ந்த கோயில்களும் குறிக்கப்பட்டுள்ளன” என்று கனடாவின் ஒட்டாவாவில் உள்ள புத்த தூதரக அமைப்பின் நிறுவனர் மற்றும் தொழில்முனைவோர் விசிதா சிரின் லீலாரத்ன கூறியுள்ளார்.
“இது கோயில்களுக்கான வழியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கியுள்ளது, மேலும் இது ஓட்டுநர்களிடமிருந்து அதிக பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த சாலை அடையாளங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் காட்டப்பட்டுள்ளன, ”என்று திட்டத்தை வழிநடத்தும் விசிதா லீலாரத்ன தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒட்டாவா நகர சபையில் புத்த கொடியை பறக்கவிடுவதற்கு ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் ஒப்புதல் அளித்தார். அதன்படி, அவர் வெசாக் மாதத்தையும் அறிவித்து அதிகாரப்பூர்வ பௌத்த சாலை அடையாளங்களை அறிமுகப்படுத்தினார்.
ஒட்டாவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் வெசாக் பண்டிகையை இலங்கை, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா, தாய்லாந்து, இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பௌத்த குழுக்கள் கொண்டாடுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே மற்றும் பிற அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அம்பலங்கொடை மற்றும் கோட்டேகொடையில் ஏற்கனவே அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த கருத்து இலங்கைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக லீலாரத்ன தெரிவித்தார்.
பத்தேகமவின் சிரின் பூங்காவில் தியான மையம் மற்றும் சுற்றுச்சூழல் தங்குமிடமான சிரின் பூங்காவை கட்டித் திறந்து வைத்த லீலாரத்ன, கனடாவில் பௌத்த பாரம்பரிய மாதத்தை நிறுவுவதற்கான தனியார் மசோதாவை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இப்போது கலந்துரையாடி வருகிறார்.
“கனேடிய நாடாளுமன்றத்தில் பௌத்த பாரம்பரியத்தை அங்கீகரிப்பது வெசாக் மற்றும் பொசன் கொண்டாட்டங்களை பெரிய அளவில் ஏற்பாடு செய்ய அனுமதிக்கும்.” இது பன்முகத்தன்மையில் ஒற்றுமைக்கான கனடாவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது, மேலும் இது பௌத்த வம்சாவளியைச் சேர்ந்த கனேடியர்களுக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உலக வதிவிட தினத்தின் 39வது ஆண்டினை முன்னிட்டு என்னுடைய இடமும் அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளில் வீடு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலே வவுனியா பேயாடிகூழாங்குளம் பகுதியில், ம.சிவகுமார் என்ற பயணாளிக்கு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவினால நேற்றையதினம் வீடு கையளிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளிற்கான காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கி வைத்திருந்தார்.
இதேவேளை வவுனியாவில் உள்ள நான்கு பிரதேச சபை பிரிவுகளிலும் 20 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 62 பேருக்கு உறுதிப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ந.கமலதாசன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட அதிகாரி தேவிகா விஜயரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் மாவட்ட மாநாடு சுத்தானந்த இந்துஇளைஞர்சங்க மண்டபத்தில் நேற்று (05.10.2025) காலை இடம்பெற்றது.
உலக ஆசிரியர் தினமான நேற்று அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைகளை முறியடித்து உரிமைகளை வென்றெடுப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது.
சங்கத்தின் வவுனியா கிளையின் தலைவர் பா.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின், தலைவர் பிரியந்த பெர்ணான்டோ, வடமாகாண உபதலைவர் தீசன் திலீபன், உபதலைவி ரசிக்கா உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட், கச்சக்கொத்தீவு பிரதேசத்தில் நேற்று மாலை முச்சக்கர வண்டி ஒன்று, திடீரென தீ பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த முச்சக்கர வண்டி கச்சக்கொத்தீவில் இருந்து கிண்ணியாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, இடையில் பழுதடைந்துள்ளது.
இந்த நிலையில், இடையில் கராச் ஒன்றில் நிறுத்தி பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளையிலே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின், சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி, கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் லொறி சாரதி, ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் சிறுவர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்து நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, சிகிச்சை பலனின்றி லொறியில் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்கள் இருவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் நேற்று (05.10.2025) ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு, தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி, கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து,
பயங்கவராத தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
கம்பஹா – மினுவாங்கொடை வீதியில் வீதியவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (04.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.
அதிக வேகத்தில் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதி பின்னர் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினையடுத்து லொறியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணைந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹொரண – மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இன்று (04) பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி வேக கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த குறித்த மாணவி, 2ஆவது மாடியில் இருந்து நேற்றுமுன்தினம் (02.10.2025) குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர்.
இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார்.
உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி அழகி உலக அழகி போட்டி (03) பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசுப் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இடம்பெற்ற 72ஆவது உலக அழகிப் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவை – ஹபரணை வீதியில் மின்னேரியா புராண தேவாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (03.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 கொளனி பகுதியில் இருந்து சம்மாந்துறை நோக்கி excavator” ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கவனக்குறைவால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்மாந்துறை மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார்.
சம்மாந்துறை மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உழவு இயந்திர சாரதியை சவளக்கடை பொலிஸார் கைதுசெய்து உழவு இயந்திரத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைய சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவுப் பொறுப்பதிகாரி சகிதம் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
விபத்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப் பணித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தில் சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவியொருவர் வகுப்பறையில் பல மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, எடிட் செய்து ஆபாசப் புகைப்படமாக மாற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மெதியாகன பகுதியைச் சேர்ந்த 19 வயது செங்கல் தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது.